ஏதோ ஒரு புள்ளியை நோக்கி நகரும் மெல்லிய விளக்கொளியாய் நகரும் உள்ளமையோடு உடலென்னும் மாற்றமெய்தும் பிண்டத்தோடு சேர்ந்து பயணிக்கிறேன். நான் யாரென்று கேட்பவர்களிடம் இன்னாரென்ற பொய்களைப் பகிர்ந்து, பகிர்ந்து, உடலின் இன்பங்களையும் துன்பங்களையும் அனுபவித்து அதன் சாரத்தை ஏந்திக் கொண்டு ஏதோ ஒரு விடியலுக்காய் வாழ்க்கை செலுத்தும் திசையில் பறந்து கொண்டிருக்கிறேன்.
நேற்றைய உண்மைகள் இன்றில் பொய்யாய் மாறி நாளைய பொய்களை இன்று உண்மைகளாய் தொடர்ந்து பகிர்ந்து கொண்டிருக்கும் மடமையை ஏற்றுக் கொண்டு எப்போதும் ஏதோ ஒன்றை சொல்ல நினைத்து, சொல்லி, அப்படி சொல்லிய விடயங்களில் திருப்தியுறாமல் மீண்டும் மீண்டும் சறுக்கி விழுந்து கொண்டே இருக்கிறேன். நிசப்தத்தின் சுவையை நான் பருகி இருந்தும் பேரமைதியின் சாயலோடு நான் சுகித்திருந்தும், இன்னமும் என்னை பேசவும் எழுதவும், மனிதர்களோடு அளாவளாவச் செய்து கொண்டிருக்கும் கர்மாவின் ஆளுமையினை, ஏதோ ஒரு செயலின் விளைவினை என்னால் தடுக்கவே முடியவில்லை.
என்னுள் உயிரென்றும், உணர்வென்றும் உடலாய் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த சக்தி ஏதோ ஒரு கடும் தாகத்தில் ஏதேதோ வலுவான செயல்களைச் செய்து ஓங்கி அடித்து அதிகாரமாய் வாழ்ந்து, அடிப்பட்டு, அந்த அனுபவ வலிகளைச் செரித்துக் கொள்ள இந்தப் பிறப்பென்ற ஒன்றாய் மலர்ந்திருக்கிறது. ஒரு பேருந்துக்காய் காத்திருக்கும் பத்து நிமிட இடைவெளியில் அவசர அவசரமாக பருகும் தேநீர் போல வேக வேகமாய் நான் கடந்து கொண்டிருக்கிறேன் இந்த பிறப்பின் சம்பங்களை...
பிடித்து நின்று இங்கே வாழ்வதில் அர்த்தமொன்றுமில்லை என்று தெளிவாக தெரியும் போதே சக ஜீவராசிகளுடன் ஒரு சுமூக வாழ்கையை வாழ்ந்து விட்டுப் போகவேண்டும் என்ற யாக்கையின் விளைவுகளையே ஒரு பிச்சைக்காரனைப் போல எதிர்பார்த்து எதிர்பார்த்து பயணிக்கிறேன்.
அழுத்தமாய் பல சூழல்கள் என் உச்சி முகர்ந்து முகவாய் பிடித்து கண்களை ஊடுருவி ஒரு தாயின் வாஞ்சையோடு தலைகலைத்து மார்போடு என் முகம் சேர்த்து மகனே சமப்பட்டுப் போ, என் பிள்ளையே நீ ஆசுவாசப்படு, மெளனத்தில் நீ கரைந்து போ என்று நெஞ்சு தடவி என் உயிரை வருடிக் கொடுத்து, சுவாசத்தை சீராக்கி, உடல் கடந்த உணர்வு நிலைக்கு கைப்பிடித்து கூட்டிச் சென்று இங்குதான் நீ இருப்பாய், இதுதான் உடல் கடந்த வாழ்க்கையில் எதிர்ப்பார்ப்புகள் அற்ற ஏகாந்தத்தில் பாலினங்கள் கடந்து, அசையும் அசையா வஸ்துக்கள் தாண்டிய உணர்வுப் பெருவெளி என்று கற்பித்துக் கொடுத்தும் இருக்கின்றன.
