
எங்கும் பரவிக் கிடக்கும் எண்ண ஓட்டங்களுக்கு மத்தியில் நகர்ந்து செல்வது சிரமமாக இருக்கிறது. குறுக்கும் நெடுக்குமாய் செல்லும் எண்ணங்களையும், அதிக அதிர்விலான முரண்களையும் சுமந்து செல்லும் மனிதர்கள் எம்முள் பெரும் இரைச்சலை ஏற்படுத்திச் செல்வதை தவிர்க்க முடியவில்லை.
சற்றே உற்றுப் பார்த்து எமது இருவிழிகளையும் உருட்டி நிறுத்தி புருவமத்திக்கு அரை விரற்கடை மேலிருக்கும் எமது மூன்றாவது விழியை திறந்து முரண்பாட்டு மூட்டைகளை எரித்துப் போட்டுவிடலாம் என்று கருதுகையில் எம்முள் எப்போதும் கேட்கும் ஒரு தாலாட்டுப் பாடல் எல்லாவற்றையும் சாந்தப்படுத்தி கருணை கொள்ளச் சொல்கிறது.
ஜனனத்திற்கும் மரணத்திற்கும் இடைப்பட்ட நாளில் இந்த தோல் துருத்தி பையை சுமக்கும் எம்மின் பகுதிகள் மயக்கத்தில் நடத்தும் குழப்பங்களுக்காக....
ஒரு பெருங்கருணை எம்மையறியாது எமது இயல்பினிலிருந்து சுரந்து மன்னிக்க முயன்று, பின் மன்னிப்பின் சுவடு சுமக்க வேண்டுமே என்ற புரிதலில் மறந்து போகச் சொல்கிறது. புத்தி என்ற ஒன்றினை இயறகையாய் நின்று யாம் படைத்ததின் அவசியம் யாதென்று மாக்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
ஏனெனில் அவற்றை சிந்திக்க இயலா நிலையில் நிறுத்தி வைத்து, அனுபவங்களை அவற்றின் முன் இறைத்துப் போட்டு அனுபவித்து, அனுபவித்து அந்த அனுபவித்தலை உள்ளிருக்கும் உள்ளமை உணர, உணர அவை தாமே தம்முள் உய்வித்துச் வெளிச்சென்று அகண்ட பிரமாண்டத்தில் கலக்குமொறு யுத்தியை நாம் செய்து வைத்தோம்...
மானுட உடம்பினுள் புத்தி என்னும் கத்தி ஒன்றினை வைத்து புலன்களின் மூலம் அனுபவங்களை சுவீகரித்து அவற்றை விவரித்து பார்க்கும் ஒரு நுட்பத்தை மூளையின் மடிப்புகளுகுள் சொருகி, அனுபவங்கள் மூளை உரசும் பொழுதில் பற்றிக் கொள்ளும் நெருப்பாய் மனமென்ற ஒரு மாயத்தை விஸ்தாரிக்கச் செய்து தானே தன்னை யாரென்று சிந்திக்கும் திறனையும் கொடுத்தோம்...!
தனித்திருக்கையில் தத்தம் நினைவுகள் மடங்கிக் கொள்ள புலன்கள் எல்லாம் சட்டென்று உள்நோக்கித் திரும்புகையில் தான் யாரென்றும் தன்னின் மூலமெதுவென்றும் அறிய பல படிநிலைகளை பகடி செய்தும் வைத்தோம்...! மிகையான மானுடர்கள் எல்லாம் தன்னை உடலென்றும், உயிரென்றும் பணமென்றும், பொருளென்றும் எண்ணி ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டு மேலும் தமக்குச் சுமை சேர்த்துக் கொண்டே செல்ல....
நிறைகளின் புரிதல்களும், இயம்பல்களூம் சாதாரணர் செவிச் சேரவேயில்லை.
ஞானத்திருட்டினை செய்வர்கள் மிகுந்திருக்கும் காலம் இது என்பதை யாம் அறிவோம். சமூகமும் அதன் அவலங்களும் செழுமையற்ற புத்திகளால் நாளும் சீர் கெட்டுப் போக செழுமையான புத்திகள் என்று வேடமிட்ட அவலங்கள் தத்தம் முனைப்பின் கனத்தினை கூர் தீட்டிக் கொண்டு இடும் வேஷங்கள் எல்லாம் சத்தியத்துக்கு சவால் விட்டுக் கொண்டுதானிருக்கின்றன.
உன் புறம் விடு.....மானுடா......! உன் குணம் விடு.....! உன் திறம் மற....! யாரோடும் இருக்க நினைக்காதே..... உன்னோடு நீ இருக்க இயலுமா என்ற ஒரு சிறு கேள்வியை பெரும் கோபத்தோடு அவ்வப்போது யாம் முன் வைப்பதுமுண்டு....
மனிதனுக்கு தன்னை புகழ மனிதன் ஒருவனாவது வேண்டும். தான் செய்த அல்லது செய்யப் போகிற விடயங்களைக் எண்ணி இறுமாப்பில் புளகாங்கிதம் அடைந்து கற்பனையில் மிதக்க வேண்டும்.
