Skip to main content

சிறகுகள் இன்றி பற...!



இரண்டு பெண்களை அஃபிசியலாய் கடந்த பின்பு ) தன்னுடைய 50+ல் நிஜமான காதலுக்குள் விழுந்திருக்கிறார் முன்னொரு நாளில் காதல் இளவரசன் என்றழைக்கப்பட்டு இப்போது உலகநாயகனாயிருக்கும் ஜீனியஸ் கமல்ஹாசன். எத்தனையோ படங்களில் காதலை நடித்துக்காட்டிய அந்த மாபெரும் கலைஞனை காதல் பூரணமாய் ஆக்கிரமித்து இருந்ததை சமீபத்தில் கண்ட நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியின் மூலம் அறிய முடிந்தது.

திருமணம்தான் காதலின் உச்சம், அதுவே காதல் வென்றதின் அடையாளம் என்று இன்னமும் சொல்லிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்தால் எனக்குப் பாவமாய்த்தான் இருக்கிறது. நான் +2 படித்துக் கொண்டிருந்த போது ஜுவியில் காதல்படிக்கட்டுகள் என்று பிரபலங்களைக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை வெளிவந்துக் கொண்டிருந்தது. ஜூவி வந்தவுடன் அடித்துப் பிடித்து வாங்கி வரிவிடாமல் வாசித்து காதலை உள்ளுக்குள் கோடையில் தண்ணீரைப் பிடித்து சட்டைக்குள் ஊற்றிக்கொள்ளும் உற்சாகத்தோடு வாசித்தும் முடிப்பேன்.

வைரமுத்து எப்போதுமே காதலை வார்த்தைப்படுத்துவதில் இராட்சசன். அவரது வரிகளை வாங்கிக் கொண்டவர்களின் விழிகளில் ' காதல் பூ ' பூக்காமல் இருந்தால் அவர்கள் ஒன்று மொழியறியாதவர்களாக இருக்க வேண்டும்...இல்லையேல் மனம் வறண்டவர்களாயிருக்கவேண்டும். ஏனென்றால் எந்தச் செடி மழைக்கு மறுபதில் சொல்லாமல் இருந்திருக்கிறது. பூவாகவோ, காயாகவோ அது தன் மெளனத்தை உடைத்துதானே ஆகவேண்டி இருக்கிறது.

வைரமுத்துவிற்குப் பிறகு இன்னமும் நினைவில் இருக்கும் காதல் படிக்கட்டுகள் நடிகர் பார்த்திபன் எழுதியது. சட் சட் என்று வெடித்துப் பூக்கும்  மொட்டுக்களை பார்க்கும் போது என்ன பரவசம் தோன்றுமோ அதே அளவு பரவசத்தை பார்த்திபனின் வார்த்தைகள் நமக்குள் இறக்கிவைக்கும். சுமை தூக்கிச் செல்லும் ஒரு கூலியொருவன் உச்சி வெயிலில் ஒரு மரத்தடியில் சுமையை இறக்கி வைத்து விட்டு வயிறு நிறைய நீர் பருகி மரத்தின் வேரில் சாய்ந்து கொள்ளும் சுகத்தைக் காதல் படிக்கட்டுகள் கட்டுரை தப்பாமல் எனக்குக் கொடுத்திருக்கிறது.

பார்த்திபனின் சீதாயணம் அப்படித்தான் இருந்தது. அவரது காதல் வென்றது என்று நான் நினைத்துக் கொண்டிருக்கையில் சிலவருடங்கள் கழித்து அது தோற்றுப் போனதாய் உலகம் அறிவித்தபோது அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காதலை ஒரு திருமணத்தின் மூலம் ஜெயிக்கவைப்பதும், பிறகு திருமணம் முறிந்தவுடன் அதைத் தோற்கவைப்பதும் இந்த சமூகத்தின் ஒரு பொய் விளையாட்டு. காதலுக்கும் திருமணத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இருக்க முடியாது என்றுதான் நான் சொல்வேன். நீங்கள் காதலித்தவரை திருமணம் செய்து கொள்கிறீர்கள். திருமணம் செய்துகொள்வது எதற்கு என்று நான் கேட்டால் காதலிக்க என்று எத்தனை பேரால் பதில் சொல்ல முடியும்?

