ஆடிய காலும், பாடிய வாயும் எப்போதும் ஓய்ந்திருக்காது, ஏனென்றால் அது ஒரு வேட்கை. எழுதுவதும் அப்படித்தான் நிகழ்வுகளை உள்வாங்கிச் செரித்து அதை அனுபவமாக்கிப் பார்க்கும் ஒரு வித்தை. ஒவ்வொரு வரிகளையும் நகர்த்தும் போது உள்ளுக்குள் நடக்கும் மாற்றங்களை நாம் உற்று நோக்கி அனுபவமும் புரிதலும் வார்த்தையாய் வந்து காகிதத்தின் வெள்ளைப் பக்கங்களில் எழுத்துக்களாய் மோதும் தருணம் சுகமானது. இறை தேடல் என்பதை இரை தேடல் என்று விளங்கிக் கொண்டிருப்பேனோ என்னவோ பசித்து உண்டு, பின் உண்ட சுகத்தில் லயித்துக் கிடந்து பின் மீண்டும் பசிக்க, மீண்டும் புசித்து.....
இப்படியான தொடர் நிகழ்வான பெரும் பயணத்தில் கண்டடையப்போவது எதுவுமில்லை என்ற ஒரு நிதர்சனம் அழுத்தமான கீறலாய் உள்ளுக்குள் பதிந்து போய்க் கிடக்கிறது. வலி என்பது எப்படி ஒரு உணர்வோ அதே போல விளக்க முடியாததாய் இது போன்ற அனுமானங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் பார்வையை தெளிவாக்கிக் கொண்டிருக்கிறன. கடவுளென்ற பெருஞ்சக்தி எப்போதும் தனித்து வந்து பக்தா தந்தேன் அபயம் என்று சொல்லி வரங்கள் கொடுத்ததாய் புராணங்களில் இருக்கிறது. கண்டேன் என்றவரால் எல்லாம் ஊருக்கும் உலகத்துக்கும் நான் காட்டினேன் என்று சொல்ல முடியவில்லை.
நம்மை சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையை புரிந்து கொள்ள எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல் அதை கவனித்துக் கொண்டிருக்கையில் ஒரு விதமான தாளகதியில் நமக்குள் ஒரு நாட்டியம் தொடங்கி விடுகிறது. பலவிதமான உணர்வுகளை பாவங்களாக வெளிப்படுத்தும் ஒரு கலையே பரதம் என்னும் நாட்டியம். பரதமுனி படைத்த ஒரு ஒப்பற்ற கலை. மனித உணர்வுகளை நுணுக்கமாக உடனுக்குடன் முகத்தில் கொண்டு வந்து அபிநயம் பிடித்து தாளகதிக்கு ஏற்றவாறு....
தகதிமி..தகதோம்.. தகதிமி தகதோம்...தகிட..தகிட தகிட... என்று கை வீசி கால் தூக்கி ஆடும் சுகம் என்னவென்று பரதம் ஆடுபவர்களைக் கேட்டுப்பாருங்கள். பரதம் என்று மட்டுமில்லை.. நடனங்கள் எல்லாமே அப்படித்தான். ஆடி ஆடி கூச்சலிட்டு அதிர்ந்து அடங்கும் தருணத்திற்காகத்தான் ஆட்டமே என்று உணரும் போது ஆடுதல் என்பது தேடலாயும் அதன் பின்னான நிறைவு அந்த தேடலை நிறைவு செய்யும் மன உணர்வாயும் அமைந்து போய்விடுகிறது.
நாமும் ஆடிக் கொண்டு சுற்றி நடக்கும் ஆட்டத்தை வாழ்க்கையிலும் ரசிக்க முடியும். சமூக முரண்கள், சிறப்புகள், பிரபலங்களின் தலைக்கனங்கள், தலைக்கனம் இல்லா பணிவுகள், தொடை தட்டி கொக்கரித்து வீரவசனம் பேசும் நிலையில்லாத உடல் வலிவுகள், குறுக்குப் புத்திகள், காதல்கள், காமங்கள், கவிதைகள், கட்டுரைகள், கதைகள், ஓவியங்கள், கடவுள் மறுப்பு, முரட்டுத்தனமான கடவுள் பக்தி, விஞ்ஞானம், அஞ்ஞானம், ஆன்மீகம், பிறப்பு, இறப்பு, சிரிப்பு, சோகம் என்றெல்லாம் ஒவ்வொரு பாவம் காட்டும் வாழ்க்கையின் ஆட்டமே நடராஜரின் தத்துவமாகிறது.