நான் அமைதியானவன் என்று ஓராயிரம் முறை தனக்குத் தானே கூறி கொண்டு, கூச்சலிட்டுக் கொண்டே தனக்குத்தானே ஒரு பட்டயமும் வழங்கித் தானே தன்னை சிறப்பிக்கவும் வேண்டும், வித்தைகள் பல செய்து தன்னை பிறர் புகழ அந்த வார்த்தை வீச்சுக்களை செவிகளுக்குள் பரவவிட்டு தன்னை மயக்காபுரியில் சாக விட்டு மயங்கிக் கிடக்க வேண்டும்....
இதுதானே வழமை ....? இதுதானே உச்ச பட்ச சந்தோசம். எந்த சிரங்கும் சொறிய, சொறிய சுகம்தான்....என்பதை எப்போது அறிய இயலும்...?சிரங்கு இரணமாகி உடலை எரிக்கும் போதுதானே....
என்றாவது ஒரு நாள் தனித்திருந்திருக்கிறீர்களா? ஒரு பாட்டோடு இருந்திருக்கலாம், ஒரு துணையோடு இருந்திருக்கலாம், ஒரு நிகழ்வோடு இருந்திருக்கலாம், ஏதோ ஒரு நினைவோடு இருந்திருக்கலாம்....ஆனால், எண்ணமற்று, எண்ணம் அறவே அற்று தனித்திருந்து ஒரு சவத்தைப் போல சலமின்றி கிடக்கும் போது உள்ளுக்குள் பூக்கும் பூக்களின் நறுமணம்த்தில் எப்போதேனும் லயித்துக் கிடந்திருக்கிறீர்களா?
இல்லைதானே?
கூவிக் கூவி கடை விரித்துப் பார்த்தேன்...! எழுத்துக்களில் ஏதேதோ அர்த்தங்களை அடைத்து இறைத்துப் பார்த்தேன்...கர்மாக்கள் எப்போதும் ஜெயித்துக் கொள்ள கர்மாக்களின் முன்பு ஜனமும் மரணமும் மண்டியிட்டுக் கிடக்கின்றன...!
நிகழ்வன யாவும் எப்போதோ முடிவு செய்யப்பட்டது. முடிவு செய்யப்பட்டதைத் தான் நாம் மீண்டும் செய்கிறோம்...
கதிரவன் ஒரு நாள் எரிந்து முடியும்....
பூமி ஒரு நாள் சுழற்சி இன்றி செத்துப் போகும்
ஒளியென்றும், இருளென்றும் பகுத்துணர
உடலென்றும் உயிரென்றும்
ஒன்றுமே இருக்காது....
இப்போது கூறுங்கள்..
எங்கே உமது பிள்ளைகள்..?
எங்கே உமது காதல்கள்?
எங்கே உமது திட்டங்கள்?
எங்கே உமது ஆணவங்கள்?
ஒரு கணம் யோசித்து மறந்து போகவல்ல இந்த கேள்விகள். தன்னுள் விரிந்து கிடக்கும் அகங்காரம் எழுந்து விடாமல் அழித்துப் போடவே இந்தக் கேள்விகள்..! நிதர்சன நெருப்பினை நெஞ்சுக்கூட்டிற்குள் ஏற்றி அதில் அறியாமையை அழித்துப் போடுங்கள்...
ஏற்றிருக்கும் வேசத்தில் ஆடும் ஒரு கபடதாரிதான் நாமெல்லாம் என்றொரு விடயம் விளங்குங்கள்...! அதிக கூச்சலும் ஆழ்ந்த மெளனமும் கடந்த ஒரு வெட்ட வெளி நிலையில் மாசு மறுவற்று மறைந்தே போய் விடுங்கள். கர்மாக்கள் கொண்டு ஜனித்த உடம்பு முழுமையை நோக்கி நகர வேண்டுமென்ற உண்மை உணருங்கள்.
நேற்றுகள் எல்லாம் நாளை என்பதின் இறந்த உடல்கள்...! நாளை என்பது ஜனிக்கப்படாத ஒரு குழந்தை....! இன்று என்பதில் இருக்கும் ஜீவனே சத்திய பேரியக்கத்தின் நிதர்சன தெளிவு....!
நாளைக்காகவும், நேற்றுக்களுக்காகவும் உம்மின் இன்றுகளின் புன்னகைகளை இழக்காதீர்...! இன்று கண்டவர் நாளை இருக்கலாம், இல்லாமலும் போகலாம்...இன்றே உம்மின் முழுமையை அவருக்கு சமர்ப்பிங்கள். பரிபூரணத்தின் அருகாமையை, அது எப்போதும் கணத்துக்கு கணம் கிசு கிசுக்கும் இரகசியத்தின் உன்னதத்தை ஆழ்ந்து அனுபவியுங்கள்...
