Skip to main content

ஓடம்...!






















அது ஒரு நடு நிசி என்று தெரிந்தேதான் எழுந்தேன். சப்தங்களற்ற அந்த தருணத்தில் என்ன நிகழ்கிறது இந்த பூமியில் என்றறிய நான் கொண்டிருந்த பெருங் கனவினை பெரும்பாலும் தூக்கம்தான் ஜெயித்திருக்கிறது. இன்று நான் தூக்கத்தை புறமுதுகிட்டு ஓடச்செய்து....கான்கிரீட் தடுப்புகளுக்க்குள் இருந்து வெளி நோக்கி வந்தேன் என்று சொல்வது சரியான வார்த்தையாய் இருக்காது...உண்மையில் பாய்ந்தேன்.

எல்லோரும் உறங்கிக் கொண்டிருந்த பொழுதில் நான் எப்போதும் அமரும் நதிக்கரை என்ன செய்து கொண்டிருக்கும் என்று காணும் ஆசை துளிர்க்க கால்கள் அனிச்சையாய் நடக்கத் தொடங்கியிருந்தன....

சில் வண்டுகளின் சப்தமும், சில்லென்ற காற்றும் ஒன்றாய் என்னைச் சூழ எப்போதும் போல நிலவு மேகங்களுடன் சல்லாபித்துக் கொண்டிருக்கையில் பக்கத்து தெருவில் நாய் மட்டும் ஏனோ ஊளையிட்டுக் கொண்டிருந்தது. பேயை கண்டால் நாய் ஊளையிடுமாமே? உண்மையா?மனது கேட்ட கேள்வியை புத்தி ஆராய்ந்து கொண்டிருக்கையில் மனமே மீண்டும் ஒரு பதிலைச்சொன்னது... ஆமாம் பேய் இருக்குமென்று.....ஆராய்ச்சியை நிறுத்திய மூளை உடல் முழுதும் பயத்தை பரவவிட்டு மீண்டும் மனமே சொன்னது திரும்ப வீட்டுக்கு சென்று விடு என்று...

நடந்து கொண்டே உள்ளே நடந்த இந்த போராட்டத்தை விடுத்து ஏதோ ஒரு உணர்வு பேய் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? பேய் வந்தால் பேயோடு சினேகம் கொள் வராவிட்டால் இல்லை என்று போய்விடு.. இதற்கு போய் ஏன் தர்க்கம் என்று மனதின் முயற்சிகளை அறுத்தெரிந்தது. மூணாவது தெருவை கடந்து நான் கடக்கும் போதுதான் தவசி தாத்தாவின் நினைவு வந்தது....போனவாரம்தான் இறந்து போயிருந்தார்....

ஆஜானுபாகுவான உடல் எப்போதும் முறுக்கிய மீசை என்று தாத்தாவை கண்டாலே எல்லோருக்கும் பயம். வாசலிலேயே எப்போதும் கயிற்றுக் கட்டிலில் படுத்து இருப்பார். உடலின் கட்டுக்கு பின்னால் அவரின் இளவயது உடற்பயிற்சியும், சரியான உணவும் இருந்தாகச் சொல்வார்கள். தாத்தாவிற்கு கோவம் வந்துச்சுன்னா எவனும் முன்னால நிக்க முடியாதாம் அப்படி ஒரு முரடனாம். வயக்காட்டு வேலையும் கொளுத்த பணமும் அவருக்கு ஆங்காங்கே கூத்தியாள்களையும் கொடுத்திருந்தாம்.

யாருக்குமே மசிஞ்சு போகாத தாத்தா கோவில், கடவுள்னு எவனச்சும் பேசிட்டு வந்தா போட்டு நொறுக்கி அள்ளிப் போட்டுடுவாராம். களாவாணிப் பயலுகளா...களவாணிப்பயலுகளான்னு ஈட்டிக் கம்ப எடுத்துட்டு தொறத்துவாராம்...

எல்லாம் சரிதான்...இது எல்லாம் நான் சொல்லக்கேட்டதுதான் ஆனா... அவரோட கடைசிக்காலத்துலதான் நான் பக்கத்துல இருந்து பாத்து இருக்கேன்...! முரட்டு சம்சாரியா இருந்தவரா? இவருன்னு ஆச்சரியமா இருந்துச்சு.... மூட்டு வலி அதனால நிக்க முடியாது......தோளெல்லாம் சுருங்கிப் போய் முடியெல்லாம் கொட்டிப் போய், முறுக்குன மீசையில் நாலைஞ்சு முடி மட்டும் பூனைக்கு இருக்குறது கனக்கா இருந்துச்சு...! ஊரெல்லாம் கூத்தியா வச்சிருந்த மனிசனுக்கு கடைசி காலத்துல கண்ணும் தெரியாம போச்சு....