இன்னபிற சூழல்கள் முகத்தில் நேராய் அறைந்து உதடுகள் கிழிந்து போக உடலெல்லாம் முட்களால் கீறி இரணப்படுத்தி, எட்டி நெஞ்சில் உதைத்து வலியென்னும் உடல் வேதனையை ஆழமாகச் சொல்லி அழுத்தமாய் திடப்பட்டு, கோபத்துக்குள்ளும், சந்தோசத்துக்குள்ளும், காமத்திற்குள்ளும், காதலுக்குள்ளும், கடவுள் என்னும் மாயைக்குள் திளைக்க வைத்தும் விடுபட வைத்தும், பந்த பாசங்களை நெஞ்சுக்குள் நிறுத்தி வைத்து அவற்றின் மூலம் மாய உணர்வுகளை மனதுக்குள் ஏற்றி வைத்து, பிறப்புகளுக்கு சந்தோசப்பட்டும், இறப்புகளுக்கு கதறி அழுதும், வஞ்சிப்புகளுக்கு ரெளத்திரம் கொண்டும் நகரச் சொல்லிக் கொடுத்துக் கொண்டும் இருக்கின்றன...
மனதை கடந்து நிற்க அறிந்த எனக்கு மனிதர்களைக் கடக்க முடியாதபடி பிறப்பிலேயே சூட்சும முடிச்சுக்கள் இட்டு என்னை உயிருள்ள பிண்டமாய் வெளித்தள்ளி இருக்கிறது இந்த இயற்கை. தன்முனைப்பு என்னும் கொடும் விசத்தை கடந்து நிற்கையில் தன் முனைப்புகள் கொண்ட மனிதர்களோடு வாழ்வது மிகக் கொடுமையானது.
மனிதர்களின் கோபங்களும் ஆச்சர்யங்களும், சந்தோசங்களும், தேடல்களும் எதிர்பார்ப்புகளும் நான் பல ஜென்மங்களில் கண்டது. நான் என்று இங்கே கூறுவது எனது உடலோ அல்லது இந்தப் பெயரோ அல்லது பதவியோ அல்ல எனக்குள் உள் நின்று அசையாமல் எல்லா நிகழ்வுகளின் சாரத்தையும் வாங்கிக் கொள்ளும் ஒரு சக்தி.
அது எப்போதும் அப்படியே இருந்திருக்கிறது. அதன் வீரியத்தால் ஏதேதோ அனுபவங்கள் தங்கி இருந்த இடத்துக்கும் வஸ்துக்கும் ஏற்றார் போல ஏற்பட்டு அதன் சாரம் மட்டும் பதிவுகளின்றி ஒரு புரிதலாய் வாங்கிக் கொள்ளப்பட்டு இருக்கிறது. இது எப்படி என்றால் ஒரு முள் குத்திய உடன் காலில் ஏற்படும் வலியை உடல் வாங்கி அனுபவித்து கிரகித்துக் கொள்கிறது அது பதிவாய் மூளையில் பதிந்து போய் விடுகிறது. வலியை உள்வாங்கி அதனால் ஏற்பட்ட அனுபவங்களை உள்ளுக்குள் ஏற்பட்ட மாற்றங்களை வார்த்தைகளால் விஸ்தாரிக்க முடியாது. வலிக்கிறது என்று சொல்ல முடியும் ஆனால் வலி கொடுத்த உணர்வுகளை எத்தகையது என்று விளக்க முடியாது..
ஆழ்ந்த உறக்கத்தை எப்படி சொல்லிக் காட்டுவது அது உடலுக்கு ஏற்பட்ட அனுபவமெனில் விஸ்தாரிக்கலாம் ஆன்மாவின் அனுபங்களை விஸ்தாரிக்க முடியாது. வலி உடலின் அனுபவம் அதனால் ஏற்பட்ட உணர்வு ஆன்மாவின் அனுபவம். காமத்தில் இயங்கும் போது உடலின் செயல்பாடுகளை விவரிக்க முடியும் நான்கு பாகம் புத்தகம் கூட எழுத முடியும் ஆனால் உச்சத்தை உச்சம் என்னும் நான்கு எழுத்துகளுக்குள் தேக்கி விட முடியாது அது எப்படி இருந்தது என்று பகிர இயலாது. அது ஆன்ம அனுபவம். தாகமும் பசியும் உடலின் தேவை, ஆனால் உணவையும் தண்ணீரையும் அருந்திய பின் ஏற்படும் நிறைவு ஆன்மாவின் அனுபவம்...
