Skip to main content

இல்லாமல் ஒரு காதல்....!

















நீண்ட நாட்களுக்குப் பிறகு என் அலை பேசியில் வந்த எண்ணை எடுத்து பார்த்து வெகு நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். எவ்வளவு பரிச்சயமான எண் அது...? ஒரு நாளைக்கு எத்தனை தடவை அந்த எண்ணை என் விரல்கள் அழுத்தியிருக்கும்...! என் காதலை எல்லாம் ஒரு குறுஞ்செய்தியாய் எத்தனை முறை கொண்டு சேர்த்திருக்கும் இந்த எண் .... ஆமாம் அவள்தான் அழைக்கிறாள்..

தடம் புரண்ட வாழ்க்கையின் ஓட்டத்தில் அவள் எப்போது தொலைந்தாள். ஏன் தொலைந்தாள் என்றெல்லாம் கூறி உங்கள் நேரத்தை வீணாக்கப் போவதில்லை. கடைசியாய் அவளை நான் சந்தித்தது எக்மோர் ரயில்வே ஸ்டேசன் எதிர்புறம் இருக்கும் பஸ் ஸ்டாப்பில் என்று நினைக்கிறேன். நான் என் பணிக்காய் மும்பை செல்லும் வரை அவளுடன் சென்னையை சுற்றி வராத நாட்கள் பாவம் செய்தவை என்றுதான் சொல்ல வேண்டும்.

உறவினர் ஒருவரின் திருமணத்திற்காய் சொந்தங்களுடன் ஆட்டோவில் எக்மோரை கடக்கும் போது அவளைப் பார்த்தேன்.....! பார்த்த உற்சாகத்தில் உமா என்று கத்த தொண்டையிலிருந்து எட்டிப்பார்த்த வார்த்தைகள் சூழலை உணர்ந்து கொண்டு மீண்டும் குரவளையிலேயே சமாதியாகிப் போயின...அவளும் என்னைப் பார்த்து விட்டாள்...கையை உயர்த்தி ஹேய் என்று ஒரு உற்சாக பிளிறலை அவள் வெளிப்படுத்தி நான் அதைக் காணும் முன்பே ஆட்டோ அந்த இடத்தை கடந்து விட்டது.

புரசைவாக்கம் வரைக்கும் சென்று உறவினர்களை திருமண மண்டபத்தில் இறக்கி விட்டு விட்டு மீண்டும் எக்மோருக்கு அதே ஆட்டோவில் விரைந்து வந்து பார்த்த போது அவள் அங்கு இல்லை. அவள் வீட்டு தொலை பேசியை டயல் செய்து செய்து இந்த எண் இப்போது உபயோகத்தில் இல்லை என்று எனக்கு தொடர்ந்து பவ்யமாய் தெரிவித்தது பி.எஸென்.எல். அவளின் அலை பேசி எண்ணை மீண்டும் மீண்டும் அழைத்துப் பார்த்து அதுவும் சுவிட்ச் ஆஃப் செய்யபப்ட்டிருக்கிறது என்று ஒரு கோபத்தில் அன்று அந்த எண்ணை டெலிட் செய்ததுதான்...

மும்பை சென்றதற்கு பிறகு உமாவை நான் தொடர்பு கொள்ளவில்லை என்பது உண்மைதான். பல்வேறு குடும்ப சுமைகளோடு எதிர்காலத்தை கண்களில் தேக்கிக் கொண்டு வறுமையின் துரத்தலில் சென்றவனுக்கு காதல் ஒரு கேடுதானா என்ற எண்ணம்தான் தொடர்பு கொள்ள அனுமதிக்கவில்லை என்பதை நான் சொல்லி நீங்கள் விளங்க வேண்டிய அவசியத்தில் இருக்க மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.

ஒரு வேளை அன்று அவள் போனை சுவிட்ச் ஆஃப் செய்து வைத்தது, நான் உடனே வராமல் ஆட்டோவில் கடந்து சென்றது ஒரு காரணமாய் இருக்கலாம்.., அல்லது நான் இவ்வளவு நாள் தொடர்பு கொள்ளவில்லை என்பது கூட ஒரு காரணமாயிருக்கலாம்..., ஆனால் அயனாவரம் ஈ.எஸ் ஐ. குவார்ட்டஸில் இருந்த அவளது வீடு மாற்றிவிட்டதையாவது அவள் என்னிடம் தெரிவித்து விட்டாவது கோபப்பட்டிருக்கலாம்.....இப்படியான பல எண்ண ஓட்டங்களில் அவளை முழுதாகவே நான் நிராகரித்து இருந்தேன்..!

