Skip to main content

எழுத்து....!

















" அ " என்று கைப்பிடித்து எழுத என்று என் அன்னை பயிற்றுவித்தாளோ அன்றிலிருந்து இன்றுவரை எழுத்தினை நேசிக்கிறேன். ஏதோ ஒன்றைக் கிறுக்கும் மனோபாவம் இன்று தொடங்கியது அல்ல. காலத்தின் போக்கில் அவை கரும் பலகையாகவும், நோட்டுப் புத்தகங்களாகவும், இன்று இணையத்தில் தட்டச்சாகவும் பரிணமித்திருக்கிறது.

சிலேட்டில் எழுதிப் பழகிய காலங்களில் சிலேட் குச்சிதான் எனது நண்பன். சாக்பீசை எப்போதும் நான் நேசித்தது கிடையாது. ஏனென்றால் அது எப்போதும் ஆசானின் கையிலிருந்து மிரட்டும் ஒரு வஸ்தாகவே எனது மூளையில் இன்னமும் பதிந்து போயிருக்கிறது. அதுமட்டுமில்லாது அதன் தடிமனான அச்சு வெளியாக்கத்தை விட மெலிதான சிலேட்டுக் குச்சியின் அச்சு விரும்பத் தக்க வகையில் இருக்கும்.

ஆசிரியருக்குத் தெரியாமல் சாக்பீஸ் எடுத்து சிலேட்டில் அவர்கள் இடும் மதிப்பெண்ணை திருத்தி 100க்கு 79 எடுத்த மார்க்கினை 99 என்று மாற்றம் செய்து வீட்டில் காண்பிக்கையில் பால பருவத்தின் கையெழுத்து அதிர்வினை விளங்கிக் கொண்டு அடி வாங்கிய நாளும் சரி....

பள்ளியில் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டில் இங்க் ரீமூவர் வைத்து ஆசிரியர் கொடுத்த மார்க்கை மாற்றி கூடுதல் மார்க் இட்டு அப்பாவிடம் கையெழுத்து வாங்கி விட்டு மீண்டும் அழிக்க முற்படுகையில் இங்க் ரிமூவரின் ஆசிட் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டை மெலிதாய் ஒரு ஓட்டை போட்டு விட மிஸ்டர் பீன் மாதிரி பதறிப்போய் வேறு வழியில்லாமல் ஆசிரியரிடம் கொடுத்து அடி வாங்கிக் கொண்ட போதும் சரி..

எனக்கு எழுதுவது எப்போதுமே பிடித்துதானிருந்திருக்கிறது. இணையத்தில் அதுவும் தமிழில் முதன் முதலில் தட்டச்சு செய்த போது அது வரையில் ஆங்கிலத்தில் மட்டுமே கணிணிக் கண்ணாடிக்குள் அதிகாரம் செய்து கொண்டிருந்த எழுத்துக்கள் என் தாய்த் தமிழில் வந்து கண்ணடித்து சிரித்த போது நான் நிஜ காதல் கொண்டேன்.

பேனா பிடித்து அழுத்தி எழுதும் போது கிடைக்கும் உணர்வை விட தட்டச்சு செய்யும் போது மென்மையாய் இன்னும் வேகமாய் உணர்வுகள் பீறிட்டு வருவது எனக்கு மட்டுமே தோன்றுகிறதா அல்லது எல்லோருக்குமே அப்படித்தானா என்று எனக்குத் தெரியவில்லை.

எழுத்து என் நேசம். நான் எழுத்தாளன் என்ற எந்த ஒரு அடையாளத்துக்குள்ளும் வராமால் என் காகித ராஜ்யத்துக்குள் எப்போது நினைத்தாலும் படையெடுத்து சென்று எழுத்து வீரர்களை ஆக்கிரமிக்கச் செய்து வெள்ளைத் தாள்களை வென்றெடுப்பது என் வழமையில் ஒன்று....! அன்று வெள்ளைத் தாள்...இன்று இணையம் மற்றும் வலைப்பூ...

