
என்றேனும் ஒரு நாள்
அச்சினை மாற்று ...
ஏதேனும் கோள்களோடோ
அல்லது சூரியனோடோ
மோதிச் சாம்பலாய்
உதிர்ந்தே போ பூமியே!!!!!
எப்போதும் மெளனத்தை
போதிக்காதீர்கள் மனிதர்களே
சப்தங்களாய் திரிந்து
செவிப்பறைகள் கிழிம் வரை
கூச்சலிட்டு எமது
குரல்வளைகள் கிழிந்தே
போகட்டும் ஒரு நாள்...!
உணர்வாய் நின்று
ரெளத்ரத்தில் குளித்து
இயல்பாய் எம்மை கோபங்கள்
கொண்டு சீறிப்பாய
எம்மை பணித்துப் போங்கள்
கடவுளரே...!
பூக்களை யாம் பூஜித்து
வர்ணித்தெழுதிய வார்த்தைகளே...
சற்றே எம்மை விட்டு...
கலைந்தே போங்கள்...,
கடும் பாறைகளை நான்
தீரத் தீர காதலித்து...
எம் கண்ணீராலவாது ஒரு
கவிதை செய்ய வேண்டும்..!
புல்வெளிப் பயணங்களை
ஒத்தி வையுங்கள் எமது கால்களே..
நாம் பாலை வெயிலில்
பாதங்கள் சூடேற
நடந்து பயில வேண்டும்,
குளிரினை ரசித்து
சுகத்தில் லயித்துக் கிடக்கும்
எமது தோற்களில்
சூரிய சூட்டினால்
நிறைய தழும்புகள் வேண்டும்...!
மன்னிப்புக் கொடுத்து கொடுத்து
மரத்து போயிருக்கும்
எம்மை கடவுளாக்கும் நினைவுகளை
செதுக்கி எறிந்து விட்டு
ரெளத்ரத்தால் தவறுகளை
கொன்றழிக்கும் மிருக குணம் கொண்டு...
ஜகத்தினை மிரட்டிப் புரட்டிப் போடும்
ஒரு மிருக ஆட்டம்...
நான் ஆட வேண்டும்..!
தேவா. S
Comments