ஒற்றைக்கால் தூக்கி கை ஆட்டி.... ஏதேதோ மாயைகளை காலுக்கடியில் போட்டு மிதித்து, ஆடுவதும் அஞ்ஞானமே என்று சொல்லும் ஒரு தத்துவ வடிவம் அது. சனாதான தருமத்தின் வேர்கள் எங்கிருந்து புறப்பட்டன என்று யாருக்கும் தெரியாது. அவை சூட்சுமமானவை. யாராலும் ஆக்கப்படாமலும், அழிக்கப்படாலும் அது ஒரு தத்துவமாய் காலங்கள் தாண்டி நின்று கொண்டு மனித குலத்தின் ஆன்ம வளர்ச்சிக்கு பல வழிகளில் உதவிக் கொண்டுதானிருக்கும்.
காலத்தின் போக்கில் மதமென்ற பெயரில் ஆதிக்க சக்திகள் நடத்திக் காட்டிய வேடிக்கை கூத்துக்களை எதிர்க்கவும் சனாதான தர்மமே உதவியிருக்கிறது. ஆமாம்...தற்போதுள்ள எந்த ஒரு சமகாலத்து நவீன மதங்களும் கடவுள் மறுப்பை தனது அங்கமாக்கிக் கொள்ளும் துணிச்சல்கள் இல்லாதவை. நாத்திகம் எனும் கடவுள் மறுப்பும் சனாதான தருமம் எனப்படும் தத்துவத்தின் பகுதியே என்பதை உணரும் இடத்தில் இது எவ்வளவு ஒரு சுதந்திரமான தருமம் என்பதை தெளிவாய் உணரமுடியும்.
உலகமெங்கும் விரவிக் கிடக்கும் வாழ்வியல் நெறிமுறைகளை வகுத்தவர்களுக்கு வழிகாட்டியாய் கீழை நாட்டு தத்துவங்கள் எப்போதும் உதவி இருக்கின்றன. பூகோள ரீதியாய் மனிதர்கள் தத்தமது தட்ப வெட்பத்துக்கும் சூழலுக்கும் ஏற்ப பிரிந்து உணவு உடை இன்னபிற பழக்கவழக்கங்களையும், சகமனிதரை தொடர்பு கொள்ளும் சப்த முறைகளையும் தத்தமது சூழலுக்கு ஏற்ப உருவாக்கிக் கொண்டனர்.
மரங்களில்லா பாலை நிலங்களில் சூட்டில் வாழும் மனிதர்கள் சக மனிதரை அழைத்துப் பேசவும், தூரத்தில் நிற்பவரை அழைக்கவும் மென்மையான சப்தங்கள் உதவாது. மென்மையாய் வெளிப்படும் அவர்களின் சப்தங்களை காற்று களவாடிச் சென்று விடுமாதலால்..... அவர்கள் அடித் தொண்டையிலிருந்து சப்தம் செய்ய வேண்டியதாயிற்று, கண்ணிலும், உடலிலும் முகத்திலும் மணல் காற்று எப்போதும் மணலை அள்ளி வீசிக் கொண்டே இருக்குமாதலால் இயற்கையிலேயே உடல் முழுதும் மறைத்து காது மறைத்து உடையணியும் பழக்கமுறைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள்.....
மரங்களில்லா பாலை நிலங்களில் சூட்டில் வாழும் மனிதர்கள் சக மனிதரை அழைத்துப் பேசவும், தூரத்தில் நிற்பவரை அழைக்கவும் மென்மையான சப்தங்கள் உதவாது. மென்மையாய் வெளிப்படும் அவர்களின் சப்தங்களை காற்று களவாடிச் சென்று விடுமாதலால்..... அவர்கள் அடித் தொண்டையிலிருந்து சப்தம் செய்ய வேண்டியதாயிற்று, கண்ணிலும், உடலிலும் முகத்திலும் மணல் காற்று எப்போதும் மணலை அள்ளி வீசிக் கொண்டே இருக்குமாதலால் இயற்கையிலேயே உடல் முழுதும் மறைத்து காது மறைத்து உடையணியும் பழக்கமுறைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள்.....
குளிரான பூமியில் ஜனித்த மனிதன், குளிரைத்தாங்கவே கழுத்து இறுக்கி உடையணிந்து, தலையை மறைத்து கையுறை அணிந்து, காலுறை அணிந்து வாழவேண்டிய அவசியம் ஏற்பட்டுப் போனது. அவன் செய்யும் சப்தங்களால் உடலுக்கு வெப்பத்தை பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியமும் அவனுக்கு இருந்தது. அதனாலேயே அதிக அழுத்தம் கொடுக்காத ஸ்ஸ்ஸ்ஸென்று அடிக்கடி சப்தம் செய்யும்படியான ஒரு வித சப்தமுறையை தனது தொடர்புக்கு வைத்துக் கொண்டான்.