நான், எனது, எனக்கு மட்டும், நான் சொல்வது மட்டும், என்ற ஒருமைகளை தீயிலிட்டுப் பொசுக்குங்கள்..! பிரபஞ்சக் கூட்டின் தனிகள் எல்லாம் தான் தான் என்று கூவி நகர்கையில் ஏற்படும் அபத்தங்களை உணருங்கள். சுய நல கர்வங்களால் சக மானுடர்க்கு ஏற்படும் பிரச்சினையினை அறியுங்கள்.
தனித்தனி உடலாய் நீவிர் இருக்கலாம், தனி தனி கருவறைகள் உமது ஜனித்த இடமாயிருக்கலாம்... ஆனால் ஒட்டும் மொத்த ஸ்தூல, சூட்சும நகர்வுகளும் அவற்றின் விளைவுகளான அண்ட சராசரத்துக்கும்....இவற்றை எழுத்தாக்கிக் கொண்டிருக்கும் இவனுக்கும் சேர்ந்து யாம்தான் கருவறை என்பதை புத்திகளில் செதுக்கி வையுங்கள்...!
உள்ளது யாமென்ற ஒன்றே....! எம்முள் விளையாடும் எம்மின் பகுதிகளே நீவிரும், பகிர்ந்தனவும்...பகிரதானவும் சுட்டியவும் சுட்டப்படாதனவும்....
தானே தன்னுள் யாதொரு எண்ணமற்று இருந்து பாருங்கள்...யாமே உமது கருவ்றை என்பதை உணர்ந்து பாருங்கள்....!
தேவா. S
Comments
யாரை நோக்கி நீங்கள் குரல் கொடுத்து கொண்டு உள்ளீர்கள்...??
அது திரும்ப உங்கள் காதுக்கே எதிரொலியாய் திரும்பி வருவது கேக்க வில்லையா :)
இப்போது இந்த பூமியில் எது சரியில்லை என்று எதை மாற்ற போராடி கொண்டு உள்ளீர்கள் ?
இந்த பூமி ஒரு போதும் சொர்க்க புரியாய் இதற்கு முன்னும் இருந்ததில்லை...இனிமேலும் இருக்க போவதில்லை
அப்படியே சொர்க்க புரி என்றாலும் வரலாற்றில்யே நாம் வாழும் இந்த கால கட்டத்தை தான் சொல்ல வேண்டும்.... அதற்கு காரணம் நான் வாழ்கிறேன் என்பதால் அல்ல :)
அறிவியல் வளர்ச்சியில் நாம் மிக உயர்ந்த நிலையில் உள்ளோம்.....
எல்லா வசதி வாய்ப்பும் உள்ளது...
[[அந்த காலத்தில் நமிதா மாதிரி ஒரு பெண்ணை பார்க்கணுமுன ஒரு 100 மைல் சுத்தணும்...ஆனா இன்னைக்கு அப்படியா.... :) ]]
ஆனாலும் நமது சமுதாயம் சொர்க்க புரியாய் உணர்வதாய் தெரிய வில்லை....
நீங்கள் முயற்சி செய்து எதை செய்ய சொல்லுகிறீர்கள் ....
மலர் மலர நாம் என்ன முயற்சி செய்ய வேண்டும்....
நாம் செய்ய வேண்டியது கொஞ்சம் பராமரிப்பு அவ்வளவுதான்...
நீங்கள் இரவு முழுவதும் கண் விழித்து பார்த்து கொண்டே இருந்தால்தான் மலர் மலருமா என்ன.....
இந்த பிரபஞ்ச இருப்பே மலர வைக்கிறது
ஆன்மிக பாதையில் முயற்சி செய்தல் அனைத்தும் வீண் தான்....
நீங்கள் எழுதுவதால் (கண்விழித்து செடியை பார்த்து கொண்டு இருப்பதால்) எந்த மாற்றமும் வரும் என்று நான் நம்ப வில்லை....
உங்கள் இருப்பே இந்த சமுகத்தில் மாற்றத்தை நிகழ்த்த வேண்டும்
முதலில் உங்களை சுற்றி உள்ள ஓரிருவர் மாற வேண்டும்....உங்கள் இருப்பு அதை நிகழ்த்த வேண்டும் (நிகழ்த்தும்)....
அது பின்னர் பத்தாகும்.....பின் அது நுறாகும்....
அன்றாட சமுக செய்தியை தெரிந்து கொள்ள எழுத்து சரியான ஒன்று தான்....ஆன்மிகத்தை பொறுத்த வரை எழுத்து என்பது வெறும் குப்பை....அது இறந்த காலத்தை பற்றி பேசும் ...அல்லது எதிகாலத்துக்கு திட்டம் தீட்டும்...
நான் நமிதாவை பற்றி பேசுவதால் என்னை ஆன்மிக வாதியாய் யாரும் நம்புவதில்லை :))
உங்கள் இருப்பின் வாசம் பரவட்டும் ..... மலர்தலாக...மலரை தேடி வண்டு வரும்....நாம் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை :)