Skip to main content

நானுமில்லை....யாருமில்லை...!





நடப்பதற்காக கீழே இறங்கினேன். வார இறுதியில் என்னோடு நான் இருக்க எடுத்துக்கொள்ளுமொரு தந்திர உபாயம் இது. நடப்பது உடற்பயிற்சிக்காக அல்ல என்பது எனக்குத் தெரியும். வேக வேகமாய் காலையிலும் மாலையிலும் கையை வீசி வீசி வேகமாய் பூங்காக்களில் நடப்பவர்களைப் பார்த்திருக்கிறேன். ஒருவித பரபரப்பும் ஏதோ ஒரு தேவையும் இருப்பதை அவர்களின் முகம் காட்டிக் கொடுக்கும். பெரும்பாலும் நடப்பவர்களிலும் ஓடுபவர்களிலும் இரண்டு சாரார் மிகுந்து இருப்பதை நான் அடிக்கடி கவனித்திருக்கிறேன்.

திருமணம் ஆகப்போகும் பையன்களின் ஓட்ட சாட்டமும், நாற்பதைக் கடந்து சர்க்கரை, இரத்த அழுத்தம் இன்ன பிற வியாதிகளுக்குப் பயந்தும் அல்லது ஏற்கெனவே வந்து மருத்துவரின் அறிவுரைப்படி நடப்பவர்களின் கூட்டமும் எப்போதும் இருக்கும். வெகு சிலரே உடல் நலம், ஆரோக்கியம் இந்த உந்துதலின் பேரில் தொடர்ச்சியாய் நடப்பவர்களாகவோ ஓடுபவர்களாகவோ இருக்கிறார்கள்.

நானும் இப்படி ஓடி இருக்கிறேன்...மூச்சு இரைக்க இரைக்க...ஆனால் கல்யாணத்திற்கு பிறகு சக தர்மினியை விட்டு விட்டு துபாய் வந்தவுடன் அடர்த்தியான ஊர் நினைவுகளை மாற்றிக் கொள்ள ஓடி இருக்கிறேன். இரண்டு மூன்று கிலோ மீட்டர்கள் மூச்சிறைக்க இறைக்க ஓடி.... சட்டை எல்லாம் நனைந்து போக கடற்கரைக் காற்றில் வெகு நேரம் இரவில் அமர்ந்து விட்டு தளர்ந்து போய் அறைக்கு வந்து உணவுக்குப் பின் உறங்கும் உறக்கம் கிட்டதட்ட சொர்க்கத்தின் சாயல் என்றே சொல்லலாம். உடலின் கொழுப்புகள் குறைந்து உடம்பு தக்கை போல ஆகி உடல் மெலிய...மெலிய மெலிந்து இருப்பதின் சுகம் என்னவென்று பிடிபட...

பின்னாளில் உணவு கட்டுப்பாட்டின் மூலமே உடலின் எடையை தக்கவைத்துக் கொள்ளும் உபாயத்தைக் கண்டு பிடித்து விட்டேன். அவ்வப்போது யோகா செய்வதைத் தவிர உடலுக்காய் பெரிதாய் அலட்டிக் கொள்வது கிடையாது. உடலோடு இருப்பதை விட ஆழ் மனத்தோடு இருக்கும் நேரம் அதிகம். ஆழ்மனம் தன்னிச்சையாய் உடலை கவனித்துக் கொள்கிறது. 

இப்போது நடக்க ஆரம்பித்திருந்தேன். ஒவ்வொரு அடியாய் எடுத்து வைத்து முழு உணர்வு நிலையில் நகர்தல் எவ்வளவு சந்தோசமானது. எப்போதும் எதுக்கெடுத்தாலும் வாகனத்தில் சென்று விடும் ஒரு காலச் சூழலில் இருக்கும் போது நடப்பதற்கான வாய்ப்பு என்பது புதிதாய் ஒரு சந்தோசத்தைக் கொடுக்கிறது.வாகன நெருக்கமான சாலையைக் கடந்து யாருமற்ற சாலைக்குள் மெளனம் நிசப்தமாய் என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டு காற்றால் தலை கலைக்க... ஒரு குழந்தையாய் சிலாகித்து சிலாகித்து ஒவ்வொரு நொடியையும் அடிமேல் அடி வைத்து நடந்து கொண்டிருந்தேன். இப்போது சுவாசத்தை கவனிக்க ஆரம்பித்து விட்டென்.

