அந்தக் கனவில்தான்
உன்னை கடைசியாக நான் கண்டது;
மெல்ல தோள் சாய்ந்து
கைகளுக்குள் கை கொடுத்து
நெருக்கமான மெளனத்தை
இருவருமே மொழிபெயர்த்துக் கொண்டிருந்தோம்!
பெருவெடிப்பாய் விம்மி அழத்தோன்றிய
என் ஏக்கத்தின் நுனியில் அமர்ந்திருந்த
கண்ணீர்த் துளிகளில் கரிப்பாய்
பரவிக் கிடந்த என் காதலுக்கு
உன் உதட்டுச் சிரிப்பால் ஒத்தடங்கள் கொடுத்தாய்...
உறக்கம் தொலைத்து விழிகளை
வெறுமனே மூடிக் கொண்டு
உன் நினைவுகளோடு புரண்டு கொண்டிருந்த
பல கொடும் அரக்க ராத்திரிகள் கொடுத்த
கோரச் சுவடுகளை
உன் அருகாமையிலான அந்தப் பகல்
சாந்தமாய் கொன்று போட்டது....
தலை கோதி நீ பரவவிட்ட தாய்மையின்
அடர்த்தியில் உன் நினைவுகளைச் சப்பிக் கொண்டே
ஒரு குழந்தையாய் உறங்கியே போனேன்
சிறு விசும்பலோடு....
...
....
....
...
அதுதான் உன்னை கடைசியாக
நான் கண்ட கனவு...
பின் உன்னை சுத்தமாய் மறந்து விட்டேன்
இந்த கவிதையை எழுத ஆரம்பிக்கும் வரை...,
இதோ...
எழுதி முடித்து விட்டு
மீண்டும் விலகிச்செல்கிறேன்...
இன்னொரு நாள் உன் நினைவுகள்
வந்து என்னுள் படபடக்கலாம்....
அப்போது ஒரு கவிதையை எழுதி விட்டு
மீண்டும் ...
உன்னை மறந்து போகக் கூடும்...!
தேவா. சு
Comments
Kavithai Superb
Regards
GV.
APSA Friend
Karaikudi
Kavithai Superb
Regards
GV.
APSA Friend
Karaikudi