
தடித்த தோல் எனக்கில்லை. உலக இலக்கியங்களையும், திரைப்படங்களையும் அவ்வப்போது கடந்து சென்றாலும் புத்தியின் தடிமன் கூடிப் போவதுமில்லை. விசால அறிவுகள் எவ்வளவு அபத்தமானது அது எப்படி வாழ்வின் அழகியலைச் சிதைக்கின்றன என்பதை பரதேசி திரைப்படத்தைப் பற்றிய ஜாம்பவான்களின் பார்வைகளில் இருந்து புரிந்து கொண்டேன். வானவில்லுக்கு இன்னமும் ஆச்சர்யமாய் வாய் பிளந்து அதன் வர்ண ஜாலத்தில் நான் திணறிப் போய் நிற்கிறேன்...
தினசரி சூர்ய உதயத்தின் போது வானம் நடத்தும் ஜாலங்களில் மயங்கிக் கிடக்கிறேன். மொட்டுக்கள் எல்லாம் பூவாகும் தருணம் எதுவாயிருக்கும் என்று மூளையை கசக்கிக் கொண்டிருக்கிறேன்....புற்களின் மீது அழுந்தக் கால் பதிந்து கடந்து செல்லும் பூனையொன்றை வம்புக்கிழுத்து....ஏய் புற்களை மிதிக்காதே என்று பொய்யாய் அதட்டி சிரிக்கிறேன், அந்தப் பூனையின் ப்ரியத்தை விழிவழியே பெற்றுக் கொண்டு நன்றியை விழி வழியே நானும் கொடுக்கிறேன்...இப்போது சொல்லுங்கள் பரதேசி என்னும் திரைப்படம் என்னை என்ன செய்து இருக்கும் என்று..? எதிர்பார்ப்பு என்பது கடந்த கால நிகழ்வுகளின் திணிப்பு. அதுவும் பாலா என்னும் மனிதர் தனது திரைப்படங்களின் மூலம் பதிவு செய்யும் அமானுஷ்ய உணர்வுகளை ஏந்திக் கொள்ளும் எதிர்ப்பார்ப்பு என்க்குள் மிகையாய் இருந்தது உண்மைதான்.
மனிதர்களை வைத்துக் கொண்டு உளவியலை மையப்படுத்திய சமூகப் பார்வைகளை அழுத்தம் திருத்தமாகச் சொல்ல சமகாலத்தில் பாலாவை விட்டால் வேறு யாரும் இல்லை என்பது எனது அபிப்ராயம். அவரது கதைக்களம் எப்போதுமே நாம் அன்றாடம் கடந்து செல்லும் ஆனால் பார்க்க விரும்பாத மனிதர்களை பற்றியதாய்த்தான் இருக்கும். விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் அசுரத்தனமாக எதுவேண்டுமானாலும் முன்னேறலாம். மனிதன் தன்னை நாகரீகமாக காட்டிக் கொண்டு மாறியதாக நடிக்க வேண்டுமானால் செய்யலாம். அடிப்படையில் அவனது ஆதி குணங்கள் அவனை விட்டுப் போகாது என்பன போன்ற மறைமுக செய்திகளை செவுட்டில் அறைந்து எப்போதும் போல இந்தப்படத்திலும் பாலா சொல்லி இருக்கிறார்.
நாஞ்சில் நாடனின் இயல்பான வசனமும், பாலாவின் எதார்த்தமான திரைக்கதையும், அதர்வாவின் நேர்த்தியான நடிப்பும் மூலக்கதையான எரியும் பனிக்காடு என்னும் நாவலை திரையில் பாலாவின் பாணியில் பிம்பமாக்கியிருக்கிறது.இளையராஜா அளவிற்கு இல்லை என்று தோன்றினாலும்..... மிகப்பெரிய குறையில்லாமல் பாடல்களையும், திரையிசையையும் கட்டி இழுத்துச் சென்று ஈடு கொடுத்திருக்கும் ஜி.வி. பிரகாஷும்....தெறிக்கும் வார்த்தைகளைக் கொண்டு...உணர்ச்சிப் பிழம்பாய் பாடல்களை எழுதியிருக்கும் வைரமுத்துவும் பாராட்டுக்குரியவர்கள். வலிக்கும் உண்மையை திரைக்கதை பேசிக் கொண்டிருக்கையில் அதர்வாவின் தாடி வளர்ந்திருக்கிறதே தலை முடி வளரவில்லையே என்று யோசித்து குற்றம் சொல்லும் குரூரம் எனக்குள் இல்லை. ஒட்டுப் பொறுக்கியாகவே வாழ்ந்திருக்கும் அதர்வாவும் 1930கள் வாக்கில் காட்டப்படும் அந்த கிராமமும் எப்படி இவ்வளவு சுத்தமாய் இருக்கிறது என்று ஆராயும்...ஒரு விஞ்ஞானியின் மனப்பான்மை எனக்கு சுத்தமாய் இல்லவே இல்லை.
