எப்போது இருந்து பிரதோஷம் அன்று விரதம் இருக்கத் தொடங்கினேன் என்பது எனக்கு நினைவில் இல்லை. சிவபக்தன் என்று என்னை சொல்லிக் கொள்வதிலும் சிவபூஜை செய்வதிலும் எனக்கு ஏன் அதிக ஆர்வம் உண்டானது என்று இதுவரையில் எனக்குத் தெரியாது. சிவன் என்று சொன்ன உடனேயே எனக்குள் சர்வ நாடியும் ஒடுங்கிப் போகும். அங்கே இங்கே என்று அலைந்து கொண்டிருக்கும் மனது ஒடுங்கிக் கொள்ளும், நெஞ்சு அடைக்கும் ஏதோ ஒன்று உள்ளுக்குள் மட மடவென்று உடையும். அப்படி உடைந்து எல்லாம் நொறுங்கி விழுந்த பின்பு.... என்னப்பன் அல்லவா... என் தாயுமல்லவா... பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா... என்று உள்ளுக்குள் புலம்பத் தொடங்கி விடுவேன். புலம்பல் நின்று போன பின்பு நினைக்க எதுவுமின்றி ஒரு புள்ளியில் மனம் ஸ்தம்பித்து நிற்க பீறிட்டு அழுகை வரும். அழுகையை கட்டுப்படுத்தாமல் கேவிக் கேவி அழுதிருக்கிறேன். அழுகையோடு சேர்ந்து ஏன் இப்டி எல்லாம்? ஏன்? ஏன்? ஏன் என்று ஒரு கேள்வி அடி நெஞ்சை அழுத்திக் கொண்டே இருக்கும். எதற்காக ஏன் என்று கேட்கிறேன் என்றும் எனக்குப் பிடிபடாது, ஆனால் மானசீகமாய் சிவனை ஒரு உருவாய் நினைத்து பாதங்களைப் பிடித்து ஏன்...? ஏன்...
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....