சுதந்திரம் என்பது கட்டுகளற்ற பெருவெளி. யாதொரு கருத்துப் பரவலும் நம்மை கலைத்துப் போட்டு விடாமல் எல்லா செய்திகளின் சாரங்களையும் உற்று நோக்கி பின் முடிவுகளை நோக்கிய ஒரு புலிப் பாய்ச்சல் அது. ஒரு படைப்பாளிக்கு கட்டுகளற்ற சுதந்திரம் இருந்தால் மட்டுமே அவனுக்குள் எண்ணங்கள் தங்கு தடையின்றி ஊற்றெடுக்க முடியும். இந்த சமூகத்தை தத்துவங்களே ஆண்டு கொண்டிருக்கின்றன. தத்துவங்கள் யாரோ ஒருவனுக்குள் தன்னிச்சையாய் கட்டுக்களின்றி ஸ்பூரித்தெழுந்தவை.
தான் வாழும் சமூகத்தின் செயற்பாடுகளை உள்வாங்கிக் கொண்டு சரி தவறுகளை தனக்குத் தெரிந்த மொழியில் பேசுபவனே தலை சிறந்த படைப்பாளியாய் இருக்க முடியும். அவனுக்கு சமூக பொறுப்புணர்ச்சி இருக்க வேண்டும் என்று ஒரு நிபந்தனையினைக் கொடுத்து விட்டால் அவன் நினைவுகளின் நீட்சிகள் மழுங்கிப் போய்விடும். படைக்கும் ஒருவனின் சிந்தனைகள் சமூக பொறுப்பினை முன்னிறுத்தியே தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. எதை வேண்டுமானாலும் ஒரு படைப்பாளி பேசலாம். சரிகளை மட்டுமே, சமூகத்திற்கு நன்மை பயக்கும் விடயங்களை மட்டுமே அவன் பகிரவேண்டும் என்பது ஆதாய நோக்கு கொண்ட மிருக புத்திகள் இயற்றி வைத்த சைத்தானின் சூத்திரம் என்பது உங்களுக்குத் தெரியுமா..?
தர்க்க ரீதியாய் தங்களால் மெய்ப்பிக்க முடியாத விடயங்களை எல்லாம் நம்பிக்கை என்னும் நயவஞ்சகப் போர்வைக்குள் போட்டு மறைத்துக் கொள்கிறான் மனிதன். நம்பிக்கை என்பது உணர்வால் கட்டியெழுப்பப்பட வேண்டிய கோட்டை. கண்ணெதிரே காணும் விடயங்களைக் கூட உணர்வுகளால் தொட்டுத் தடவி உள்ளுணர்வு சரி என்று சொன்னால்தான் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். கண்களால் காணாத எத்தனையோ விடயங்களை சட்...சட் என்று உள்ளுணர்வு நமக்குள் சமப்படுத்திப் போட அதை எல்லாம் ஏற்றுக் கொண்டு நாம் நகர்ந்து கொண்டும் இருப்போம். நம்பிக்கை என்பது உணர்ச்சி சார்ந்து, தனது சுயநலம் சார்ந்து, கூட்டு மனோபாவத்தை ஏற்கும் பொருட்டு ஏற்படுமெனில் அங்கே நச்சு மரம் தன் வேரினைப் பரப்பி கிளைகளை பரவ விட ஆரம்பித்து விடுகிறது.
மதம் என்பதைக் கடவுள் என்ற இதுவரை யாராலும் காணப்படாத ஒருவரோடு தொடர்புகள் படுத்திக் கொண்டு அதன் மேன்மைகளை தூக்கிப் பிடிக்க இங்கே மனிதர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மதம் என்பதை வழிமுறை என்று சொல்லி கொடுத்தபின்பும் எனது கடவுள், எனது வேதம், எனது வாழ்க்கை என்று எனது...எனது என்று மட்டுப்படுத்தும் இடத்தில், எல்லாம்வல்லவனாக அவர்கள் கருதும் ஒரு பிரமாண்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்து தங்களின் எண்ணத்தின் வடிவிற்கு குறுக்கி விடுகிறார்கள். கடவுள் என்னும் விடயத்தை முட்டி முட்டி வழிபாடு செய்யும் எந்த ஒரு மதத்தைச் சார்ந்தவரும் சுட்டிக் காட்ட முடியாமல், வாழ்க்கையின் கடைசி வரை கடவுள் என்பவரை காட்டப்பட முடியாதவர் என்ற உண்மையோடு விழிகள் நிலைகுத்திச் செத்துப் போகவும் செய்கிறார்கள்.
