அது ஒரு நடு நிசி என்று தெரிந்தேதான் எழுந்தேன். சப்தங்களற்ற அந்த தருணத்தில் என்ன நிகழ்கிறது இந்த பூமியில் என்றறிய நான் கொண்டிருந்த பெருங் கனவினை பெரும்பாலும் தூக்கம்தான் ஜெயித்திருக்கிறது. இன்று நான் தூக்கத்தை புறமுதுகிட்டு ஓடச்செய்து....கான்கிரீட் தடுப்புகளுக்க்குள் இருந்து வெளி நோக்கி வந்தேன் என்று சொல்வது சரியான வார்த்தையாய் இருக்காது...உண்மையில் பாய்ந்தேன். எல்லோரும் உறங்கிக் கொண்டிருந்த பொழுதில் நான் எப்போதும் அமரும் நதிக்கரை என்ன செய்து கொண்டிருக்கும் என்று காணும் ஆசை துளிர்க்க கால்கள் அனிச்சையாய் நடக்கத் தொடங்கியிருந்தன.... சில் வண்டுகளின் சப்தமும், சில்லென்ற காற்றும் ஒன்றாய் என்னைச் சூழ எப்போதும் போல நிலவு மேகங்களுடன் சல்லாபித்துக் கொண்டிருக்கையில் பக்கத்து தெருவில் நாய் மட்டும் ஏனோ ஊளையிட்டுக் கொண்டிருந்தது. பேயை கண்டால் நாய் ஊளையிடுமாமே? உண்மையா?மனது கேட்ட கேள்வியை புத்தி ஆராய்ந்து கொண்டிருக்கையில் மனமே மீண்டும் ஒரு பதிலைச்சொன்னது... ஆமாம் பேய் இருக்குமென்று.....ஆராய்ச்சியை நிறுத்திய மூளை உடல் முழுதும் பயத்தை பரவவிட்டு மீண்டும் மனமே சொன்னது திரும்ப வீட்டுக்கு சென்று விடு என்று
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....