Skip to main content

தேடல்...09.10.2010!






















மொட்டை மாடி.. நிலா இல்லாத வானத்துடன் கோடாணு கோடி நட்சத்திரங்கள் கண் சிமிட்ட எனக்காக காத்திருந்தது. படிகளில் ஏறி அந்த சில்லென்ற மொட்டை மாடியை நான் வெற்றுடம்போடு தொடும் நேரங்களில் நீண்ட நாள் பார்க்காத காதலியை ஆரத்தழுவுவது போல ஆனால் அதை விட பன்மடங்கு இன்பமான ஒரு அனுபவம் நேரிட்டுப் போகிறது.

சுற்றியிருக்கும் அடர்த்தியான தென்னை மரங்களும், அந்த பத்து மணி இரவில் உறங்கிப் போன எல்லா பறவைகளுக்கு மத்தியில் ஒரு சில மெலிதாய் குரலெடுத்து பேசிக் கொண்டிருப்பதும்...தூரத்தில் வயல் வெளிகளுக்கு இடையே ஊர்ந்து செல்லும் ஊர் கடைசிபேருந்தின் சப்தமும் என்று....எல்லாம் மெலிதாய் அடங்கிக் கொண்டிருக்கும் வேளையில்....

எமது கச்சேரி அரங்கேற்றம் துவங்க ஆரம்பித்து இருந்தது. கருமையான வானத்தில் மிளிரும் நட்சதிரங்கள்......! யார் சொன்னது நிலவோடு இருக்கும் வானம் மட்டுமே அழகென்று...ஹா..ஹா..ஹா.. கொஞ்ச அந்த கூற்றை தூக் கி தூர போடுங்கள் தோழர்களே... !

நிலவற்ற வானம் இன்னும் அழகாய்த்தானிருக்கிறது.....

ஒளியின் ஆளுமையின்றி....
கண் சிமிட்டி ஒளிரும்
ஓராயிரம் நட்சத்திர கூட்டம்...
அடர்தியான கருப்பு நிறத்தில்
வசிகரீக்கும் வானம்....
கருமையை மேலேயிருந்து
பெய்யாத மழையாய்
பூமிக்கு பெய்வித்து
சொல்லாமல் சொல்லியது...
ஓராயிரம் ரகசியங்களை…!

ஏன் தெரியுமா இருள் அழகு...? அதில் அமைதி அழகாக ஒளிந்திருக்கிறது. ஒரு ஆழ்ந்த கருமை மிக வசீகரமானது. மனிதர்களின் பொதுபுத்தியில் வெண்மை அழகு என்று காலம் காலமாக பொதியப்பட்டுள்ளது. வெண்மைதான் தூய்மை என்று......இது மூளையில் காலம் காலமாக பொதிந்துள்ளதால்...எல்லோரின் மனமும் அதை நம்பிக் கொண்டு கருமையை அதற்கெதிராய் பார்க்கிறது.

கார்மேகம் பார்த்திருக்கிறீர்களா? தன்னுள் நீரை தேக்கிவைத்து ஒரு வித கவர்ச்சியான கருமையுடன் நகர்வதை? இனியேனும் பார்க்க தவறாதீர்கள். கருமை வெளிவிடும் நிறம் அல்ல அது எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொண்டு எல்லா ரகசியங்களும்
பொதிந்த ஒரு ஞானத்தின் நிறம்.

மெல்ல மெல்ல மொட்டை மாடியில் நடந்து கொண்டு என் சிற்றறிவால் பேரறிவை விழுங்க முயற்சித்துக் கொண்டிருந்தேன்.....! ஓராயிரம் செய்திகளையும் ரகசியங்களையும் தன்னுள் வைத்துக் கொண்டு மெளனமாய் பூமியின் சுழற்சியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது இந்த வெட்டவெளி.....

தன்னிலிருந்து ஜனிப்பிக்கப்பட்ட அண்ட சராசரங்களையும் தன்னில் உள்ளடக்கி மெளனமாய் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் ஒன்று மட்டும் உணர முடிந்தது அல்லது என்னுள் இருந்து உடைந்து விழுந்தது என்னவென்றால்...

