சப்தமில்லாமல் ஒரு மூலையில் அமர்ந்திருந்தேன். யாரோடும் எதுவும் பேசப் பிடிக்கவில்லை....எதுவும் தோணவும் இல்லை. சுற்றி இருந்த எல்லோரும் ஏதோ ஒரு வேலையைச் செய்து கொண்டிருந்தனர். எப்போதும் எல்லோருக்குள்ளும் ஏதோ ஒரு பரபரப்பு இருப்பதும் அப்படியான பரபரப்பிற்காய் ஏதேதோ இலக்குகள் வெளியில் காத்துக் கிடப்பதும் எனக்குப் புரிந்தது.
எனக்கு இந்த வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படாமல் ஏன் போனது...? என்பதற்கு தனிப்பட்ட காரணங்களை என்னால் எடுத்துப் பார்த்து கோர்த்து சொல்ல முடியவில்லை. பிடிக்கவில்லை...அவ்வளவுதான். என்னைச் சுற்றி எல்லோரும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள்...ஆனால் கவனிக்க கூட எனக்குப் பிடிக்கவில்லை.
பக்கத்து வீட்டு தாத்தாவுக்கு வயது 70 தாண்டிவிட்டது. அப்படி அதிகம் வயதானதாலேயே தனக்கு எல்லாம் தெரியும் என்று வருவோர் போவோரிடம் எல்லாம் அலட்டிக் கொண்டு..... என் அனுபவம்தாண்டா உன் வயசு என்று இடைவிடாமல் சொல்லுவார்...
உலக அரசியலைப் ஒரு கை பார்க்கும் என் அக்கம் பக்கத்து வீட்டு அங்கிள்களும், என் அப்பாவும் தங்களின் கருத்துக்களை எல்லாம் உலக இறுதி உண்மைகளாக எப்போதும் அறிவித்துக் கொண்டு இருப்பார்கள். வாசித்த செய்திகள், அனுபவங்கள் கொடுத்த புரிதல்கள், மற்றும் தனக்குள் தோன்றும் கற்பனைகள் எல்லாவற்றையும் திரட்டி வைத்துக் கொண்டு ஒவ்வொரு மனிதனும் தன்னின் புலமையை பேச்சுக்களில் எடுத்து இயம்பி தன்னை மிகப்பெரிய அறிவாளியாக காட்டிக் கொள்ள இடைவிடாது முயல்கிறான்...
சரி நானும் இப்படி எல்லாம் என்னுள் நினைத்துக் கொள்கிறேனே..., அப்படி என்றால் நானும் பெரிய மேதாவியாய் என்னைக் காட்டிக் கொள்ள முயல்கிறேனோ...? ம்ம்ம்ஹும்..... நான் யாரிடமும் பேசவில்லை. யாரிடமும் பேச பிடிக்கவில்லை. நான் என்னுள் பேசிக் கொள்கிறேன். அதை அவ்வப்போது எழுதிப்பார்க்கிறேன். அவ்வளவுதான்...
எல்லோருக்கும் ஏதோ ஒரு கருத்து சொல்லவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அப்படியாய் சொல்லும் கருத்தில் பெரும்பாலும் மற்றவர்களைக் குறை சொல்லும் போக்கு மிகுந்திருக்கிறது. அப்படி குறை சொல்லும் போது மறைமுகமாய் தன்னை நல்லவன் என்று அறிவித்துக் கொள்ளும் ஒரு சுய தம்பட்டம் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது...
அவ்வப்போது பிறரை பாராட்டவும் செய்கிறார்கள். அப்படி பாரட்டும் போது கூட வெகு சிலரே ஆத்மார்த்தமாக வியந்து, கைகொட்டி சிரித்து ஆச்சர்யமாய் ஒரு குழந்தையைப் போல வாய் பிளந்து பாரட்டுகிறார்கள். மிகையானவர்கள் பாராட்டும் இடம் என்பது... கூட...நான் பாராட்டுகிறேன், நான் எவ்வளவு பெரிய மனிதர் என்று பார்த்துக் கொள்ளுங்கள் உலகத்தீரே என்று அறிவிக்கும் பொருட்டே செய்கின்றனர்..