தொடர்ச்சியான அவனது பழக்க வழக்க முறைகள் பூகோள அமைப்பினால் இயல்பிலேயே அவனுக்குள் தோன்றி பின்பற்றப்பட்டு தொடர்ச்சியான அவனது அடையாளமாக கொள்ளப்பட்டது. இதைத்தான் நாம் கலாச்சாரம் என்று கூறுகிறோம். உணவு மனித உடல் கூறையும், புத்தி கூர்மையையும் தீர்மானிக்கும் ஒரு மிகப்பெரிய காரணி. புத்தியை சூடுபடுத்தாத, தானியங்களையும், இன்ன பிற உணவுகளையும் உண்ட மனிதர்கள் அதிகமாய் சிந்தித்தார்கள். இயல்பிலேயே அடுத்த, அடுத்த கட்டத்திற்கு பயணிக்கும் மனித மனதின் உதவியோடு அவர்கள் தங்கள் உள்ளமையின் தேடலை அவர்கள் சென்றடைந்தார்கள்.
எனது மொழி, எனது நாடு, நான் சிறப்பானவன் என்று கூறி கொடி பிடிக்கும் போக்குகள் எல்லாம் ஏதோ நமது மிகப்பெரிய சிறப்பாய் பார்க்கும் ஒரு தன்மை ஒடுங்கி மொழியும், கலாச்சாரமும், இன்ன பிற விசயங்களும் இயற்கை நமக்குப் போட்ட பிச்சை என்று எண்ண வேண்டும். இப்படி எண்ணும் போது மொழிக்காகவும், மதத்திற்காகவும், இனத்திற்காகவும் நாம் பெருமைப் பட்டுக் கொள்வதும், சக மனிதரை அதை வைத்து சிறுமைப்படுத்துவதும் எவ்வளவு பெரிய புரிதலற்ற விசயங்கள் என்பது புலப்படும்.
வாழ்க்கையின் இயங்குதன்மையோடு சேர்ந்து சனாதான தர்மம் மனிதன் சுமூகமாய் வாழ பல வழிகளைச் சொன்னது. இயற்கையோடு சேர்ந்த ஒரு வாழ்வு. இருப்பதை ஏற்றுக் கொள்ளும் தெளிவினைச் சொல்லும் ஒரு தத்துவமுறை. சிவம் என்னும் பேருண்மை சக்தியாய் எங்கும் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று கூறி....வாழ்க்கையை விட்டு விலகி வாழ ஒரு சூத்திரமும் வாழ்க்கையோடு சேர்ந்து வாழ ஒரு சூத்திரமும் சொல்லிக் கொடுத்திருக்கும் ஒரு ஒப்பற்ற தந்திரம். மனத்தால் வாழ்பவர்களை நெறிப்படுத்த ஓராயிரம் வழிமுறைகள். கட்டுக்கள் உடைத்தவர்களை கை கொடுத்து அரவணைத்துக் கொள்ளும் ஒரு சுதந்திரம்...... என்று சுதந்திரத்தின் சுகத்தை போதித்ததோடு.. உலகில் பல நாடுகளில் பலவேடமிட்டு, பல பெயர்களோடு தனது தத்துவத்தின் பகுதிகளை அந்தந்த மனிதர்களுக்கு போதித்துக் கொண்டும் இருக்கிறது.....
இருப்பது ஒன்றுதான்.... அதுவே உலக இயக்கமாகிறது.... அதுவே பிரபஞ்சத்தின் மூலமாகிறது. நானாகிறது, நீங்களாகிறது, இந்த கணத்தைக் கடந்து அடுத்த கணத்திற்குள் நுழைகிறது, இந்தக்கட்டுரையை வாசித்து சரி என்கிறது, தவறென்கிறது.....
நீ யாரென்று அதனிடம் நாம் கேள்வி எழுப்பினால்
திறந்த வெளியில் மிதந்து
போகும் இறகு நான்...
கனத்த இரவில் ஒளிந்து கிடக்கும்
நிசப்தம் நான்...
பெரு மழையில் ஓரத்தில்
சிலிர்த்து இரையும் சாரல் நான்...
நான் யாரென்று கேட்டால்
வார்த்தைகளுக்குள் ஊடுருவி
அர்த்தங்களில் விளங்கிக் கொள்ளும்
உணர்வுகளையும் கடந்த
அரூபமானவன் நான்...!
என்று கூறிவிட்டு இந்தக் கட்டுரயை இத்தோடு முடித்துக் கொள்ளவும் கூடும்...!
தேவா. S
Comments
போனவாரம் நடந்த நிகழ்வொன்று.இங்கு இந்தவாரம் நல்ல வெக்கை.ஒரு பார்ட்டிக்குப் போக என் தோழி சொன்னார் ’நல்ல வெக்கை.இந்த வெயிலில் சேலை கட்டிப்போக முடியுமோ’ என்று.நான் சிரித்துவிட்டேன்.எங்கள் நாட்டுக் காலநிலை வெக்கைக்கேற்ற உடைதானே சேலையென்று....!
கொடுத்தா நல்லா இருக்கும் - sasi