மானம் மப்பா இருக்கு மாப்ளே....மழை பெய்ஞ்சுதுன்னா தேவலாமப்பு.....வெதச்சு வச்சது எல்லாம் கண்ண முழிச்சு எந்திரிச்சுக்கிடுமப்பு...துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டேன். குப்புத்தேவருக்கு எப்பவுமே கிறுத்துருவந்தேன்..இன்னமும் வெள்ளாமைய நம்பிக்கிட்டு நீ அது கூடயே மாரடிச்சுகிட்டு இரு பெரியப்புன்னு அவன் கேலி பேசுனத கண்டுக்காம நான் இந்தாப்பு காசுன்னு டீக்கு காசக் கொடுத்து புட்டு எந்திருச்சு வந்துட்டேன்.
மண்ணோடயே கெடந்தவைங்கதான் எங்க பாட்டன் பூட்டன் அம்புட்டு பேரும். வெள்ளாமை செய்றவைங்கன்னா அம்புட்டு மவுசு மருவாதை இருந்த காலம் மலையேறிப் போச்சு, இப்ப எல்லாம்...நம்மூரு வயலுக்குள்ள எல்லாம் காரு கண்ணி வந்து போகுது. அம்புட்டு நிலத்தையும் பிளாட்டுப் போட்டு செண்டு 50,000ம்னு வித்துப்புட்டு ஊருசனம் பூரா டவுனுக்குப் போயிருச்சுக.... என்னைய மாறி இன்னமும் வெள்ளாம காடுன்னு கட்டிப் புடிச்சுக்கிட்டு கடக்குற சனம் கொஞ்சப் பேருதேன்....! வெவசாயம் பாத்த செனம் வெவரங்கெட்டுப் போயி என்ன என்னமோ வேலை செஞ்சு சம்பாரிக்குதுக....! யாருமே வெள்ளாம செய்யாம போயிட்டா எல்லாரும் எப்புடிப்பு சாப்புடறது..?
சூசை மயனும் என்னைய மாதிரித்தேன். எம்புட்டு பெரச்சினை இருந்தாலும் வெவசாயத்த உடாம மொத்தமா சாவியாப்ப் போனாலும் சிரிச்சுக்கிட்டு மறுவடிக்கா உழுதுபுட்டு வெதைச்சிக்கிட்டு திரிவான்....ஆத்துப் பாசனம் இல்லாத மக்கமாருக நாங்க....வானத்த, வானத்த அண்ணாந்து பாத்து எப்படா ரெண்டு தூத்தப் போடும்னு கையெடுத்து கும்புட்டுக்கிட்டே இருப்போம். எங்கூரு கம்மாவ வெட்ட ஊருசனமே வேல பாத்து இருக்குன்னா பாத்துக்கங்களேன். கடலு மாதிரி கம்மாதேன்.. மழத் தண்ணி இல்லாம.. சுருங்கிப் போன செவத்தா அம்மாயி மாதிரி...ஊரோரமா இழுத்துக்கவா பரிச்சுக்கவான்னு கெடக்குது...! மழை பெஞ்சா கம்மா நெறையும், மழை ஒழுங்காப் பேய மனுசன் ஒழுங்கா இருக்கணும்...ஒண்ணு விடாம அம்புட்டு மரத்தையும் வெட்டி வித்துப் புடுறாய்ங்க..அப்புறம் மழை எப்புடி நல்லாப் பேயும்....
யோசனையோடவே போறியளே...ஏப்பு...மழை பேயுறது கூடவா தெரியல...செத்தவடம் நின்னுட்டுப் போங்கப்பு....வாணியவீட்டு முருகாயி பேத்தி கத்துன கத்துல நான் கிறுக்கோண்டே போயிட்டேன்....ஏத்தா.. ஏத்தா..இருக்கட்டுமத்தா...மழை வேணும்னுதானேத்தா காத்துக் கிடக்கேன்...பெய்யட்டுமத்தா... என்ன செஞ்சுப்புடும் இந்த மழை நம்மள...
காலம் பூரா மழையோட மல்லுக்கட்டுன பயபுள்ளைகதானே நாம எல்லாம்....பேசிக்கொண்டே நடந்து கொண்டிருந்தேன்.
கம்மாய தூறு வாருனப்ப எனக்கு 7 வயசு இருக்கும். எங்கப்பு.. ஆத்தா எல்லாம் கம்மாயிலதேன்...நின்னாக ஏன் ஊருசனமே அங்கனதான் இருந்துச்சு... அத்தனை அடி உசரத்துல கரைய ஒசத்தி, கம்மா மண்ண வெட்டி வெட்டி சேரும் சகதியுமா கரை ஓரமா கொட்டி கொட்டி...அம்புட்டு சந்தோசமா வேலை செஞ்சுகிட்டு இருந்தோம். என் காலெல்லாம் சகதி, என் உடம்பெல்லாம் சகதி.....மண்ணுக்குன்னு ஒரு பாசம் இருக்கப்பான்னு...சேத்தையும் சகதியவும் பாசத்தோட சேத்துப் பூசிக்கிட்டு வேலை செஞ்சுகிட்டு இருந்தோம்...
கம்மாயா தூறு வாருனாத்தானே மழ தண்ணி பேஞ்சா வந்து நிறையும்...மண்ணு மூடிப் போயி மேடாப் போச்சுதுன்னா...பொறவு மழத்தண்ணி எங்க போயி நிறையும்.. அங்குட்டு இங்குட்டு ஓடி மொத்த தண்ணியும் சேதாரமாயி போயிடுமில்ல..., வெள்ளாம செய்றது ஒரு சொகமப்பு....மனுச மக்களோட சேந்தி வேல செஞ்சாலும் பேச்சு கொறவாத்தான் இருக்கும். பேசிக்கிட்டே இருந்தம்னாக்கும் வேலை ஓடி அடையாது...பாட்ட கீட்ட பாடிக்கிட்டு கேட்டுக்கிட்டு ஓடிக்கிட்டே இருப்போம்.