பகிர்தல் என்பதன் அர்த்தம் இங்கே தொலைந்து போய்விட்டது. ஒரு மனிதனுக்குள் தாக்கம் கொடுத்த விடயங்களை சக மனிதர்களிடம் பகிரலாம், நகைச்சுவையாய் அடுத்த மனிதரை சிரிக்க வைக்கும் கருத்துக்களைப் பகிரலாம், அல்லது புதிய தகவல்களை தெரிவிக்கும் வகையில் பகிரலாம்...
இப்படியாய் பகிர்தல் என்பது எதிராளிக்கு பயனுள்ள வகையில் இருக்க வேண்டும் என்ற தர்மத்தை மறந்து விட்டு....ஒலைப்பெட்டிக்குள் புகுந்த ஓணான் போல எல்லோரும் ஏதோ பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.
கற்றுக் கொள்ள நம்மைச் சுற்றி குறைவான மனிதர்களே இருக்கிறார்கள், ஆனால் கற்றுக் கொடுக்க நிறைய பேர்கள் இருக்கிறார்கள். சமூகத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் மனிதர்களை விட அவர்களுக்குச் சேவை செய்கிறேன் என்று கிளம்பியிருக்கும் மனிதர்கள் அதிகமாகத்தான் இருக்கிறார்கள். பகிர்தலில் தங்களின் அனுபவத்தையும் அறிவையும் பகிர யாரும் தயாரில்லை...
நீ இப்படி இரு...அல்லது அப்படி இரு...., இது தவறு, இது சரி, என்று புள்ளி விபரங்களை வளர்ந்திருக்கும் நவீன ஊடகங்கள் மூலம் தெரிந்து வைத்துக் கொண்டு ஒரு புலமை நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பக்கத்து வீட்டுக்காரனையும் எதிர்வீட்டுக்காரனையும் யாரென்று தெரிந்து கொள்ளாமல், உறவுகளை சரியாக பயன்படுத்துவது எப்படி என்ற புரிதல் இல்லமால்....
சகோதரத்துவத்தையும் அன்பையும் பற்றி எழுதியும் பேசியும் என்ன லாபம் இருக்கிறது..?
நான் மெளனித்து விட்டேன். காரணம் எனக்கு அர்த்தமற்றப் பேச்சுக்களில் நேரத்தை விழுங்கும் அரட்டைகளில் அக்கறை கிடையாது. வாழ்க்கையில் எனக்கு ஒரு பிடிப்பு கிடையாது என்று சொன்னேன் அல்லவா...
ஆமாம் எதையும் தலைக்கு எடுத்துக் கொண்டு அதை பிடித்துக் கொண்டு கனமாய் நான் நகரவிரும்பவில்லை. ஒரு மெல்லிய மனிதனாய், எளிதான வாழ்க்கையை வாழ்வதில் எனக்கு யாதொரு சிக்கல்களும் இல்லை. முரண்களை ஏற்படுத்திக் கொள்பவர்கள் நாமே....
இந்தக்கணத்தில் நான் இடும் முடிச்சு அடுத்த கணத்தில் எனக்கு இரணத்தைக் கொடுக்கிறது. இந்தக் கணத்தில் நான் முடிச்சிட்டுக் கொள்ளாமல் நகர்ந்து கொண்டே இருந்தால் எனக்கு வலிகளோ இரணங்களோ வரப்போவதில்லை...! புரிதலின்மையால் கடந்த கால முடிச்சுக்கள் கொடுத்திருக்கும் இரணங்கள் இன்னும் வலித்துக் கொண்டே இருக்கின்றன...அதே நேரத்தில் கடந்த காலத்தில் செய்த சில இலகுவான காரியங்கள் என்னை காற்றில் சிறகடித்துப் பறக்கவும் செய்கின்றன....
மெல்லிய ஒரு குறுஞ்சிரிப்பு எப்போதும் என் முகத்தில் வந்து அப்பிக்கிடக்கிறது. அது எப்படி சாத்தியமானது தெரியுமா....? மனிதர்களை எளிமையாக கர்வமின்றி கையாள ஆரம்பித்த போதுதான். இயல்பாய் சிரித்து ... அன்பை பகிர்ந்த போதெல்லாம், என் சுற்றமும் நட்பும் அதையே எனக்குச் திரும்பச் செய்தது....
ஒரு சில கரடு முரடான கடும் பாறைகளிடமும் நான் மென்மையாகவே நடந்து கொண்டிருக்கிறேன். தப்பித்தும் இருக்கிறேன். ஆமாம் பாறைகளில் வேகமாக மோதினால்...வலி நமக்குத்தானே அதிகம்...
