Skip to main content

சுவாசமே...காதலாக...! தொகுப்பு: 11


















உனக்குத் தெரியாது என்ன விதமான கிரியா ஊக்கியாய் நீ இருக்கிறாய் என்று.... உன்னை பின் தொடர்ந்து நான் வந்த நாட்களில் எல்லாம் ஒரு வித பட படப்போடுதான் நடந்திருக்கிறேன். ஏதோ ஒரு கணத்தில் மெலிதாய் உன் இரட்டைப் பின்னலை சரி செய்தபடி ஓரக்கண்ணால் நீ பார்க்கும் அந்த நிமிடத்தில் என் இரத்தமெல்லாம் வேகமாய் இதயத்துக்குள் சென்று அங்கிருந்து அவசரமாய் சுத்திகரிக்கப்பட்டு பம்ப் செய்பட்டு உடலெல்லாம் அதீத கதியில் பரவும் பொழுதில் என்னுள் பெருமூச்சாய் நிறைந்து கிடக்கும் உன்னிடம் சொல்லாத என் காதல்....

ஒரு பேப்பரில் ஐ லவ் யூ என்று நான் கிறுக்கலாய் எழுதி எழுதிப் பார்த்து எழுதியதில் சிறந்ததை கையில் வியர்வை நனைய உன்னிடம் கொடுக்க ஓராயிரம் முறை முயன்று, முயன்று கடைசியில் கொடுக்காமலேயே கிழிந்து போனது எல்லாம் மேலும் மேலும் என்னுள் ஆழமாய் உன் நினைவுகளை ஊடுருவத்தான் செய்தது பெண்ணே...!!!

நண்பர்கள் கூட்டத்துக்கு நடுவேயான அரட்டையில் உன்னைப் பற்றிய பேச்சுக்களில் அவர்களின் ஆலோசனைகளை நம் காதலுக்கு வள்ளல்களாக அவர்கள் வாரி வளங்கும் கணங்களில் என் புத்தியில் மட்டும் எதுவுமே சிக்காமல் உன் இரு துறு துறு விழிகள் மட்டுமே நிறைந்து நின்றிருக்கிறது.

உன் நினைவுகளோடு ஒவ்வொரு முறையும் நான் கேட்கும் ஏதோ ஒரு பாடலில் பரவிக் கிடக்கும் காதலில் தவறாமல் அங்கும் இங்கும் நீ நடந்து கொண்டிருக்கும் அழகை நான் விழித்துக் கொண்டே கனாக் கண்டிருக்கிறேன்...! உன்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் என்னுள் கருக் கொண்ட காதல் எப்போதேனும் வெளிப்பட்டுத்தானே ஆகவேண்டும்...

உனக்காக என்னுள் சூழ் கொண்ட காதல் குழந்தையை எந்த சூழலிலும் வேறு யாருக்கேனும் நான் கொடுத்து விடாமல் இருக்க வேண்டும் என்பதில் நானும் கற்புக்ரசனாகத்தான் பெண்ணே இருக்கிறேன்.....

அறிவியலின் மூலத்தையும், ஆன்மீகத்தின் ஆழத்தையும், புவியின் தன்மையையும், காலங்கள் கடந்து பரவிக் கிடக்கும் உலக வரலாற்றினை விரல் நுனியில் அறிந்து வைத்தும், கவிதைகளின் மூலத்தில் ஒரு காம உச்சத்தினை ஒத்த நளினத்தை மறைக்கத் தெரிந்தும், கோபங்களில் ஒரு வரிப்புலியாய் வெஞ்சினம் கொள்ள அறிந்தும்....

என்னுள் நிறைந்து கிடக்கும் காதலை உன்னிடம் சொல்ல ஒரு வார்த்தையை கொடுக்காமல் தமிழ்த்தாயும், உன்னருகில் வந்தவுடன் என் வலுவிழந்து போகும் மாயத்தை நீயும்... கொண்டிருப்பது ஒரு வஞ்சிப்புதானே?

ஓராயிரம் முறை என் தலை கலைத்து வாருகிறேன்......!!! பழைய பைக்தான் இருந்தாலும் மீண்டும் மீண்டும் துடைக்கிறேன்....இரவில் வரும் நிலாவோடு சண்டையிடுகிறேன்.... நீ அழகில்லை என்று...!!! ஒரு தென்றல் என்னைச் தீண்டிச் செல்லும் போது எத்தனை தடிமன் உனக்கு என்று சிடு சிடுக்கிறேன், ஒரு மேகம் மலை முகட்டில் தத்தி தத்தி ஏறும் காட்சியைக் கண்டு ஏளனம் செய்கிறேன்...எதுவுமே உன் போல அழகு இல்லைதானே பெண்ணே....

நீ எப்போதும் என் நினைவுகளில் இருக்கிறாய், தினமும் என்னைக் கடக்கிறாய்...! என்னைச் சுற்றியிருக்கும் சூழலே உன்னால் அழகாகிப் போனது......நானோ ஒரு கர்ப்பிணியைப் போல கவனமாய் காதலை என்னுள் தேக்கி வைத்து கற்பனையாய் கொட்டி வைத்திருக்கிறேன் எனக்குள் காதலை...