ஏதோ ஒன்று சொல்லத் தோன்றிக் கொண்டே இருக்கும் ஆனால் இன்னது என்று தெரியாது. அந்த உத்வேகத்தின் உயிர் முடிச்சு நேரடியாய் தட்டச்சில் ஏறும் போது நானும் உடன் இருந்து வாசித்திருக்கிறேன். இது கொஞ்சம் பைத்தியக்காரத்தனமாக கூட தோன்றலாம்.. ஆனால் இதுதான் உண்மை....!

எழுத்துக்களை வாசித்து மட்டுமல்ல எழுதியும் நாம் பயிலலாம். எழுதி, எழுதி எல்லாம் இறைத்து விட்டு வெறுமையாய் இருப்பது எழுதுவதை விட இன்னமும் அழகானது என்று இப்போது கற்றுக் கொண்டிருக்கிறேன். புறம் நோக்கிய நகர்தலுக்கு சில எழுத்துக்கள் பயன்படும்...! சமூக பிரச்சினைகளையும் தீர்வுகளையும், எழுதும் போது உள்ளமையில் மூழ்கிக் கிடந்து அதை விட்டு வெளியே வந்து அவற்றைப் பற்றி பேசவேண்டும்.

அதாவது... நமது வீட்டினுள் ஆழமாய் தனிமையில், நமது விருப்பப்படி இருக்கும் போது யாரேனும் நம்மை பார்க்க வந்து விட்டால், பதறி எழுந்து உடை உடுத்திக் கொண்டு...சட்டை பட்டனை போட்ட படி கலைந்து இருக்கும் தலையை கையால் வாரிக் கொண்டு....என்ன சார் எப்டி இருக்கீங்க என்று கேட்டுக் கொண்டு வந்து நலம் விசாரிப்போம். வந்திருப்பவர் ஏதேதோ பேச நாமும் பேச முழுக்க முழுக்க லெளகீகம் என்னும் கடலுக்குள் விழுந்திருப்போம்.

வந்த விருந்தினர் போனவுடன் மீண்டும் நம் பழைய நிலையை அவ்வளவு எளிதாய் அடைய முடியாது, ஏனென்றால் வந்தவர் விதைத்துப் போனவை எல்லாம் நம்முள் எண்ணங்களாய் ஓடிக் கொண்டிருக்கும் மீண்டும் நமது ஓய்வு நிலைக்குச் செல்ல சில மணி கூட நேரங்கள் ஆகலாம்....

இப்படித்தான் பொது பிரச்சினைகளை எழுதும் போது மனமற்ற மையத்திலிருந்து வெளியில் வந்து எழுத வேண்டியிருக்கிறது. அப்படி எழுதும் போது வாழ்க்கையை மட்டும் வாழ்ந்துகொண்டு பொருளாதய உலகத்தில் கொடிகட்டிப் பறக்கும் சீமான்கள் நம்மை எளிதாய் சீண்டிப்பார்த்தும் விடுகிறார்கள்..., அதே நிலையில் இருந்து நாம் கொடுக்கும் பதில்கள் கண்டிப்பாய் அவர்களை புரிதலுக்கு கொண்டு வந்து விடுவதில்லை.

" சப்தங்கள்...சப்தங்களின் முன் தோற்கும் "

என்பதை நாம் அறியாமலில்லை. ஸ்தூலத்தின் தீர்வுகளை நான் பெரும்பாலும் தீர்க்குமிடம் சூட்சுமம். ஆயிரம் வார்த்தைகள் செய்யாத விசயத்தை ஆழமான மெளனங்கள் சாதித்து விடும் என்பது உறுதியான விடயம்.

சப்தமில்லாத எழுத்துக்கள் ஒரு வகை தியானம்தான். வாழ்க்கையில் தியானம் என்பது ஒரு வித தனிப்பட்ட செயலாக மனிதர்கள் பார்க்கும் படியான ஒரு சூழலை மனிதனை திருத்த வந்த மதங்கள் போதித்து விட்டன. உண்மையில் முழுமயாக வாழ்வதுதான் தியானம். வாழ்க்கையின் இந்த தருணத்தை நான் முழுமையான ஒரு சந்தோச நிகழ்வாய் அல்லது ஏதோ ஒரு துக்க நிகழ்வாய் எதிர் கொள்ளும் போது அதை முழுமையாக அனுபவித்தல்தான் தியானம்.

