
நான் பில்லா படம் 2 படம் பார்த்து விட்டேன். டான், தலை, கேங்கஸ்ட்டர், கடத்தல் மன்னன் என்பதற்கான அர்த்தங்களை எல்லாம் தெரிந்து கொண்டேன். நான் வாழ எத்தனை பேரை வேண்டுமானலும் நான் கொல்வேன் என்ற உயரிய தத்துவத்தைப் புரிந்து கொண்டேன். கடத்தலும் கொலையும், அதுவும் துப்பாக்கியால் டப்பு... டப்பு என்று சுட்டுக் கொண்டே பறக்கும் ஒரு ஆக்ரோச வீரமும் என் மனதை கவர்ந்திருந்தன.
படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் டேவிட் பில்லா ஆயுதங்கள் இருக்கும் ஒரு கன்சைன்மெண்ட்டை எடுக்க செல்கிறேன் என்று போகும் போது மெல்ல கண்ணயர்ந்து விட்டேன். அதுவரையில் என்னை விழுங்கி விடக் காத்திருந்த தூக்கம் முழுதாய் என்னை நித்திரைக்குள் கட்டி இழுத்துச் சென்று விட்டது.
ஆழ்ந்த உறக்கத்தில் எனக்கொரு கனவு வந்தது. கனவில் கடவுள் வந்தார். அவர் முகத்தைப் பார்க்க எனக்குப் பிடிக்கவில்லை. எனக்கு டேவிட் பில்லாவைப் பற்றியே நினைவு ஓடிக் கொண்டிருந்தது. எவ்வளவு பெரிய வீரன். பஞ்ச் டயலாக் என்று தமிழ் சினிமா கதாநாயகர்கள் எல்லாம் அவ்வப்போது ஏதாவது ஒரு வரியை அடித்து விடுவார்கள், ஆனால் டேவிட் பில்லா வாயைத் திறந்தாலே பஞ்ச் என்று அவரின் டயலாக் முழுவதையுமே பஞ்ச்சாய் மாற்றிய வசனகர்த்தா எவ்வளவு உயர்ந்தவர்.
ஈழத்திலிருந்து அகதியாய் வருவதைப் போல பில்லாவை காட்டியிருக்க வேண்டாமோ.. என்று எனக்குத் தோன்றியது. ஈழத்திற்காக பில்லா போராடியதைப் போல படம் எடுத்து இருக்கலாமோ என்று கரடு முரடாக யோசித்தேன்.
தன்மானமுள்ள தமிழர் கூட்டம் அதை பார்த்து ரசிக்காது என்பதோடு மட்டுமில்லாமல் இறையாண்மை கொண்ட ஒரு தேசம் காஷ்மீரில் கொத்துக்கொத்தாய் மனிதர்களைக் கொன்று அவர்களின் உரிமைப் போரட்டத்தை ஒடுக்கும். வேறு ஒரு தேசத்துக்குள் இராணுவத்தை அனுப்பி நாட்டை தனியாய் பிரித்துக் கொடுக்கும், ஆனால் பில்லா தமிழர் விடுதலைக்குப் போராடினான் என்று படம் எடுத்தாலே பாய்ந்து வந்த்து பிய்த்துப் போட்டு பெட்டிக்குள்ளேயே அதை முடக்கிப் போடும்.
அந்தப் படத்தின் தயாரிப்பாளர் பிழைப்புக்காய் படம் எடுத்திருக்கிறார். பிழைத்து விட்டுப் போகட்டும். அஜித் என்னும் மாஸ் உள்ள நடிப்பு அரக்கனை இன்னமும் நன்றாய் பயன்படுத்தி இருக்கலாம் என்று தோன்றியது. டேவிட் பில்லாவாய் அஜித்தை மாற்றி விட்டேன் பேர்வழி என்று படம் முழுதிலுமே அஜித்தையே உலாவ விட்டிருக்கிறார் திறமையுள்ள டைரக்டர்.
அழகான டேவிட் பில்லாவை நிறைய பெண்கள் ரசிக்கக் கூடும், திரையில் அவரின் சீற்றத்தை தலையின் ரசிகர்கள் ஆர்ப்பரித்து வரவேற்கக் கூடும், ஆனால் என்னைப் போல மொக்கைச் சாமிகள் என்ன செய்வது என்று தெரியாமல் எப்போது இண்டர்வெல் வரும் என்று காத்திருந்து ஒரு பெப்சியைக் குடித்த நிறைவும் சீக்கிரமாய் தீர்ந்து போக படம் பார்க்க எடுத்த டிக்கட் தீயாய் பாக்கெட்டைச் சுட எழுந்து செல்ல மனமில்லாமல் பாதி சீட்டில் அமர்ந்து கொண்டு அடுத்தடுத்தாவது ஏதாவது நன்றாய் நடந்து விடாதா என்று ஏக்கப் பெருமூச்சுதான் விட்டுக் கொண்டிருந்தோம்.