முதன் முதலாய் உமாவை பார்த்த போது எனக்கு என்ன தோன்றியதோ அதேதான் அவளுக்கும் தோன்றியது என்று அவள் என்னிடம் சொல்லிய போது நாங்கள் காதலிக்க தொடங்கியிருந்த இடம் மாம்பலம் ரயில்வே ஸ்டேசன்...! காதலை கம்பீரமாகச் சொல்ல பெண்களால் முடியாது என்று நான் நினைத்திருந்த இடத்தை தட்டுத் தவிடு பொடியாக்கி கன கம்பீரமாய் கண்களை நேருக்கு நேராய் பார்த்து காதலை அவள் சொன்னது எனக்கு ஆச்சர்யமாய் இருந்தை விட அவளின் கவிதை சொல்லும் வேகம் இன்னும் ஒரு ஈர்ப்பை அவளிடம் ஏற்படுத்தியது என்று சொல்லித்தான் ஆகவேண்டும்...

காத்திருந்தேன்...
உயிர் மெய் எழுத்துக்களை
எல்லாம் என் உயிரின் ஓரங்களில்
ஒளித்து வைத்து கொண்டு
காத்திருந்தேன்...
எனக்கான காதலனாய் நீ வருவாய்
உனக்கான கவிதையை
நான் செய்வேனென்று...!

என்று அவள் சொன்ன முதல் கவிதை கொடுத்த கிறக்கத்தில் இருந்து மீண்டு எழுவதற்கு முன்னால் அவள் சொன்னாள், காதல் என்பது பட்டாம் பூச்சி போன்றது தீபக் அது எப்போதும் படபடத்துக் கொண்டே இருக்கும்.....இப்போது என் காதல் உன்மீது உட்கார்ந்து இருக்கிறது. உன்னை விட்டு நகராமல் நீ பார்த்துக் கொள்ள வேண்டியது உன் கையில்தான் இருக்கிறது.

கோபப்படுகிறேன் பேர்வழி, சந்தேகப்படுகிறேன் பேர்வழி... என்று கூச்சலிட்டு அந்த பட்டாம் பூச்சியை விரட்டி விடாதே என்றாள்..! இன்று வரை நான் பட்டாம் பூச்சியை விரட்டவில்லை ஆனால் வாழ்க்கையின் இரைச்சலில் அந்த பட்டாம் பூச்சி பறந்து போயிருக்கலாம் அல்லது இறந்து போயிருக்கலாம்....ஆனால் நானே இப்போது பட்டாம் பூச்சியாய்தானிருக்கிறேன் என்ற உண்மையை அவளிடம் சொல்ல எனக்கு மனம் வரவில்லை.

காதல் எப்போதும் எதிரில் ஒரு உருவத்தைக் காட்டும். அதனால்தான் உனக்குள் காதல் தோன்றியது என்ற ஒரு அழுத்தமான உணர்வினையும் மனதுக்குள் பரவவிடும். அவள் இல்லை என்றாலோ அவன் இல்லை என்றாலோ வேறு வாழ்க்கையில்லை என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும். இது ஒரு மாயைதான்....! காதல் என்ற உணர்விற்கு எதிராளி ஒரு கிரியா ஊக்கியாய்தான் இருக்கிறார் ஆனால் காதல் என்னவோ நமக்குள்தான் பிறக்கிறது.

ஏற்கனவே அடித்து ஓய்ந்திருந்த அலை பேசியில் மீண்டும்.....அழைத்துக் கொண்டிருந்தாள் உமா.......!

சுமார் இரண்டு வருடகாலம் உமாவோடு பேசவில்லை. பேசத் தோன்றவும் இல்லை. அவளுக்கும் அப்படியே தோன்றியிருக்கலாம்...! காதலை பகிர்ந்து கொண்டு நடக்கும் போது அதில் ஜெயித்து திருமணம் செய்து கொள்வது லெளகீகத்தில் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. எல்லை மீறாத ஒரு வரையறைக்குள் இருவருமே இருப்பதுதான் காதலென்று கொள்க; காதலிக்கும் பொழுதில் அங்கே காமம் தலை தூக்குமெனில் காதலை காமம் விழுங்கி விட்டது என்றும் அறிக;

காதல்... காதலின் பொருட்டு அன்பின் மிகுதியில் காமம். காமத்தின் உச்சத்தில் உடைந்து போகும் ஆணவம். ஆணவம் அழிய பிறக்கும் தெளிவு. தெளிவின் மெருகில் ஏற்படும் புரிதல். புரிதலினால் ஏற்படும் வாழ்க்கை ஆசிர்வதிக்கப்பட்டது. ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கையில் கிடைக்கும் மிகப்பெரிய உன்னதம் நிம்மதி. இந்த நிம்மதிதான்....வாழ்வின் மிச்சம்....!