அப்படியே காதலிக்க திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறுபவர்கள் ஏற்கெனவே காதலித்துக் கொண்டுதானே இருந்தார்கள்...? பிறகு திருமணம் எதற்கு..? என்னைப் பொறுத்தவரை திருமணம் என்பது ஒரு சமூக ஒழுங்கு. ஒழுங்கிலும் காதல் இருக்கலாம் அவ்வளவுதான். அதற்காக இந்தக் கட்டமைப்பில் இல்லாதது எல்லாம் காதலற்றது என்று பழிசுமத்துவதில் என்ன நியாயம் இருக்கிறது? இன்னும் சொல்லப்போனால் மரணம் என்ற ஒன்று இல்லாவிட்டால் எப்படி கடவுள் அவசியமில்லாதவராகிப் போவாரோ....அப்படியே காமம் என்ற ஒன்று இல்லாவிட்டால் இங்கே காதல் என்ற வார்த்தை அவசியம் இல்லாமலேயே கூட போயிருந்திருக்கும்.

இப்போது கமல் கெளதமிக்கு துணை. கெளதமி கமலுக்குத் துணை. ஒருவரின் வலிகளை வாங்கிக் கொண்டு, பலவீனங்களைப் புரிந்து கொண்டு, நிபந்தனைகளற்று அவரால் எதுவுமே பதிலுக்கு செய்ய முடியாது என்றாலும் யார் ஒருவரை நாம் நேசிக்கிறோமோ அங்கே காதல் விஸ்வரூபமெடுத்து நிற்கிறது. கடவுள் என்ற இதுவரை நான் காணாத அந்த ஒரு பிம்பம்  வாழ்க்கையாய் என் முன் விரிந்து கிடக்கிறது. 

நான் கீழே விழுகையில் என்னை தாங்கிப் பிடிக்கும் நிலமாயும், தாகத்தில் தண்ணீராயும், வயிற்றின் பசியடக்கும் உணவாயும் உலகத்து அதிசயங்களையும் முரண்களையும் கண்டு வாய்பிளந்து சிலாகிக்கையில் கிறங்க வைக்கும் உணர்வாயும் எனக்குள் பரவி அந்த பிம்பம் என்னை எப்போதும் நேசித்துக் கொண்டே இருக்கிறது....அதனால் எனக்கு கடவுள் என்ற மாயாபிம்பத்தின் மீது காதல் இருக்கிறது. நான் வெறுத்தால் என்னை தூக்கி வீசி எறிந்து விடுமா இந்த பூமி...? சுமந்து கொண்டுதானே சுற்றும்....!

காதலிக்க நம்மைக் கடந்த வேறொன்று வேண்டும். அது மனிதராகவும் இருக்கலாம், அவ்வளவுதான். பெரும்பாலும் வெவ்வேறு எதிர்ப்பார்ப்புகளோடு இணைபவர்களை விட்டு காதல் ஓடி ஒளிந்து கொள்ள அங்கே வியாபாரம் மட்டுமே நடக்கிறது. எனக்குப் பிடித்த மாதிரி நீ இரு, உனக்குப் பிடித்தமாதிரி நான் இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு தியாகிகளாய் வாழ்ந்து கொண்டு, சுயவிருப்பங்களைக் குழிதோண்டி புதைத்துக் கொள்ளும் வைபவத்தைதான் இங்கே பெரும்பாலும் காதல் என்று சொல்கிறார்கள்.

உனக்குப் பிடித்தமாதிரி நீ இருப்பதையே நான் காதலிக்கிறேன் என்று எத்தனை பேரால் தன் துணையைப் பார்த்து சொல்ல முடியும்..? பெரும்பாலும் கட்டுப்பாடுகள் எல்லாமே பயமும் அடக்குமுறையும் கொண்ட மனதிலிருந்தே பிறக்கின்றன.

கமலும், கெளதமியும் நிஜமான காதலர்களாய் இணைவதற்கு அவர்களின்  அனுபவம் துணை நின்றிருக்கிறது. காலம் ஆசானாய் இருந்திருக்கிறது. இரண்டாவது மனைவியையும் பிரிந்த தனிமையில், ஏற்கெனவே வாழ்க்கை நிராகரித்துவிட்ட புற்றுநோயில் இருந்து மீண்டு கொண்டிருக்கும் ஒருவரை தன் தோளோடு சேர்த்துக் கொண்டு தானும் விழாமல், அவளும் விழாமல் தாங்கிப் பிடிக்கும்...சுகத்தை காதலென்று சொல்லாமல் வேறு எதைக்காதல் என்று சொல்வதாம்...?

