Skip to main content

மழை.....!


















சப்தமாய் பெய்த ஜன்னலோர மழையில் மறந்தே போனது..என் பேருந்துப் பயணம்...!

மனிதர்கள் சட சடவென்று கதவடைத்து மழையோடான உறவினை வேண்டாமென்று முறித்துக் கொண்டு பேருந்துக்குள் பதுங்கி ஏதேதோ மழைக் கதைகளை சப்தமாய் பேசி சிரிக்கையில் வெளியில் நிஜ மழை... மரம் செடிக் கொடிகளோடு.. சப்தமாய் பேசி சிரித்தது.. மனிதர்களை பற்றியாய் இருக்குமோ?

கண்களை ஜன்னலின் வழியே பரவ விட்டு மழையின் சாரலை உடலில் வாங்கிக் கொண்டு மெல்ல எட்டி இரு கை மழை நீரை தீர்த்தமாய் பாவித்து என் முகம் துடைக்கையில் பக்கத்தில் அமர்ந்திருந்த என் சக பயணிக்கு...., ஒன்று நான் பைத்தியக்காரனாய் இருந்திருக்க வேண்டும் இல்லையேல் வேற்றுக் கிரக வாசியாய் தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால் அவரின் பார்வை அப்படி...!

சன்னலை இறக்கி விடப்பா... என்ற அவரின் குரலை பார்வையால் சாந்தப் படுத்தினேன். வார்த்தைகளின் பயன்பாடு பெரும்பாலும் பயனளிப்பதில்லை. எண்ணங்களை தொண்டைக்குள் வைத்து வழி மாற்றம் செய்து அதை சப்தமாக்கி பேச்சாக்காமல் பார்வையாக்கி கூட இருந்தவரின் விழிகளுக்குள் இறக்கி அவரைச் சப்தமின்றி சாந்தமாக்கினேன்..!

எப்போதும் தானே பெய்கிறது மழை என்று கேட்பவர்களிடம் நான் ஒரு கேள்வி கேட்பேன்...? எல்லோருக்கும் தானே குழந்தை பிறக்கிறது....? உங்களுக்குப் பிறந்து விட்டதில் மட்டுமென்ன உங்களுக்கு அப்படி ஒரு சந்தோசம்...? மழை பூமிக்கு குழந்தை....! காற்றோடு கூடி கருவுற்று எப்போதும் ஜனித்துக் கொடுக்கிறாள் மேகத்தாய்...., நீங்கள் ரசிக்கா விட்டால் போங்கள்...

தாவி வரும் குழந்தையை வாங்கிக் கொள்ளாமல் கதவடைக்கிறார்களாம் கதவு...! யாரப்பா அது வண்டியை நிறுத்துங்கள்...நான் மழையில் நனைய வேண்டுமென்று என் பயணத்தை அவசரமாக ஒத்தி வைத்துள்ளேன்...!

முழுப் பைத்தியத்தை எல்லா தெளிவானவர்களும் சேர்ந்து வண்டியிலிருந்து இறக்கி விட அந்த பிற்பகலில் நான் நின்று கொண்டிருந்த இடமும் நானும் முக்கியமாய் எனக்குப் படவில்லை.... என்னை நனைக்கும் மழையே எனக்கு முக்கியமாய் பட்டது....! பளிச்சென்று ஒரு மின்னல் வெட்டி என்னைப் பார்த்து சிரித்து... வா மானிடா...வா...வா என்று கூறிக் கொண்டிருந்த போதே கனைத்துச் சிரித்தது ஒரு பேரிடி...

மின்னலோ இடியோ தாக்கி விடும் அதனால் மழை நேரத்தில் புறம் போகாதீர்கள் என்று எச்சரிக்கை செய்பவர்கள் எல்லாம் ஏதேனும் வாகனம் வந்து மோதிவிடும் என்று சாலையில் நடவாதவர்களா என்ன? அபத்தங்களை எல்லாம் சொல்லி எம்மை மட்டுப் படுத்தாதீர்கள்....மனிதர்களே!

கைகளைக் குவித்தேன்... நிறைத்தது மழை! என் உச்சி நனைத்து காது மடல்களில் ஊர்ந்து கண்களைத் தடவி முன் மார்பில் முத்தமிட்டு பின் முதுகை வருடி என்னை மொத்தமாய் இம்சை செய்து கொண்டிருந்தத மழை மழலையா? அல்லது காதல் கொண்ட குமரியா?...சர்ச்சையாய் ஏதோ ஒன்று மனதிற்குள் தொண்டையில் சிக்கிய முள்ளாய் சிக்கிக் கொள்ள விக்கித்துப் போய் வானத்தை அண்ணாந்துப் பார்த்து கொஞ்சம் மழை நீரை குடித்து என்னை ஆசுவாசிப்படுத்திக் கொண்டிருக்கையிலேயே தடமின்றி என் தாயின் நினைவும் வந்து போனது....

மனமுருகி உடல் நனைந்து மழையிடம் கெஞ்சத் தொடங்கி இருந்தேன்.... என்னோடு பேசு மழையே.....!!!! என்று கேட்ட மாத்திரத்தில் மழை தன் விளையாட்டை கனமாய் தொடங்கியிருந்தது....தரையெல்லாம் தண்ணீர்.....தார்சாலையினூடே தாள கதியோடு ஜதி சொல்லிய படி நடனமாடிக் கொண்டிருந்த மழையை.... என் மனதுக்குள் வாங்கிக் கொண்டு...மெளனமாய் நடந்து கொண்டிருந்தேன்...!

