Skip to main content

Posts

Showing posts from November, 2015

காதல் நர்த்தனம்...!

காதல் கவிதையென்று அவள் எழுதிக் கொடுத்த காகிதத்திலிருந்து ஒவ்வொரு சொல்லாய் பெயர்த்தெடுத்து உடைத்துப் பார்க்கிறேன் அது கண்ணீராலும் வலியாலும் நிரம்பிக் கிடக்கிறது.. காதல் கவிதையென்று சொன்னாயே... என்றவளிடம் கேட்டதற்கு கண்ணீரும் வலியும் இல்லாமல் காதல் என்ன வேண்டிக்கிடக்கிறது உனக்கு காதல்...என்று கோபமாய் முகம் திருப்பிக் கொண்ட அந்தக் கணதில் காகிதத்திலிருந்து எழுந்து... நர்த்தனமாடத் தொடங்கி இருந்தது காதல்..! தேவா சுப்பையா...

கனவுகள் வாங்குவன்...!

கனவுகள் நன்றாயிருக்கின்றன நிஜத்தினை விட என்றெண்ணிதான் கனவுகளை சீசாக்களில் பிடித்து வளர்க்கத் தொடங்கினேன்... முந்தா நாள் கண்ட அந்த கனவினையும் சேர்த்து ஆயிற்று மொத்தம் லட்சத்து நாற்பதாயிரம் எதார்த்தங்கள் கோரப்பற்களால் உயிர் குடிக்க முற்படும்போதும் நிகழ்காலம் துரோகக் கத்தியை கூர் தீட்டி வன்மம் கொள்ளும் போதும் யோசித்துபார்க்கவே முடியாத அபத்தங்கள் மூச்சைப் பிடித்து கழுத்தை நெரிக்கும் போதும் ஒவ்வொரு சீசாக்களாய் திறந்து என் கனவுகள் விடுவித்து அவை சொல்லும் கதைகளை கேட்டுக்  கேட்டு என்னை மீட்டெடுத்துக் கொள்வதுமுண்டு... நாளையும்  எனக்கு வேறொரு கனவு வரும்.... என்ற கனவோடுதான் நித்தம் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறேன் இந்த நிதர்சனமற்ற அரக்க வாழ்க்கையொடு...! தேவா சுப்பையா...

மழை என்னவோ மழைதான்...

மழை பெய்த நாளின் அடுத்த நாளில் ஓய்ந்து கிடக்கும் வானம் தெருவெங்கும் தேங்கிக் கிடக்கும் நீரில் விழுந்து கிடக்கிறது முட்டிக்கால் வரை தூக்கிச் சுருட்டிய உடைகளோடு வானத்தின் மீதேறி மிதித்து நடந்து செல்கிறார்கள் மனிதர்கள் மழையை சபித்தபடி..., வீட்டுக்கூரையையும் தெருவையும் நனைத்தவிட்டு கணுக்கால் வரை தேங்கிக் கிடக்கும் மழையிடம் யாதொரு பிணக்குமில்லை அவர்களுக்கு, மழைக்கும் தெரிவதில்லை தான் வாசல் வரை மட்டும் வந்து செல்லக் கூடிய விருந்தாளி என்று, இது புரியாமலேயே விரும்புகிறார்கள் மனிதர்களென்று வீட்டு அடுக்களை வரை எட்டிப்பார்த்துவிட்டு மனிதர்களின் சலிப்பினையும் வெறுப்பினையும் பரிசாய் வாங்கிக் கொண்டு கோடையில் கொளுத்தும் வெயிலில் மீண்டும் என்னைத் தேடுவீர்கள்தானே... அப்போது பார்த்துக் கொள்கிறேன் கடிந்தபடியே உறிஞ்சும் வரை மெளனமாய் படுத்துக் கிடக்கிறது பூமி மீது... அடித்துப் பெய்தாலும் அழித்துக் கொன்றாலும் மழை என்னவோ மழைதான்... அதற்கென்ன மனதா இருக்கிறது... ஆனால் மனிதர்கள்தான்.... தேவா சுப்பையா...

துளசி...!

துளசியும் நானும் காதலித்தோம் திருமணம் செய்து கொண்டோம் எங்களுக்குப் பிள்ளைகள் பிறந்தன ஒரு நாள் எதிர்பாராமல் வழியில் சந்தித்தும் கொண்டோம் அவள் கணவனுக்கு என்னை அறிமுகம் செய்தது போலே நானும் என் மனைவியை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தேன்... பின் விடைபெற்றுக் கொண்ட அந்த நாளின் மதியத்தில் துளசி என்னிடம் தொலைபேசியில் இன்னும்தான் உன்னை காதலிக்கிறேன் என்றாள்... நானும்தான் காதலிக்கிறேன் என்று சொல்லாமல் அலைபேசியை வைத்தது என்னமோ இன்னமும் வலித்துத் தொலைக்கிறது...! தேவா சுப்பையா..

சப்தத்தின் மெளனம்...!

