
படம் ஆரம்பித்து மூணாவது சீன்லயே விளங்கிடுச்சு. இந்தப் படம் நமக்கு ரொம்ப பிடிக்கும்னு.....சப்தங்கள் அதிகமில்லாத பில்டப் சுத்தமாவே இல்லாத இந்த மாதிரி படங்கள் எனக்கு ஏன் பிடிக்குதுன்னு யோசிச்சு யோசிச்சு படத்த நான் மிஸ் பண்ண விரும்பாம ஒரு ஜம்ப் பண்ணி ஸ்கிரீன் ஓரமா ஒரு ஸ்டூல் போட்டு நான் வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சுட்டேன்...
எதார்த்தத்தை எடுத்துக் காட்ற எந்தப்படமும் ஒரு சாமானியனோட வாழ்க்கையோட ஒத்துப் போகத்தான் செய்யும். லீலை படத்தோட ஹீரோவா நல்லவேளையா ஏற்கெனவே திரையில அராத்துப் படிக்கிற எந்த ஒரு ஜிப்பா ஜிம்ப்ளாகோவையும் போடாமல் கார்த்திக்கை ச்ச்சூஸ் பண்ணி இருப்பதுதான் படத்தோட ஸ்பெசாலிட்டி. அட நீங்க வேற எனக்கு அந்தப் படத்துல நடிச்ச யாரோட பேரும் தெரியாது. அதானால் ஓடிப்போய் ஏற்கனவே விமர்சனம் எழுதினவங்க பக்கத்தை ஒரு தபா கட கடன்னு படிச்சுட்டு வந்து அவுங்க பேரையெல்லாம் மனப்பாடமா அடிக்கணும்ன்ற தேவையுமே இல்லை... அவுங்க கேரக்டர் பேரையே யூஸ் பண்ணிக்கிறேன்....ப்ளீஸ்....
படம் ஆரம்பிச்சு கருணை மலர்ன்ற கேரக்டர் கார்த்திக்க லெப்ட் ரைட் வாங்கும் போதும், கார்த்திக் கருணை மலரோட தோழிகள காதலிக்கிறேன்னு சொல்லிட்டு ஏதேதோ காரணத்துக்காக கழட்டி விடும் போது, அந்த கருணை மலர் கோபப்பட்டு எரிச்சல் அடைஞ்சு கார்த்திக் மீது கர்ண கொடூரமாய் கோபப்படுறதையும் பார்த்த உடனேயே தெரிஞ்சு போச்சு ....
ரெண்டு பேரும் ரொம்ப ஸ்ட்ராங்கா லவ் பண்ணப் போறாங்கன்னு. வாழ்க்கையில எல்லாமே எல்லோருக்கும் ஒரே மாதிரியாதான் நடக்கும் ஆனா அதை எப்டி நாம பாக்குறோம்ன்ற இடத்துலதான் வாழ்க்கையோட சுவாரஸ்யம் இருக்கு...
வைரமுத்து கவிதையில சொல்ற மாதிரி...மழையை யாரிங்கு மழையாய்ப் பார்த்தது....வியாபாரிக்கு அது ஒரு சனியன், பள்ளிப் பிள்ளைகளுக்கு அது அன்றைய விடுமுறை...இப்டி அப்டி ஒவ்வொருத்தருக்கும் அது ஒரு மாதிரியான உணர்வினை அவுங்க, அவுங்க தேவைக்கு ஏத்த மாதிரி கொடுக்குது. ஆனா மழையை யாரிங்கு மழையாய்ப் பார்த்ததுன்ற கேள்விக்குப் பின்னாடி ஆழமான வாழ்க்கை இருக்குறதா நான் நினைக்கிறேன்.
மழையை ரசிக்கலாம், வாசலிலோ அல்லது ஜன்னலின் ஓரத்திலோ அமர்ந்து கொண்டு அடித்துக் கொண்டு தெருவில் ஓடும் மழை நீரோடு சேர்ந்தே நாமும் நகரலாம். வயதானாலும் கூட ஒரு சிறு கப்பல் செய்து விட்டுப்பார்க்கலாம், மழையை செல்லமாய் தடவிக் கொண்டே சாரலை முகத்தில் சிலீரென்று வாங்கிக் கொள்ளலாம், தாழ்வாரத்து நீரை கையேந்தி உள்ளங்கைக்குள் வாங்கி மகிழலாம், மழையோடு தொடர்பற்று ஒரு சிறு கம்பளிக்குள் கதகதப்பாய் நுழைந்து கொண்டு மழையோடு அன்னியப்பட்டு மழையை சுற்றி வளைத்து அனுபவிக்கலாம்....
சுற்றி இருக்கும் யாரைப்பற்றியும் கவலை இல்லாமல் கை விரித்து ஒரு காதலியாய் மழையைக் கட்டியணைத்து வரை முறை இல்லாமல் சில்மிஷங்கள் செய்யலாம்....என்ன ஒன்று இதை எல்லாம் செய்ய நாம் மழையை மழையாய்ப் பார்க்கவேண்டும்.
காதலைக் கூட இயந்திரத்தனமாய் செய்யும் ஒரு சமூக வாழ்க்கை இங்கே புகுத்தபட்டு விட்டதுதான் சமகாலத்தின் பெருந்துயரம். ஐ லவ் யூ என்ற வார்த்தையை அவசரமாய் பரிமாறி விட்டு அடுத்த கட்டத்திற்கு நகரும் அவசியத்தை அவசரமாய் மூளை செய்து விடுவதால் இன்னமும் நிறைய பேர் காதலிக்கிறோமென்றும் காதலிக்கப்படுகிறோம் என்றும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
நான் சொல்வதில் உடன்பாடு இல்லை என்று கூறுபவர்களில் எத்தனை பேர் காதலியின் கையை குறைந்த பட்சம் ஆதரவாய் உங்கள் கையோடு பிடித்துக் கொண்டு உள்ளங்கையில் உங்கள் அன்பை மிருதுவாய் அவளுக்குச் சொல்லி இருக்கிறீர்கள்....