ஆமாம்.. எப்போது எண்ணங்கள் மனதிலிருந்து அறுபட்டுப் போகிறதோ அப்போது மனம் உடனடியாய் ஓடிப்போய் நிற்கும் இடம் மூச்சு. என்னை பொறுத்த வரைக்கும் பழக்கப்பட்ட ஒரு நாயைப் போலத்தான் மனம். வாலாட்டிக் கொண்டு சொன்ன பேச்சை உடனடியாய் கேட்கும். அதை எப்போது குரைக்கச் சொல்ல வேண்டுமோ அப்போது குரைக்கவும் எப்போது கடிக்க வேண்டுமோ அப்போது கடிக்கவும், எப்போது வால் குழைத்து படுக்க வேண்டுமோ அப்போது படுக்கவும் பயிற்சி கொடுத்து இருக்கிறேன்.

மனதை புரிந்து கொள்ள அது நாம் எதைச் சொன்னாலும் செய்கிறது. புரிந்து கொள்ள முயலும் ஆரம்பத் தருணங்களில் நம்மை கடித்தும் விடுகிறது. நாளாக...நாளாக.. மனம் ஒரு வெற்று மாயை என்ற புரிதல் ஏற்பட....மாயையான மனதைப் பாரதியின் வரிகள் கொண்டு..

" எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்
மாயையே - நீ
சித்தத் தெளிவெனுந் தீயின்முன்
நிற்பாயோ ? - மாயையே!
                                          
என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய்
கெட்ட மாயையே ! - நான்
உன்னைக் கெடுப்ப துறுதியென்
 றேயுணர் - மாயையே ! "

என்று பழித்து விட மனம்... ஒடுங்கிக் கொள்கிறது. இப்போது சுவாசத்தை கவனித்துக் கொண்டிருந்தேன்...! ஆழமாய் மூச்சினை உள் இழுத்து வெளிவிடும் போது ஏற்படும் பரம சுகத்திற்கு பெயர் திருப்தி. பெரும்பாலும் எண்ணங்களுக்கு ஏற்றவாறு சுவாசத்தின் ஏற்ற இறக்கங்கள் மாறுகிறது. 

சரியாய் தூங்காத நாளொன்றின் விடியலில் உடலின் இரத்த அழுத்தம் மாறிப்போய் அது மூளைக்கு வேகமாய் பாய்ந்து ஒரு மாதிரி இயல்பற்ற தன்மையை உடலுக்கு பரவ விட எரிச்சல் ஏற்படுகிறது. எதைப்பார்த்தாலும் எரிச்சல் யாரைப்பார்த்தாலும் எரிச்சல். இந்த எரிச்சல் கோபமாய் அடுத்தவர் மீது பாய, அடுத்தவர் நம் மீது பாய சூழல் கெட்டுப் போகிறது. 

இதை சரியாய் கவனித்து சரி செய்ய மூச்சினை கவனித்தல் அவசியமாகிறது. உடலின் எரிச்சல் அடுத்தவரிடம் கோபமாய் பாயும் முன்னரே அதை தடுக்க முடியும். மூச்சினை கவனித்து அதை சாந்தப்படுத்தி ஆழமாய் பிராணனை சுவாசித்து வெளிவிட புத்தியின் சூடு தணிகிறது. புத்தி குளுமை அடைகிறது. புத்தி குளிர அங்கே பரவும் இரத்தத்தின் வேகம் மட்டுப்பட்டு பிறகு உடலின் மற்ற பாகங்களுக்கு கொடுக்கும் கட்டளையில் நிதானம் பரவ செயல்கள் அமைதியாகின்றன. அந்த அமைதியில் நாம் சாந்தமாகி விடுகிறோம்.

உறக்கம் என்பது... மூளை செலவு செய்த சக்தியை திரும்பப் பெறுதல். ஆக்ஸிஜனால் மூளையை நிரப்ப முழுமையான புத்துணர்ச்சியோடு மூளை விழிப்போடு வேலை செய்ய ஆயத்தமாகிறது. இப்படித்தான் உறக்கமே இல்லாவிட்டாலும் ஆக்ஸிஜனை சரியான அளவில் நிரப்பிக் கொள்வதன் மூலம் எப்போதும் புத்துணர்ச்சியோடு இருக்கலாம். இதை சித்தர்கள் எல்லாம் சரியாய் செய்து உறக்கத்தை வென்று விடுகிறார்கள்.

இப்போது என் சுவாசம் நிபந்தனைகள் இல்லாமலேயே ஆழமாய் நிறைந்து கொண்டிருந்து. பெரு விருப்பங்களோ, துயரங்களோ எல்லாமே கடந்து நின்று கொண்டிருந்தது மனம். வானத்தை பார்த்தேன்...மேகங்களை காற்று நகர்த்திக் கொண்டிருந்தது. அவ்வப்போது யாரேனும் என்னைக் கடந்தோ அல்லது எதிர்ப்பட்டோ போய்க் கொண்டிருந்தார்கள். காரணங்களின்றி வாழ்வதற்கான சூழல்களை எவனொருவன் பெற்றிருக்கிறானோ அவன் பாக்கியவான். இலக்குகள் அற்று பயணிக்கும் ஒரு வாய்ப்பு எல்லோருக்கும் வாய்ப்பது இல்லை.