மழை வரும் போலிருக்கிறதே என்று யோசித்தபடியே ஜன்னலை நன்றாக திறந்து வைத்தேன். வீட்டில் அமர்ந்து வேலை செய்வதில் இருக்கும் சுகமே தனிதான். ஒய்வாய் இருப்பது போலவும் தோன்றும் வேலை செய்வது போலவும் தோன்றும் ஒரு அற்புதமான காம்போ அது. வருங்காலங்களில் யாரும் அலுவலகம் சென்று வேலை செய்யும் ஒரு செக்கு மாட்டு வாழ்வு இருக்காது என்று யோசிதுக் கொண்டிருந்த போதே  மேசை மீதிருந்த காபியில் ஆவி பறந்து  என்னை எடுத்து குடிக்கிறாயா என்று செல்லமாய் மிரட்டிக் கொண்டிருந்தது. சிறு சாரல் மழையும், சூடான காபியும் என்னை சொடக்குப் போட்டு இந்த பூமி விட்டு வேறு கிரகம் நாம் செல்ல வேண்டாமா என்று கேள்வி கேட்க.... பார்த்திக் கொண்டிருந்த வேலையைப் பாதியிலேயே நிறுத்தி விட்டு... லேப் டாப்பை மூடி வைத்தேன்.... ஏண்டா மழை பெய்ற மாதிரி இருக்கு இப்போ வண்டிய எடுத்துக்கிட்டு எங்க கிளம்பிட்ட பத்தாக் குறைக்கு கேமரா வேற எடுத்துட்டுப் போற....? வாசலில் நின்று அன்பைக் கண்டிப்பாய் மாற்ற முயன்று தோற்றுக் கொண்டிருந்த அம்மாவைப் பார்துப் புன்னகைத்தபடியே...மழை பெய்யப் போகுதும்மா அதான் கிளம்புறேன் என்று நான் சொன்னதைக் கேட்டு தலையிலடி

அஜித் என்னும் வேதாளம்...!

செம்ம ஹாட்டான மட்டன் தம் பிரியாணி ஆர்டர் பண்ணி சாப்டுக்கிட்டு இருக்கும் போதே இது சாம்பார் சாதம் மாதிரி இல்லை, ரசம் போட்டு கை நொறுங்க அள்ளித் திங்கற மாதிரி இல்லையேன்னு யோசிச்சா அது எப்டி அபத்தமோ அப்டியான அபத்தம்தான் வேதாளம் பார்க்க போய் உக்காந்துக்கிட்டு அதுல லாஜிக் பத்தி எல்லாம் யோசிக்கிறது. தமிழ் சினிமா மரபுல ஹீரோக்கள் எல்லாம் சூப்பர் ஹீரோக்களா தங்கள மாத்திக்கதான் எப்பவுமே முயற்சி செஞ்சுட்டு இருக்காங்க. சூப்பர் ஹீரோவா ரசிகர்களோட மனசுல உக்காந்துட்டா போதும் அதுக்கப்புறம் அவுங்க என்னா செஞ்சாலும் அதை மக்கள் ஏத்துகிடத்தான் செய்வாங்கன்றது உண்மைனாலும் ஒரு ஹீரோ தன்னை சூப்பர் ஹீரோவா பரிணமிச்சு திரையில தன்னை மிகப்பெரிய ஆளுமையா காட்டி அதை அப்டியே ஆடியன்ஸ ஏத்துக்க வைக்கிறதுங்கறதுதான் ரொம்ப ரொம்ப கஷ்டமான வேலை. இந்த ட்ரான்ஸ்மிஷன மிகத்துல்லியமா செஞ்சுட்டா காலத்துக்கும் அவுங்கள எல்லாத்  தரப்பு ரசிகர்களும் விரும்பிப் பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க. எம்.ஜி.ஆர்க்கு நடந்த அந்த ட்ரான்ஸ்மிஷன் ரஜினிக்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னாடி நடந்து இன்னிக்கு தேதி வரைக்கும் திரையில ரஜினி வந்தாலே பார்த்துக

நீர்க்குமிழி..!

ஒரு மழை விட்டும் விடாத மாலைப் பொழுதில் நான் இறங்கி நடக்க ஆரம்பிக்கிறேன் குளிரும் சிறு தூறலும் என்னை ஏதோ செய்யத் தொடங்கிய அந்தக் கணத்தில்தான் தூரத்தில் நடந்து வருவது நீயாய் இருக்குமோ என்று யோசித்துக் கொண்டிருக்கையிலேயே என்னை நெருங்கி விட்டாய் நீ சடக்கென்று தலைகுனிந்து கொண்டேன் உன்னை நேருக்கு நேர் எப்படி நான் யாரோவாய் பார்த்து செல்வது...? ஒரு கணம் என்னருகில் வந்து நீ நிற்பது போலத்தெரிகிறது இருந்தாலும் நான் நடந்து கொண்டிருக்கிறேன் உன்னைக் கடந்து சென்று விட்டேன் நி நின்று கொண்டிருக்கலாம் சென்றிருக்கலாம் அல்லது என்னோடு நடந்து கூட பின்னாலேயே வந்து கொண்டிருக்கலாம் நம்மை யாரோவாக்கி விட்டிருந்த இந்தக் காலம்தான் முன்பொரு நாள் நம்மை சேர்த்தும் வைத்திருந்தது... மழை அடித்துப் பெய்யத் தொடங்கி இருந்தது நடப்பதை நிறுத்தி விட்டு திரும்பிப் பார்க்கிறேன் யாருமில்லாமல் வெறிச்சோடிக் கிடந்த அந்தத் தெருவின் எதோ ஒரு வீட்டிலிருந்து மல்லிகை மொட்டுக்கள் சட் சட்டென்று தங்களைத் திறந்து கொண்டிருக்கின்றன என்று நினைக்கிறேன் மழை வாசமும் மல்லிகை வாசமும் மனதை நிறைக்கத் தொடங்கியிருக்க தொ