
பாலகுமாரன் தாக்கம் நிறைய இருக்கு நீங்க எழுதுற எழுத்துலன்னு நிறைய பேர் என்கிட்ட சொல்லவும் செய்றாங்க, மின்னஞ்சலும் செய்றாங்க. சில பேர் அதை மாத்திக்கச் சொல்லியும் ஆலோசனை சொல்றாங்க...!
என்கிட்ட கண்டிப்பா பாலகுமாரனோட தாக்கம் இருக்கத்தாங்க செய்யும். என்னைப் பொறுத்தவரைக்கும் எழுத்து அப்டீன்றதோட ஆழத்தை நான் ருசிச்சு அனுபவிச்சது பாலகுமாரன்கிட்டதான். இன்னிக்கு வரைக்கும் அந்த ருசி மாறாம இருக்கு. ஆனா தயவு செஞ்சு பாலா சார் மாதிரி எழுதுறேன்னு மட்டும் சொல்லிடாதீங்க...
நிறைய பேர் அப்டி தான் எழுதுறதா நம்புறாங்க, வெளிலயும் சொல்லிக்கிறாங்க. ஆனா பாலா சார் மாதிரி ஒருத்தர்தாங்க இருக்க முடியும். அவருடைய தாக்கத்தை நாம நம்ம வழியில நின்னு சொல்லும் போது சில வார்த்தையாடல்களில் நமக்குள் நம்முடைய ஆஸ்தான குரு வந்து உக்காந்துடுவார்.
குரு அப்டீன்ற வார்த்தை ரொம்ப பெரிய வார்த்தை மட்டும் இல்லை இருக்குற அத்தனை வார்த்தைகளிலும் ரொம்ப புனிதமானதும் வலிமையானதும் கூட. ஒரு குரு எப்போதும் தன்னைச் சுற்றி இருப்பவர்கள் தன்னை நேசிக்க வேண்டும் என்று நினைப்பதே இல்லை. அவர் ஒரு தன்னிச்சையான நிகழ்வாத்தான் இருக்கிறார். வெளில இருந்து பேசுறவங்க வார்த்தைகளைப் பற்றி அவருக்கு கவலைகள் எதுவும் எப்போதும் இருப்பது இல்லை. இகழ்ச்சியோ, புகழ்ச்சியோ இந்த இரண்டின் பின்னணியில் என்ன இருக்கும் என்று ஒரு குருவிற்கு நன்றாகத் தெரியும்.
குரு என்ற வார்த்தைக்குக் மிகச் சரியான பொருள் வழிகாட்டி. ஆமாம் அவர் வழியைத்தான் காட்டுவார் நாம் தான் செல்ல வேண்டும். நம்மை கை பிடித்து அழைத்துச் சென்று இலக்கில் விட்டு விடுகிறேன் என்று சொல்பவன் மகா மோசடிக்காரன். இப்படி வழிகாட்டும் மனிதர்கள் தன்னைச் சார்ந்து இருப்பவர்களை மட்டுமில்ல சாரதவர்களையும் கூட மிக அதிகமாக நேசிக்கிறார்கள் ஆனால் அதை புறத்தில் காட்டுவது இல்லை.
புறத்தில் நேசத்தையும், அன்பையும் எப்போதும் வார்த்தைகளுக்குள் கொண்டு வந்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை. செயல்களே அன்பை வெளிப்படுத்துகின்றன. வார்த்தைகள் பலன்களை எதிர்ப்பார்க்கின்றன. எந்த ஒரு குருவும் முகஸ்துதியை விரும்புவதில்லை மாறக தன் கருத்துக்களால் தாக்கப்பட்டு அவனின் அகத்தில் மாற்றம் ஏதும் ஏற்பட்டிருக்கிறதா என்று எப்போதும் கவனித்துக் கொண்டே இருக்கிறார்.
அந்த கவனிப்பு நேரடியான உடல் தொடர்புடையதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தன் செயல்களை செம்மையாகச் செய்து அதன் விளைவுகளை அறிவுறுத்தலாக்கி உணர்வுகளாலும் மாற்றங்களைக் கொண்டு வர முடியும். ஒரு குரு அதைக் குறைவில்லாமல் செய்கிறார். என் பாலகுமாரன் எனக்கு மட்டுமல்ல லட்சக்கணக்கான அவரின் வாசகர்களுக்கு அதைச் இடை விடாது செய்து கொண்டே இருக்கிறார்.
கல்லூரியில் படிக்கும் போதே எனது வாழ்க்கைக்குள் வந்து விட்ட பாலகுமாரனின் எழுத்துக்கள், கல்லூரி முடித்து தடுமாறிக் கொண்டிருந்த எனக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம். இங்கே தான் இந்த வழிகாட்டலை தனது எழுத்தின் மூலமாக புத்தி விழித்தெழும் தீட்சை எனக்குக் கொடுக்கப்பட்டது.