அந்த கிராமத்து மக்களின் வாழ்வின் ஒரு ஸ்லாட் எனக்கூடிய ஒரு சிறு காலகட்டத்தைப் பதிவு செய்திருக்கும் பாலா அதை மகிழ்ச்சி நிறைந்ததாய் காட்டி இருக்கிறார். அதர்வா விறகு உடைத்து விட்டு கூலிக்காக கெஞ்சும் இடத்தில் மிகத்தெளிவாய் புரிகிறது நமக்கு அவர் சார்ந்திருக்கும் சிறு கிராமத்து மக்கள் அத்தனை பேரும் வர்க்க ரீதியாய் ஒடுக்கப்பட்டவர்கள் என்று..... வேலை பார்த்தவனுக்கு கூழை குடித்து விட்டுப் போடா என்று டீக்கடைக்குள் நின்று விரட்டுபவன் வெள்ளைக்காரன் இல்லை... அவனும் அதே சமூகத்தில் வாழும் ஒரு மனிதன் தான். பொருளாதாரம் என்பது எப்போதுமே காலத்தின் முன்பு நிறைவானதாக இருப்பது இல்லை. மனித சமூகம் சிறப்பான வாழ்க்கையை நோக்கி எப்போதுமே நகர்ந்து கொண்டுதான் இருந்திருக்கிறது.
கிராமங்களில் இருந்து பட்டணம் நகரும் மனிதர்களில் தொடங்கி, என்னைப் போல பிழைப்புக்காய் அயல் தேசத்தில் வருடங்களை நாட்களைப் போல கடத்திக் கொண்டிருக்கும் அத்தனை மனிதர்களுக்கும் இது தெளிவாய்ப் புரியும். அதர்வாவுக்கும் வேதிகாவுக்குமான காதல், வேதிகா கர்ப்பமாவது, அதர்வா ஊர் மக்களோடு பிழைப்புக்காய் கங்காணி விரித்த வலையில் சிக்கி தேயிலைத் தோட்டத்துக்கு செல்வது என்று கதையை நீங்கள் திரையில் பார்த்துக்கொள்ளுங்கள் அல்லது ஏற்கனவே பார்த்து கூட இருப்பீர்கள்.
நடிப்பு என்பது உடலின் மொழி. உணர்வுகளின் ஸ்தூல வடிவம். அதர்வா வைரமாய் ஜொலிப்பதின் பின்னணியில் பாலா பளீச் என்று தெரிகிறார். அதர்வாவின் வசன உச்சரிப்புகள் அத்தனை எதார்த்தமாய் இல்லை என்றாலும்.... அதுவெல்லாம் திரைக்கதைக்கு முன்னால் ஒன்றும் பெரிய குறையாய் தெரியவில்லை. எந்த ஒரு விசயத்தையும் நாம் காணும் போது வெறுமனே பார்வையாளனாக மட்டும் இருந்து விடக்கூடாது. இங்கே சினிமா விமர்சனம் எழுதிய, பாலாவை குறை சொன்ன அத்தனை பேரும் காலரியில் இருந்து வெறுமனே சினிமாவை பார்த்த பார்வையாளர்கள். ஒவ்வொரு காட்சியையும் தங்களின் மூளையால் பார்த்த இயந்திரங்கள் அவர்கள். எல்லாவற்றையும் தங்களின் அறிவில் ஏற்கெனவே இருந்த விசயங்களோடு ஒப்பீடு செய்து பார்த்து தங்களை திரையை விட்டு வெகு தூரத்தில் நகர்த்தி வைத்துக் கொண்ட ஜீவிகள்.... அறிவு ஜீவிகள்.