சொல்லி புரியவைக்கும் அல்லது தெளிய வைக்கும் அத்தனை முயற்சிகளும் இந்த உலகத்தில் பயனற்றது. எந்த ஒரு விசத்தையும் ஒரு மனிதன் கேட்கிறான்....விவாதிக்கிறான் ஆனால் மாறினான் என்றால் அது புறத்தில் இருந்து புகுத்தப்பட்டதால் அல்ல மாறாக அகத்தில் இருந்து உணரப்பட்டது.........! அகத்தில் உணரப்படாத மாற்றமென்பது நடிப்பு, வேசம், பொய், என்று சொல்லிக் கொண்டே போகலாம்.....

ஒற்றை துண்டை விரித்து.....படுத்துக்கொண்டு நேருக்கு நேராய் இருண்ட வானத்தை பார்க்கிறேன்.... என் நெஞ்சோடு மோதி முகத்தில் பரவி எனக்குள்ளும் பரவுகிறது அந்த பிரமாண்டம். ஒரு நட்சத்திரம் பிரகாசமாய், மற்றொன்று மங்கிய நிலையில், ஒன்று நகர்ந்து கொண்டு (அது செயற்கை கோளோ இல்லை வேறு எதுவோ..யாமறியேன் பராமரமே...) என்று குவிந்து கிடந்த நட்சத்திரங்களுக்கு நடுவே...ஒரு மூன்று நட்சத்திரங்களை ஒரே நேர்கோட்டில் நான் எப்போதும் கண்டிருக்கிறேன்...ஆனால் இப்போதுதான் ஆழ்ந்து கவனிக்கிறேன்....!

ஓ விண்மீண்களே.....! நீங்கள் எல்லாம் பூமி என்ற ஒன்றும்...சூரியன் என்ற ஒன்றும் உருவாவதற்கு முன்பே அங்கேதான் இருந்தீர்களா? இப்போது நீங்கள் பூமியாக எங்களை பார்க்கும் இடத்தில் முன்பு என்னவிருந்தது? வெற்று சூன்யமா? இல்லை வேறு ஒரு ஏதேனும் எங்களைப் போன்ற எல்லாம் அறிந்ததாய் நம்பிக் கொண்டிருந்த மானிடரோடு சுற்றிக் கொண்டிருந்ததா?

பூமியே இல்லாத போது பொய்யான நாடுகளும், மத, சாதி பேதங்கள், ஏழை பணக்காரன், கடவுள், வழிபாடு என்று ஒன்றூம் இருந்திருக்காது தானே?

என்ன சிரிக்கிறாய் வெட்டவெளியே? நாளை நானும் பின்னொரு நாளில் பூமியும் காணாமல் போய் உன்னில் கரைவோம் என்கிறாயா? வாஸ்தவம்தான்...ஆனால் உன்னை வெறும் அம்புலியாக நினைக்கிறது மானுடம்...ஹா...ஹா..ஹா...! மனிதரில் மிகச் சிலரே உன்னை உற்று நோக்கி தெளிவு அடைகிறார். மிகைப்பட்ட மானுடர்களுக்கு நீ, கவிதையாகவும், கட்டுரையாகவும், இன்னும் பலமில்லாத ஒரு பொம்மையாகவும்தான் படுகிறாய்.....

ஒரு நட்சத்திரத்தை நான் உற்று நோக்குகிறேன், இயன்ற அளவு வானத்தை என் கண்களால் குடிக்க முயல்கிறேன்....இந்த முயற்சிகளின் மத்தியில் ஒற்றை நட்சத்திரம் மட்டுமே என் கண்களில் நிலை கொண்டு.....சுற்றியிருந்த எல்லாம் மறைந்து, மறந்து... கண்கள் நிலை குத்தி...அப்படியே பார்த்து பார்த்து.....இமைகள் கவிழுந்து...உறக்கத்திற்கு முன்பான ஒரு நிலையில்..........

வெளியே பார்த்த மொத்த இருளும், மொத்த வெளியும் உள்ளே கண்கள் மூடியதும் இருளாய் என்னை சூழ்ந்திருப்பதை கண்டு பிரமித்துப் போன நான்..........பிரமிப்பில் உறங்கியே போனேன்.....!



