Skip to main content

யாசகன்...!



வீதியிலிறங்கியாயிற்று. தீர்மானத்திலொரு மாற்றமுமில்லை. கடமைகளென விதிக்கப்பட்ட பொய்களை புள்ளி விபரத்தோடு தீர்த்துமாயிற்று. தேவைகளை தீர்த்த பின்பு யாருக்கும் தேவையில்லாதவனாய் என்னை மாற்றிக் கொண்டாயிற்று. உயிரைச் சுமந்து கொண்டிருக்கிறேனென்ற கள்ளப் பெருமிதம் கொண்ட உடலைப் பொதியெனச்  சுமந்து சிரித்தபடியே உயிராய் கிளம்பியாயிற்று.

கால்களின் திசைகளை தயவு செய்து கணித்து விடாதே என் புத்தியே, கனவுகள் என்று எந்தக் கருத்தையும் விஸ்தரித்துப் பார்த்து விடாதே என் மனமே..! நான் காலப் பள்ளத்தை அறிவினை உடைத்தெறிந்து தாண்டி இருக்கிறேன். கற்பிதங்கள் கொண்ட வாழ்க்கையை தீயிட்டுக் கொளுத்திய திருப்தியில் நடந்து கொண்டிருக்கிறேன். வாழ்க்கையின் வடிவம் தேவைகளில் இல்லை. வாழ்க்கையின் வடிவம் தேவைகளற்றது. நிபந்தனைகளற்றது... கொள்கைகளற்றது... சிந்தனைகளற்றது. துள்ளியோடும் புள்ளி மானின் தேவைகளை தீர்த்துக் கொள்ள அது யாதொரு கருத்தும் எடுத்துக் கொள்வதில்லை. இட்ட பிச்சையை புசிக்கும் ஞானத்தை பேரிறை இயற்கையாக்கி வைத்துவிட்டு மனிதனை மட்டும் செயற்கையாக்கி வைத்து விட்டது.

எங்கோ செல்லட்டும் என் பயணம். யாருக்காகவும் இல்லாது மரிக்கட்டும் எனது உயிர். ஏதோ ஒரு கானகத்தினூடே செல்லரித்துப் போகட்டும் இந்த உடல். யாசகனுக்கு என்ன திட்டம் வேண்டி இருக்கிறது. இட்டால் பிச்சை, இடாவிட்டால் பசி. எந்தச் செடியும் காய்கறியை விற்பனைக்காய் உற்பத்தி செய்வதில்லை. எந்த சுனையும் பொருள் வாங்கிக் கொண்டு தாகம் தீர்ப்பதில்லை. விளைபவைக்கு என்ன வியாபார யுத்தி தெரியும்? இயற்கையை செயற்கையாக்கி வர்ணமடித்து, அலங்காரம் செய்து நான் செய்தேன் என்று கூறி பெருமையடித்துக் கொள்வதைத் தவிர வேறு என்ன தெரியும் இந்த மனிதர்களுக்கு..?

இருந்ததைதானே நீ கூட்டிக் கழித்து கண்டேன் என்கிறாய்..? எல்லாவற்றையும் நீ கூட்டிக் கழிக்கிறாய் உன்னை யார் கூட்டிக் கழித்தது...? உன் ஒவ்வொரு இதயத் துடிப்பிற்கும் இடைப்பட்ட பேரமைதியில் படுத்துக் கிடப்பது யார்...? நான் யாசகன். எனக்கு மனிதர்களின் கூட்டு தேவையில்லை. அடர் கானகங்களில் வழிந்தோடும் நீர் என்னிடம் என்ன பேரம் பேசி விட்டா தண்ணீர் குடிக்கச் சொல்லப் போகிறது...? பறிக்க ஆளின்றி மண்ணில் விழுந்து கிடக்கும் கனிகள் என்ன.. நம்மிடம் காசு கொடுத்து விட்டு கை வை என்றா சொல்லப் போகிறது...?

வாழ்க்கை உங்களுக்கு அருளப்பட்டது. நீங்கள் வாழ்க்கையை நாசப்படுத்தினீர்கள். இப்படியாய் வாழ்க்கையை நாசப்படுத்தி விட்டு அதை வரலாறு என்றீர்கள். மனிதர்கள் மனிதர்களை அடக்குவதைப் பெருமை என்றீர்கள். வலு உள்ளவனைத் தலைவன் என்றீர்கள்..., அழகாயிருந்த எல்லாவற்றையும் ரசிக்க மறந்து அடைய நினைத்தீர்கள்...

உங்களைச் சுற்றி வெளிச்சத்தை ஏற்படுத்தி சந்தோசத்தை எல்லா பாகங்களிலும் நிறைத்து வைத்திருந்தது இயற்கை என்னும் பேரிறை.. நீங்கள் கட்டுப்பாடுகளைப் போட்டுக் கொண்டு ஒழுக்கம் என்னும் பொய்யைச் சுமந்தபடியே எல்லா வெளிச்சத்தையும் அணைத்து விட்டு இருளில் புலம்பிக் கொண்டிருக்கிறீர்கள்...!  இயற்கைக்கு தெரியாத ஒழுக்கமா என்ன? பூமியின் ஒழுக்கத்தில்தான் உங்களின் இரவும் பகலும் தனக்கு 24 மணிநேரம் என்று கணக்கிட்டுக் கொண்டது. அது சூரியனை சுற்றும் ஒழுக்கம் தான் உங்களின் வருடமாகிப் போனது..?