டேவிட் பில்லா என்னும் கருணை கொண்ட மனிதர் வாழ்வில் நேர்வழியில் போராடி மேலே ஏறிவர அவரின் ஒவ்வொரு நொடியையும் அவரே செதுக்கி செதுக்கி பிரயசைப்பட்டு இப்படி உயர்ந்திருப்பது எவ்வளவு பாரட்டுக்குரியது. நான் யோசித்துக் கொண்டிருந்தேன். டேவிட் பில்லாக்களின் உலகம் கன கம்பீரமானது அங்கே சட்டம் ஒழுங்கு சடு குடு ஆடிக் கொண்டிருக்கும் காவல்துறைகள் கடலை மிட்டாய் தின்று கொண்டிருக்கும்.
ஒரு டான் சகலவிதமான திறமைகளும் கொண்டவனாய் இருப்பதோடு பிகினிப் பெண்களோடு ஒரு நீச்சல் குளத்திலோ அல்லது கடற்கரையிலோ அலட்சியமாய் ஒரு கூலரோடு படுத்துக் கிடக்க வேண்டும், உடன் பத்து பாடிகார்டுகள் இருப்பதும் இங்கே அத்தியாவசியமாகிறது.
நான் பிரமிப்போடு யோசித்துக் கொண்டிருந்தேன்.....
கடவுள் என் தோள் தொட்டார். கடுப்பாய் திரும்பி பார்த்தேன். அவர் கையில் ஒரு துப்பாக்கி இருந்தது. இப்போது கடவுள் டேவிட் பில்லாவின் சாயலில் இருப்பதாக எனக்குத் தோன்றியது. மெலிதாய் கடவுளை பார்த்து சிரித்தேன். கடவுள் என்னைப் பார்த்து முறைத்தார். அவர் தான் மட்டும் வாழப் பிரியப்படுவதாக சொன்னார். எனக்கு முதலில் தூக்கி வாரிப்போட்டாலும் இப்போது டேவிட் பில்லாவின் முழுச்சாயலும் கடவுளுக்கு கிடைத்து விட்டதாக எனக்குத் தோன்றியது. நான் கடவுளின் முன்பு ச்சே...ச்சே...டேவிட் பில்லாவின் முன்பு மண்டியிட்டேன்.....
தலை...........வா என்று கத்தினேன். நீ கன்னெடுத்தாலே மாஸ் தல(லை)வா.....என்று நான் போட்ட சப்தத்தில் பிரபஞ்சத்தின் அமைதி கலைந்து விடக்கூடும் என பயந்து டேவிட் பில்லா தன் உதட்டின் மீது ஒற்றை விரல் பொருத்தி உஸ்ஸ்ஸ்ஸ் என்று சப்தம் என்று சைகைகாட்டி என்னை சப்தம் போடாமலிருக்கச் சொன்னார்.
எனது நிம்மதி எனக்கு முக்கியம். இந்த பிரபஞ்சமே எனது நிம்மதி. இதன் அமைதியை நீ கெடுத்தால் என்று கோபமாய் கத்தி கொண்டே எனது தலையில் தனது கன்னை (கண்ணை இல்லங்க.. கன்னை...) வைத்தார். எனக்கு எனக்கு தலை சுற்றியது. கடவுள் டேவிட் பில்லாவாய் மாறிவிட்டார் என்று என்னால் சந்தோசப்பட முடியவில்லை....
என்னோடா வாழ்க்கையில ஒவ்வொரு நிமிசமும் நான் செதுக்கினதுடா....உன்னையும் நீ வாழ்ற பூமியையும் சேத்து நான் தான்டா படைச்சது........என் நிம்மதிக்கே நீங்க எல்லாம் சவால் விட்டா... உங்கள அழிக்கிறதுதாண்டா எனக்கு மொதோ வேலை....என்று தனக்கு கிடைக்க வேண்டிய பாலாபிஷேகம் யாரோ ஒரு நடிகனுக்கு கிடைத்த கடுப்பை கோபமாய் வெளிப்படுத்தினார்.
கடவுள் முதலில் பூமியை நோக்கி தன் துப்பாக்கியை நீட்டினார்....அது ஏதோ ஒரு தியேட்டரில் ஓடிக் கொண்டிருந்த சினிமாவை திரையில் குறிவைத்தது. திரையில் டேவிட் பில்லா துப்பாக்கியோடு கடவுளுக்கு குறி வைத்துக் கொண்டிருந்தார். ட்ரிக்கரை மெல்ல இழுத்த மூன்றாவது நொடியில் தியேட்டரோடு சேர்ந்து பூமி பஸ்பமாகிப் போனது கண்டு நான் பயந்தே போனாலும் நான் இறக்கவில்லையே என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.
