Skip to main content

அரிமா...!


















எமது பிடரி முடி சிலிர்த்து பறக்கிறது காற்றில்...நிதானமான எமது நடையும் பார்வையின் தீர்க்கமும் அறியப்பெறுதல் சாமானியர்களுக்கு சாத்தியமற்றது. எமது கண்களின் தீர்க்கம் பற்றிய கணிப்புகளைப் பற்றி எமக்கு இரையாகிப் போன ஜீவன்களிடம் யாரும் விசாரித்திருக்க வாய்ப்பே இல்லை. ஆமாம் ஒற்றை பாய்ச்சலில் குரல்வளைகளில் கடிபட்டுப் போகும் உயிர்கள் என்ன ஊர்வலங்களா நடத்தும் எமது பற்களின் கூர்மை பற்றி.....

பசிக்கும் போது மட்டுமே புசித்து பழக்கப்பட்டு இருக்கிறோம். எமது இறையையும், இரையையும் யாரும் முடிவு செய்வதில்லை எப்போதும். யாமே கூட தீர்மானிக்க முடியாத எமது தேவையை எப்போதும் எமது பசிதான் தீர்மானிக்கிறது. மெளனத்தில் கழிக்கும் காலங்களில் யாம் எம்மைச் சுற்றி ஊர்வன, பறப்பன தவழ்வன பற்றி எப்போதும் அக்கறைகள் கொள்வதில்லை.

இரைப்பயின் இருக்கம் கொடுக்கும் சுகத்தில் எம்முள் சுற்றிப்பாயும் இரத்ததின் ஓட்டம் ஒரு நதியினைப் போல சலனமின்றி பரவி எமது புத்தியை எப்போதும் குளுமைப்படுத்தியே வைத்திருக்கிறது. ஒரு மோன நிலை, ஒரு ஞான நிலையில் எம்மையே மறந்து யாம் லயித்துக் கிடக்கும் பொழுதுகளில் உலத்தில் இருக்கும் எல்லா உயிர்களும் ஜீவித்திருக்க கொஞ்சம் கால அவகாசம் யாம் கொடுப்பதாக வரலாற்றின் ஏடுகள் சொல்லி கொண்டே வந்திருக்கிறது காலங்கள் தோறும்....

சப்தங்கள் அடக்கி, சுற்றங்கள் சுருக்கி தனித்திருக்கும் யாம் தனித்தன்மை கொண்டவர் தாமென்று யாம் வாய் திறந்து வேறு பகிரவேண்டுமோ? சப்தமின்றி பிரபஞ்ச ஓட்டத்தில் யான் ஜனித்ததை யானே மறந்து லயித்திருக்கும் பொழுதுகளில் எமக்கு எப்போதும் உயிர் பயம் வராது இருத்தல் இந்த ஜகத்திற்கு நலம்.

ஆள் அரவங்கள் கேட்டு கூர்மையாகும் எமது காதுகள்தான் முதலில் கணிக்கும் எம்மைச் சுற்றி நடப்பது எமது எதிரியா? அல்லது தோழமையா என்று, பல நேரங்களில் தோழமையாய் எதிரிகளும், எதிரிகளாய் தோழமைகளும் எமக்கு வாய்ப்பதுண்டு. யாம் எமது உணவு, எமது வேலை என்று எல்லாமே தனியாகத்தான் வாழ காலம் பயிற்றுவித்திருக்கிறது.

யாரும் எமக்கு ஊட்டிவிடப்போவதில்லை, யாரும் எமக்கு உணவைக் காட்டிக் கொடுக்கப் போவதும் இல்லை. எமது உணவின் தூரம் தீர்மானிக்கப்படுவது எமது பசியின் தீரத்தால்தான். வளரும் காலங்களில் எமக்கு பாய்ச்சலே கற்று கொடுக்கப்பட்டு இருக்கிறது. மாறாக பதுங்குதல் என்றால் என்னவென்றறியா எமது பிடரி மயிர்கள் கூறும் இலக்கு இதுதான் என்று, கூறிய கணத்தில் எமது சீற்றத்தில் பல உடல்களை யாம் கூரிக் கிழித்திருக்கிறோம். ஒற்றை பாய்ச்சலில் முதுகெலும்புகளை முறித்துப் போட்டிருக்கிறோம்.

எம் கூட்டம் வலியது, தாய்வழி சமூகத்தின் சுவடுகளை விடாமல் பின்பற்றும் எமது குலத்தில் வேட்டையாடுதல் பெரும்பாலும் பெண்டீர்தான் எமது காவல்களுக்கு மத்தியில் நடக்கும் தீர வேட்டைகளில் தீரத்தோடுதான் நிகழும் எமது உயிர்வாழும் சூட்சுமம். எப்போதும் மறைவுகளில் வாழும் வாழ்க்கை முறைகள் எமக்கு பந்தப்பட்டது இல்லை. மறைந்து வாழும் அவசியமும் தேவையும் எமக்கு எமது எதிரிகள் கொடுப்பதும் இல்லை.

மோனநிலையில் யாமிருக்கும் நேரங்கள் அதிகம். உணவு தேடலும், உண்ணலும், ஒரு தேவையின் பொருட்டு கணப்பொழுதில் முடிந்து விடும். எமது வாழ்வின் பெரும்பகுதி எம்மை மறக்கும் காமமும் எப்போதும் ஏகாந்தத்தில் லயிக்கும் உறக்கமும். தேவைகளின்றி அலைபவனை காட்டிலும் திருப்தியோடு ஓய்வெடுப்பவன் மேலானவன். எம்மை சுறுசுறுப்பில்லாதவனாய் சித்தரிக்கும் சிலருக்கு தெரியும் எமது கர்ஜனைகளின் சப்தம் ஐந்தாறு மைல்கள் கடந்தும் கேட்கும் என்று...