நான் என்ன சொல்கிறேன்....ஒரு புத்தகமோ அல்லது திரைப்படமோ உங்களை அந்தக் கதைக்குள் இழுத்துச் செல்ல முயலுகிறது என்றால் விலக்காமல் உட்சென்று விடுங்கள். அதர்வாவின் இடத்திலோ இல்லை பிழைப்பு தேடி செல்லும் அந்த மக்கள் கூட்டத்தில் ஒருவராகவோ உங்களை கண நேரம் இருத்திப் பாருங்கள், நீங்கள் மீண்டு வெளியே வருவது கடினம். அதுவும் அழுத்தமான பாலா போன்ற படைப்பாளிகளின் திரைப்படங்கள் கண்டிப்பாய் நம்மை வெளியே விடவே விடாது. அப்படி இருக்கையில் நீங்கள் முரண்கள் என்று சொல்லும் எதுவுமே அங்கே இருக்கவே இருக்காது. எஸ்டேட்டிற்குள் சென்ற முதல் நாள் இரவில் மாடுகளை கொட்டத்துக்குள் அடைப்பது போல மனிதர்களை கங்காணியின் கூட்டம் அடைத்த பின், அந்த இரவை விடிய வைக்கும் பெரும் சங்கினை ஒருவன் விடியற்காலையில் ஊதிய போது...
அந்த சங்கின் சப்தத்திற்கு அலறி எழும் சாலூர் மக்களை பார்த்த போது என்னை மீறி கண்ணீர் எட்டிப்பார்த்தது. எப்போதும் அதிகாலையில் என்னை எழுப்பி விடும் என் வீட்டு அலாரத்தை பார்த்த போது எனக்குள் ஒரு பயம் வந்து ஒட்டிக் கொண்டது. காலம் மாறி இருக்கிறது. சூழல் மாறி இருக்கிறது. நவீனம் என்ற பெயரில் எல்லாம் மாறி இருக்கிறது ஆனால் அதே வாழ்க்கை மாறாமல் எல்லா இடத்திலும் அழுத்தமாய் பரவிக் கிடக்கிறது. அதுவும் சொந்த நாட்டை விட்டு வெளிநாட்டில் இருக்கும் என்னைப் போன்றவர்கள் எங்களை அதர்வாவோடு ஒப்பீடு செய்து பார்க்கையில் நிஜமாகவே மீளமுடியாத சூழலுக்குள் நாங்கள் சிக்கிக் கிடப்பதை எண்ணி மிரண்டு போனேன். பொருளாதார தேவைகள் ஏற்படுத்தி வைத்திருக்கும் நிர்ப்பந்தங்களோடு, தேவைகள் தீராமல் மாறிக் கொண்டே இருக்க...சம காலத்தை விட்டு மீள முடியாமல் மீண்டும் மீண்டும் காலம் என்னும் கங்காணி எங்களை இந்த சூழல் என்னும் எஸ்டேட்டை விட்டு வெளியே வரவிடாமல் ஏதேதோ கணக்குகளை, கடன்களை சொல்லி.... இங்கேயே பிடித்து வைத்திருக்கிறான்.
இது வெளிநாட்டில் வாழும் என்னைப் போன்றவர்களுக்கு மட்டுமில்லை ஊரில் இருந்து கொண்டே சொந்த மண்ணை விட்டு பிழைப்பு தேடி நகரம் நோக்கி நகர்ந்த அத்தனை மனிதர்களுக்கும் பொருந்தும் என்றாலும் ஊரில் இருக்கும் போது அதே சமூக சூழலில் வாழ்வதால் கொஞ்சம் எல்லாமே அனுசரித்துப் போகும்.
எங்களுக்கு எல்லாம் கல்யாணம், காட்சி, திருவிழா, மரணம், தீபாவளி, பொங்கல், இன்ன பிற விழாக்கள் எதுவுமே இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? கடிகார முட்களுக்கு நடுவே அவசரகதியில் எங்கள் பண்டிகைகள் எல்லாம் காலண்டரில் மட்டுமே படுத்துக் கொண்டு பல் இளித்துக் கொண்டிருக்கின்றன. ஏன் இதை எல்லாம் சொல்கிறேன் என்றால்....
பாலாவை, பரதேசி என்னும் அற்புதமான கலைப்படைப்பை குறை சொல்லும் இரும்பு இதயங்களும், கருங்கல் மூளைகளுக்கும் இவை எல்லாம் உரைக்க வேண்டும் என்றுதான்....
எப்படிப் பார்த்தாலும் எரியும் பனிக்காடு என்னும் நாவலை தனது பாணியில் அழுத்தமாய் திரையில் பதிவு செய்தமைக்காக பாலா பாராட்டுக்குரியவர். கடைசி காட்சியில்....அதர்வா அந்த எஸ்டேட்டிலிருக்கும் ஒரு மிகப்பெரிய பாறையின் மீது அமர்ந்து கதறுவது எத்தனையோ சமகால கார்ப்பரேட் அடிமைகளின் கதறல் ஒலிதான். இன்னமும் அந்தக் கதறல் ஒலி காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. நடு இரவில் படம் பார்த்து முடித்ததோடு என் மகளைக் கட்டிக் கொண்டு நானும் காலத்திடம் தேம்பிக் கொண்டிருந்தேன்....