எல்லா சமூகத்திலும் கடவுள் என்பது மனிதரைப் போன்ற ஒன்று இல்லை, உண்மையில் சொல்லப் போனால் அது ஒன்றும் இல்லை என்று உணர்ந்த செம்மையான மனிதர்கள், தான் வாழ்ந்த சமூகத்தின் அறிவுத் தரத்திற்கு ஏற்ப அந்த உண்மையை மறைமுகமாய் போதித்துச் சென்றும் இருக்கின்றனர். வாழ்வியல் முறைகளை மதமாகவும், வேதமாகவும் போதித்துச் சென்றவர்கள் அத்தனை பேரையும் பகுத்து அறிந்து உண்மையை உணர்ந்த பகுத்தறிவாளர்கள் என்றோ, ஞானிகள் என்றோ, இறைத் தூதர்கள் என்றோ, அவதாரங்கள் என்றோ எது எது உங்களுக்கு வசதியோ அப்படி பெயரிட்டு அழைத்துக் கொள்ளுங்கள்....
மதம் என்பது சுமூக வாழ்வியல் இயங்கு தன்மைக்காய் ஏற்படுத்தப்பட்ட வழிமுறை என்பதை மறந்து போய் இறைவன் நேரடியாய் இங்கே மானுடர்களுக்காய் ஏற்படுத்திக் கொடுத்த கருத்து வடிவங்கள் என்று ஒருவன் நம்புவது இங்கே நம்பிக்கையாகிறது. இப்படி நம்புவது புனிதம் என்று போதிக்கப்பட்டதின் விளைவாக இங்கே வாழும் அத்தனை பேரும் தங்களை புனிதர்களாக காட்டிக் கொள்ள விரும்பி மீண்டும், மீண்டும் தாங்கள் சார்ந்திருக்கும் வழிமுறை, இறைவனால் கொடுக்கப்பட்டது என்று குரல்வளைகள் கிழிய உரக்க பேசிக் கொண்டே இருக்கின்றனர்.
மனிதன் எப்போதும் சாதாரணமானவன் அவனால் எதையும் உருவாக்க முடிந்தது என்று எதுவும் இல்லை என்றும் ஒப்பற்ற கருத்துக்களை வடித்துக் கொடுத்தது இறைவன் அன்றி வேறு யாராய் இருக்க முடியும் என்று முரட்டுத்தனமாய் நம்பும் இந்த சமூகத்தில் நாம் சுகிக்கும் எல்லாமே யாரோ ஒருவனின் அறிவிலிருந்துதான் பிறந்தது என்பதை வசதியாய் மறந்தும் போகிறார்கள். கற்களை உரசி நெருப்பினை உண்டாக்கியவன் இன்று விண்வெளி தோறும் செயற்கைக் கோள்களை அனுப்பி ஆராய்ச்சி செய்ய எந்தக் கடவுளின் உதவியையும் நாடவில்லை. எல்லா செயல்களுக்கும் அவனது அறிவே உதவியது.
அன்பும், அறிவுமே கடவுள். அன்பும் அறிவும் மனிதர்களுக்குள் இருந்து தன்னிச்சையாய் எட்டிப்பார்க்கும் ஏதோ ஒன்றின் கூட்டு. இத்தனை வேதங்களும், அவதாரங்களும், மார்க்கங்களும் வெளிப்பட்டு எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் ஆன பின்பும் கூட அந்த ஏதோ ஒன்று எட்டிப் பிடித்து உணரமுடியாததாய் இருக்கிறது. உணர முடியாமல் போனதாலேயே எல்லா வழிமுறைகளும் தோற்றுப் போனதாய் நாம் அறிவித்து விடலாமா? ஆமாம் மதத்தை கடவுளோடு நீங்கள் தொடர்புபடுத்தி என்னிடம் பேசினால் உங்கள் அத்தனை பேரின் மதமும் தோற்றுப் போயிருக்கிறது என்றுதான் என்னால் அடித்துச் சொல்ல முடியும்....