தேவா. S

Comments

மிகப்பெரிய புத்தகம் அது , நம்மால் படித்து முடிக்கவே முடியாது
//சொல்லி புரியவைக்கும் அல்லது தெளிய வைக்கும் அத்தனை முயற்சிகளும் இந்த உலகத்தில் பயனற்றது. எந்த ஒரு விசத்தையும் ஒரு மனிதன் கேட்கிறான்....விவாதிக்கிறான் ஆனால் மாறினான் என்றால் அது புறத்தில் இருந்து புகுத்தப்பட்டதால் அல்ல மாறாக அகத்தில் இருந்து உணரப்பட்டது.........! அகத்தில் உணரப்படாத மாற்றமென்பது நடிப்பு, வேசம், பொய், என்று சொல்லிக் கொண்டே போகலாம்.....//

முற்றிலும் உண்மை எந்த விசயமும் நாம் தான் உணர வேண்டும் .மத்தபடி சொல்வதெல்லாம் பொய் ....
அண்ணா நல்ல பதிவு நோ கும்மி ............
யாராவது கும்மி போடீங்க நான் மனுசன இருக்கமாட்டேன் ஆமா .............(என்னக்கு கொஞ்சம் ஆணி அதான்)
@ சௌந்தர்
அன்னிக்கு தேவா வீட்டுக்கு போகும்போது கார் சாவி தேடிட்டு இருந்தாரே. நீயும் கூட சேர்ந்து தேடிருக்கலாம். பாரு இன்னும் தேடிக்கிட்டு இருக்காரு...
இதுபோன்று பல நாட்கள் சிறு வயதில் புரியாமல் யோசித்திருக்கிறேன். பல ரகசியங்களை மறைத்துள்ள விண்வெளி இன்றும் அதேபோல் உள்ளது!
கார்மேகம் பார்த்திருக்கிறீர்களா? தன்னுள் நீரை தேக்கிவைத்து ஒரு வித கவர்ச்சியான கருமையுடன் நகர்வதை? இனியேனும் பார்க்க தவறாதீர்கள்.////

இதோ இப்போதே பார்த்து வீட்டு வருகிறேன்
//ஒளியின் ஆளுமையின்றி....
கண் சிமிட்டி ஒளிரும்
ஓராயிரம் நட்சத்திர கூட்டம்...
அடர்தியான கருப்பு நிறத்தில்
வசிகரீக்கும் வானம்....//

இது உண்மைதான் அண்ணா ., நானும் நிறைய முறை ரசித்திருக்கிறேன் ..!!
//.இது மூளையில் காலம் காலமாக பொதிந்துள்ளதால்...எல்லோரின் மனமும் அதை நம்பிக் கொண்டு கருமையை அதற்கெதிராய் பார்க்கிறது.//

ஹய்யோ , எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்களோ..? ஆனா இதுவும் ஒருவிதத்தில் நியாயமானதுதான். கருப்பு , வெண்மை என அனைத்தும் நிறங்கள் தானே .. இதிலென்ன தூய்மை , அழுக்கு ..?
Unknown said…
ஒ ரசிக சீமானே ....
உங்கள் ரசனை,எழுத்து நடை இரண்டும் அருமை
@தேவா

மாப்ஸ் இது நடந்தது ஆகாஸ்ட் மாதம் ஆரம்பத்துல ரைட்டா??

(ங்கொய்யால!! வீட்டுல கரண்ட் இல்லாம மொட்ட மாடில போய் படுத்து அங்கையும் தூக்கம் வராம புரண்டு இங்க வந்து கதை.... :)) )
dheva said…
டெரரு...@ சார்ஜல கரண்ட் இல்லாம இருந்துச்சே அத சொல்றியா... அடப்பாவி மாப்ஸ் இது நடந்தது ஊருலயா.....


சரி.. எப்படி இருந்தாலும் சாச்சு புட்டாய்யயயா...........மாப்ஸ்!
Anonymous said…
பலசெய்திகள் தன்னகத்தே வைத்திருக்கும் இருளும் அழகுதான்!... ம் ம்.. சூப்பர்!
உங்கள் கூற்று முற்றிலும் உண்மை.
உங்கள் எழுத்து நடை மிகவும் அருமை.... வர்ணனைகளுடனான எழுத்து.
அருமை தேவா.
Anonymous said…
நல்ல சிந்தனைகள் ரசித்தேன்
///சொல்லி புரியவைக்கும் அல்லது தெளிய வைக்கும் அத்தனை முயற்சிகளும் இந்த உலகத்தில் பயனற்றது.////

ரொம்ப சரியா சொன்னிங்க தேவா.. :-))

