Skip to main content

முல்லைப் பெரியாறு...!



















வற்றிப் போன நதியின்
தழும்புகளை கண்களால்
தடவிக் கொண்டிருக்கிறேன்...
ஏதேதோ நினைவுகள்
வேகமாய் உட்புகுந்து
செரித்துப் போடுகிறது
வாழ்வியலின் சுவாரஸ்யங்களை...

அதோ அங்கே.. ஒரு மீன் கூட்டம்
துள்ளிக் குதித்திருக்கலாம்...
இதோ இந்த நடுக்கல்லின் மீது
நாரைகள் அமர்ந்து...
சிறகுலர்த்தியிருக்கலாம்...

கரையோர அந்த மரத்தடியில்
யாரேனும் அமர்ந்து
மீன்களுக்காக தூண்டில்
வீசியிருக்கலாம்..

சுருண்டு கிடக்கும்
இரு கரையோரங்களிலும்
காற்றோடு கூடி
சிறு அலைகளாய் நீர்
சிணுங்கியிருக்கலாம்...

சிறு பூச்சிகள்
ரீங்காரமிட்டுக் கொண்டு
நீரின் மேல் மிதந்து, மிதந்து
ஊர்வலங்கள்...
போயிருக்கலாம்...

பசித்து இவ்வழி கடந்த
ஏதேனும் ஒரு ஜீவராசியின்
இரைப்பைக்கு தன்
கருப்பையிலிருந்து நீர் கொடுத்து
தாகம் தீர்த்திருக்கலாம்..

குருதியைப் போல
தன்னைக் கொடுத்து
வயல் வெளிகளில் விளைச்சலாய்
நிறைந்து மானுடரின்
வாழ்க்கையாய் இருந்திருக்கலாம்

இதோ வறண்டு கிடக்கிறது
இந்த நதி...
பக்கத்திலேயே துணைக்காய்
செத்துக் கிடக்கும்
விவசாய நிலங்களோடு....

கடந்த கால நினைவுகளை
ஏந்திக் கொண்டு காய்ந்து
கிடக்கும் இந்த இடத்தில்
நதியென்று ஒன்றுமே இருந்தத்தில்லை
என்று யாரேனும்...
மறுக்கவும் கூட செய்யலாம்!

முன்பு இங்கு ஒரு
நதி இருந்தது....
அதற்கு சுவாசமாய் ஒரு
அணை இருந்தது!
அதனால் எம்மக்களுக்கு ஒரு
வாழ்க்கை இருந்தது
என்பதை நாமே கூட
மறந்தும் கூட போகலாம்....!

ஆனால்...

சுவடுகளைச் சுமந்து கொண்டு
துருத்திக் கொண்டிருக்கும்
எலும்புகளாய் கிடக்கும்....
அந்த அணையின்
எச்சங்களில் ஒட்டியிருக்கும்
ஒரு துரோக வரலாற்றை
கண்ணீரோடு காற்றும், காலமும் கூட
வாசிக்காமலா போய் விடும்..!

முல்லைப் பெரியாறு அணை உடைபட்டு விடக்கூடாது என்று கடுமையாய் போராடிக் கொண்டிருக்கும் அதே வேளையில், இப்போது உள்ள அணையை உடைத்து விட்டு வேறு ஒரு அணையை புதிதாய் கேரள அரசு கட்டினால் என்னவெல்லாம் ஆகும்...? என்ற ஒரு அக்கறை தமிழக மக்களிடம் மிகையாக பரவலாக இல்லை என்னும் உண்மை நெஞ்சை சுடாமல் இல்லை.!

இந்த அணையை உடைத்து விட்டால் என்னவாகும் என்று யோசித்த போது ஏற்பட்ட வலியை வார்த்தைகளாக்கி இருக்கிறேன்....!

எழுதும் போதே கண்ணீரில் நனைந்து வெளியே வந்த வார்த்தைகளில் இருந்த சோகத்தை தாங்கவே முடியவில்லை...நிஜத்தில் நிகழ்ந்தால் அது எவ்வளவு பெரிய கொடுமையாகும் என்று கற்பனை செய்தும் பார்க்க இயலவில்லை.

முல்லைப் பெரியாறு தென் தமிழகத்து வானம் பார்த்த மக்களின் வாழ்வாதாரம். இங்கே அரசியல் சூழ்ச்சிகளால் நிகழ்த்தப் பெறும் யாதொரு கொடுமையையும் அறியாத எம்மக்களை வஞ்சம் தீர்க்க நினைக்கும் மனிதர்கள் சுயநலபோக்குகளை கைவிட்டு எம்மின் வயிற்றுப் பசியினையும் வறுமையின் கோரத்தினையும் உணர வேண்டும்.

பென் குவிக் என்னும் ஒரு வெள்ளைக்காரனுக்கு இருந்த கருணை மனத்தை அன்போட் எமது இரத்த சொந்தங்களான கேரளத்து மக்கள் உணர வேண்டும். அரசியல் நகர்வுகளை விட்டு வெளி வந்து எல்லா வகையிலும் தனக்கு உதவியாய் இருக்கும் தமிழக மக்களின், அதுவும் வானம் பார்த்த பூமியில் முல்லை பெரியாறு நீருக்காக காத்திருக்கும் ஏழை விவாசாயிகளின் இரத்தத்தை எப்படியெல்லாம் புதிய அணை உறிஞ்சிக் கொண்டு எம்மவரை எலும்புக் கூடுகளாக்கும் என்பதை உணரவேன்டும்.

தமிழக அரசும், தமிழக அரசியல்வாதிகளும் நேர்மையாய் இதை எடுத்துக் கூறி பிணக்குகள் இல்லாமல் நமது உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும்...!

இந்த பிரச்சினைக்கு பின்னால் இருப்பது வெறும் நதி மட்டுமல்ல....

கோடாணு கோடி மக்களின் ....தலைமுறைகள் கடந்த வாழ்க்கை...!

தேவா. S

Comments

Prabu Krishna said…
ம்ம் உண்மைதான் அண்ணா. இங்கே ஒருவர் ஒரு விசயத்துக்கு ஆதரவு தெரிவித்தால் இன்னொருவர் எதிர்ப்பு தெரிவிக்கிறார். கொடுமை.
முல்லைப் பெரியாறும் துரோகத்தின் வரலாறும் -பாகம் ஒன்று
தவிர்க்க முடியாத சிக்கல்களால் நின்று போன முல்லைப்பெரியாரும் துரோக வரலாறும் தொடர் மீண்டும் தொடர்கிறது, உங்களுக்காக தொடர் ஒன்று முதல்...

முல்லைப் பெரியாறும் துரோகத்தின் வரலாறும் -பாகம் ஒன்று
நாரைகள் அமர்ந்து...
சிறகுலர்த்தியிருக்கலாம்...//
அடடா !!
சரியாக முடிவு எடுக்கத் தெரியாத தலைமை எல்லா திசையும் பிரச்னைகள் பிறப்பெடுக்க வழி வகுக்கும்

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...