Skip to main content

கடந்து போம்...!

























எழுதத் தோன்றாத வார்த்தைகளை தேடிக் கோர்த்துக் கொண்டிருக்கிறேன் ஒரு குருடனைப் போல.....! இரைச்சலே வேண்டாம் என்று எழுதத் துணியும் மனதுக்கு கூட சுற்றிலும் ஒரு இரச்சலின் அதிர்வுகள் தேவைப்படத்தான் செய்கிறது. கூட்டத்திற்கு நடுவில் நின்று கொண்டு,நான் தனி, நான் தனி என்றும் கூறும் நடிப்புக்கள் எல்லாம் தள்ளி விடப்பட்ட தனிமையில் மூச்சு திணறித்தான் போகின்றன. தொண்டை அடைக்க, கண்கள் பிதுங்க மானுடக் கூட்டங்களை சப்தமின்றி தேடத் தொடங்கும் மாய மனதின் மனதினை தொட்டு நிறுத்தி கேள்வி கேட்கும் பொழுதுகளில் தெரிகிறது உண்மை மமதை என்னவென்று....

யாருமே இல்லாமல் வாழ்வது நிம்மதியென்று யாரேனும் பகிர்ந்தால் அவர் கூறுவது பொய்யென்று கூறி நான்கு கசையடிகள் கொடுங்கள். மனிதனாய் ஜீவித்ததின் தாத்பரியமே கூடிவாழ்தல். இப்படியாய் கூடி வாழும் பொழுதுகளில் நெஞ்சு நிறைக்கும் நினைவுகளை மனிதர்களுக்கு கொடுத்து மனிதர் சூழ மமதைகள் அழிந்து கிடைக்கும் அமைதிதான் சத்தியத்தின் சொந்த வீடு.

மாறாக மனிதர்களை வெறுத்து, வாழ்க்கையை புறம் தள்ளி வெளியே அமைதியைக் கொண்டு வர முயன்று நம்மைச் சுற்றிலு மயான அமைதியை நாம் உருவாக்கி விடலாம் ஆனால் உள்ளே பேரிறைச்சல் பேயாய் கூவிக் கொண்டுதானிருக்கும்.

சாந்தமும் சந்தோசமும் உள்ளே நிரந்தரமாய் குடியேற வேண்டுமானல் புறத்தில் எப்போதும் நிசப்த நிமிடங்களாகவே இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை அறிக எம் மக்களே..! சுற்றியுள்ள மனிதர்களை நேசித்தலும் தத்தம் கடமையினை செவ்வன செய்வதுமாக நகர்கையில் இந்த அழுத்தங்கள் தாண்டி நாம் வந்து விழும் ஒரு பரந்த வெளிதான் நிம்மதி.

இந்த மெளனம் சப்தங்கள் கழிந்தது அல்ல....சப்தங்கள் கடந்தது. அழிந்தது அல்ல ஆனால் நிறைந்தது. செயல்களின் நிறைவுகள் கொடுக்கும் நிரந்தர மெய்யின் நிதர்சனத்தை ஒருவன் ருசிக்க வேண்டுமெனில் அவன் சமுதாய ஓட்டத்தின் அங்கமாயிருக்க வேண்டும்.

இதனால்தான் பெரும்பாலும் பணத்தை வைத்துக் கொண்டு அமைதியைத் தேடி ஓடுபவனுக்கு அவன் சுவிட்ச்சர்லாந்தில் ஆழமான அமைதி சூழ்ந்த இடத்தில் வசிக்கும் போதும் கிடைப்பதில்லை. பெரும்பாலான கிராமங்கள் நிசப்தங்களின் தொட்டிலாய்த்தான் இருக்கிறது ஆனால் அங்கிருக்கும் மனிதர்கள் நிம்மதியாய் இருக்கிறார்களா? ஆனால் பகல் முழுதும் ரிக்சா வண்டி ஓட்டி விட்டு இரவுகளில் சென்னையின் மண்ணடி, போன்ற நெரிசலான பகுதிகளில் தெரு முனைகளில் ரிக்க்ஷா வண்டிக்குள் கிடந்து உறங்குபவர்களை பாருங்கள்.....சலனமின்றி உறங்கிக் கொண்டிருப்பார்கள்.

அவருக்கு லெளகீக சங்கடங்கள் இல்லை என்று கூற இயலாது. இருக்கும் ஆனால் நிம்மதியும் இருக்கும். நிம்மதி என்பது நிறைவாய் நாம் அடுத்தவரை நடத்துதலிலும், நாம் நடந்து கொள்வதிலுமிருந்து விளையும் நன் முத்து. எனக்குத் தெரிந்து மிகைப்பட்ட பேர்கள் வாழ்க்கையில் பொருளாதார பலம் பெறவும், தன்னை அடுத்தவன் மதிக்க வேண்டும் என்பதற்காகவும் விவரம் தெரியாமல் ஒரு ஓட்டத்தை ஆரம்பிக்கிறார்கள்.

