கடும் சூடு நிறைந்த பொட்டல் வெளி அது. சுற்றிலும் செம்மண் சரளைக் கற்களும் ஆங்காங்கே முட்கள் நிரம்பிய கருவேலம் மரங்களும், சப்பாத்திக் கள்ளிகளும் மட்டுமே நிரம்பிக் கிடந்தன. அந்த புளிய மரத்தின் கீழ் நான் நின்று கொண்டிருந்தேன். கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இரண்டு மண் மேடுகள் சுற்றிலும் செங்கல் வைத்து அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இடது புறம் அப்பத்தாவும் வலதுபுறம் தாத்தாவும் அங்கேதான் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் வசித்த வீடு எனக்குப் பின்னால் கொஞ்ச தூரத்தில் அதுவும் கண்ணெதிரேயே தெரிந்தது. எனக்கு முன்னால் அவர்களின் சமாதியும், பின்னால் அவர்கள் வாழ்ந்த வீடும், நடுவில் நானும்..... சுற்றிலும் இருந்த பனைமரங்கள் அனலாய் வீசிய காற்றோடு ஏதோ பேசிக்கொண்டிருந்தன. தாத்தா நட்டு வைத்த மரங்கள்தான் அவை அத்தனையும்... வானம் பார்த்த பூமியின் புஞ்சைக்காடு பார்ப்பதற்கு அவ்வளவு சுகமாய் ஒன்றும் இருக்காது. பயன்படுத்தாத தரிசு நிலங்கள் தோறும் வகை தொகை இல்லாமல் முட்களும், கரம்பைகளும் பெயர் தெரியாத பல செடிகளும் இஷ்டப்படி வளர்ந்து கிடக்கும். எது வருமோ அது வளரும். என் பூர்வீக வீட்டுக்கு பின் இருக்கு...
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....