
தொலைந்து போன ஒருவனின்
எழுதப்படாத கவிதைகள்
இல்லாத காதலிக்காய்
காற்றில் கரைந்து கிடக்கலாம்;
உணர்வற்ற உயிர் சுமக்கும்
அணுத் திரட்சிகளில்
அமிழ்ந்து கிடக்கும்
வண்ணக் கனவுகளில்
யாரேனும் ஒளிந்து கிடக்கலாம்;
ஜனித்தலுக்கு முன்னான
ஒரு கலைந்த நிலையில்
நினைவுகளை எல்லாம்
அலைகளாய் பரவவிட்டு
திரட்சியாய் மறைந்து கிடக்கலாம்!
உச்ச சப்தத்தில்
வெடித்து சிதறிய அதிர்வுகள்
நிசப்த்த தாதுக்களாய்
பரவிக் கிடக்கையில்
ஒன்றுமே அங்கே நிகழவில்லை
என்று மெளனம் சாட்சியளிக்கலாம்..
யார் கண்டார் உருவற்றத்தின்
சூட்சும திருவிளையாடலை?
கேட்பதும் பேசுவதும் உணர்வதும்
கடந்த உலகினை யோசிக்கும்
வலுவற்று, உடலென்னும் பொதிக்குள்
இதோ...
அமிழ்ந்து கிடக்கிறேன்...!
அழுத்தமாய் நான் என்ற உணர்வோடு
திரிந்து நடக்கிறேன்....;
புலன்கள் கடந்த வாழ்க்கை
இல்லையென்று புனைந்து திரிகிறேன்...
அதையே புரிதல் என்கிறேன்..
பின்னொரு நாள்
மொத்தமாய் கரைந்து போகிறேன்...!
தேவா. S
Comments