பாலகுமாரனை வாசிக்க, வாசிக்க வாழ்க்கைப் பற்றிய பார்வை மாறியது. உறவுகளைப் பற்றிய புரிதல் கூடியது. கடவுளைப் பற்றியும், ஆன்மீகம் பற்றியும் ஒரு வெளிச்சம் விழுந்தது. காதலைப் பற்றியும் காமத்தைப் பற்றியும் ஒரு தெளிவு பிறந்தது. காமத்துக்கும் இறைநிலைக்கும் இருக்கும் தொடர்புநிலை விளங்கி அதிலிருக்கும் புனிதம் விளங்கியது.
பாலகுமாரன் எனக்கு குரு.
என்னை அவருக்குத் தெரியாது. அவரை நான் தனிப்பட்ட முறையில் சந்தித்தது கிடையாது. இரண்டிற்கும் காலம் ஒரு அவசியத்தை வைக்கவில்லை. அவரைப் பார்க்கும் போது எழுத்தில் இருந்த படியே அவர் இருக்க வேண்டும் என்று நான் எதிர்ப்பார்க்கப் போவதுமில்லை. ஏனெனில் சூட்சுமமாய் கதைகளுக்குள்ளும், கட்டுரைகளுக்குள்ளும் நின்று ஓராயிரம் விசயத்தை பாலகுமாரன் பேசியிருக்கிறார். நேரே பார்க்கும் போது அப்படி பேச வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு மனிதர்களுக்குள் தோன்றத்தான் செய்யும் ஆனால், அது கொஞ்சம் அல்ல நிறையவே நாடகத்தனமானது.
கடவுளைப் பற்றி பாலா கூறுகையில் புறம் நோக்கி கடவுளைத் தேடாதே உன்னை உற்று நோக்கு, நீ ஒரு சாட்சியாக நின்று கொள் என்று அடிக்கடி கூறுவார். காமத்தைப் பற்றி பேசுகிறேன் பேர்வழி என்று சமகாலத்தில் வக்கிரத்தை தூண்டும் எழுத்துக்கள் மிகுந்து விட்டன. பாலகுமாரனும் காமம் பற்றி பேசுவார். அது சரியான புரிதலைப் புலன்களைக் கடந்து புத்திக்குள் கொண்டு சேர்க்கும்.
" அவளும் அவனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். அவள் அன்பாய் அவனைத் தழுவினாள் " என்று எழுதிவிட்டு அடுத்த வரியில் " போர் தொடங்கியது. படைகள் இலக்கினை நோக்கி முன்னேறின. தடுக்க முடியாமல் எதிரி படைகள் தடுமாறி நின்றன. தடுக்க, தடுக்க உக்கிரம் கூடிக் கொண்டே சென்றது. எதிரிப் படை இப்போது விட்டுக் கொடுக்க ஆரம்பித்தது....விட்டுக் கொடுத்தலின் உற்சாகத்தில் இன்னும் வேகமாய் முன்னேறியது படை...
கோட்டை கொத்தளங்களை எல்லாம் அடித்து நொறுக்கி உச்ச வெறியில் நகர்வு இருந்தது." என்று கூறிவிட்டு இடையில் ஒரு வரியில் " அவன் அன்பாய் அவளின் இடுப்பு வளைத்து காது மடல்களில் முத்தமிட்டான் " என்று கூறிவிட்டு மீண்டும் " போர் உச்சக்கட்டத்தை தொட்டிருந்தது எதிரிப்படை சரணாகதியில் தன்னை முழுதுமாய் இழந்திருக்க, சரணாகதிக்கு முன்னால் வெற்றி பெற இலக்கின்றி சரணாகதியை அனுமதித்து வெற்றி தோல்வியற்ற ஒரு பூரண அமைதி அங்கே நிலவியது. "
இப்படி காமத்தை வகைப்படுத்தி நளினமாய், நாகரீகமாய் எழுத எனக்குச் சொல்லிக் கொடுத்தவர் பாலகுமாரன். தியானத்தின் உச்சத்தில் என்ன நிகழும், தியானத்தின் பயணம் எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் சொக்கட்டான் போட்டு இழுத்துச் சென்றிருக்கிறது அவரின் எழுத்து. அப்பப்பா... ஒரு எழுத்துக்கு இவ்வளவு சக்தியா என்று இறுக அவரை மானசீகமாய் அணைத்து கால்களில் விழுந்து கண்ணீர் சொரிந்திருக்கிறேன்.