இத்தனை காலஞ்சென்றும் உங்களால் கடவுள் என்பது எது....? என்று உணர முடியவில்லை. அன்பையும், சகிப்புத் தன்மையையும் விசம் பொருந்திய வார்த்தைகளில் தேனாய் தடவி வியாபாரம் செய்யத்தான் உங்களால் முடிகிறது... ஞானம் என்னும் வார்த்தையின் ஆழம் உங்களுக்குத் தெரியவில்லை. ஒரு இயந்திரமாய் உங்கள் வழிபாடுகளையும் நேர்ச்சைகளையும் செய்து கொள்கிறீர்கள். உங்களின் கடவுள் உங்களை சுதந்திரமானவராய் ஆக்குவதற்குப் பதிலாக காற்று புக முடியாத இருட்டு அறைக்குள் புழுக்கத்தின் நடுவே உங்களை கைதியாக்கி வைத்திருக்கிறார். எதை நிறுவ போராடுகிறோம் என்று தெரியாமல் நீங்கள் போராடிக் கொண்டிருக்கும் போதே முதுமையாலோ, வியாதியாலோ, அல்லது ஏதோ ஒரு விபத்தாலோ நீங்கள் வாய்கோணி செத்துப் போய் விடுகிறீர்கள்...
தன்னை அறிய முடியாத அளவிற்கு உங்களை இறுகக்கட்டிப் போட்டிருப்பது உங்களின் வழிமுறை அல்ல..! அந்த வழிமுறைகளை உங்களின் சுயநலத்துக்கு ஏற்ப வார்த்துக் கொண்டிருக்கும் உங்களின் மனோபாவம் என்பதை இறக்கும் வரை நீங்கள் உணரப்போவதே இல்லை. மனதாலேயே நீங்கள் நடத்தும் ஒரு கோர வாழ்க்கையை விட்டு நீங்கள் சார்ந்திருக்கும் ஏதோ ஒரு வழிமுறையிலிருக்கும் சத்தியம் என்னும் கயிறைப் பிடித்து நீங்கள் மேலேறி வரப்போவது எப்போது...?
இறை என்னும் சுதந்திரத்தை உங்கள் நாசி நிறைய சுவாசித்து எப்போது ஆழமான மெளனத்தால் உங்களின் சடங்குகளை எல்லாம் எரிக்கப் போகிறீர்கள். மதம் என்பது சீரிய வாழ்க்கை வாழ சொல்லப்பட்ட வழிமுறை என்றால்... வழிமுறையைக் கொண்டு மேலே முன்னேறாமல் நின்று கொண்டே இருப்பது உங்களின் மதத்திற்கு கிடைத்த தோல்வி இல்லையா.....? வழிகாட்டும் பெயர்ப்பலகையை கண்டுவிட்ட ஆச்சர்யத்தில் ஏன் அதை விட்டு நகர மறுக்கிறீர்கள்...?
வழியைக் காட்டும் பலகையை நட்டு வைத்தவனின் நோக்கம் நீங்கள் அங்கேயே நின்று கொண்டிருப்பதற்கானது அல்ல...அதை விட்டு உங்களின் பாதையில் சுதந்திரமாய் கை வீசி நடந்து நீங்களும் நானும் ஒரு பெரும் பொய் என்று உணரவைத்து எல்லையில்லாத பெரும் ஆனந்ததிற்குள் நம்மை தள்ளி விடுவது....என்பதை ஏன் இன்னும் நீங்கள் உணரவில்லை....?
மதங்கள் என்னும் மையத்தை இப்படித்தான் சில மனிதர்கள் பகுத்தறிவோடு கடந்து சென்று விடுகிறார்கள். அவர்களுக்கு மதம் என்ற ஒரு மையம் இல்லை. மதத்தை கடந்து அவர்கள் சுதந்திர புருசனாக கட்டற்ற பெருவெளியில் சிறகடித்து பறக்கிறார்கள். இப்படி கட்டுக்கள் இல்லாமல் அவர்கள் நகர்வது சிறைப்பட்ட மனோ நிலையில் இருக்கும் உங்களுக்கு எரிச்சல் வருகிறது. உங்கள் நம்பிக்கையை உடைத்துப் போய்விட்டான் என்றும்.... கட்டுகள் இல்லாமல் பறக்கிறான் என்றும் உங்களின் அறியாமையை அவன் மீது குற்றமாய் சுமத்துகிறீர்கள்.
பெரும்பாலும் படைப்பவர்கள் எல்லாம் கட்டுக்களற்ற சுதந்திரம் பெற்றவர்கள். முக்தி என்னும் விடுதலையை சுகித்தவர்கள். சமூகத்தின் கனபரிமாணங்களை சுதந்திரவெளியில் நின்று எழுத்துக்களாகவும், கலையாகவும், இசையாகவும் படைத்துக் கொடுப்பவர்கள். ஏதோ ஒரு மதம் என்னும் மையத்தை எப்போதோ கடந்து வந்திருப்பதாலேயே மதங்கள் உருவானதின் அவசியத்தையும் அவர்கள் உணர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.