முழுதாய் பெருமூச்சினை இழுத்து வெளியிடாத நிலையிலேயே எனது தலைக்கு கடவுள் ஒரு புல்லட்டை பரிசளித்தார். தலைக்குள் மூளை சுக்கு நூறாய் உடைந்து சிதற நான் கதறியபடியே...
படக்கென்று கண் விழித்த போது திரையில் நிஜ(!!!????) பில்லா சண்டை போட்டுக் கொண்டிருந்தார். கோடாணு கோடி தலை ரசிகர்கள் விசிலடித்தும் கைதட்டியும், ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தனர். அடுத்த ஷோவுக்கு வெளியே இன்னமும் ரசிகர்கள் வெளியே காத்திருப்பதாகவும் அவர்கள் பாலாபிஷேகம் செய்து கொண்டிருப்பதாகவும் பக்கத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள்...., எனக்கு கனவில் வந்த கடவுள் நினைவுக்கு வந்தார்.
திரையிலோ தலையை டானாக சித்தரித்துக் காட்ட படத்தின் டைரக்டர் அவரைப் பல கொலைகள் செய்ய வைத்துக் கொண்டிருந்தார். ஹெலிகாப்டர் பறந்தது, அரசியல்வாதிகளையும் போட்டி துரோக(!!!!???) டான்களையும் டேவிட் பில்லா போட்டுத் தள்ளிக் கொண்டிருந்தார். இடையில் தூங்கி விட்டதால் கதையைப் பிக் அப் பண்ண முடியாதோ என்று பயந்து கொண்டிருந்தேன் ஆனால் அப்படி ஒன்றும் நடந்து விட வில்லை. இல்லாத ஒன்று எப்படி நடக்கும் என்று எனக்குள் நானே ஆறுதல் சொல்லிக் கொண்டேன்.
பெரிய விமானத்தில் டேவிட் பில்லா ஏறி அமர்ந்து விட்டு இது ஆரம்பம் என்று சொல்லிக் கொண்டிருக்கையில் படம் முடியும் தருவாயை எட்டி விட்டது. நான் எழுந்திருக்க முயன்றேன்....
ஆனால்...
விமானம் பறந்து கொண்டிருக்கையில் டான், தலை, கேங்க்ஸ்ட்டர் பில்லா ஹாயாக சீட்டில் ரத்தக்காயத்தோடு சாய்ந்து கிடந்தார்....
மிச்சம் சொச்சம் படத்தில் நடித்தவர்களை எல்லாம் பில்லாவின் ஆட்கள் பட்...பட்...என்று போட்டுத் தள்ளிக் கொண்டிருந்தார்கள்...
படம் முடிந்து விட்டது. என்னோட வாழ்க்கை கூட நானா பாத்து பாத்து செதுக்குனதுதான்டா...........ஆனா அதுக்கு நிறைய பேரோட உதவி தேவைப்பட்டுச்சுடான்னு கத்தலாம் என்று யோசிதேன்.....ஆனால் அது அடுத்த தலைமுறையினருக்கு தவறமான செய்தியைக் கொண்டு சேர்த்து விடும் என்று தொண்டைக்குள்ளேயே சப்தத்துக்கு சமாதி வைத்தேன்.
ஆனா படத்துக்கு நடுவில் நான் கண்ட கனவில் என் தலையில டேவிட் பில்லா சுட்டது...ச்ச்ச்சே...ச்ச்ச்ச்சே.....கடவுள் சுட்டதால் தலை வலி விண் விண் என்று வலிக்க ஆரம்பித்தது....' நல்ல வேளை ' தலை ' க்கு வந்தது தலைப்பாகையோட போச்சே...' என்று எண்ணிக் கொண்டு
வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரத்தில் நண்பனிடம் இருந்து போன்...........' டே.....மச்சான் வர்றியா பில்லா 2 போகலாம்? என்கிட்ட டிக்கட் இருக்கு என்று என்று.............
நான் போனைத் தூக்கி தரையில் ஓங்கி அடித்து......மெல்ல மெல்ல...டேவிட் பில்லாவாய் மாறத்தொடங்கியிருந்தேன்....!
தேவா. S
Comments
raaga
பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...
அடுத்த மாதம் இந்தியத் தொலைக்காட்சியில் முதல்முறையாக... BILLA II ....
கதை, முதுகெழும்பு, லாஜிக் இல்லாத, 'தல'வழி இல்லாமல் வலியான (பாதி நேரம் தூங்கியும்)
விமர்சிக்காமல் அர்ச்சித்து விட்டீர்கள். சிம்பிளி சூப்பர். விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். போங்க, போயி 'துப்பாக்கி'யை தூக்குங்க மக்கா. நாடு விளங்கட்டும்.
ஜோக்ஸ் அபார்ட், நல்ல பதிவு :)