ஒற்றைத் துண்டை விரித்து படுத்து
ஓராயிரம் விஷயம் சொல்லிட்டீங்க..!! :-))
//வெளியே பார்த்த மொத்த இருளும், மொத்த வெளியும் உள்ளே கண்கள் மூடியதும் இருளாய் என்னை சூழ்ந்திருப்பதை கண்டு பிரமித்துப் போன நான்..........பிரமிப்பில் உறங்கியே போனேன்.....!//

sappppaaaahhh...
நல்ல வேளை தூக்கம் வந்தது.. நாங்க தப்பிச்சோம்.. :-)))
(தேவா இது நா சொல்லவே இல்ல...)
Jokes Apart... Fantastic feeling..
I really enjoyed reading it.. :-)

Thanks for sharing your beautiful thoughts.
//ஒளியின் ஆளுமையின்றி....
கண் சிமிட்டி ஒளிரும்
ஓராயிரம் நட்சத்திர கூட்டம்...
அடர்தியான கருப்பு நிறத்தில்
வசிகரீக்கும் வானம்....
கருமையை மேலேயிருந்து
பெய்யாத மழையாய்
பூமிக்கு பெய்வித்து
சொல்லாமல் சொல்லியது...
ஓராயிரம் ரகசியங்களை…!//

சில கவிதைகள் ஆஹா போட வைக்கும் சில அட போட வைக்கும் இந்த கவிதை அசை போட வைத்தது மீண்டும் மீண்டும் கீப் ராக்கிங் பங்காளி!
நகரங்களில் அவ்வளவு தெளிவாக நட்சத்திரங்கள் தெரியாது. கிராமங்களில்தான் அருமையாக இருக்கும்.
ஹேமா said…
ஆழமான தேடலும் தெளிவும் தேவா.உங்கள் புகைப்படம் பார்த்திராவிட்டால் எழுத்தின் ஆழம் உங்களை மிக மிக அனுபவப்பட்ட முதியவராயக் காட்டும் !
Chitra said…
மனிதரில் மிகச் சிலரே உன்னை உற்று நோக்கி தெளிவு அடைகிறார். மிகைப்பட்ட மானுடர்களுக்கு நீ, கவிதையாகவும், கட்டுரையாகவும், இன்னும் பலமில்லாத ஒரு பொம்மையாகவும்தான் படுகிறாய்.....

....தேவா.... இரவின் வானத்தை ரசித்து பார்க்கும் போது கூட - உங்கள் எண்ண அலைகள் அருமையாக வருடுகிறதே!
வழக்கம் போல் தெளிவான சிந்தனைகள்...
Unknown said…
Anne naanum niraya thadava vaanatha veruchi parthirukken aana intha mathiri nenachu parthathilla.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

அவள்....!

அந்த கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவன் சுரேஷ். கல்லூரியில் சேர்ந்த ஆரம்பத்திலிருந்த கூச்சம் எல்லாம் போய் விட்டது அவனுக்கு. இப்பொதைய நாட்கள் நண்பர்கள், பாடம், கல்லூரி என்று கலை கட்ட ஆரம்பித்து விட்டது. +2 முடித்து கல்லூரியில் சேரும் எல்லா மாணவர்களுக்குமே வாழ்வின் அடுத்த நிலையான கல்லூரி வாழ்க்கை ஒரு சந்தோசமான விசயம்தான். வாழ்வின் அடுத்த கட்டம் ஒரு பள்ளி என்ற கட்டுண்ட நிலையில் இருந்து கொஞ்சம் சுதந்திரமான மரியாதை கிடைக்க கூடிய தான் பட்டம் பயில்கிறோம் என்ற ஒரு மமதையுடன் கூடிய சந்தோசம் என்று களை கட்டும் நாட்கள் அவை. அப்போதுதான் தலை முடியின் அலங்காரம் மாறும். சட்டை பேண்டின் விதிமுறைகள் மாற்றி அமைக்கப்படும். ஒரு சில நோட்டு புத்தகங்கள் கூடியிருக்கும் நண்பர்கள் கூட்டம் என்றும் ஒரு வித மிடுக்கு இருக்கும் அதுவும் இருபாலர் பயிலும் கல்லூரி என்றால் சொல்லவே தேவையில்லை. மேலே சொன்ன எல்லாம் இரு மடங்கு ஆகும். இந்த வாலிப களேபரத்தில் கல்லூரியும் படிக்கும் பாடமும் மைக்ரோ லெவலிலும் இன்ன பிற விசயங்கள் மேக்ரோ லெவலிலும் இருக்கும். இப்படிபட்ட ஒரு நியதிக்கு சுரேஷ் மட்டும் என்ன விதிவிலக்கா? கல்லூரி மாணவன் என...