நாளைக் காலை விடிகையில் இன்னதை செய்யப்போகிறோம் என்று திட்டமிட்டு வாழும் வாழ்க்கை மேலோட்டமாக பார்க்கும் போது பாராட்டத்தக்கதாய் இருந்தாலும் அது மிகவும் ஒரு துரதிருஷ்டமான நிலை என்றுதான் நான் சொல்வேன். நாளைய நகர்வு என்றில்லை அடுத்த நொடியின் நகர்வு கூட யாராலும் அனுமானிக்க முடியாது என்னும் போது திட்டமிட்டேன் என்று கூறுவது முழு அபத்தம். 

காலம் ஒரு கணக்கு வைத்திருக்கிறது........அதன் படி செயல்கள் புறச்சூழலுக்கு ஏற்ப நிகழ்கிறது, அப்படி நிகழும் செயல்களில் ஏதோ ஒன்று அவ்வப்போது நமது திட்டத்தோடு ஒத்துப் போகிறது. அடிக்கடி இப்படி ஒத்துப் போகும் போது நமது திட்டம் வென்று விட்டதாக நம்புகிறோம்.

சரி அதை விடுங்கள்..... எங்கோ ஆரம்பித்து எங்கோ சென்று விட்டேன். 

நான் இப்போது நடந்து கொண்டிருக்கிறேன்.....! அசுர கதியில் இயங்கும் வாழ்க்கையில் தனியாய் அமர்வதற்கும் தன்னை தானே உற்று நோக்குவதற்கும் நேரமில்லாதவர்கள் தனியே நடப்பதற்கு முயற்சி செய்யுங்கள். உடற்பயிற்சியாய் செல்வதை தனியே வைத்துக் கொள்ளுங்கள்.. ஆனால் தனிமையை அனுபவிக்க உங்களை உற்று நோக்க...தனியே நடந்து பாருங்கள்....

நான் நடந்து கொண்டிருந்தேன்....யாருமற்று ... நானுமற்று....!

தேவா. S



Comments

கோவி said…
//மனதை புரிந்து கொள்ள அது நாம் எதைச் சொன்னாலும் செய்கிறது. புரிந்து கொள்ள முயலும் ஆரம்பத் தருணங்களில் நம்மை கடித்தும் விடுகிறது//

சரியாகச் சொன்னீர்கள்..
//காரணங்களின்றி வாழ்வதற்கான சூழல்களை எவனொருவன் பெற்றிருக்கிறானோ அவன் பாக்கியவான்.///

அருமை நண்பரே... என்னைப் படித்ததைப் போல ஒரு உணர்வு.. நன்றி..
காரணங்களின்றி வாழ்வதற்கான சூழல்களை எவனொருவன் பெற்றிருக்கிறானோ அவன் பாக்கியவான். இலக்குகள் அற்று பயணிக்கும் ஒரு வாய்ப்பு எல்லோருக்கும் வாய்ப்பது இல்லை.// கவித்துவமான வரிகள் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டவும் செய்கின்றன .
\\ஆமாம்.. எப்போது எண்ணங்கள் மனதிலிருந்து அறுபட்டுப் போகிறதோ அப்போது மனம் உடனடியாய் ஓடிப்போய் நிற்கும் இடம் மூச்சு.\\

இது தானாக நடக்கிற அனுபவம். இதைத்தான் முயற்சி செய்து மூச்சை கவனித்து கவனித்து பழக்கப்படுத்திக் கொண்டு வந்தால் எண்ணங்கள் கட்டுப்படும். அறுபடும். இது தான் தியானத்தில் நடக்க வேண்டியது.

இப்படி ஒரு எளிமையான விசயத்தை அதே மனதிற்கு தீனி போடும் விதமா ஏகப்பட்ட விளக்கங்கள் கொடுத்து மனதை சமாதானப்படுத்திக்கொண்டு இருக்கின்ற்ன பல ஆன்மீக அமைப்புகளும்..

உங்கள் இந்த இடுகைக்கான எழுத்து நடை எளிமை, அருமை :)))
ஹேமா said…
தேவா...உங்களைச் சிலசமயம் ‘தேவா...நீங்கள் ஞானியா?’ என்று கேட்கத் தோன்றுகிறது.இல்லையென்றால் வாழ்வின் ஓவ்வொரு அசைவையும் அலசுபவன் பெயரைச்
சொல்லுங்களேன் !
Ungalranga said…
பாரதிக்கு நன்றி...!!

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...