" நியாயமாரே........இரக்கங்காட்டுங்க...நியாயமாரே............சாதிசனத்தைப் பார்க்கணும் நியாயமாரே......!!!! ஒரு பாவமும் பண்ணலயே நியாயமாரே.....!!!!!
ஹேட்ஸ் ஆஃப்...பாலா சார்!!!!!!
தேவா. S
Comments
க்ளைமாக்சில் கதறியது அதர்வா பாத்திரம் மட்டுமல்ல ஒரு வித மயான அமைதி திரைஅரங்கில் ஏற்பட்டது நிஜம் .உள்ளுக்குள் கதறியது நெஞ்சம்.நெகிழ்ந்து கரைந்து உருகி நின்றேன் .அருமையான விமர்சனம்.
நன்றி.
//கடிகார முட்களுக்கு நடுவே அவசரகதியில் எங்கள் பண்டிகைகள் எல்லாம் காலண்டரில் மட்டுமே படுத்துக் கொண்டு பல் இளித்துக் கொண்டிருக்கின்றன.// -- இது போன்ற நல்ல வரிகள்.
படத்தின் கதைக்களனை உங்கள் வாழ்வோடு பொருத்திப் பார்த்தமைக்கு என் பாராட்டுகள்.
அருமையான விமர்சனம்...
கடைசியில் நானும் அழுதேன்...
நம்ம நிலையும் இதுதான் என்பது மேலும் வலியைக் கூட்டியது என்பதே உண்மை...
ருத்திராட்சம் பதிவில் வாசித்தது ...
//அதை நோக்கிய நகர்வுதான் 35 கழிந்து 36 ஆம் வருடத்திற்குள் என்னை கூட்டி வந்து நிறுத்தி இருக்கிறது.//
பிறந்த நாளோ ..? வாழ்த்துக்கள் அண்ணா ...!
பரதேசி பற்றிய பார்வை அருமை . விமர்சனம் ங்குற பேர்ல ஆயிரமாயிரம் கேள்விகள் கேட்கலாம் .எப்பவுமே கேள்வி கேட்பது எளிது, பதில் கொடுப்பதுதான் கடினம் .
நான் இன்னும் படம் பார்க்கவில்லை . ஒருவேளை பார்த்த பின்பு, எனக்கும் நீங்கள் கூறியிருந்தபடி விஞ்ஞான மூளை எட்டி பார்க்கலாம் .ஆனால் தனிபுத்தியை பொதுதுப்புத்தியாக்கும் சின்னபுத்தி தனம் இல்லை .எம் ரசனை எம்மோடு.
இந்த பதிவை ஒருமுறை படித்து முடித்திருக்கிறேன் . மீண்டுமொருமுறை படிக்க வேண்டும், பொறுமையாக .
இன்னும் நீங்க நெறைய எழுதுங்க அண்ணா ...!எம் ரசனையும் பார்வையும் மேம்படட்டும்.
True lines.
தெளிவான ஆழமான பாலாவின் படம் போல் உள்ளது அதை பற்றிய உங்கள் கருத்துக் கோர்வை.
"எரியும் பனிக்காடு" "பரதேசி" முறையே படித்தவன் பார்த்தவன் என்ற முறையில் மனிதனுக்கு மனிதனின் ஆணவமும் அதிகாரமும் கொண்டலைவதை இப்படைப்புகளில் காண முடிகிறது. இரண்டையும் விட்டு நான் வெகு தூரம் சென்றாலும் மறுபடியும் மறுபடியும் (எண்ண)அலைகள் என்னை கரைக்கு மனிதர்களுக்கு மத்தியில் கொண்டு வந்து கவிழ்த்து விட்டு தான் போகிறது.
அனைத்து போராட்டங்களுக்கு மத்தியில் மனப் போராட்டம் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறது. டேனியலின் "Red Tea'யும், பாலாவின் பரதேசியும், உங்களது விமர்சனமும் அதுவாகவே எனக்குப் படுகிறது.
வளர்க நிம் இலக்கியப்பணி! கலைப்பணி! வார்ப்புபணி!
பெரும்பாலான உங்கள் கட்டுரைகளை கவித்துவம் சார்ந்ததாகவே இருக்கும். ஆனால் இந்த வரிகள் இரண்டும் கலந்த அற்புத கலவை.