Skip to main content

நானும் ஓர் கனவோ....?!
















பேனாவைத் திறந்து காகிதத்தை நெருங்கும் வரையில் எந்த தளத்திற்குள் எண்ணங்கள் சீறிப்பாயும் என்ற ஒரு  உறுதியில்லை. எப்படிப் பார்த்தாலும் எழுத்துக்கள் எல்லாம் ஏதோ ஒரு அவஸ்தையின் வெளிப்பாடுகள்தான். அவஸ்தைகளை வலிகளுக்கும், சோகத்துக்கும் கொடுத்துப்பார்க்கும் பொது புத்திகள் சந்தோசமும் ஒரு அவஸ்தைதான் என்பதை நம்ப மறுக்கும். எழுதுவதற்கு எப்போதும் கட்டுப்பாடுகளை நான் வைத்துக் கொள்வது இல்லை.

வெறுமையான வானத்தின் கட்டற்ற சுதந்திரத்தை திட உடம்பிற்குள் நின்று பொறாமையாய் எதிர்கொள்கையில் புத்திக்குள் குறுக்கும் நெடுக்குமாய் ஓராயிரம் இனிய பொன் நிலாக்கள் உதயமாகவும் செய்யும். ஒரு கடற்கரை ஓரத்து மாலை வேளையை உடை கலைத்து, உடல் தழுவி, உள்ளம் நிறைத்துவிளையாடும் காற்றாகவும், கால்கள் பதிய நடந்து பார்க்கும் விரிந்து பரந்த மணலாயும், கடலென்னும் கவிதை மேலெழும்பி பின் கீழ் சென்று கரை மோதி மோதி விளையாடும் காம விளையாட்டை கண்களால் பருகியும்தான் அனுபவிக்க வேண்டும்.

கட்டுப்பாடுகள் கவலையுற்ற புத்திகள் செரித்துப் போட்ட அபத்த அனர்த்தங்கள். ர்த்தங்களே அபத்தமானதுதானே...?!!!! சீறிப்பாயும் உணர்வுகளை இப்படியாய் நீங்கள் நின்று இதற்குள்ளே பேசுங்கள், இதை மட்டும் ரசியுங்கள் இங்கேயே ஒரு சொறி நாயாய் படுத்துக் கிடந்து எதிர்ப்படும்  எல்லா விசயங்களிலும் உங்களின் எரிச்சல்களை குரைத்தல்களாய்  வெளிப்படுத்துங்கள் என்பதில் என்ன சுதந்திரம் இருந்து விடப்போகிறது. சுதந்திரம் என்ற  வார்த்தையை ஏந்திக் கொண்டு அடிமைகளாய் வாழும் மனோபாவத்தை நான் அறுத்தெரிந்த நிமிடம் எதுவென்று எனக்கு சரியாய்த் தெரியாது. ஒரு ஸென் ஹைகூ கூறுவதைப் போல

' நேற்றிரவும் அல்ல,
இன்று காலையும் அல்ல -
பூசணிப் பூக்கள் மலர்ந்தது...' 

மலர்ந்து விட்ட பூசணிப்பூக்களை வாசித்துப் பார்க்க மனமில்லாத சிக்கலானவர்களின் புத்தி  அடுத்தவன் வீட்டு படுக்கையறையை  எட்டிப் பார்ப்பது போல , யார் பூசணிப்பூவைப் பூக்க வைத்தது? எப்போது பூத்தது என்ற கேள்விகளை எழுப்பி விட்டு பூசணிப்பூவை பார்க்காமல் சென்று விடுகிறது.  இதுதான் அவர்கள் சுதந்திரத்தின் உச்சம்....

விமர்சனங்களைக் கடந்து வாழ்க்கை நெடுகிலும் பூக்களாய் சொரிந்து கிடக்கின்றன. பூக்களை தரிசிக்க செல்கையில்  கால்களில் தைத்து விடும் கூரான முட்கள் கொடுக்கும் வலிகளையும் ஏந்திச் சென்று வாழ்க்கையை நுகர வேண்டியிருக்கிறது. மறுக்க மறுக்க மறுத்தல் விசுவரூபமெடுக்கிறது. இழுத்துச் செல்லும் நதியாய் நகர்ந்து செல்லும்  ஒரு ஓட்டத்தில் நதி நீரில்  மிதந்து செல்லும் பூச்சியாய் மெளனமாய் காத்திருக்க வேண்டியதுதான். பொருளோடு தொடர்பு படுத்தி தங்களின் மிகைப்பட்ட பொருள் சேர்க்கை சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்து விட்டது என்றெண்ணி தலையை மண்ணுக்குள் கவிழ்த்துக் கொள்ளும் மமதை வாழ்க்கை இல்லை என்ற குறைந்த பட்ச என் சந்தோசம்தான் அவ்வப்போது கவிதைகள் என்ற பெயரில் வாழ்க்கையை சுவாசிக்கச் செய்கிறது.