கண்ணத்தா அப்பத்தாதான் அவருக்கு எல்லாமே செஞ்சுகிட்டு இருந்துச்சு, புள்ளை குட்டிய எல்லாம் கட்டிக் கொடுத்து தூரத்தில இருக்காங்க. கயித்து கட்டில்ல இருந்த படியே ....ஏய் கண்ணாத்தா... ஏய் கண்ணாத்தானு கத்திகிட்டு இருப்பாரு....பசிச்சாலும் சரி, மத்த இயற்கை உபாதைகளுக்கும் சரி.., இடுப்புல இருக்குற வேஷ்டி அவுந்தா கூட கட்டத் தெரியாது அதுக்கும் கண்ணாத்தா அப்பத்தாதான்னா பாருங்களேன்....

என்ன ஆச்சு இவரோட உடற்கட்டுக்கு? எங்க போச்சு இவரோட திமிரு எல்லாம்? எங்க போய்ட்டாளுங்க இவரோட கூத்தியாங்க எல்லாம்?

அனிச்சையாய் எழுந்த கேள்வியை அடக்க முடியாமல் கேட்டு விட்டு.....வெறுமையாய் கிடந்த கயிற்றுக் கட்டிலுக்கு என் பெருமூச்சை கொடுத்துவிட்டு... நான் நடந்தேன்...

தெருக்களை கடந்து வயல்களைக் கடந்து காட்டுக்குள் ஊடுருவிய பொழுது மீண்டும் பயம் வந்தது. பெரும்பாலும் மனதுக்கு கூட்டமும் மனிதர்களும் பேச்சுக்களும் தேவைப்படுகிறது. ஆள் அரவமற்றுப் போனால் உடனே ஒரு வித சோகத்தை பரப்பி அதை பயம் என்று மூளைக்குச் சொல்கிறது.

யாருமற்றுப் போனால் என்ன? ஏன் பயம் வரவேண்டும்? என்ற கேள்விக்கு பதிலாய் அது மரணபயம் என்ற பதில் கிடைத்தது. மரண பயம்தான் எல்லா பயத்தின் மூல காரணம். மரணம் என்ற ஒன்று இல்லையெனில் இங்கே கடவுளர்களும் இல்லை தத்துவங்களும் இல்லை. வலு இருப்பவனே எல்லாவற்றையும் ஆளும் சக்கரவர்த்தியாய் இருந்திருப்பான் என்று எண்ணும் போது கடவுளும், கற்பிதங்களும் இதற்காகத்தான் படைக்கப்பட்டிருக்கவேண்டும் என்று தோன்றியது.

இதோ நெருங்கியே விட்டோம் நதியை.....அதோ அங்கே அமைதியாய் ஓடிக் கொண்டிருக்கிறது பாருங்கள் சலனமின்றி அதுதான் நான் சொன்ன நதி. ஆழமாய் உள்வாங்கிக் கொள்ளுங்கள்...நிலவின் ஒளியை போர்த்திக் கொண்டு பள பளவென்று ஓடும் நதிக்கும், கரையில் நின்று கொண்டு காற்றோடு ரகசியம் பேசிக் கொண்டிருக்கும் மரங்களுக்கும் கர்வங்கள் இருக்குமா? திமிர்கள் இருக்குமா? இல்லை தவறான உறவுகள் இருக்குமா? வலிவுகளும் இல்லாமல் கற்பிதங்களும் இல்லாமல் ஒரு வாழ்க்கை இருக்கத்தானே செய்கிறது.

சிந்தித்தபடியே நதிக்கரையில் நாணல்கள் இல்லாத ஒரு இடத்தில் நான் அமர்ந்தே விட்டேன். சில்லென்ற தரை உடலுக்குள் சிலிர்ப்பூட்டி நிலவோடு ஒரு தொடர்பை எனக்கு சூட்சுமமாய் முடிச்சே போட்டு விட்டது. சட்டென்று நான் எதிர்பார்க்கா வண்ணம் நடு நதியில் ஏதோ ஒன்று மிதந்து வர...அட..அது என்ன என்ற எண்ணத்தில் எனக்குள் ஆச்சர்யம் முளைத்திருந்தது...

