
கொழுந்து விட்டெரியும்
ஆளவரமற்ற தார்சாலையின்
அக்னிச் சூட்டில்
பாதங்களின் பொறுக்க
முடியா ஓட்டத்தில்
எட்டிப் பிடிக்க முடியாத
இலக்குகளின் கோரப்பற்கள்
முன்னின்று பயமுறுத்தும்
விழித்தெழுந்த ஒரு
நள்ளிரவு கனவு விடியல் வரை
துரத்தி கொண்டு வந்துவிடும்
நிஜங்களோ கனவை விட கொடுமையாய்!
யாதார்த்த போர்வையைச்
சுற்றிக் கொண்டு எப்போதும்
தினசரி நிகழ்வுகளுக்குள் அகப்படாத
ஒரு குருட்டு காதலியின்
கிழிந்துபோன உடைகளினூடே
பரவிக் கிடக்கும் ஏழ்மையை
பார்க்க சகிக்காது
இறுக மூட நினைக்கும்
கண்கள் மூடினாலும்
காட்சிப் படுத்துகின்றன
என் ஏழ்மைக் காதலை!
விடம் ஏறிப்போன நாவுகளுக்கு
அழுகிப் போன மூளைகள்
பரவவிடும் கட்டளைகளில்
இறுமாந்து கிடக்கும்
திடப்பட்ட மனிதர்களின்
கேலியும் பேச்சும்
சீண்டலும் சீறலும்
முற்றிலும் அன்னியப்பட்டதாய்
பார்த்து சகித்து ஒதுங்குகையில்
முகத்திற்கு முன் நடக்கும்
அவலட்சண கூத்துக்களை
காறி உமிழ்ந்து கலைக்க
நினைக்கையில் பாவமாய்
புத்திக்குள் எட்டும் இந்த...
அவலங்களின் ஜனிப்பு மூலங்கள்!
விட்டு விலகிடும் ஆசையில்
கட்டி இழுத்துக் கொண்டிருக்கும்..
மூடனாய் அழுந்தி இறக்கும்
அற்ப பதர்களின் ஆட்டத்துக்குள்
ஒரு ஓட்டமாய் அமிழ்ந்திருக்கும்
உயிரின் மூலமாய் நின்று சிரிக்கிறது
ஜென்மங்களாய் தொடரும்...
என் ஊழ்வினை!
தேவா. S
Comments
கவிதை காதலன்
வாழ்த்துக்கள்.