' எனக்கு வீடென்ற ஒன்று இல்லை...
அதனால் தனியே சாளரங்களென்று
நானொன்றும்  அமைக்க வேண்டியதில்லை....
வெளிச்சத்திற்காய் திறந்து வைத்து விட்டு
பெருமிதம் கொள்ள என்னிடம் கதவுகளில்லை
அடைத்து எழுப்பிக் கொண்டு வர்ணமடித்துக் கொண்டு
சுவர்களுக்குள் வாழும் சுதந்திரம் 
என்னிடம் இல்லவே இல்லை...'

மழைக்கு ஓடிப்போய் ஒடுங்கிக் கொள்ளவும், வெயிலைக் கண்டு எரிச்சலுறவும், குளிருக்காய் இறுக்கமான உடைகள் அணியவும் எண்ணுவதற்கு என்ன இருக்கிறது? மாறும் கால நிலைகளில் இருக்கும் நிதர்சனமான பொய்களின் பல்  இளித்தல்களுக்கு எல்லாம் உடலுக்குள் ஒடுங்கிக் கிடக்கும் ஒரு இயலாமை காரணமாய்ப் போய் விடுகிறது. செயற்கையையும் இயற்கையாய்ப்  பார்க்கும் இரண்டு கொம்புகள் எப்போதும் எல்லோர் தலையிலும் இருக்கத்தான் செய்கிறது.

இசை கூட ஒரு காலத்தில் காட்டாறாய் தன் இயல்பில் இருந்த போது அது சாதாரணர்களிடமிருந்துதான் பிறந்திருந்தது. வாழ்வின் போக்கில் மன உணர்வுகளைப் பிழிந்து கசடுகளை நீக்கும் ஒரு முறையற்ற இசைதான் வாழ்வியலின் தேவை. அதை  முறைப்படுத்தி, முறைப்படுத்தி புத்திசாலிகளின் கைகள் அவற்றை வளைக்கத் தொடங்கிய போது மீசை முளைத்த ஆறு மாதக் குழந்தையாய் அது விகாரமாகிப் போனது . தட்டித் தட்டி இங்கும் அங்கும் அலைந்து ஏதேதோ மனதின் வக்கிரங்களை வெளியேற்ற முடியாமல் எப்போதும் நளினங்களையே இசை பேசிய போது இசையின் சுதந்திரம் உடைந்து நொறுங்கிப் போனது.

காலப்போக்கில் அதுவே காசென்ற மகுடிக்கு மயங்கும் பாம்பாய் போனதுதான் இயற்கையின் பெரும் சோகம். இயல்பிலேயே சுதந்திரமானதும் கட்டுப்பாடுகளற்றதுமாய் இருக்கும் பிரபஞ்ச நகர்வில் கட்டுப்பாடுகள்தான் சரி என்று மனிதன் ஒருவன் நினைத்து விதிமுறைகளை ஏற்படுத்திய இடத்தில் ஆரம்பித்துப் போனது முரண்பாடு. முரண்பாடுகளே இன்று இந்த உலகை ஆண்டு கொண்டிருப்பதால்தான் சூரியன் தானே தன்னிலிருந்து பிய்த்தெறிந்த பூமிக்கு கோடுகள் போட்டு மனிதன் விளையாடிக் கொண்டிருக்கிறான். சூழல் ஏற்படுத்திக் கொடுத்த உடலின் வர்ணத்தை வைத்து பெருமைகள் பேசிக் கொள்கிறான், எண்ணங்களை வெளிப்படுத்த உருவாக்கிக் கொண்ட சப்தங்களை எல்லாம் மொழியென்று கூறி அதன் பெயரில் தன்னை வகைப்படுத்திக் கொள்கிறான்...