ஒரு சலனமுமின்றி நீரின் ஓட்டத்தோடு எந்த வித முரணுமின்றி நகர்ந்து கொன்டிருந்த ஓடத்தினை பார்த்துக் கொண்டே இருந்த என்னின் நினைவுகள் சட்டென்று நின்றே போயிருந்தன.....! வாழ்க்கை ஒட்டமும் ஒரு நதியைப் போலத்தான் முரணற்ற ஓடம் சுகமாய் நதியின் ஓட்டத்தோடு பயணித்து சேரும் இடம் சேர்கிறது...!

அலைக்கழிப்புகளோடு சேர்ந்தே அலைகிறது, கரையின் ஓரம் ஒதுங்கினால் ஒதுங்கிக் கிடக்கிறது.. மீண்டும் நகரும் சூழல் வந்தால் நகர்கிறது. மொத்தத்தில் ஒரு ஓடம்
ஓடமாய்த்தான் தன்னை காட்டிக் கொள்கிறது....

மனிதன் மட்டும் தான் தன்னை அகந்தையுள்ளவனாகவும், வலுவுள்ளவனாகவும், அடக்கியாள்பவனாகவும் காட்டிக் கொள்கிறான்....! உலகமே தன் காலடியில் என்ற எண்ணம் கொள்கிறான். எல்லாம் தொலைந்து போகும் வயோதிகத்தில் கடைவாயில் எச்சில் ஒழுக அதை துடைக்கக் கூட திரணியற்று...இடுப்பு செத்துப் போய் மரணமென்றால் ஏதோ என்னவோ என்று பதறி வாழ்க்கை நதி ஒரு பக்கம் இழுக்க...கடந்த கால இறுமாப்புகள் ஒரு பக்கம் இழுக்க...என்னவென்றியா ஒரு பயத்தில் வாழ்க்கையை ஜெயிக்கவிட்டு வாய் பிளந்து மரிக்கிறான்.

சம்பந்தமே இல்லாமல் தவசி தாத்தா ஏனோ எனக்கு நினைவுக்கு வந்தார்....

நானும், நதியும், கடந்து போன ஓடமும், நதிக்கரை நாணலும்...மரங்களும், காற்றும் நிலவும் சலனமின்றி வாழ்க்கை ஓட்டத்தில் நீந்திக்கொண்டிருந்தோம்......

விடியத் தொடங்கியிருந்தது அந்த இரவு.....!


தேவா. S

Comments

அருமையான பதிவு தேவா.......
காலம் மனிதனை எவ்வளவாக மாற்றி விடுகிறது இல்லையா.....!!!!!
//சம்பந்தமே இல்லாமல் தவசி தாத்தா ஏனோ எனக்கு நினைவுக்கு வந்தார்....//

very nice....
//மனிதன் மட்டும் தான் தன்னை அகந்தையுள்ளவனாகவும், வலுவுள்ளவனாகவும், அடக்கியாள்பவனாகவும் காட்டிக் கொள்கிறான்....! உலகமே தன் காலடியில் என்ற எண்ணம் கொள்கிறான். எல்லாம் தொலைந்து போகும் வயோதிகத்தில் கடைவாயில் எச்சில் ஒழுக அதை துடைக்கக் கூட திரணியற்று...இடுப்பு செத்துப் போய் மரணமென்றால் ஏதோ என்னவோ என்று பதறி வாழ்க்கை நதி ஒரு பக்கம் இழுக்க...கடந்த கால இறுமாப்புகள் ஒரு பக்கம் இழுக்க...என்னவென்றியா ஒரு பயத்தில் வாழ்க்கையை ஜெயிக்கவிட்டு வாய் பிளந்து மரிக்கிறான்.//


சிலிர்க்க வைக்கும் வரிகள்....!!!
//யாருக்குமே மசிஞ்சு போகாத தாத்தா கோவில், கடவுள்னு எவனச்சும் பேசிட்டு வந்தா போட்டு நொறுக்கி அள்ளிப் போட்டுடுவாராம். களாவாணிப் பயலுகளா...களவாணிப்பயலுகளான்னு ஈட்டிக் கம்ப எடுத்துட்டு தொறத்துவாராம்...//


நித்தியானந்தா சாமி உங்க தாத்தா கையில அம்புட்டுருந்தா கண்டிப்பா ஈட்டி குத்துதான்...
Unknown said…
//பேயை கண்டால் நாய் ஊளையிடுமாமே? உண்மையா?//