கமலுக்கும், கெளதமிக்கும் திருமணம் என்னும் சடங்கிற்குப் பின்னால் இருக்கும் பொய்மை என்னவென்று தெரிந்திருக்கும். அவர்கள் அந்த சடங்கிற்குள் மீண்டும் செல்லவிரும்பவில்லை. அந்த சடங்கு இருவருக்கும் பிள்ளைகளை மட்டும் கொடுத்துவிட்டு கரைந்து போய்விட்டதோடு  மிகப்பெரிய புரிதலை அவர்களின் இயல்பிலேயே நிறைத்தும் சென்று விட்டது..! இனி எதற்கு திருமணம் என்ற ஒன்று தனியே...அவர்களுக்கு அவசியமா என்ன?

திணிக்கப்பட்ட அன்பு எப்போதும் வெறுப்பாகவே முடிகிறது. கற்பிக்கப்பட்ட போலி ஒழுக்க நெறிகளைச் சிலுவைகளாய் சுமந்து கொண்டு காதலாய் இருப்பதைப் போலக் காட்டிக்கொள்வதை விட....

கட்டுக்கள் அற்ற பெருவெளியில் யாருமற்ற தனிமையில் நம் ஏகாந்தச் சிறகுகளோடு நாமே நாமாய் எதிர்பார்ப்புகளற்ற காதலோடு இலக்குகளின்றி பறப்பதே சுகம்...! இப்படியான நிலையில் வெற்றியும் இல்லை தோல்வியுமில்லை...!

" கணங்கள் தோறும் கலைத்துக் கொள்ளும் ஒப்பனைகளில்....இடம் வலமாய், வலம் இடமாய், மேல் கீழாய், கீழ் மேலாய், மாறி, மாறி சுயமென்ற ஒன்றே எனக்கில்லை என்று என்று அறுதியிட்டுக் காலம் கூறினாலும்...

சார்ந்தியங்கும் சாங்கியத்தில் ஒளிந்திருக்கும் மூலவனின் இயல்புகள்.இல்லாத காலப்பெருவெளிக்கு முன்பும், பின்பும்.....ஒன்றென்று அறிக எம் மக்காள்....! "


தேவா. S







Comments

vinthaimanithan said…
நல்ல கட்டுரை தேவாண்ணே! ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க. வாழ்த்துக்கள்!
காதலைப் பற்றி நல்லாவே சொல்லி உள்ளீர்கள்...
One of ur best posts Dheva!
நல்ல புரிதலான கட்டுரை..வாழ்த்துக்கள்.
செம.ஆனால் ஒத்துக் கொள்ள தான் யாருக்கும் மனது வராது.
Anonymous said…
கல்லூரி காலங்களில் காதல் பட்டிக்கட்டுக்கள் நானும் வாசித்தது உண்டு. நீங்கள் கூறுவது உண்மை தான் காதல் ஒழுக்கம் என்பது திருமணத்தோடு வென்றுவிடும் என்பது மாயையே. திருமணத்தின் பின் தான் காதலின் போட்டியே தொடங்குகின்றது, எவ்வாறு வாழ்ந்து முடிக்கின்றோம் என்பதில் தான் காதலின் வெற்றியே தங்கியுள்ளது. மிகவும் அருமையான ஒரு பதிவு சகோ. வாழ்த்துக்கள் !
தியரியா படிக்கும் போது எளிதாக தெரியும் நிறைய விசயங்கள் பிராக்டிகலாக மிகச்சிரமமாக இருக்கிறது.

கைகூடிய காதல் உதிர்ந்து கொண்டும் இருக்கும் அதே நேரத்தில் , கைகூடா காதல் துளிர்த்துக்கொண்டும் இருக்கின்றது.

பரஸ்பரம் எதிர்பார்ப்புகள் இல்லாமல் ஒரு வாழ்க்கை வாழ்வது என்பது அவ்வளவு எளிதா அண்ணா ...?


poongody,Ratnam said…
Beautiful article Dheva. It's very true. Let us wish those two souls live together for long.
Anonymous said…
nice post deva....

who said marriage is the only recognition for love ??

Heart which accepts a person when she needs the most is great. let us keep the critics/praise apart.

But is it really fair to post a article on the personal issue of an individual? hmm

with regards,
kalyani

Popular posts from this blog

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...