ஒரு தார்ச்சாலையும், கொளுத்தும் உச்சிவெயிலும், இறுகக் கட்டிய கழுத்து டையும் வெறுமையான எதிர்காலமும் எப்போதும் வெறுப்பாய் பார்க்கும் மனிதர்களும்...டார்கெட் நோக்கி துரத்தும் படியளக்கும் முதலாளிகளும் எப்போதும் அறிந்ததில்லை திருமணத்திற்காக காத்திருக்கும் என் அக்காவையும் கடந்த மாதம் ரிட்டயர்ட் ஆன என் அப்பாவையும், எட்டாம் வகுப்பு படிக்கும் என் தம்பியையும்.....
கல்லூரிக்கு அனுப்பியதே மிகப்பெரிய சாதனையாகவும் பெற்ற பி.காம்., பட்டமே மிகப்பெரிய அங்கீகாரமாகவும் நினைத்த என் குடும்பத்தினரின் ஒரே நம்பிக்கை நான். நான் பெற்ற பட்டம் முன் அனுபவம் இல்லை என்பதால் நிராகரித்த
மிகைப்பட்ட பன்னாட்டு நிறுவனங்களும் சரி....இன்னும் அடி மாட்டு விலைக்கு வேலைக்கு கூப்பிட்டு ஓரிரு மாதங்கள் சென்று சம்பளம் கொடுக்காமால் ஏமாற்றிய உள்நாட்டு முதலாளிகளும் சரி....
என்னால் சரியாக புரிந்து கொள்ள முடியாதவர்கள்....அவர்களின் வேலை கொடுப்பதற்கான அளவீடு என்ன என்பதும் அறிந்து கொள்ள நான் முயலவில்லை காரணம் என் வீட்டின் பசி.
ரிட்டயர்மெண்ட் ஆன அப்பாவின் பணம் வீடுகட்ட வாங்கிய கடனுக்கு போதுமானதாக இருந்தது. நான் கூட கேட்டேன்.. கடன் வாங்கி அப்படி என்னத்த வீடு கட்டணும்னு....? பதிலாக அக்காவின் திருமணம் என்ற ஒன்றை சொன்னார்கள். ஆமாம் சொந்த வீடு இருந்தால்தான் மாப்பிள்ளை கொடுப்பார்களாமே....? சேலையூர் தாண்டி காமராஜபுரம் பக்கத்தில் எப்போதோ அப்பா கூட்டாக பணம் போட்டு வாங்கிய இடத்தில் ஒரு குருவிக் கூடு எங்களுக்கு சொந்தமாவதற்கு மேற்கொள்ளப்பட்ட சிரமங்களை சொல்லி மாளாது....
ஒரு வாட்டர் ப்யூரிஃபையர் விற்கும் கம்பெனி மாத டார்கெட் இவ்வளவு என்றும் ரூபாய். 4,000 சம்பளத்துக்குதான் உன் பி.காம் டிகிரி வொர்த் என்றும்.. அக்கவுண்ஸ்ல வேலை வேணும்ன அக்கவுண்ட்ஸ் பத்தி முன் அனுபவம் வேணும்னு சொல்லிடுச்சி.... நான் எங்க போறது முன் அனுபவத்துக்கு? 6 மாசம் முன்னால டிகிரி முடிச்சவனுக்கு எப்படி கிடைக்கும் முன் அனுபவம்?
கிண்டி பிரிட்ஜ்ல ஏறி இறங்கிக் கொண்டிருந்தேன்.... சென்னை வெயில் கொளுத்தியது....அக்னி நட்சத்திரமா இருக்கட்டும் இல்லா ஏதாவதா இருக்கட்டும் என்னைய மாதிரி ஒரு வேலை செய்றவங்க நிலைமையெல்லாம் ரொம்ப கஷ்டம்டா சாமி....!