நாளடைவில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்....ஓடிக் கொண்டிருக்கிறார்கள்......நிறுத்தவே முடியாத ஒரு நிலையை அவர்கள் அடைந்து விடுகிறார்கள். நின்று விட்டால் உயிர் போய் விடுமோ? யாரும் தம்மை மதிக்க மாட்டார்களோ என்று பயந்து ஓடி ஓடி நிற்பதையே மறந்து மூச்சிறைக்க ஓடுவதையே வாடிக்கையாக்கிக் கொண்டார்கள்.

இவர்களுக்கு உட்காரத் தெரியாது. உட்காரவும் முடியாது. காரணம் மனோவசியக் கட்டு அப்படி. காசு கொடுத்து எங்காவது இத்தனை மணி நேரம் உட்காருவேன் என்று உட்காருகிறேன் பேர்வழி என்று மீண்டும் மீண்டும் தமது கடிகாரத்தையே பார்த்துக் கொள்கிறார்கள் இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது தனது ஓய்வு முடிய என்று..., ஆக மொத்தம் அங்கும் அவர்களுக்கு ஓய்வு இல்லை.

ஒரு மாதிரியான விளையட்டு இந்த வாழ்க்கை இதில் ஏறி அடிக்கிறேன் பேர்வழி என்று போய்க் கொண்டே இருப்பதால் ஒன்றும் பெரிதாய் விளைந்து விடப் போவது இல்லை. ஏறிப்போய் அடிப்பதுபோல அடித்து ஆடுவது போல ஆடி..நடித்து மீண்டும் ஒரு இயல்பு நிலைக்குத் திரும்பி விடவேண்டும். வாழ்க்கையின் தேவைகளை யார் தீர்மானிப்பது?

நமது தேவைகளை நாமே தீர்மானிப்போம் என்று ஒரு உறுதி மொழி எடுத்துக் கொள்ளுங்கள். ஊர் நம்மை தீர்மானித்தால், நாம் என்ற தனித்தன்மை இல்லாமல் ஒரு தெருமுனையில் இருக்கும் குப்பைத் தொட்டி போலத்தானே ஆகி விடுகிறோம்....? யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கொட்டலாம்....என்பது போல...

ஒரு கட்டத்தில் தேவைகள் நிறைவேறிய பின்பு எதையெல்லாம் வாழ்க்கையை வெல்ல, நம்மை சமப்படுத்திக் கொள்ள யுத்திகளாக பயன் படுத்தினோமோ அவற்றை எல்லாம் திருப்பிக் கொடுக்க பழகிக் கொள்ள வேண்டும். ஆசை, கோபம், காமம், ருசி, வேகம் என்று எல்லாவற்றையும் மெல்ல மெல்ல வாழ்க்கையிடம் திரும்ப கையளித்து விட வேண்டும். முழுமையான நிதானம் ஏற்பட்டு, அங்கே மனிதர்களுக்கு பகிர நம்மிடம் அன்பைத் தவிர வேறொன்றுமே இருக்கக் கூடாது. ஆமாம் ஓடி, ஓடி மெல்ல மெல்ல ஓட்டத்தை குறைத்து நிற்பது எப்படி என்று கற்றுக் கொள்வது ஒரு கலை.

விமானம் பறந்து வந்து ஓடு களத்தில் சரலென்று பாய்ந்து வேகமாய் ஓடி பின் வேகம் குறைந்து மெதுவாய், மிக மெதுவாய், மிக மிக மெதுவாய் நகர்ந்து ஒரு கட்டத்தில் நின்று விடத்தானே செய்கிறது. மனிதர்கள் வாழ்க்கையும் அப்படித்தான்....ஆனால் என்ன ஒன்று பலர் லேன்டிங் எப்படி செய்வது என்று தெரியாமல் முட்டி மோதி வாழ்க்கையின் மொத்த பறத்தலையுமே எரித்து விட்டு நிம்மதியின்றி போய் விடுகிறார்கள்.

எவ்வளவு தூரம் பறந்தோம், எவ்வளவு சவால்களை மேற்கொண்டோம் என்ற நமது திறமைகளின் மொத்தம் முழுமடையும் இடம் எது? வெற்றிக்கரமான லேன்டிங் தானே? ஆனால் பாருங்கள் வாழ்க்கையை முடிக்கும் போது எத்தனை மன அழுத்தத்தோடு மனிதர்கள் இருக்கிறார்கள்? முடிவு என்பது நிறைவு. இறுதி என்பது முழுமை. மனித வாழ்க்கையின் இறுதியில் மனிதர்கள் நிறைவாய் இருப்பது என்பது மிக மிக குறைவே....!