அவர்கள் நீங்கள்... நீங்களாக இருப்பதில் யாதொரு பிரச்சினையும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள் ஆனால் உங்களுக்குத்தான் அவர்கள் அவர்களாய் இருப்பதில் பிரச்சினையிருக்கிறது. அவர்களின் கருத்துக்கள் உங்களை உங்களின் இருட்டறையிலிருந்து வெளியே தர தரவென்று இழுத்து வரவே எப்போதும் முயலுகிறது. அவர்களைக் கண்டு கொள்ளாமல் நகர்ந்து போக, உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சுதந்திரத்தைக் கூட உங்களால் சரியாய்ப் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் நீங்கள் சதா சர்வ காலமும் சுதந்திர புருசர்களாகிய அவர்களைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
ஏதேதோ சொல்லி பகுத்தறிவாளர்களை, படைப்பாளிகளை நீங்கள் அசிங்கப்படுத்த முயலும் எல்லா செயல்களும் வானத்தைப் பார்த்து நீங்கள் உமிழ்வதைப் போலவே இருக்கிறது. மீண்டும், மீண்டும் வீழ்த்துவதாய் நினைத்து நீங்களே ஈனப்பட்டுப் போகிறீர்கள். சமூகம், கட்டுப்பாடு, மானுட நலன் என்று ஏதேதோ உளறிக் கொட்டுகிறீர்கள். ஒரு படைப்பாளி அதை கண்டு கொள்வதே இல்லை. அவனுக்குத் தெளிவாய் தெரியும்... நீங்கள் இருட்டறையை விட்டு மேலே ஏறி வர பயந்து கொண்டிருக்கிறீர்கள் என்று...
உங்களின் மதம் என்னும் வாய்ப்பு உங்களின் முன் ஒரு கயிறாய் தொங்கிக் கொண்டிருக்கிறது அதை நீங்கள் பயன்படுத்தவில்லை என்பதை உணர்ந்து...., உங்களுக்காக அவன் எந்த கடவுளரிடமும் சென்று வேண்டிக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் படைத்துக் கொண்டிருக்கிறான். தன் புத்திக்குள் படுத்துக் கிடக்கும் அனுபவங்களை உலுக்கி, தன்னை உருக்கி, உருக்கி, வலிகளை எல்லாம் வார்த்தெடுத்து ஒரு பிள்ளையை பெற்று எடுக்கும் தாயின் சிரத்தையோடு உங்களின் எல்லா காறி உமிழ்தல்களையும்....கண்டு கொள்ளாமல்...
அவன் மீண்டும் மீண்டும் படைத்துக் கொண்டே இருக்கிறான். உங்களின் விருப்பம் அவனை மீண்டும் ஏதோ ஒரு கொட்டடியில் போட்டு அடைப்பதாகவே இருக்கிறது. அவனின் விருப்பம் உங்களை இருட்டுச் சிறையிலிருந்து மீட்டெடுப்பதாகவெ இருக்கிறது...
இது ஒரு சுழற்சி......
நீங்கள் தொடர்ந்து காறி உமிழ்ந்து கொண்டே இருங்கள்...அவன் உங்களின் விடுதலைக்காய் தொடர்ந்து படைத்துக் கொண்டே இருக்கட்டும்...!
தேவா. S
Comments
//மதத்தை கடந்து அவர்கள் சுதந்திர புருசனாக கட்டற்ற பெருவெளியில் சிறகடித்து பறக்கிறார்கள். இப்படி கட்டுக்கள் இல்லாமல் அவர்கள் நகர்வது சிறைப்பட்ட மனோ நிலையில் இருக்கும் உங்களுக்கு எரிச்சல் வருகிறது. உங்கள் நம்பிக்கையை உடைத்துப் போய்விட்டான் என்றும்.... கட்டுகள் இல்லாமல் பறக்கிறான் என்றும் உங்களின் அறியாமையை அவன் மீது குற்றமாய் சுமத்துகிறீர்கள்.//
சிறந்த வரிகள்....
அவன் மேல் ஏற்படும் பொறாமையும் சேர்ந்து கொள்கிறது.
nandri
பணம் எனும் மாயை, மதம் மட்டும் அல்ல எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறது...