தூசும் புகையும், ஆட்டோகாரர்களின் அலட்சியமும் , பேருந்துகளின் சீற்றமும், பார்த்துக் கொண்டே நடந்து கொண்டிருந்த எனக்கு பைக்கின் முன்னால் ஒரு குழந்தையும் பின்னால் அவரது மனைவியும் அவரது கையில் ஒரு குழந்தையும் வைத்துக் கொண்டு கிண்டி பிரிட்ஜ் இறக்கத்துல தத்தளித்துக் கொண்டிருந்த நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவரை பார்க்க நேர்ந்தது.
எல்லோருக்கும் பழகிப் போய்ட்விட்டது எப்போதும் அட்ஜஸ்ட் பண்ண முடியாத வாழ்க்கை என்று எதுவுமில்லை. எல்லாம் பழக்கத்தின் அடிப்படையில் உண்டாவது.
என்னால் இப்படி இருக்க முடியாது.... அப்படி இருக்க முடியாது என்று சொல்வது எல்லாம் ஒரு வசதிக்காக....!
கால் நீட்ட இடம் இருக்கிற வரைக்கும் நீட்டலாம்... இடிச்சா மடக்கிங்க வேண்டியதுதான்.....உச்சி நேரம் நெருங்கி பசி வயித்த கிள்ளுது சார்.. நான் சைதாப்பேட்டை அடையாறு பக்கம் போய் சுத்தணும்... வீடு வீடா கதவ தட்டி காலிங் பெல் அமுக்கி.....ரொம்ப கஷ்டம் சார்......பிச்சைகாரங்க கூட ஒரு வேளை சாப்பாடு இல்லண்ணா ஒரு எட்டணா போட்டு அனுப்புறாங்க.....
நாம போய் பெல்ல அடிச்சாலே....சில பேருக்கு வருது பாருங்க கோவம்.....! ஆமா சார் லாஸ்ட் வீக்... அண்ணா நகர்ல ஒரு நாய அவுத்து விட்டாங்க சார்...நல்ல வேளை நான் கேட்டுக்கு வெளில நின்னேன்...அது அவுங்க பிரைவேட் டைம்ங்களாம்....ரெஸ்ட் எடுக்குற நேரமாம்....
என்னா சார் பண்றது... அவுங்க ஓய்வு எடுக்குற நேரத்துல ஏதாச்சும் வாங்கணும்னு முடிவு பண்ணி வாங்கினாதானே சார்....நாம ஒரு 5 மணி நேரமாச்சும் நாம நிம்மதியா தூங்க முடியும்.....! சார்ந்து வாழ்ற வாழ்க்கைனு படிக்கிறாங்க.... சொல்றாங்க...ஆனா.....அது எல்லாம் வசதிக்கு ஏத்தாப்லதான் ....துட்டு இருக்குறா ஆள துட்டு இருக்கவன் ஃபிரண்ட் ஆக்கிக்குவான்....ஹக்கூம்......
காலைல இருந்து எதுவும் சாப்டல...ஒரு டீயும் வடையும் துன்ன போறேன்....உங்களுக்கு வேணுமா சார்....? வாணாமா.... சரிங்க சார்...
ஜஸ்ட் இந்த வாட்டர் ப்யூரிஃபையர் வேணுமானு பாருங்க.....அட வாங்க வாணாம் சார்...! ஜஸ்ட் ஃப்ரவுசர்தானுங்களே....வச்சுக்கோங்க....வேணும்னா இந்த செல்லுல கூப்பிடுங்க.....சரிங்களா?
அப்புறம் மறக்காம வீட்டம்மாகிட்ட எல்லாம் சொல்லுங்க சார்... வாணாம்னா "டபார்"னு கதவை அடைக்காம....கொஞ்சம் அப்பால போனதுக் கோசரம் அடைக்க சொல்லுங்க சார்....!
ஒவ்வொரு நாளும் கழுத்துல " டை " கட்றப்ப போடுற முடிச்சு வெறும் முடிச்சு இல்ல சார்...வாழ்க்கை போட்டு இருக்க முடிச்சு.....வெளில பாக்கிறப்ப அலங்காரமா தெரியலாம்..அதுக்கு பின்னால இருக்குற வேதனைகள் யாருக்கும் தெரியாது சார்...!