இப்படி வாழ்க்கையின் நகர்வுகளில் ஆன்ம அனுபவத்தை மிகுதியாக தேடித் தேடி செயல் புரிந்து, புரிந்து ஆன்ம நிறைவினை எட்டிப் பிடிக்கும் இடத்தை வார்த்தைகளில் கொண்டு வர இயலாது. உடலின் தேவைகளை, மனதின் ஆசைகளை லாவகமாக திருப்பி அடித்து அதை ஆன்ம அனுபவமாக மாற்றிக் கொள்வது ஒரு வித்தை. எதிர்பார்த்து கட்டுக்களுக்குள் நின்று செய்யும் செயல்கள் வெறும் உடலின் அனுபவமாய் மாறி கடை வாயில் எச்சில் ஒழுகும் நாயாய் வாயில் இரத்தம் வரும் வரையில் எலும்பினை கடித்து இழுத்துக் கொண்டிருப்பதற்கு சமம்.
பக்தியும் கடவுளும் மனதின் தேவைகள் எனில் கடவுளரைக் கடந்த சடங்குகளைக் கடந்த, மதங்களை அதன் தத்துவங்களைக் கடந்த இடம் மிக மிக உயிர்ப்பானது, பசுமைனாது. இந்த இடத்தை எட்டிப் பிடிக்கும் போதுதான்....
ஒரு சந்தோச சங்கீதம் நம்முள் கேட்க ஆரம்பிக்கிறது. காற்றில் தலையசைக்கும் செடியாய், மழையில் சொட்ட சொட்ட நனையும் ஒரு மரமாய், இடுக்குகளில் கண் மூடி சுகமாய் தூங்கும் ஒரு பூனையாய், அதிகாலையில் சிலிர்த்து எழும் ஒரு சேவலாய் வாழ்க்கையின் இயல்புகளோடு கலந்து வாழ்ந்து அதை விட்டு வெளியேறுகையில் எந்த ஒரு கோரமான அனுபவங்களும் அலைக்கழிப்புகளும் இன்றி விரல் நகம் களைவது போல உடல் களைந்து செல்ல முடியும்.
இன்னமும் மதங்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டும் கடவுளைக் கொடுமையான தண்டிப்பவராக எண்ணி பயந்து கொண்டும் மன இறுக்கத்தோடு யாரோ ஒருவர் என்னை தண்டிப்பார் என்று பயந்து பயந்து வாழ்வதில் எனக்கு சம்மதமில்லை. பக்குவப்படாத வரையில் கடவுளும் மதங்களும் இங்கே அவசியமாகின்றன.
புளியங்காய் பழுத்த பின் அந்த ஓட்டிற்கு யாதொரு அவசியமும் பயனும் இல்லை. அதே நேரத்தில் ஒரு காலத்தில் அந்த பழத்தை அந்த ஓடுதான் காத்தது என்பதையும் மறுப்பதற்கில்லை. இந்தப் புரிதல் வரும் வரை மனிதன் ஏதேதோ சொல்லி, அழுது புரண்டு பல கதைகளையும் தத்துவக் குப்பைகளையும் பேசி நகரவேண்டியதுதான்....
அதுவும் நியதிதான்.
யாரும் யாரையும் மாற்ற இயலாது. நான் சொல்லி ஒருவன் மாறினான், அவன் சொல்லி நான் மாறினேன் என்பது எல்லாம் சுத்தப் பொய். அவர் கூறினார், மாறும் தன்மை என்னில் இருந்தது என் விழிப்புணர்வு நிலையில் நான் ஆராய்ந்து பகுத்தறிந்து அறிவுக்கு எட்டும் இடத்தில் நாமே மாறுகிறோம். இதுவும் நியதிதான்...
பல பரிமாணங்களில் பயணிக்கும் வாழ்க்கையில் ஒரு மொட்டாய் வெடித்து, மெல்ல மெல்ல மலர்ந்து, கடும் வெயிலையும், குளிரையும் அனுபவித்து .....மெல்ல மெல்ல கருகி....சப்தமில்லாமல் சருகாகி மண்ணோடு மண்ணாகிப் போவேன்.....அவ்வளவே....
நான் இருந்தேன் என்பதும் உண்மை....இல்லை என்பதும் உண்மை....!
நான் நகர்ந்து கொண்டிருக்கிறேன்....
தேவா. சு
Comments