நாய் ஊளையிடுவதை பார்த்தவுடன் மனம் ஊளையிடும்..... #மனப்பிராந்தி
உண்மையான அன்புள்ளவர்கள் மட்டுமே அந்த கடைசி காலத்திலும் அவர்கள் செய்த தீமைகளை மறந்து அருகில் இருந்து பல பணிவிடைகளை செய்வார்கள்!
உடலில் பலம் இருக்கலாம். அதனால் அகந்தை கொண்டு வலிமை இருக்கும்போது இருப்பவர்கள் நிச்சயம் முதுமையில் தாங்கள் செய்த தீமைகளின் பலனை அனுபவிப்பார்கள்! (முற்பகம் செய்யில் பிற்பகல் விளையும்!)
பயங்களில் மிகவும் அடிப்படையான எல்லோருக்கும் உள்ள பயம் மரன பயம்தான். பெரியவர் முதல் சிறியவர் வரை நம் உணர்வுக்குள் ஊறியுள்ள பயம் அது. வயதான காலத்தில், வலிமை குன்றிய காலத்தில் அந்த பயம் அதிகமாகிவிடுகிறது!
விடியத் தொடங்கியிருந்தது அந்த இரவு.....!
விடியத் தொடங்கியிருந்தது அந்த இரவு.....!
விடியத் தொடங்கியிருந்தது அந்த இரவு.....!
@@தேவா...

எனக்கு "பூம்புகார்" படத்தில் வரும், KBS அவர்கள் பாடிய,

வாழ்க்கை எனும் ஓடம்.. வழங்குகின்ற பாடம்...
மானிடரின் மனதினிலே மறக்க ஒண்ணா வேதம்...

வாலிபம் என்பது கலைகின்ற வேடம்...
அதில் வந்தது வரட்டும்.. என்பவன் முழுமூடன்...

துடுப்புகள் இல்லா படகு.. அலைகள் அடிக்கின்ற
திசையெல்லாம் போகும்...
தீமையை தடுப்பவர் இல்லா வாழ்வும்...
அந்த படகின் நிலை போலே ஆகும்....
அந்த படகின் நிலை போலே ஆகும்....

......இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாடல்..
உங்க பதிவின் சாராம்சமும் இதையே சொல்கிறது

வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்திய அழகான பதிவுங்க.. நன்றி.. :-))

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

அவள்....!

அந்த கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவன் சுரேஷ். கல்லூரியில் சேர்ந்த ஆரம்பத்திலிருந்த கூச்சம் எல்லாம் போய் விட்டது அவனுக்கு. இப்பொதைய நாட்கள் நண்பர்கள், பாடம், கல்லூரி என்று கலை கட்ட ஆரம்பித்து விட்டது. +2 முடித்து கல்லூரியில் சேரும் எல்லா மாணவர்களுக்குமே வாழ்வின் அடுத்த நிலையான கல்லூரி வாழ்க்கை ஒரு சந்தோசமான விசயம்தான். வாழ்வின் அடுத்த கட்டம் ஒரு பள்ளி என்ற கட்டுண்ட நிலையில் இருந்து கொஞ்சம் சுதந்திரமான மரியாதை கிடைக்க கூடிய தான் பட்டம் பயில்கிறோம் என்ற ஒரு மமதையுடன் கூடிய சந்தோசம் என்று களை கட்டும் நாட்கள் அவை. அப்போதுதான் தலை முடியின் அலங்காரம் மாறும். சட்டை பேண்டின் விதிமுறைகள் மாற்றி அமைக்கப்படும். ஒரு சில நோட்டு புத்தகங்கள் கூடியிருக்கும் நண்பர்கள் கூட்டம் என்றும் ஒரு வித மிடுக்கு இருக்கும் அதுவும் இருபாலர் பயிலும் கல்லூரி என்றால் சொல்லவே தேவையில்லை. மேலே சொன்ன எல்லாம் இரு மடங்கு ஆகும். இந்த வாலிப களேபரத்தில் கல்லூரியும் படிக்கும் பாடமும் மைக்ரோ லெவலிலும் இன்ன பிற விசயங்கள் மேக்ரோ லெவலிலும் இருக்கும். இப்படிபட்ட ஒரு நியதிக்கு சுரேஷ் மட்டும் என்ன விதிவிலக்கா? கல்லூரி மாணவன் என...