வாழ்வின் அற்புதம் ஏனோ மனிதர்களால் காலம் காலமாய் புறக்கணிக்கப்படுகிறது. யாரங்கே? யாரது குடையை கண்டு பிடித்தவன்? அவனை இழுத்து வந்து மழையில் மகிழ்ந்து மகிழ்ந்து இன்புற்று களித்து சிரித்து களைக்கும்வரை கட்டிப் போடுங்கள்...என்று சப்தமாய் நான் போட்ட சப்தத்தைக் கேட்டு சாலையோரத்திலிருந்த சில மரங்கள் என் மீது பூக்களைச் சொரிந்து கிளைகளை அசைத்து கைகொட்டிச் சிரித்து ஆமாம் ஆமாம் என்றன...

மண்ணில் விழுந்த கவிதைகளை வரி விடாமல் வாசித்துக் கொண்டே ஏதோ ஒரு மரத்தடியில் மணிக்கணக்காய் நான் அமர்ந்திருந்தேன்...

கண்களை மூடி என்னுள் இருந்த எல்லா சப்தங்களையும் நிறுத்தி, மனதின் ஓசைகளை ஒற்றை பார்வையில் எரித்துப் போட்டு.....புலன்களை குறிப்பாக செவியினை கூர்மையாக்கி.....மழையினை கவனிக்கத் தொடங்கினேன்....!

சோ............சோ.................சோ............என்று ஒற்றை சுரத்தை இடைவிடாமல் ஓதிக் கொண்டு....மண்ணோடு, மரத்தோடு, கலந்து சூழலை குளுமையாக்கி....பறவைகள் விலங்குகளை எல்லாம்....பாசமாய்த் தேடிக் கொண்டு போய் உடல் நனைத்து சந்தோசப்பட்டுக் கொண்டிருந்த மழையை மனிதர்கள் மட்டும் மிகையாக மறுப்பவர்களாக இருந்தார்கள்....!

ஆரோக்கியமான மனிதர்களே... மழையை மறுக்காதீர்கள்..! மழை உங்களின் ஜீவனை நிறைக்கும்....! நனையக்கூட வேண்டாம்... மழை முடியும் வரை வேடிக்கையாவது பாருங்கள்..உங்களுக்கு நேரமிருப்பின்....

சப்தங்கள் எல்லாம் ஒடுங்க.. மழையில் உடல் நனைய...உடலில் இருந்து வெளிப்பட்ட ஏதோ ஒன்று உடலுக்கு அன்னியமாய் நின்று மழையையும் உடலையும் வேடிக்கைப் பார்த்தது. மழையும் உடலும் மரமும், செடியும் கொடியும் பாம்பு, பூச்சிகளும் எல்லாமே ஒன்றாய்த்தானிருந்தன...எது நான் என்று உடலை விட்டுப் பிரிந்து நின்று கேள்வி கேட்கையில்...எல்லாமே நான் என்ற பதில் வார்த்தையாய் தோன்றாமல் உணர்வாய் பரவி விரவிக் கிடந்தது...

பரவி விரவிகிடந்தேன்...நான் மழை...நான் மேகம்...நான் நீர்...நான் மண்.. நான் சக மானுடர், நான் மலை, நான் எல்லாம்....! எல்லாம் அறுபட... உணர்வாய்... ஒற்றை புள்ளியில்...எவ்வளவு நேரம் நின்றேன்....என்று அறியும் முன்... ஏதோ ஒரு பெரும் சப்தத்தில் எல்லாம் கலைந்து உடலுக்குள் ஓடி வந்து புகுந்து கொண்டது அந்த அங்கிங்கெனாதபடி இருந்த பிரபஞ்ச நான்.....

மழை நின்றிருந்தது...! மனம் மகிழ்ச்சியாயிருந்தது.... குனிந்து அழுத்தமாய் மண்ணுக்கு ஒரு முத்தமிட்டேன்...வானத்தை விழிகளால் தொட்டேன்..மரம் செடி கொடிகளை கைகளால் தடவினேன்....

மெல்ல நடக்கத் தொடங்கினேன்....!

ஏதேனும் ஒரு பேருந்து வரும்... மீண்டும் தொடருவேன்...என் லெளகீகப் பயணத்தை.....


தேவா. S



Comments

Anonymous said…
இந்த மாதிரி என்னக்கு எப்போ எழுத வரும் # பொறாமையுடன் நரி
உங்களுடன் மழையில் நனைந்தேன்... பதிவு அதுக்குள்ள முடிஞ்சிருச்சேன்னு இருந்தது...!!!

//என் உச்சி நனைத்து காது மடல்களில் ஊர்ந்து கண்களைத் தடவி முன் மார்பில் முத்தமிட்டு பின் முதுகை வருடி என்னை மொத்தமாய் இம்சை செய்து கொண்டிருந்தத மழை மழலையா? அல்லது காதல் கொண்ட குமரியா?//

...என்னங்க இப்படி கலக்குறீங்க.. உண்மையில்.. சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

பொருத்தமான பாடலுடன்.. பதிவை ரசித்து.. படித்தேன்! :)

அடிக்கடி இப்படி நீங்க.. நனையனும்.. எங்களையும்.. நனைக்கணும்..! :))
சின்ன சின்ன மழைத்துளிகள்(என் சுவாசக் காற்றே) பாட்ட கேக்கும்போதெல்லாம் மனசுல அடிக்கிற சாரல் உங்க இந்த பதிவ படிக்கும் போதும் அடிச்சு உயிர் நனைக்குது.. :)

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...