மனிதர்களுக்கு எப்போதும் மரணம் பற்றிய பயம். இதுதான் ஆழமாய் உள்ளே இருந்து எல்லா செயல்களையும் செய்ய வைக்கிறது. முழுமையாய் வாழ்க்கையை வாழ்பவனுக்கு பயம் ஏதும் இல்லை. எந்த உறுத்தலும் இல்லாமல் இறக்க தயாராகவே இருக்கிறான். சாக்ரடீஸ் கூறியது போல

" வாழ்க்கையை நான் முழுமையாக வாழ்ந்து விட்டேன். எனவே இறப்பு பற்றி எனக்கு யாதொரு கவலையும் இல்லை. ஒரு வேளை மரணத்துக்குப் பிறகு ஒரு வாழ்க்கை இருக்குமெனில் அதையும் நான் முழுமையாக வாழத்தான் செய்வேன்..."

என்ற எண்ணம் கொண்டவர்களே வாழ்க்கையை முழுமையாக புரிந்து கொண்டு இந்த கொண்டாட்டதை அனுபவித்து வாழ்கிறார்கள். வாழ்க்கையை அனுபவிக்க உயரிய புரிதல் தேவை, உயரிய புரிதலை சூழ்நிலைகளும், மனிதர்களும், நல்ல புத்தகங்களும் அளிக்கின்றன...இவற்றை கிரகித்த மூளை சமப்பட்டு போய்...

கிரகாசாரத்தை அனுபவமாக்கிக் கொண்டு ஆழமான எழுத்தாய் வெளிப்படுகிறது. எழுத்து ஆத்மாவை சுத்தப்படுத்துகிறது. பரிபூரணத்தை நோக்கி நகரவைக்கிறது. ஒரு தவத்தைப் போல ஒவ்வொரு தடவையும் ஏதோ ஒன்றினை எழுதி முடிக்கையில் திருப்தி கிடைக்கிறது. இந்த திருப்தி பூர்வாங்க நிலையை ஒத்திருக்கிறது. சமநிலை ஆன மனது சலனமின்றி அங்கிங்கெனாதபடி விரிகிறது....

இப்படியாகத்தான் எழுத்தினை நானும், என்னை எழுத்தும் பிடித்துக் கொண்டிருக்கிறோம். வெளிப் பார்வைகளுக்கு கிறுக்கலாய், கேலியாய், சராசரியாய் தென்பட்டாலும் எழுதுவதை இந்த ஒரு அணுகுமுறையோடு தொடரும் போது கிடைக்கும் அலாதியான பரவசத்தை எப்படி விட்டுக் கொடுக்க முடியும்.....?

காலத்தோடு ஒத்திசைந்து தொடரும் இந்த பயணம் என்று முடியும் என்று அறிய முடியாமலேயே....அதன் வேகத்தில் ஒரு நாள் நின்று போகும்.....!

அன்று முழுமையில் நானே நானாய் இருப்பேன்...!


தேவா. S

Comments

எனக்கு எழுதுவது எப்போதுமே பிடித்துதானிருந்திருக்கிறது. இணையத்தில் அதுவும் தமிழில் முதன் முதலில் தட்டச்சு செய்த போது அது வரையில் ஆங்கிலத்தில் மட்டுமே கணிணிக் கண்ணாடிக்குள் அதிகாரம் செய்து கொண்டிருந்த எழுத்துக்கள் என் தாய்த் தமிழில் வந்து கண்ணடித்து சிரித்த போது நான் நிஜ காதல் கொண்டேன்



அருமையான பதிவு.
மனந்திறந்து கொட்டுகிறீர்கள்.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
மனம் விரும்பிச் செய்யும் ஒவ்வொரு செயலுமே வழிபாடுக்கு இணையானதுதான்.

எழுத்து தவம்
என்றால் உங்களைப் போல எழுதுவது

வரம் நண்பா!

ஆழமான,
கருத்துச் சிதைவில்லாத,
எளிய நடை உங்கள் எழுத்துத்தவத்துக்குக் கிடைத்த வரம் என்றே நான் கருதுகிறேன்.
முதன் முதலில் தமிழில் தட்டச்சு செய்த போது..

