Skip to main content

சதி....!


















எழுத்துக்களை தேடவில்லை இப்போது என்னெதிரே பவ்யமாய் மண்டியிட்டுக் கிடக்கின்றன அவை. முன்னூறு என்றில்லை எந்நூறும் அவளுக்குச் சொந்தமானது அல்லவா....? இதில் முன் நூறு பின் நூறு என்று எதைப் பிரித்து அவளைச் சொல்ல...?

என் அசைவுகளின் மூலமெதுவென்று யாருமறிந்திருக்க வாய்ப்பில்லை. எனது வலிவுன் மூலம், சிவமாயிருக்கும் என்னை சக்தி கொடுத்து தாங்கிப் பிடித்திருக்கும் மூல சக்தி, ஆதி சக்தி அவள், ஆனால் பந்தப்படாமல் சலனமற்று எப்போதும் ஒதுங்கியே இருக்கிறாள். வாழ்வின் ஓட்டத்தில் நான் தடுமாறி நின்ற இடம் இரண்டு....

ஒன்று தாய்....

மற்றொன்று தாயுமான மனைவி....!

வார்த்தைகளும், வாழ்க்கைப் படிமங்களும் ஏற்றி வைத்த உணர்வுகள் உடனே வந்து சண்டையிடும் நீ எப்படி மனைவியை தாயெனலாம்? என்று ....உணர்வுகள் கொடுத்த விவரிப்புகளில் சூழல்களை மனதுக்குள் விதைத்தவள், என்னைப் பெற்ற தாயின் வலியினை எனக்கு காட்டியவள், வாழ்க்கையின் எல்லா சூழலிலும் குடும்பம் என்ற ஒற்றை சொல்லுக்குள் நின்று கொண்டு பாராபட்சமின்றி சுழலுபவள்...

தன்னின் வீடு மறந்து என்னின் வீட்டினை சுவீகரித்து என் தகப்பனுக்காய், தாய்க்காய் கண்ணீர் உகுத்து அவரின் உடல் நலனை பேணுபவள், என் சகோதரனை ஈன்றெடுத்த பிள்ளையாய் பார்ப்பவள், தான் கற்ற கல்வியை கர்வமாக்கிக் கொள்ளாமல் வாழ்க்கையாக்கிக் கொண்டவள், தன்னின் மெளனத்தாலேயே என் கர்வங்களை ஆணாதிக்கத் திமிரை செதுக்கிப் போட்டு விட்டு என் சப்தங்களை சூரசம்ஹாரம் செய்தவள்....

தாயுமானவள் தானே? பெருஞ் சக்திதானே....? போற்றலைக் கூட லெளகீக சராசரிகள் விமர்சிக்கும் என்று பொதுபுத்தியில் நான் கர்வம் கொண்டு கை கட்டி காணதது போல இருந்தாலும் என் மனம் இவள் நோக்கி எப்போதும் கை கூப்புகிறதே? என்னது மனைவியை வணங்குகிறாயா....? என்று குரல்கள் புறத்தில் கேட்டாலும் புறத்தை காலடியில் மிதித்துப் போட்டு அவளின் அன்பிற்கு முன்னால் மீண்டும் மீண்டும் மனம் குவித்து மண்டியிடுகிறதே மனது...!!!!

பெண்ணை சரிக்கு சமமாக நடத்துவேன் என்ற வாக்கியத்துக்கு பின்னாலேயே ஒளிந்து கிடக்கும் ஆணாதிக்க படிமம் நான் விட்டுக் கொடுக்கிறேன் என்ற கர்வம், ஆனால் அவளுக்கு பிடித்த மாதிரியெல்லாம் அவள் நடக்க, அவள் ரசித்து ரசித்து ஒவ்வொன்றாய் செய்ய எனக்கு சம கால சமூகம் விதைத்துப் போட்டிருக்கும் சில பெண்ணடிமைப் பற்றிய கருத்துக்களை அவளிடம் சமர்ப்பித்த போது கூட ஒரு புன் முறுவலோடு அதை அடித்து நொறுக்கியிருக்கிறாள்...