இதோ மீண்டும் ஒரு முறை உமா அலை பேசியில்........என்னை கூவி கூவி அழைக்கிறாள்...

இது அப்படியே மாறி மனதிலே தோன்றும் காமம், அதனால் ஒரு காதல் என்று போகும் போது காதல் அங்கே பகடைக்காயாய் வார்த்தை அளவிலேயே நின்று போகிறது. காதலின் மிகுதியால் வரும் காமம் அன்பின் வெளிப்பாடு. காமம் மிகுதியால் வரும் காதல் ஆசையின் வெளிப்பாடு. ஆசைகள் எப்போதும் முடிவில்லாதவை... ஒரு ஆசை இன்னொரு ஆசையை ஜனிப்பிக்கிறது. இப்படி தொடரும் ஆசைகளால் எப்படி நிம்மதி கிடைக்கும்? நிம்மதி இல்லாத வாழ்க்கை நரகமாகித்தான் போகிறது.

நான் காதலித்தேன்....காதலினால் ஏற்பட்ட அன்பினை என்னுள்ளேயே தேக்கி வைத்திருக்கிறேன் ஆனால் அதன் வெளிப்பாடு காமமாய் ஆகித் தீரவேண்டும் என்று எனக்கு தோன்றவில்லை. அதனால் லெளகீகத்தில் வெற்றியாகப் பார்க்கப்படும் திருமணம் என்ற ஒன்று நிகழாவிட்டாலும் பரவாயில்லை என்று நகர்ந்து விட்டேன்.

உண்மையில் வெற்றிகள் எல்லாம் பதட்டமானவை. ஆமாம் வெற்றியின் நுனியில் அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற பதட்டம் எப்போதும் இருக்கிறது. தோல்விகள் எப்போதும் சுவாரஸ்யமானவை, ஏனெனில் அவை எப்போதும் வெற்றியை நோக்கி நகரும் ஒரு பரபரப்பிலும் சுவாரஸ்யத்திலுமே இருக்கும்.

இந்த இரண்டுக்கும் மத்தியில் பயணிப்பது ஒரு வித்தை. அந்த வித்தையினை நான் குறைவில்லாமல் கற்றிருந்த்தேன்.

காதலை பெரும்பாலும் திருமணங்கள் அழித்து விட்டு எதார்த்தத்திற்குள் கூட்டிச் சென்று விடுகிறது. அங்கே காதலனும் காதலியும் மரித்துப் போக கணவனும் மனைவியும் பிறக்கிறார்கள். வாழ்க்கை விசுவரூபமெடுத்து நிற்க அங்கே கவிதைகளும் காதலும் சுருங்கி போகின்றன. ஆமாம்..உண்மையில் காதலுக்கு லெளகீக தொடர்புகள் தேவையில்லை. அது தனித்தது ஆனால் நிறைந்தது.

அந்த அளவில் அவளை நான் தொடர்பு கொள்ளாமல் இருந்தாலும் என்னுள் பாரதி சொன்னது போல நித்ய கன்னியாய் அவள் எப்போதும் நிற்கிறாள். அந்த பட்டாம் பூச்சி என்னுள் எப்போதும் அமர்ந்தே இருக்கிறது. அவளின் நினைவுகளும் அவளோடு சுற்றித் திரிந்த பேசிச் சிரித்த பொழுதுகளும் மிக அற்புதமான நினைவுகளாய் என்னுள் தேங்கிக் கிடக்கிறது.

தேவைப்படும் போது அவள் நினைவுகளை அசை போடும் ஒரு விலங்காய் இருப்பது அலாதியாய் இருக்கிறது. இப்படியே நான் வாழ்ந்து விட்டேன். இரண்டு வருடங்களில் நான் அவள் மீது கொண்டிருக்கும் காதல் அவளோடு சுற்றிப் பழகும் போது இருப்பதை விட அதிகமாய்த்தானிருக்கிறது. அவளின் இருப்பு கொடுத்த நிறைவினை எல்லாம் விட...இல்லாமை கொடுக்கும் உணர்வுகள் சுகமானவை.