யாம் எழுந்து நின்றால்.....மெல்ல சிலிர்த்து எமது பிடறி மயிர் உலுக்கினால்... மெல்ல.. அடியெடுத்து அசைந்து நடந்தால்....வாய்பிளந்து கர்ஜித்தால்...

துவம்சமாகப் போவது நீயா நானா என்ற பயம் கொள்ளா ஜீவன்களும் உண்டோ...? எமது ஒட்டிய வயிறும்....ஓடும் ஓட்டமும்....பிடறி பிடித்து குரல்வளை கடிக்கும் தீரமும்....சலனமற்ற ஓய்வும்.....தீராக்காதலும் கூடி எமக்கு கொடுத்த பெயர் என்னவென்று சொல்லவும் வேண்டுமோ....?

எமது காதுகள் கூர்மையாகின்றன...சப்தங்கள் எமைச்சுற்றி நகர்கின்றன....வருவது தோழனாய் இருந்தால் எம்மை கடந்து போகும்...வாய்ப்பிருக்கிறது. எதிரியாய் இருந்தால்...அவர்களின் வாழ்க்கையை கடத்தி விட எமக்கும் ஒரு வாய்ப்பிருக்கிறது....

பிடறிகள் சிலிர்க்க..
எமது கர்ஜனைகளின்
சப்தத்தில் அறுந்து போகும்
எமது பகைவர்களின்
உயிர் தொடர்ச்சி...!

தேவைகளே எமது எதிரிகளை சில நேரங்களில் தீர்மானித்தாலும், பல நேரங்களில் எமது எதிரிகளே எமது வீரத்தை செப்பனிட்டு கூர்மையாக்க்குகிறார்கள்...! இவ்வளவும் கூறும் நான் யாரென்றா கேட்கிறீர்கள்....

மானிடர் எமக்கு வைத்த பெயர்...சிங்கம்...!


தேவா. S



Comments

நார்நியா படம் பார்த்து தமிழ் டப்பிங் செய்து இருக்கார்
//மோனநிலையில் யாமிருக்கும் நேரங்கள் அதிகம். உணவு தேடலும், உண்ணலும், ஒரு தேவையின் பொருட்டு கணப்பொழுதில் முடித்துவிடும் எமது வாழ்வின் பெரும்பகுதி எம்மை மறக்கும் காமமும் எப்போதும் ஏகாந்தத்தில் லயிக்கும் உறக்கமும். தேவைகளின்றி அலைபவனை காட்டிலும் திருப்தியோடு ஓய்வெடுப்பவன் மேலானவன். எம்மை சுறுசுறுப்பில்லாதவனாய் சித்தரிக்கும் சிலருக்கு தெரியும் எமது கர்ஜனைகளின் சப்தம் ஐந்தாறு மைல்கள் கடந்தும் கேட்கும் என்று...//

:)
எண்ணத்தின் ஆழம்..
கழுத்தை கவ்வும் வீரம்...
எதிர்த்து நிற்கும் துணிச்சல்..

இவை அனைத்தும் எழுத்தில் கொண்டு வந்த உங்கள் தீரம்.... உண்மையில் மெய் சிலிர்க்க வைத்து விட்டது...!!!

//யாரும் எமக்கு ஊட்டிவிடப்போவதில்லை, யாரும் எமக்கு உணவைக் காட்டிக் கொடுக்கப் போவதும் இல்லை.//

..........எப்படிங்க இப்படி எல்லாம் எழுதுறீங்க? எப்பவும் போல் உங்க வார்த்தை விளையாட்டை ரசிக்கிறேன்.. :)
வெகு நாட்கள் கழித்து நான் படித்த தேவாவின் பதிவு :-) மகிழ்ச்சி.. பதிவின் ஒவ்வொரு வரியும் உணர்த்தும் கருத்துக்கள் அனைத்தும் செம ;-)
Kousalya Raj said…
இது ஒரு அற்புத படைப்பு !!
இதை தவிர வேறு ஒன்றும் சொல்ல இயலவில்லை...கருத்து என்று எதையாவது சொல்லி இதன் கம்பீரத்தை குறைக்க எனக்கு மனம் வரவில்லை !

மிக வியந்தேன்...சிம்மத்தின் கர்ஜனை இன்னும் என் காதுகளில்...!!
வெகுவாக் ரசித்தேன் தேவா சார்..! பொதுவா நானுங்கூட இதுபோல விலங்குகள் பேசுவதைப்போன்று எழுதுவதுண்டு அவ்வளவு சுலபமான விஷயமன்று என்று எனக்குத்தெரியும் எல்லாவிதமான நிகழ்வுகளையும் அதன் பார்வையில் எழுதுவதென்பது மிகக்கடினம்..

ரியலி நீங்களும் ஒரு எழுத்து சிங்கம்தான் சார்..!
Ungalranga said…
படித்து முடித்ததும்..லேசாய் உடல் சிலிர்த்தது..மீண்டும் அந்த சிங்கத்தின் ஓவியத்தை பார்த்துகொண்டேன்..

கம்பீரமும்.. ஆழ்ந்த அமைதியும்.. சிங்கம்... ஒரு ஞானமடைந்த மிருகம்..!!

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...