அது எப்போதும் உன்னை பற்றிய அதிர்வுகளை எனக்குள் சுகமாக பரப்பிக் கொண்டே இருக்கிறது. என் ஏகாந்த கனவுகளுக்கு சிறகு கொடுக்கும் உன் கவிதைகளும் என்னோடான உனது ஆரோக்கியமான வாதங்களும் என்னை ஏதோ ஒரு கிரகத்து வாசி போல ஆக்கித்தான் விடுகிறது.

கவிதைகளும் இலக்கியங்களும் நமது விவாதத்துக்குள் வந்து விழும் பொழுதில் எப்போதும் அதை நான் விவரிக்க நீ எதிர்க் கொள்ளும் எதார்த்தமே தனிதான். பெண்ணோடான ஒரு உறவு ஏதேதோ காரணங்களுக்காக தொடரும் லெளகீக உலகில் உன் அறிவோடு கூடிக் களித்ததில் என் அகங்காரம் அடங்கித்தான் போனது. பேசி பேசி உனக்கு விளக்க வேண்டும் என்று நான் நினைத்த எல்லாவற்றையும் உன் மெளனத்தால் அழித்து தெளிவுகளைப் பற்றிய தீட்சை கொடுத்த குரு நீ.

எதுவுமே உன்னிடம் மிகுந்து போய் நான் இதுவரை கண்டதில்லை உன் அழகு உள்பட. திருத்தமாய் உன்னை தீட்டிய தூரிகைக்கு சொந்தகாரனின் ஜீன்களும், புறச்சூழலும் எவ்வளவு செம்மையாய் இருந்திருக்கும்? என்று என் மூளை கணக்குகள் போட்டிருக்கிறது. இயல்பிலேயே நளினம் கொண்ட உன் பெண்மைக்கு மெருக்கூட்டும் உன் அறிவு என் முதற்பார்வையில் சிக்கி அதன் பின் உன் புற அழகை இலவசமாய் எனக்கு கொடுத்தது.

நினைவுகளில் உன் கரம் பற்றிக் கொள்கிறேன்..எங்கெங்கோ கூட்டிச் செல்கிறாய்...நான் அதிசயத்து நடக்கிறேன்....!!!! எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நமக்குள் மூண்டுவிட்ட காதலை என்னால் சொல்ல முடியவில்லை என்று உன்னிடம் சொன்ன போது காதல் என்பது சொல்லி விடுவதால் மற்றும் நிறைந்து விடாது அது புரிந்து கொள்ளப்பட வேண்டியது, வெறும் வார்த்தைகளை உமிழ்ந்து விட்டே வேறு கற்பிதங்கள் கொள்ளும் சராசரி நிகழ்வுகள் நமக்கு வேண்டாமே என்றாய்...

இதோ தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது உனக்கும் எனக்குமான காதல், எந்த வலியுறுத்தலும் எந்த எதிர்பார்ப்புகளுமின்றி ஒரு வாசம் பரப்பும் ஒரு மலரின் இயல்போடு தொடர்ந்து...ஆமாம்... காதலின் வலுவை சப்தமின்றி சொல்லிக் கொடுத்த நீ கூட ஒரு மெளன குருதான்....!

என் மெளனங்கள் சூழ்ந்த பொழுதுகளில் எல்லாம் உருவங்களற்று பரந்து விரிந்து கிடக்கிறது உன் நினைவுகள் ஒரு வெட்ட வெளி வானமாய்....

இதோ நீ இன்று இல்லை...இருந்தாலும் வானத்தில் பரவிக் கிடக்கும் நட்சத்திரங்களைப் போல நானும் காதலால் நிரம்பித்தான் கிடக்கிறேன்!



தேவா. S


Comments

///உனக்காக என்னுள் சூழ் கொண்ட காதல் குழந்தையை எந்த சூழலிலும் வேறு யாருக்கேனும் நான் கொடுத்து விடாமல் இருக்க வேண்டும் என்பதில் நானும் கற்புக்ரசனாகத்தான் பெண்ணே இருக்கிறேன்...///

...அடடா.. இந்த வார்த்தை அமைப்பே ஒரு கவிதை போல இருக்குங்க. இப்படி ஒரு காதலன் கிடைக்க அப்பெண் தவம் செய்திருக்க வேண்டும்...! :)


///அது எப்போதும் உன்னை பற்றிய அதிர்வுகளை எனக்குள் சுகமாக பரப்பிக் கொண்டே இருக்கிறது.///

...பரப்பி, நிறைந்து கிடக்கும் காதல் சுகமாய் தொடரட்டும்..! :)
ezhilan said…
கவிதை மனத்துடன் கூடிய அருமையான பதிவு.வாழ்த்துக்கள்.
வரிக்கு வரி காதல் வடிகிறது. அற்புதமான எழுத்து நடை. சகோதரி ஆனந்தி சொன்னது போல் நிரம்பிக்கிடக்கும் காதல் சுகமாய் தொடரட்டும்.
காதலே சுவாசமாகக்...கட்டுரையில்!

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...