என் விரல்களுக்கு கண்கள் தோன்றியதை உணர்ந்தேன்!
எழுத்துக்களை வாசித்து மட்டுமல்ல எழுதியும் நாம் பயிலலாம். எழுதி, எழுதி எல்லாம் இறைத்து விட்டு வெறுமையாய் இருப்பது எழுதுவதை விட இன்னமும் அழகானது என்று இப்போது கற்றுக் கொண்டிருக்கிறேன்

ஆழமான உண்மை நண்பா.
இடைவிடாமல் படித்தேன்
(தவம் செய்தேன்)

படித்த பின்னும் தங்கள் சிந்தனைகளை மனம் அசைபோடுகிறது
(வரம் பெற்றேன்)

தொடர்ந்து எழுதுங்க நண்பா.
////இப்படித்தான் பொது பிரச்சினைகளை எழுதும் போது மனமற்ற மையத்திலிருந்து வெளியில் வந்து எழுத வேண்டியிருக்கிறது. அப்படி எழுதும் போது வாழ்க்கையை மட்டும் வாழ்ந்துகொண்டு பொருளாதய உலகத்தில் கொடிகட்டிப் பறக்கும் சீமான்கள் நம்மை எளிதாய் சீண்டிப்பார்த்தும் விடுகிறார்கள்..., அதே நிலையில் இருந்து நாம் கொடுக்கும் பதில்கள் கண்டிப்பாய் அவர்களை புரிதலுக்கு கொண்டு வந்து விடுவதில்லை.////

இப்படிதான்னே பொது பிரச்சினைகளை நேத்து ஒரு friend கிட்ட பேசிட்டு இருக்கும் போது கிள்ளி வெச்சுட்டான்...ராஸ்கல் :)
//அன்று முழுமையில் நானே நானாய் இருப்பேன்...!//

சம்பவாமி யுகே யுகே!
Harini Resh said…
அருமையான பதிவு தேவா அண்ணா
வாழ்த்துக்கள்
எழுத்தை சுவாசமாக கொண்டுள்ளீர்கள்..!! உங்களோடு நட்பு கொண்டிருப்பது பெருமையாக உள்ளது.
Chitra said…
கிரகாசாரத்தை அனுபவமாக்கிக் கொண்டு ஆழமான எழுத்தாய் வெளிப்படுகிறது. எழுத்து ஆத்மாவை சுத்தப்படுத்துகிறது. பரிபூரணத்தை நோக்கி நகரவைக்கிறது. ஒரு தவத்தைப் போல ஒவ்வொரு தடவையும் ஏதோ ஒன்றினை எழுதி முடிக்கையில் திருப்தி கிடைக்கிறது. இந்த திருப்தி பூர்வாங்க நிலையை ஒத்திருக்கிறது. சமநிலை ஆன மனது சலனமின்றி அங்கிங்கெனாதபடி விரிகிறது....


...... ஒரு இலக்கியவாதியாக மாறி வருகிறீர்கள். வாழ்த்துக்கள்!
எழுத்து மெருகேறியபடி வருகிறது நண்பா !
//எனக்கு எழுதுவது எப்போதுமே பிடித்துதானிருந்திருக்கிறது. இணையத்தில் அதுவும் தமிழில் முதன் முதலில் தட்டச்சு செய்த போது அது வரையில் ஆங்கிலத்தில் மட்டுமே கணிணிக் கண்ணாடிக்குள் அதிகாரம் செய்து கொண்டிருந்த எழுத்துக்கள் என் தாய்த் தமிழில் வந்து கண்ணடித்து சிரித்த போது நான் நிஜ காதல் கொண்டேன்//


அண்ணா அருமையான பகிர்வு... அதுவும் உங்களது இலக்கிய எழுத்தில் படிக்கும் போது மனசு சந்தோஷிக்கிறது... எனக்கும் எழுத்து ரொம்ப பிடிக்கும். முன்பெல்லாம் பக்கம் பக்கமாக பேப்பர்... இப்போது கணிப்பொறி.
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
நம்ம பக்கம் வந்து நாளாச்சே... மறந்துட்டிங்களா?

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...