எனக்காக பார்த்து பார்த்து சமைப்பதும், அதை உண்பதை ரசிப்பதும், விடியலில் எழுந்து குளித்து வந்தவுடன் ஒரு டம்ளரில் முதலில் தண்ணீர் கொடுத்து பின் எனக்குப் பிடித்த டீயை கொடுத்து அதை நான் அமைதியாய் குடிப்பதிஅ ஓரக்கண்ணால் உள்வாங்கிக் கொண்டு அடுக்களையில் பாத்திரங்களோடு சடு குடு விளையாடி காலை உணவையும் மதிய உணவையும் இரு டப்பாக்களில் அடைத்துக் கொடுத்து விட்டு ஹேங்கரில் இருந்து சட்டையை எடுத்துக் கொண்டு வந்து கையில் கொடுத்து டைம் ஆச்சு..சீக்கிரம் கிளம்பித் தொலைங்கன்னு ஒரு அதட்டல் போட்டு விட்டு மகளை எழுப்பப் போகும் போதும்...

நான் ஸ்தம்பித்துக் இருக்கிறேன்!!!

எனக்காக ஒன்றும் நீ செய்ய வேண்டாம். நான் உன்னை ஆக்கிரமித்து கட்டாயப்படுத்தவில்லை. நீ... உனக்கு எது கன்வினியன்ட் நேரமாயிருக்கிறதோ அப்போது எழுந்து உன் தேவைகளைப் பார்த்தால் மட்டும் போதும் கணவன் மனைவி என்றால் சரி சமம்தான். ஊரெல்லாம் பெண்ணடிமை செய்யக் கூடாது என்று பேசிக் கொண்டு இங்கே ஒரு சோம்பேறிக் கணவனாய் எல்லாவற்றையும் நீ செய்ய அனுமதிப்பது கொஞ்சமல்ல நிறையவே உறுத்துகிறது என்றேன்....

அதற்கான பதிலாய் அவள் தொடுத்த சரத்தின் சாரம் என்னை உலுக்கித்தான் போட்டது. சம உரிமை கொடுக்கிறேனென்று எந்தவொரு ஆடவனும் சொல்லும் வார்த்தையிலேயே பழுதிருக்கிறது. உரிமை யாரும், யாருக்கும் கொடுக்க இயலாது. பரஸ்பரம் கணவன் மனைவி இருவரும் இருவரின் சந்தோசங்களை அனுமதித்து அதை ரசிக்க கற்றுக் கொள்ளும் இடத்தில் ஆண் என்ன? பெண் என்ன? எனக்கு உங்களுக்கு இப்படி எல்லாம் செய்யப் பிடிக்கிறது செய்கிறேன். உங்களை சந்தோசப்படுத்த வேண்டும் என்பதை விட இப்படி எல்லாம் செய்தால் நான் திருப்தியடைவேன் என்பது எனது எண்ணம். இங்கே எனக்கு எந்த வற்புறுத்தலும் இல்லை எனக்கு இப்படி இருப்பதில் சுகமாயிருக்கிறது....

இங்கே கணவன் மனைவியர் இடையே, நான் இதை உனக்கு விட்டுத் தருகிறேன், நீ எனக்கு அடகி விட்டுத் தா என்ற வியாபாரமே அபத்தமானது. எனது சந்தோசத்தை நீங்கள் தடுக்கவில்லை ரசிக்கிறீர்கள் நான் திருப்தி கொள்கிறேன். இயல்பை மீறி எது நடந்தாலும் அபத்தமாகிவிடும் தானே...?

இன்று சமைத்துப் போட்டு அதை நீங்கள் ரசித்து உண்ணுவதை உறுத்துப் பார்த்து நான் கொள்ளும் சந்தோசம் நாளையே மாறலாம், எனக்கு அலுவலகத்தில் சென்று வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரலாம்... அப்போது எனக்கு அதில் சந்தோசமிருக்கும் அதையும் இப்படியே ஏற்றுக் கொண்டீர்களேயானால் உங்களுக்குள் முரணில்லை என்று அர்த்தம்....