அதன் ஒவ்வொரு நகர்வும் உங்களுக்கு காலங்கள் என்று போதிக்கப்பட்டது. இயற்கையின் ஒழுக்கம் உங்களுக்கு வாழ்க்கையைக் கொடுத்தது. நீங்கள் உருவாக்கிய ஒழுக்கங்கள் உங்களைப் பைத்தியக்காரர்களாக்கி வைத்திருக்கிறது. ஆமாம்...

நாடென்று ஒரு ஒழுக்கம் உண்டாக்கி எல்லைகளை வகுத்துக் கொண்டீர்கள். என்னவாயிற்று..? எல்லைகள் கடந்து கால்கள் பதித்தால் மிருகமென மாறி உயிர் பறித்துக் கொண்டீர்கள். மொழியென்ற ஒரு ஒழுக்கத்தை பின்பற்றி பெருமைகள் பேசிக் கொண்டீர்கள். என்ன ஆனது..? உங்கள் மொழியே பிராதனமென்று கூறி சக மனிதரிடம் வன்மம் கொண்டீர்கள். மதமென்ற ஒரு ஒழுக்கத்தையும், சாதியென்ற ஒரு கட்டுப்பாட்டையும் ஏற்படுத்திக் கொண்டு மனிதரை மனிதர் ஈனப்படுத்தி கொலைகள் செய்து கொண்டீர்கள்? இப்படி எதை எதையெல்லாம் ஒழுக்கம் என்று இயற்றினீர்களோ அவை எல்லாம் உங்களின் அழிவுக்கான மரண சாசனம் ஆகிப் போய்விட்டது.

வழிமுறையை சொன்ன ஞானிகளை எல்லாம் கொன்று போட்ட உங்களின் ஒழுக்கங்கள், பல ஞானிகளின் கூற்றை வசதிக்கேற்ப மாற்றிக் கொண்டு விட்டு அந்த அயோக்கத்தனத்திற்கு துணையாய் அவர்களின் பெயர்களை போட்டுக் கொண்டது.

இதோ...உங்கள் ஒழுக்கங்களை எல்லாம் என் காலடியில் போட்டு மிதித்து விட்டேன். இப்போது நான் ஒரு யாசகன். யாசகம் என்பது பிச்சை அல்ல. யாசகம் என்பது வாழ்க்கை. யாசகம் என்பது தியானம். யாசகம் என்பது தான் யாருமல்ல என்னும் அகங்காரம் அழிக்குமொரு வித்தை. சூரியனிடமிருந்து  பெற்ற பூமியின் யாசகத்தில் பகல்களைக் கொண்டாடும் பிச்சைக்காரர்கள்தானே இந்த பூமி முழுதும் நிரம்பிக் கிடக்கிறார்கள். என் வார்த்தைகளை  எல்லாம் எரித்து விட்டேன். என் சொற்கள் எல்லாம் பட்டுப் போய்விட்டன. என்னைச் சுற்றிலும் என்னை அடையாளம் காண எந்த மனிதரின் அவசியமும் எனக்குத் தேவையில்லை. போதும் நான் புலனறிவோடு வாழ்ந்தது.

எப்போதும் பேசாத மலைகள், எப்போதும் பேசும் மரங்கள், பாதுகாப்புக்காய் வன்மம் கொள்ளும் விலங்குகள், யாருக்காகவும் நிற்காத நதி என்று என் முன் எதிர்ப்படும் எதுவுமே என்னிடம் நான் யாரென்று விசாரிக்கப் போவதில்லை. நான் யாருமில்லை என்பதை மனிதர்களிடம் சொல்லி சொல்லி நான் அலுத்துப் போய்விட்டேன். மனிதர்களின் ஆறாம் அறிவுக்கு எட்டாத பகுத்தறிவின் உச்சம் மட்டுப்பட்ட நிலையிலிருக்கும் யாவும் விளங்கி நடக்கும் விந்தையை என் விழிகளால் வாங்கிக் கொள்ளப் போகிறேன்.....

தொப்புள் கொடி அறுத்து நான் விட்டுப் பிரிந்த பெற்றவளின் நினைவுகளை எத்தனை முயன்றாலும் அறுக்க முடியாத அஞ்ஞானத்தின் ஓரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும்  பிரபஞ்சத்தின் மூலத் தொடர்பை, கருவறைக்குள் மிதந்து கொண்டிருக்கையில் உணவு கொடுத்த பெருங்கருணையின் அன்பை, அப்போது என் உடல் நிறைத்த பிராணனை... இதோ.. இதோ நான் பரிபூரணமாய் அனுபவிக்கத் தொடங்கி விட்டேன்....

எங்கிருந்து பிச்சை இடுகிறானோ அந்தக் கருணா மூர்த்தி... இதோ புலன்களை எல்லாம் பூட்டிக் கொண்டு தொடங்கி விட்டது இந்த யாசகனின் பயணம்....

அவித்தை அழிக்கும்
வித்தைக்காய்...
கொண்டேன்
ஒரு ஜட சரீரம்...!

வித்தையானவன்
வித்தையறிந்தவன் சித்தம்
இதுவெனெ கிடந்து
போக எத்தனிக்கையில்
நித்தம் நடந்திடும் 
நாடகங்களில் பித்தனாகிறேன்
நான்!

என்று தொடங்கியோ..?
என்று முடியுமோ...?
இந்த சத்து சித்துவின் ஆனந்தம்!
பற்று கொண்டு நான்
வாழ்ந்து அழிகையில்
வந்து போகுமோ 
ஒரு காரணம்?


தேவா. S



Comments

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...