
நிலவின் அழகில் தடுமாறி...
தளும்பி கிறங்கிக் கிடந்த...
ஒரு குளக்கரை இராத்திரியின்..
நிசப்த நிமிடங்களுக்குள் நான்
ஊறியே கிடந்தேன்...!
மொழிகளின்றி இரைச்சலாய்
மெளனத்தை பகிர்ந்து கொண்டிருந்த
தூரத்து மலைகளை
ஒற்றிக் எடுத்துக் கொண்டிருந்த
வாடைக் காற்றின் ஓரத்தில்
ஒட்டிக் கொண்டு பறந்த
ஒற்றைக் குயிலின் சப்தம்
என் காதுகளை தடவிச் செல்கையில்
கிறங்கிக் கிடந்த என் விழிகளை
அடைத்து மூடி எங்கோ
ஒரு கனவு வெளிக்கு
இழுத்துச் செல்ல காத்திருந்த
இமைகளை மெல்ல பிரித்தெடுத்து
மீண்டும் மூழ்குகிறேன்...
அந்த மோன நிலைக்குள்...!
கேட்கவும் சொல்லவும்
யாருமற்று...
தேவைகள் எல்லாம்
தொலைந்து போன
பூமியின் அந்த சொர்க்க
இராத்திரியின் நிமிடங்களில்
மானுட ஜனித்தலின்
அர்த்தங்களை எல்லாம்
கை குவித்து நீர்பருகும்
ஒரு தாகக்காரனாய்...
விழி குவித்து காட்சிகளாய்...
பருகிக் கொண்டிருந்தேன்..!
சந்தோசங்களின் உச்சங்களுக்கு
துணை தேவையில்லை...,
சரித்திரத்தின் பக்கங்களுக்குத்தான்
நிகழ்வுகளின் அழுத்தங்களும்
மனிதர்களின் நகர்வுகளும்
அவசியமாகின்றன...!
கருக் கூடி ஜனிக்கையில்...
உரு மறைந்து மரிக்கையில்...
அற்றுப் போகும் வாழ்க்கையில்
இடையில் துளிர்க்கும்..
சங்கடங்களை எல்லாம்
வாழ்க்கையென்று கூறும்
மானுடர் விட்டு
நான் தூரமாய் நகர்கிறேன்...!
எட்டிய வரை வானமுண்டு
கிட்டிய வரை வாழ்க்கை உண்டு
தொட்டுத் தழுவிச் செல்ல
தென்றல் உண்டு...
ரகசியம் பேசிச் செல்ல
படர்ந்து கிடக்கும் பூமியின்
அடர்ந்த பக்கங்களுமுண்டு...!
விடியலில் சூரியன் வரும்
மனமில்லாத மேகங்கள் வரும்...
பறப்பன ஊர்வன எல்லாம்
என்னைக் கடந்து செல்லும்...
பசிக்கையில் கிடைப்பதை
புசிக்கையில் மறந்தே போகும்
அந்த உடலின் தேவை...!
மானுடரில்லா வாழ்க்கையில்
யாருமற்ற நினைவுகளில்
என் இருத்தலின் லயித்தலில்
பிரபஞ்ச நகர்தலின்
தாளத்தில் தப்பாமல்
ஆடும் சிவ தாண்டவத்திற்கு
உடலெதற்கு? மனமெதற்கு....
மக்கள்தான் எனக்கெதற்கு...
நானே நானாய்.....
ஒரு வழிப்போக்கனாய் நகர்கிறேன்..
நானே யாவுமாகிறேன்...!
தேவா. S
Comments
கிட்டிய வரை வாழ்க்கை உண்டு
தொட்டுத் தழுவிச் செல்ல /
இந்த மாதிரி கவிதைகளும் உண்டு...