என்று அவள் பகின்று செல்வதற்கு முன்னால் மெலிதாய் புன்னகைத்து சென்றதின் பின்னணியில் பாரதியின் முறுக்கு மீசை நறுக்கென்று தெரிந்ததை மறுப்பதற்கில்லை. ஒரு கணவன் மனைவியை திருமணம் ஆனதில் இருந்து எதிர் பாலாய் பார்த்து இனக்கவர்ச்சியில் இருந்திருப்பான், பிள்ளைகள் பெற்ற பின் அவளை பெண்ணாகவே பார்ப்பான்......இப்படி எல்லா நிலையிலும் பெண்ணாக பார்த்து, பார்த்து, பாலினம் முன் வந்து அரசாட்சி நடத்திக் கொண்டே இருக்கும்

ஆனால்....

அவள் எனக்கு ஒரு பெண்ணாகவோ, மனைவியாகவோ, அல்லது உறவாகவோ தெரியவில்லை மாறாக துணையாக தெரிந்தாள். ஆமாம் எனது துணை என்று வார்த்தையால் சொல்லுமிடமல்ல இது, எனது துணை என்று ஏதோ எழுதி விட்டு போகும் இடமில்ல இது ...எனக்கு அவள் துணைய என்று நான் சொல்லும் இந்த இடம் ஒரு " சாசனம் " அத்தனை அர்த்தங்களை உள்வாங்கி உணர்வுகளை இங்கே கொட்டுகிறேன்....!

அன்பு செலுத்துவதால் மட்டுமல்ல, காமம் கொண்டதால் மட்டுமல்ல, பிள்ளை பெற்றதால் மட்டுமல்ல இவை எல்லாம் கடந்து என் இன்னல்களில் எல்லாம் எனக்குத் துணையாக நின்ற பெருஞ்சக்தி அவள். நான் நிறைய பேசுவேன்...என் வார்த்தைகள் எல்லாம் அவளைக் கடந்து செல்லும் போது தலை குனிந்துதான் செல்லும். நான் நிறைய எழுதுவேன்...என் எழுத்துக்கள் எல்லாம் அவளின் மெளனத்தில் இருந்து பூத்த பூக்களாய்த் தானிருக்கும்.

கடவுளையும், காமத்தையும் உலகத்தையும் நான் கம்பீரமாக பார்க்கிறேன் என்றால், எனது வார்த்தைகளில் திமிர் இருப்பது உண்மையானால், எனது விசால பார்வைகள் புறப்பட்ட இடம் அவள் கொடுக்கும் உறுதி, அவள் ரசித்து என்னை சுதந்திரமாய் விடும் பேராண்மை....! என்னடா பேராண்மை என்ற வார்த்தை ஆணுக்குரியதாயிறே என்கிறீர்களா....இங்கே அதை அவளுக்குரியதாய் நான் ஆக்கிக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்.

ஒரு கோப்பை தேநீரை அவளோடு அமர்ந்து எதுவும் பேசிக்கொள்ளாமலேயே அமைதியாக அருந்தும் தருணங்கள் அற்புதமானவை. மனைவி என்ற இச்சை கடந்து எனது உயிர்துணையாக தோள் கொடுத்து நிற்கும் சாரதி அவள். ஆண் பெண் என்ற இடமழிந்து என்னை ஆக்கிரமித்து இயங்கவைக்கும் பெருஞ்சக்தி அவள்....

பிரியுமிடமென்று ஒன்று வரும் தேவி...
அன்று உன்னை விட்டு நான் செல்லவும்
என்னை விட்டு நீ செல்லவும் அனுமதிகளின்றி
கை கோர்த்து இருவரின் பாதங்களும்....
ஒன்றாய் முத்தமிடட்டும் மரணமென்ற ஒன்றை...!