மீண்டும் அவள் அழைக்க என் அலை பேசி அடித்துக் கொண்டிருக்கிறது.......ஒரு நிமிடம் இருங்கள்....என் அலை பேசியை நான் சுவிட்ஸ் ஆஃப் செய்து விட்டு வருகிறேன்.

ஆமாம்....நான் அவளோடு பேசப் போவது இல்லை. எனது கனவுகள் அழகாய் இருக்கின்றன. இந்தக் கனவுகளோடு நான் வெகு நாட்கள் இருந்து விட்டேன். நிஜம் அதை வந்து அழித்துப் போடுவதில் எனக்குச் சம்மதம் இல்லை. எதார்த்தம் என்ற பெயரில் ஒரு அடாவடித்தனம் எனது அமைதியை கசக்கிப் போடுவதை நான் அனுமதிக்கப்போவதில்லை. நான் அவளைக் காதலித்தேன். அவள் என்னைக் காதலித்தாள்....என் நினைவுகள் அவளால் நிரம்பிப் போயிருக்கின்றன. அவள் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை.......நானும் தொடர்பு கொள்ளவில்லை...

இது இப்படியே இருக்கட்டும். மீண்டும் உயிர்த்தெழச் செய்வதாய் எண்ணிக் கொண்டு எனக்குள் இருக்கும் காதலை நான் அழிக்க விரும்பவில்லை..... நிஜத்தில் புரிதலை கொடுக்காத ஏதோ சில உணர்வுகளால் அவள் என்னை பிரிந்ததற்கு என் சூழல் காரணமாயிருந்திருக்கலாம். இப்போது மீண்டும் ஏதோ ஒரு புரிதலை காலம் கொடுத்ததால் அவள் என்னை மீண்டும் அழைத்திருக்கலாம் அல்லது வேறு ஒரு நிலைப்பாட்டை எடுத்திருப்பதை தெரிவிக்கவும் அழைத்திருக்கலாம்..

இரண்டு வருடமாக அவசியமற்று இருந்த நான் ஏதோ ஒரு அவசரத்திற்காக கூப்பிடவும் அவசியமற்றவன்தானே.....? அது சுபமாயிருக்கலாம்....அல்லது அசுபமாயிருக்கலாம்..... நான் இப்படியே இருக்கிறேன்....!

சேர்வதும் திருமணம் செய்து கொள்வதும், முகத்தோடு முகம் உரசுவதும் காதலென்று யார் வேண்டுமானாலும் சொல்லுங்கள்.........என் காதல் வேறு விதமானது....! இங்கே உருவங்களை அழித்த வேறு ஒரு உன்னதமான விசயமிருக்கிறது....!

அவள் வேண்டாம் அவள் நினைவுகள் போதும் எனக்கு......!!!

என் அறையின் ஜன்னl கதவுகளைத் திறந்து வைத்தேன்.......வேகமாய் வந்து முகத்தை தடவியது..ஞாயிற்றுக் கிழமை பிற்பகலின் மும்பைக் காற்று.....!

தேவா. S

Comments

பொருத்தமான பாடலுடன்..
இல்லாமல் இருக்கும் காதலை..
நீங்கள் சொல்லாமல் சொல்லிப்போனது
சிறப்பு!!!

ரசித்துப் படித்தேன்...! :)
//காதல்...
காதலின் பொருட்டு அன்பின் மிகுதியில் காமம்.
காமத்தின் உச்சத்தில் உடைந்து போகும் ஆணவம்.
ஆணவம் அழிய பிறக்கும் தெளிவு. தெளிவின் மெருகில் ஏற்படும் புரிதல். புரிதலினால் ஏற்படும் வாழ்க்கை ஆசிர்வதிக்கப்பட்டது. ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கையில் கிடைக்கும் மிகப்பெரிய உன்னதம் நிம்மதி...!//

அடடா.. எப்படி இப்படி?????? உண்மையா சொல்றேன். மொத்த வாழ்க்கையின் சாராம்சம் நச்சுன்னு.. நாலு வரில சொல்லிட்டீங்க!

கச்சிதமான, கவனிக்கப் படவேண்டிய வரிகள்..!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...