பாராட்டுகள்.
மிகவும் பிடித்த சில வரிகள்:
உங்களின் கடவுள் உங்களை சுதந்திரமானவராய் ஆக்குவதற்குப் பதிலாக காற்று புக முடியாத இருட்டு அறைக்குள் புழுக்கத்தின் நடுவே உங்களை கைதியாக்கி வைத்திருக்கிறார்.
இப்படி கட்டுக்கள் இல்லாமல் அவர்கள் நகர்வது சிறைப்பட்ட மனோ நிலையில் இருக்கும் உங்களுக்கு எரிச்சல் வருகிறது. உங்கள் நம்பிக்கையை உடைத்துப் போய்விட்டான் என்றும்.... கட்டுகள் இல்லாமல் பறக்கிறான் என்றும் உங்களின் அறியாமையை அவன் மீது குற்றமாய் சுமத்துகிறீர்கள்.
அவர்களைக் கண்டு கொள்ளாமல் நகர்ந்து போக, உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சுதந்திரத்தைக் கூட உங்களால் சரியாய்ப் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் நீங்கள் சதா சர்வ காலமும் சுதந்திர புருசர்களாகிய அவர்களைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
---
வழக்கமாக நீங்கள் இப்படி அழகான பதிவுகள் இட்டுக்கொண்டிருக்கிறீர்களா என்று பார்க்க வேண்டும் !!
இது நாள்வரை இவைகளை வாசிக்காமல் விட்டதற்கும் ... மன்னிக்க.
படம் முடிஞ்சு வந்த பின்னாடியும் சிரிப்பு வரும். மொத காமெடிக்கு சிரிச்சு முடிக்குறதுக்குள்ளே அடுத்தடுத்த காமெடிகளால் சிரிப்பு வெடிய போட்டுட்டே இருப்பாங்க . கரு .பழனியப்பன் பட வசனங்களும் அப்படியே அடுத்தடுத்த வசனங்களால் வசியப்படுத்திடுவார். இதே மாதிரி தாங்க உங்க பதிவுகள் லயும் வார்த்தைக்கு வார்த்த , வரிக்கு வரி விஷயம் இருக்கு . என்னப் போல சாமானியனால எளிதா புரிஞ்சுக்க முடியல . நெறைய பொறுமையும் , மெனக்கடலும் தேவப்படுது. ஒவ்வொரு மொறையும் முழுதாகப் படிக்கமுடியாம தோத்துப்போறேன்.
மூணாவது வரி படிக்கும் போதே என்னோட சிந்தனைகள தூண்டிவிடுது , வேறு கோணத்தை பார்வையை காமிக்குது . அமைதியா ஆழமா (சு)வாசிக்க வேண்டிய வரிகள் . வாசிப்பவனின் ரசனையை , சிந்தனையை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லும் உங்களது எழுத்துகளுக்கு வந்தனம் .
வாரியார் புஸ்தகமாக வர ஆசைப்படும் படித்துப் பழகுபவன் .
படம் முடிஞ்சு வந்த பின்னாடியும் சிரிப்பு வரும். மொத காமெடிக்கு சிரிச்சு முடிக்குறதுக்குள்ளே அடுத்தடுத்த காமெடிகளால் சிரிப்பு வெடிய போட்டுட்டே இருப்பாங்க . கரு .பழனியப்பன் பட வசனங்களும் அப்படியே அடுத்தடுத்த வசனங்களால் வசியப்படுத்திடுவார். இதே மாதிரி தாங்க உங்க பதிவுகள் லயும் வார்த்தைக்கு வார்த்த , வரிக்கு வரி விஷயம் இருக்கு . என்னப் போல சாமானியனால எளிதா புரிஞ்சுக்க முடியல . நெறைய பொறுமையும் , மெனக்கடலும் தேவப்படுது. ஒவ்வொரு மொறையும் முழுதாகப் படிக்கமுடியாம தோத்துப்போறேன்.
மூணாவது வரி படிக்கும் போதே என்னோட சிந்தனைகள தூண்டிவிடுது , வேறு கோணத்தை பார்வையை காமிக்குது . அமைதியா ஆழமா (சு)வாசிக்க வேண்டிய வரிகள் . வாசிப்பவனின் ரசனையை , சிந்தனையை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லும் உங்களது எழுத்துகளுக்கு வந்தனம் .
வாரியார் புஸ்தகமாக வர ஆசைப்படும் படித்துப் பழகுபவன் .