அடிக்கடி சொல்வேன்...! ஆதரவாய் சிரிப்பாள். என்னை முழுதாய் ஆக்கிரமித்து போட்டிருக்கும் ஒரு சக்திக்கு எனது சக்தி உள்ளவரை கடன்பட்டிருக்கிறேன். இந்த எழுத்துக்கள் எப்போதும் ஈடாகாது....

வார்த்தைகளுக்குள் அடக்க முடியாத அர்ப்பணிப்புகளை ஒவ்வொரு கட்டுரையும் எனது ஒவ்வொரு செயலும் அவளுக்கான அர்ப்பணிப்புகளாக்கிக் கொள்கிறேன்...! வழிகாட்டுபவரை குரு என்று சொல்லலாம்....அர்த்தங்களால் என் வாழ்க்கைக்கு வழிகாட்டும் அவளும் எனக்கு குரு தானே?

வாழ்க்கையின் தொடர்ச்சியை ஒரு சிறு கட்டுரைக்குள் அடைக்க முடியாது...அது நீண்டு கொண்டே இருக்கும்...!!!

தற்காலிகமாக....கட்டுரையை நிறுத்திக் கொள்கிறேன்...வாழ்க்கையை தொடர்ந்தபடி....


தேவா. S

Comments

ரொம்ப சூப்பர் அண்ணா கலக்கிடீங்க சொல்றதுக்கு வார்த்தையே கிடையாது அப்படி ஒரு அனுபவம்...!!! படிக்கும் பொழுது மெலிய ஒரு சிலிர்ப்பு வருது :))

100 அம்மா 200 அப்பா 300 அண்ணி கலக்குறீங்க 400 என்னனு தெரியுது :))
துணையை பெருமைப்படுத்தும் பதிவு..!! "சதி" தலைப்பு எதற்காக என்று சொல்ல முடியுமா அண்ணா..!!
dheva said…
சேலம் தேவா @ சதி என்றாள் மனைவி என்று பொருள் தம்பி...!
//பிரியுமிடமென்று ஒன்று வரும் தேவி...
அன்று உன்னை விட்டு நான் செல்லவும்
என்னை விட்டு நீ செல்லவும் அனுமதிகளின்றி
கை கோர்த்து இருவரின் பாதங்களும்....
ஒன்றாய் முத்தமிடட்டும் மரணமென்ற ஒன்றை...!//

:(((

பதிவு முழுமையும் உங்கள் பாசத்தையும், புரிதலையும் பழுதில்லாமல் விளக்கி இருக்கிறது. உங்கள் தே(மனை)வி ஒரு அதிர்ஷ்டசாலி..!! :)
Kousalya Raj said…
'சதி'மனநிறைவாய் ஒரு படைப்பு !

அழகாய்...நிதானமாய்...பொறுமையாய்...கோர்த்து முடித்த பின்பும் கோடி முத்துக்கள் மீதம் இருக்கின்றன மனதில் !!

முன்னூறு என்ன இன்னும் வர காத்திருக்கின்றன ஆயிரம்...!!

வாழ்த்துகிறேன்.
சதியின் பெருமையை மற்றவர்கள் வாயிலாக கேட்பதைவிட பதி கூறிக்கேட்பதில்தான் அவளுக்கு நிறைவு.. அந்த மனநிறைவு இன்னும் பொங்கிப்பெருக வாழ்த்துகிறேன் :-))
அண்ணா....
கலக்கிட்டீங்க.
கலக்கிட்டீங்க.
கலக்கிட்டீங்க.
நீ பாதி நான் பாதி கண்ணே -அருகில்
நீயின்றி தூங்காது கண்ணா
.......

இடது விழியில் தூசி விழுந்தால்
வலது விழியும் கலங்கி விடுமே
இருட்டில் கூட இருக்கும் நிழல் நான்
இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன்

இல்லாள் இல்லையேல் ஆள் இல்-லை

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...