இயல்பை எழுதுகிறேன் என்று கபரே டான்ஸ் ஆடும் எழுத்துக்களை விட்டு தூரமாய் என்னை விலக வைத்தவர் பாலகுமாரன். இளைஞர்களின் வாழ்க்கையில் அவரின் எழுத்துக்கள் ஒரு வழிகாட்டும் சுடர். ஒரு இளைஞன் தன்னுடைய பதின்மத்தில் எல்லாவிதமான தடுமாற்றங்களையும், பதின்மத்தின் ஈர்ப்புகளையும் கடந்து வாழ்க்கைக்குள் நுழையும் தருணத்தில் பாலகுமாரனின் எழுத்துக்கள் சர்வ நிச்சயமாய் வழிகாட்டும்.
பாலா எழுதுவது போல தன் சொந்த வாழ்க்கையில் இருப்பது இல்லை மேலும் நான் அவர் வீட்டுக்குச் சென்றேன் அவர் அப்படி இல்லை, இப்படி இல்லை என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். இன்னும் அபத்தத்தின் உச்சமாய் அவர் இரண்டு திருமணம் செய்திருக்கிறார் அதனால் பிடிக்கவில்லை என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். அது அவர் வாழ்க்கை, அவருக்கு ஏற்றார்போல் அவர் பார்த்துக் கொள்வார். அவர் எழுத்து நம்மை ஏதாவது செய்கிறதாம் நமக்கு உதவுகிறதா என்று பார்க்காமல் பாலாவின் தனிப்பட்ட வாழ்க்கையை எடுத்து வைத்து ஏன் நாம் பார்க்கவேண்டும்?
தெய்வங்கள் எல்லாம் இரண்டு திருமணம் செய்து கொள்ள அனுமதித்து அதைப் போற்றி வணங்கும் ஒரு தேசத்தின் மக்களும், மனிதர்களும் பாலாவின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சுரண்டிப் பார்ப்பது மிகப்பெரிய புரிதலின்மை.
பாலா எனக்கு குருவாய் இருக்கிறார் என்று அவரின் உருவத்தை அடையாளமாக நான் காட்டினாலும், பாலாவின் எழுத்து எனக்கு வழிகாட்டியாய் இருந்திருக்கிறது. அந்த எழுத்து என்னும் சூட்சுமம் எனது குரு.
என்றென்றும் சூட்சுமமாய் பாலாவை நான் நேசிப்பதும், அவர் தன் எழுத்தின் மூலம் என்னை ஆசிர்வதிப்பதுமென ஒரு ஏகலைவனாய் தூரமாய் ஒதுங்கி நின்று நான் இடைவிடாது கற்றுக் கொண்டிருக்கிறேன்....
இது ஒரு மானசீக நேசிப்பு...! புரிதல் நிறைந்த புலன்களைக் கடந்த உறவு...!
பாலகுமாரன் ஐயாவுக்கு எனது நமஸ்காரங்கள்...!
தேவா. S
Comments
அவர் எப்படி கதை எழுதுவார் நீங்க சொன்ன விதம் நல்ல இருந்தது.. உங்கள் குருவை பற்றிய பகிர்வுக்கு நன்றி...
ஆனாலும் தன்னை சித்தபுருஷராக அவர் தன்னை நம்பவும், பரப்பவும் ஆரம்பித்த நாள் முதல் நான் அவரின் எழுத்துகளிடம் இருந்து வெளியே வந்துவிட்டேன்,,
ஆனாலும் தடுமாறும் இளைஞர்களுக்கு அவரின் ஆரம்ப கால எழுத்துக்கள் வரம்...
வாழ்வின் பிற்பகுதியில் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கும் இவரது எழுத்துகள் ஒரு வழிகாட்டுதலே.,
பகிர்வுக்கு நன்றி தேவா
குரு என்பவர் ஒரு வழிகாட்டி - மிக சரியான புரிதலுடன் கூடிய வார்த்தை.
குரு எப்படி இருக்கணும், இருக்கிறார் என்பதை அழகாக சொல்லிடீங்க.குருவை பின் தொடர்பவர்கள் தங்களை எப்படி வைத்து கொள்ளனும், நெறி படுத்தி கொள்ளவேண்டும் என்பதை தெளிவு படுத்திய இந்த படைப்புக்கு என் நன்றிகள்.
இப்படி ஒருவர் இருக்கிறார் என்பது பாலகுமாரன் அவர்களுக்கு மகிழ்வை தரும்.
...........
ஆழ்ந்த வாசிப்பை ஏற்படுத்த கூடிய உங்களின் எழுத்திற்கு இந்த வருடத்தின் இறுதி நாளில் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
பிறக்க போகும் வருடத்தில் இன்னும் பல படைப்புகளை நீங்கள் படைக்க வேண்டும் அதை என் போன்ற வாசகர்கள் வாசித்து தங்களை மேலும் தெளிவு படுத்தி கொள்ள வேண்டும் என் மனமார வாழ்த்துகிறேன்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
பாலகுமாரன் கதைகள் படித்திருக்கின்றேன்.
Happy New Yesr
மிக்க நன்றிகள்!