நீர்நிலைகள் நிறைந்த பிரதேசத்தில் வாழ்ந்த மனிதர்கள் மூன்று வேளை உணவிற்கு பெரிய பெரிய போராட்டங்களை நடத்த வேண்டிய அவசியமற்று இருந்ததால் ஓய்வு நிறைய கிடைக்க ஏதேதோ யோசித்து பண்பட்டுப் போகிறேன் பேர்வழி என்று வாழ்வியல் நெறிகளை வகுத்து விட்டார்கள். மனமென்னும் கட்டுக்குள் சிக்கிக் கொண்டு அபத்தங்களின் பிள்ளையாய்ப் போயிருக்கும் மனிதர்கள் தானே மனிதர்களின் வாழ்க்கைக்கு சவாலாய் இருக்கிறார்கள்...?

இயற்கைச் சீற்றங்களை விட, மிருகங்களை விட, எதிர்பாராத  எல்லா ஆபத்துக்களையும் விட மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தாக இருப்பது சக மனிதனேயன்றி வேறு யாரும் இல்லை...!

புலனறிவுகளுக்குள் சிக்கிக் கொண்ட புரையோடிப் போன மனிதர்களே சக மானுடர் வாழ்க்கைக்கு சோதனையாய் இருக்கிறார்கள். ஆமாம்.....இங்கே மனிதர்களை அழிக்க தனித்தொரு சக்தி தேவையில்லை. மனிதனே மனிதனை அழித்துக் கொள்வான். அவனின் கட்டுப்பாடுகளும், தான் மட்டும் வாழவேண்டும் என்ற எண்ணமுமே போதும்....

விரும்பியதை வேண்டியபடி செய்ய ஏதோ ஒரு ஒழுங்கு நம்மை கட்டில்லாத சுதந்திர நகர்வுக்குக் இழுத்துச் செல்லும்..ரியோக்கனின் இந்த ஹைகூவைப்போல.. இயற்கையின் பாதையைத் தொடர்வோம் நான் யாரென்றும் நீங்கள் யாரென்றும் என்ற எந்த அடையாளமுமின்றி....

' மனம் அற,
வண்ணத்துப் பூச்சியை
அழைக்கிறது மலர்
வண்ணத்து பூச்சியும் 
வருகை தருகிறது மலருக்கு,
மனம் அற, 
மலர் திறக்கும் போது 
வண்ணத்து பூச்சி வருகிறது,
வண்ணத்து பூச்சி வரும் போது
மலர் திறக்கிறது,
எனக்கு மற்றவர்களைத் தெரியாது, 
மற்றவர்களுக்கு என்னைத் தெரியாது, 
தெரியாமையின் அடிப்படையில்
நாங்கள் தொடர்கிறோம் 
இயற்கையின் பாதையை.... '


தேவா. S

Comments

Unknown said…
மனிதனுக்கு மனிதனே எதிரி, அவனின் மனமே எண்ணமே அனைத்திற்கும் காரணம்...

நல்ல வாழ்வியல் உணர்வு...
சந்தோசமும் ஒரு அவஸ்தைதான்..

புத்திசாலிகளின் கைகள் அவற்றை வளைக்கத் தொடங்கிய போது மீசை முளைத்த ஆறு மாதக் குழந்தையாய் அது விகாரமாகிப் போனது..

சூரியன் தானே தன்னிலிருந்து பிய்த்தெறிந்த பூமிக்கு கோடுகள் போட்டு மனிதன் விளையாடிக் கொண்டிருக்கிறான்..

Extraordinary write-up Dheva. Ryokan's poem is great.

இயல்பாய் இருப்பது எல்லாமே அழகாக இருக்கிறது...like told by John Keats as "beauty is truth, truth beauty"
////இயற்கைச் சீற்றங்களை விட, மிருகங்களை விட, எதிர்பாராத எல்லா ஆபத்துக்களையும் விட மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தாக இருப்பது சக மனிதனேயன்றி வேறு யாரும் இல்லை...!/////

உண்மை :))


///நானும் ஓர் கனவோ....?! /////

நானும் ஓர் கனவுதான்

அனால் கனவு நிஜம்தான் !

நிஜமும் ஒரு கனவுதான் !!

நித்தம் பல கனவு தான் !!!

Popular posts from this blog

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...