எனக்குத் தெரிந்த ஒருவர் இறக்கும் முன்பு வரை கறி வேண்டும், கோழி வேண்டும், சாப்பாடு வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருப்பார். இது அவரின் அந்திமத்தில் நிகழ்ந்தேறிய ஒரு கொடுமை. 75 வயதில் படுத்த படுக்கையில் இருந்த போது அவரைக் காண வந்த உறவினர்கள் அனைவரிடமும் தலைக்கறி குழம்பு வச்சு கொண்டு வாங்க, கோழிக் குழம்பு எடுத்துட்டு வாங்க என்று கூறிக் கொண்டே இருப்பார். அப்படி அவருக்கு வைத்துக் கொடுக்கும் எதையுமே அவரால் உண்ண முடியாது. காரணம் அது அவரின் உடல் தேவை அல்ல மனதின் தேவை....

ஆமாம் என் உறவுகளே...! உடல் ஒத்துழைக்காத போதும் மனம் போடும் பேயாட்டத்தால் மிகப் பெரிய கொடுமையினை அனுபவித்தே ஆகவேண்டும், அதிலிருந்து விடுபட நிறைவு வேண்டும். நிறைவுக்கு புரிதல் வேண்டும். புரிதலுக்கு மன அமைதி வேண்டும். மன அமைதிக்கு நிலையாமையை உணர்தல் வேண்டும். நிலையாமையை உணர வரலாற்றினை உற்று நோக்க வேண்டும். வரலாறு எப்போதும் மாவீரர்களையும், பெரும் குருமார்களையும், பேரழிகிகளையும், பேரரசர்களையும் கொடுமையான மிருகங்களையும், கருணை வள்ளல்களையும் தின்று செரித்திருக்கிறது.

இதில் நாம் உணர வேண்டியது..........இப்படியான மனிதர்கள் எல்லோரும் கடந்த காலத்தில் இருந்தார்கள். இன்று இல்லை. நாம் இன்று இருக்கிறோம் நாளை இருக்க மாட்டோம் என்ற நிதர்சனத்தை தான். உணர்தலில் பிறக்கும் தெளிவில் ஆழமாய் வாழ்க்கையின் பொருளை உணரும் வாய்ப்பு கிடைக்கலாம். கிடைக்காமலும் போகலாம். ஏன் கிடைக்காமல் போகலாம் என்று கூறிகிறேன் என்றால் அது உங்களின் பக்குவத்தைப் பொறுத்தது. உங்களின் பக்குவம், உங்களின் ஜீன்கள் மற்றும் புறச் சூழலின் தாக்கத்தைப் பொறுத்தது.

வாங்கும் நிலத்திற்கு ஏற்றார் போலத்தானே பலன்..! தெளிவுகளை கைக் கொள்ள, கொள்ள தொடர்புகளை நிறைவாக பயன் படுத்தி மனிதர்களை ஆழ உணர்ந்து சரி தவறுகளை சீர் தூக்கி பார்த்து ஒரு நிகழ்வையோ அல்லது மனிதரையோ கடக்கும் போதுதான் நிதர்சனமான பேரமைதி கிடக்கிறது. இதை மறுத்து என்ன செய்தாலும் மீண்டும் உங்கள் நினைவுகள் ஒரு கூட்டத்தை கூட்டும், நீங்கள் தனியாக இமய மலையில் இருந்தாலும் இந்த எண்ணக் கூட்டங்கள் விடவே விடாது.

நீண்ட நெடிய பிரபஞ்ச ஓட்டத்தில் அனுபவமே....உணர்தலாய் இருக்கிறது. உங்களின், எனது அனுபவங்களை உற்று நோக்கி புரிதலாக்கி...சப்தங்கள் கழியாத ஆனால் கடந்த ஒரு பேரமைதிக்குள் பிரவேசிப்போம்..........

அதுவரை...

சுற்றி நிகழும் நிகழ்வுகளை எல்லாம் மெளனமாய் உள்வாங்க்கி கொண்டு புரிதலோடு கடந்து போவோம்...!!!!


தேவா. S

Comments

Kousalya Raj said…
//உங்களின் பக்குவம், உங்களின் ஜீன்கள் மற்றும் புறச் சூழலின் தாக்கத்தைப் பொறுத்தது.//

//ஆழ உணர்ந்து சரி தவறுகளை சீர் தூக்கி பார்த்து ஒரு நிகழ்வையோ அல்லது மனிதரையோ கடக்கும் போதுதான் நிதர்சனமான பேரமைதி//

காரணமும் அதற்கான தீர்வும் விளக்கமும் மிக அருமை...ம்...!

வழக்கம் போல் பாடம் கற்றுக்கொண்டேன். நன்றிகள்.
நாம் என்ற தனித்தன்மை இல்லாமல் ஒரு தெருமுனையில் இருக்கும் குப்பைத் தொட்டி போலத்தானே ஆகி விடுகிறோம்....? யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கொட்டலாம்....

இன்றைய சமூதாயத்திற்கு ஒரு சரியான சாட்டையடி.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...