உலகம் எப்போதும் போற்றியும் தூற்றியும் நகர்ந்து கொண்டே இருக்கிறது. மனிதர்கள் வருகிறார்கள், செல்கிறார்கள்...வாழ்க்கையும் ஓடிக் கொண்டே இருக்கிறது. கருத்துக்களால் என்னை யாரும் நிரப்ப முயலாதீர்கள்....அதே நேரத்தில் என் கருத்துக்களை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டுமா என்றும் என்னிடம் கேட்காதீர்கள்....
என்னை ஒரு புத்தி சுவாதினமானவனாய் என்னைப் பாவித்துக் கடந்து சென்று விடுங்கள். எனக்கு பேச்சும் பிடிக்கவில்லை. பேசவும் பிடிக்கவில்லை. உலகப்பிரச்சினைகளை உரசிப்பார்த்து அதை உங்களின் பொழுது போக்காய் ஆக்கிக் கொள்ளுங்கள்....
நான் வழியில் கிடக்கும் முட்களையும், கற்களையும் பொறுக்கி எடுத்துக் கொண்டே நகர்ந்து கொண்டிருக்கிறேன். தலை சிறந்த மனிதராய், ஊர் போற்றும் வள்ளலாய், புகழ் பெற்ற தலைவராய், மக்கள் மண்டியிட்டு வணங்கும் மிகப்பெரிய ஆன்மீக தலைவராய்.....
நீங்கள் வாழ்ந்து விட்டு வாருங்கள்....
நான் நினைவுக்குப்பைகளை தூர எறிந்து கொண்டே ஏதோ ஒரு சங்கீதத்தைப் பாடிக்கொண்டு என் வழியில் நகர்கிறேன்...!
இப்படியாக......
நினைத்துக் கொண்டே இருந்த எனக்குள் எண்ணங்கள் எல்லாம் சட்டென்று ஒரு கணத்தில் நின்று போக.....சலனமில்லாத ஒரு பேரமைதி என்னை சூழ்ந்து கொண்டது. கண்கள் மேல் நோக்கி மிருதுவாய் சொருகிக் கொள்ள.....புறக்காட்சிகள் அறுபட....செவிவழிச் செய்திகளும் மூளைக்குள் சென்று பயனற்று மடங்கி மரித்து விழ...
சுவாசத்தின் சப்தம் மட்டுமே என்னைச் சுற்றி நிறைந்திருக்க.....அந்த விடுமுறை நாளின் மாலையை நான் இல்லாமல் நான் கடந்து கொண்டிருந்தேன்....பேச்சற்று...!
தேவா. சு
Comments
சாதாரண தவகல் தொடர்பை தவிர எல்லா மனிதனும் தனக்கு தானே தான் பேசி கொள்கின்றான் ......எல்லா மனிதனும் மற்றவர்களிடம் பேசுவது என்பது தனக்கு தானே பேசுவது போல தான்
//// எல்லோருக்கும் ஏதோ ஒரு கருத்து சொல்லவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அப்படியாய் சொல்லும் கருத்தில் பெரும்பாலும் மற்றவர்களைக் குறை சொல்லும் போக்கு மிகுந்திருக்கிறது. அப்படி குறை சொல்லும் போது மறைமுகமாய் தன்னை நல்லவன் என்று அறிவித்துக் கொள்ளும் ஒரு சுய தம்பட்டம் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது...////
தம்பி ,நீ இப்படி எல்லாம் பேசி என்னைவிட நீ நல்லவன்னு பேர் வாங்கிட்டு போலாமுன்னு பாக்குற :)
////ஒரு சில கரடு முரடான கடும் பாறைகளிடமும் நான் மென்மையாகவே நடந்து கொண்டிருக்கிறேன். தப்பித்தும் இருக்கிறேன். ஆமாம் பாறைகளில் வேகமாக மோதினால்...வலி நமக்குத்தானே அதிகம்.../////
டம்பி, அடி வாங்கிட்டு நீ அழுதினா நீ எனக்கு அடிமை.....இல்லைனா இன்னில் இருந்து நான் உனக்கு அடிமை...என்ன சொல்லுற :)
என்னை ரொம்ப திட்டுறீங்களே ...!
எவ்ளோ பெரிய விஷயம்..சாதாரணமா சொல்லிட்டீங்க......ரொம்ப அருமை.....எனக்கு பாராட்ட தெரில....