கவிதை எழுதத் தெரிந்த கவிஞர்களில் யார் யார் உங்கள் காதலியின் உள்ளங்கையில் ஏதேதோ கவிதையாய் கிறுக்கி ரசித்திருக்கிறீர்கள்..? காதல் என்றாலே நிதானமானது. இந்தப் படம் கூட அதைத்தான் மெளனமாக சொல்ல முயன்றிருப்பதாக எனக்குப்படுகிறது.
கல்லூரிக் காலங்களில் கார்த்திக்னா சுத்தமா பிடிக்காத கருணை மலர், வேலை பார்க்கும் இடத்தில் மீண்டும் தொலை பேசி மூலமா பேசுற வாய்ப்பு வர்ற போதும் அதே கோபத்தோட கருணை மலர் எதிர்கொள்றதும், மறுபடி நம்ம ஹீரோ சண்டை போட்டுட்டு போனை வைக்கிறதும் அப்புறம் கருணை மலரை அவளுக்குத் தெரியாம பார்த்துட்டு புடிச்சுப் போய் காதல் வர்றதும், கார்த்திக்னு தெரிஞ்சா காதலிக்க மட்டான்னு சொல்லிட்டு சுந்தர்னு பேர வச்சிகிட்டு மலரை லவ் பண்றதும்னு சொல்லிட்டு எல்லாத்துக்குமே கார்த்திக்க நேரா மலர் பார்க்கலை அப்டீன்ற ஒரு விசயம் செமையா ஹெல்ப் பண்ணுது.
கார்த்திக்னு சொன்னா நிரகரிச்சுடுவாளோன்னு சொல்லிட்டு, சுந்தரா மலரை விட்டு பிரிஞ்சு போக நினைக்கிற கார்த்திக், கார்த்திக்கா சுந்தருக்கு சப்போர்ட் பண்ணி பேசி நானே சுந்தர் கிட்ட உன்னை கூட்டிட்டு போறேன் மலர்னு சொல்லிட்டு கார்த்திக்கா தன்னை அறிமுகப்படுத்திகிற இடத்துல பேரை மாத்தி லவ் பண்ணினதுதான் தான் மறைச்ச விசயம்னு சொல்லாம சொல்லி....மலரும் கார்த்திக்கும் ஒண்ணா சேர்ற இடம்....சினிமா.
நான் இதை பத்தி இங்க பேச வரல.
காதல் வாழ்க்கையை மென்மையாக்குகிறது. பார்க்கும் சராசரி விசயங்களையும் ஆச்சர்யமாய் விழிகள் விரித்து உள்வாங்கிக் கொள்கிறது. ஒரு பட்டாம் பூச்சியாய் சிறகடித்துக் கொண்டே இருக்கிறது. ஒரு முத்தத்தை கூட பகிராமல் எப்போதும் ஒரு தூரத்திலேயே தொடர்ந்து பயணிக்கும் காதல் வெகு சுவாரஸ்யமானது. பார்வைகளால் தீண்டித் தீண்டி காதல் என்ற விசயம் உடலுக்குள் தீயாய்ப் பரவ அந்த லயிப்பில் மனம் ஒருமித்துக் கிடப்பது அலாதியானது. மன்னிப்பு கேட்பதையும் மன்னிப்பதையும் காதலே கற்றுக் கொடுக்கிறது. மனித நேயம் என்னும் விதையை பரப்பிப் போட்டிருக்கும் மிகப்பெரிய விருட்சம் காதல்.
காதலில் கேட்கவும் கொடுக்கவும் ஒன்றுமே இல்லாமல் காதல் மட்டுமே எஞ்சி நிற்கிறது.
என்னதான் காதலுக்கு ஓராயிரம் விளக்கங்கள் கொடுத்தாலும்...அது எப்போதும் ஆதரவுக்காய் சாயும் ஒரு தோளாய் பெரும்பாலும் இருப்பதோடு சந்தோசங்களை அது எப்போதும் ஆரவாரமாய் எதிர்கொள்வது இல்லை மாறாக மெளனமாய் மனதுக்குள் அசை போட்டு ஆழமாய் அனுபவிக்கிறது.....இந்த லீலை படத்தை நான் பார்த்து ரசித்தது போல....
முடிஞ்சா நீங்களும் பாருங்க......
தேவா. S
பின் குறிப்பு: படத்தை பார்க்க சொன்ன மாப்ஸ் டெரர் பாண்டியனுக்கு ஒரு நன்றி கார்ட் போடலேன்னா அப்புறம் என்ன மரியாதை...!
Comments
இங்கே கூறியிருக்கும் பெரும்பாலான வரிகள் அல்லது அத்தனை வரிகளுடனும் ஒத்துப்போகிறேன்.
//அது எப்போதும் ஆதரவுக்காய் சாயும் ஒரு தோளாய் பெரும்பாலும் இருப்பதோடு//
எப்போதும் காதலை சிறப்பாக்க காட்டும் உங்களின் எழுத்துகள் இதிலும் அப்படியே செய்திருகின்றன...
காதலை பற்றிய வரிகளை மௌனமாய் அசை போட்டு ஆழமாய் அனுபவித்தேன் !! :)
மிக ரசித்தேன் படத்தையும் உங்களின் படைப்பையும் !!!