அப்போ பாக்கலாம் சார்.... ..மறக்காம கால் பண்ணுங்க..உங்களுக்கு மெட்டிரியல் தேவைப்பட்டா......
(ஒரு டீக்கடையில் ஒதுங்கி கொண்டது இந்தியாவின் வருங்காலம்...)
தேவா. S
Comments
padichitu vaaren
ரொம்ப அருமையா சொல்லியிருக்கீங்க தேவா.
தலைப்பும் மிகப்பொருத்தம்.. எல்லாருமே கண்ணுக்குத் தெரியாத ஒரு முடிச்சு கட்டப்பட்டுதான் வாழ்ந்துகிட்டு இருக்கோம் இல்லையா..
மனதை பாதித்த பதிவு..
உண்மைதான்..
நாங்க எப்போதும் இந்த மாதிரி வருபவர்களை நன்றாக தான் நடத்துவோம்....கதை ரொம்ப நல்லா இருக்கு...!
ஆனா நம்ம ஜனங்க ரொம்ப மோசாம இந்த மாதிரி டை கட்டி வருகிறவர்களை நடத்துகிறார்கள் .எல்லாம் வயிற்று பொழப்பு ........சொல்ல ஆரம்பிக்கும் முன் வேண்டாம் போ என்பார்கள் ......ஒரு நாயை விட மோசமாக நடத்துவர்கள்.
இப்பொழுது நான் அப்படி நடத்துவதில்லை தேவையோ ........தேவை இல்லையோ .....அவர்கள் சொல்வதை கேப்பேன் .....தேவை படும் பொழுது கண்டிப்பாக அவர்களை தான் கூப்பிடுவேன் ............உண்மையாக இருக்கும் பட்சத்தில்
பிரமாதம்ங்க.
.சென்னையில் நிறைய அடுக்குமாடி கட்டிடங்களில் விற்பனை பிரதிநிதிகளுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பு தொங்கும். அவர்கள் வீடுகளில் இருந்து யாரும் இவ்வேலைக்கு போவதில்லை போலும். உங்கள் எழுத்தில் இருக்கும் நிதர்சனம் ஒரு விற்பனை பிரதிநிதியாக வாழ்ந்து பார்த்த அனுபவம்.. இங்கு போலிகள்தாம் நிம்மதியாய் வாழ்கிறார்கள்.
கிரெடிட் மார்க்கெட்டிங்க்கில் இருக்கயில் நானும் இதுபோல் அவஸ்தை பட்டதுண்டு.........
மனிதனின் ஆசைகள் பூர்த்தியாக பணத்திர்கு அடிமை ஆக வேன்டியதுதான்.
என்னோட முதல் பதிவே இந்த பாலா போன "பணம்" - பற்றியதுதான்
http://enpakkangal-rajagopal.blogspot.com/2010/07/blog-post.html
எங்க அப்பாவும் வீடு கட்டி முடிப்பதற்குள் பட்ட பாடு என் நினைவுக்கு வருதுங்க..!!
சேல்ஸ் ரெப்ஸ் படற கஷ்டம், அந்த இடத்துல இருந்து யோசிச்சு எழுதி இருக்கீங்க..
"விடியாத இரவென்று எதுவும் இல்லை............" பொருத்தமான பாடல் தேர்வு.. வெரி நைஸ்..!!!!! :-))))
....தேவா - வாழ்க்கை, ஒவ்வொருக்கும் ஒவ்வொரு package ல வருது.... அதன் அர்த்தங்களை புரிந்து கொண்டு, நீங்கள் உங்கள் எழுத்துக்களில் கொண்டு வரும் விதம் அருமை..... பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
இந்த துறை மிகமிக கொடுமையானது. எனக்கும் இது போல சில அனுபவங்கள் உண்டு... ரொம்ப கஸ்டம்டா சாமி... :-(