வெத்து வயல தண்ணி கிண்ணி இல்லாம கூரான கலப்பைய வச்சு புழுதி பறக்க உழுகுறப்ப...பூமியில இருந்து கிளம்புற சந்தோசத்தை கலப்ப நமக்கு காமிச்சு கொடுத்துருமுய்யா....கர்ர்ர்ர்ர்ர்ன்னு சத்தத்தோட மாடுகள அடிச்சு பத்திக்கிட்டு நவுரும் போது மொத்த ஆகாசமும் நம்ம தலைக்கு மேல நின்னு ஹோ.ன்னு நம்மள வேடிக்கப் பாத்துகிட்டு இருக்கும். வரப்போறமா இருக்குற ஆவாரம்பூ, காட்டாமுணக்க, இன்னும் எல்லா சின்ன சின்ன புல்லுகளும், முள்ளுகளும் கைகொட்டி சிரிக்குமப்பு...இந்தா உழுதுட்டான்...இந்தா தண்ணி பாச்சப் போறான்னு பேசிச் சிரிச்சுக்கிட்டே காத்துல தலையாட்டி ரசிக்குமுங்க நம்மள பாத்து. தண்ணி பாய விட்டு மறுக்கா உழுகுறப்ப சேத்தோட சகதியோட வச்ச கால எடுக்க முடியாம மண்ணு கால கெட்டியா பிடிச்சுக்கிட்டு என்ன பெத்த ஐயா....எங்க போற நீ செத்த நேரம் இங்கதான நில்லுப்புன்னு பெத்த ஆத்தாளா நம்மள இழுத்து புடிச்சுக்கிறும்...
எம்புட்டு நாளு காலை எடுக்காம அப்படியே நின்னுக்கிட்டு நான் அழுதுக்கிறேன் தெரியுமா...ஒரு நா அப்பிடித்தேன்.. ஏரோட மாட்டோட நான் வயக்காட்டு சகதியில நின்னுகிட்டு கண்ணக் கசக்கிட்டு இருக்கயில, நான் கட்டிக் கூட்டியாந்துருக்கேனே...சரசு...சோறு கொண்டு வந்தவ...என்னைய கூப்புட்டு என்னாண்டு கேக்கமா அங்கிட்டு இருந்த போயிக்கிட்டு சேர்வாரு வீட்டு அன்னமயிலு, ஒத்தவீட்டு முருகேசன், பட்டாளத்தான் பொண்டாட்டி செகப்பின்னு அம்புட்டுப் பேரையும் கூப்புட்டு இங்க பாருங்களே....இந்த மனுசன் கிறுக்கொண்டு போச்சுன்னு சொல்லி சிரிக்கிறா பொசகெட்ட சிறுக்கி...
நம்ம புத்தி கிறுக்குப் புத்திப்பு மனுசங்கள விட..ஆடு மாட்டையும் சோறு போடுற நெலத்தையும், மழை கொடுக்குற ஆகாசத்தையும், வயக்காட்ல வேலை செய்யயில கூட பேசிச் சிரிக்கிற செடி கொடியளோடயுந்தேன் நமக்கு சினேகம் அதிகம். என் வூட்டு, ஆடு மாடுகளோட நான் பேசுற அளவுக்கு....ஆளுப்பேருககிட்ட பேசுறது இல்லை. விதைச்சமா, நட்டமா, தண்ணி பாச்சுனமா, அறுத்தமா, வித்தமா மிச்சத்த வீட்ல சாப்பாட்டுக்கு வச்சமான்னு போயிகிட்டே இருக்குமப்பு எங்க பொழுது எல்லாம்...
சோற காசு கொடுத்து வாங்கித் திங்கறது கேவலம்னு எங்க பெரிய அய்யா சொல்லுவாக, ஏன்டா பயலே நீ திங்கறதுக்கு நீ வெள்ளாமப் போட்டுக் கூட திங்க முடியலேன்னா என்னலே ஒனக்கு அம்புட்டு திமிறுன்னு...வெவசயாந்தேன் உன் வேலை அதை ஒழுங்காச் செய்யி....அதுதேன் உனக்கும் எனக்குந்தெரியும். அடுத்தவன் வேலைய நீ செய்யப் போனா அதை ஒன்னால ஒழுங்கா செய்ய முடியாது. நீ வெள்ளாமை செஞ்சு கொடு...இந்த ஒலகம் அதைச் சாப்டட்டும்....வெள்ளாமை பாக்குறது சாமி செய்ற சோலியப்பேன்னு சொல்லுவாக...
இன்னிக்கு லேசு பாசா மழை பெய்யிது...தச்சு வச்ச வெதையெல்லாம் சிரிச்சுக்கிட்டே கண்ணு முழிச்சுறுக்குமப்பு... அப்புடி, இப்புடி மிஞ்சுன 5 ஏக்கர வச்சுக்கிட்டு என் வாழ்க்கைய ஓட்டிகிட்டு இருக்கேன்...
கூறு மாறு கெட்டுப்போச்சாய்யா ஒனக்கு....? இப்புடி நனைஞ்சுக்கிட்டு வர்ற...முடியாமப் போயி படுத்தா என்னத்த செய்யிறது...முந்தானைய கொடுத்துக்கிட்டே வைஞ்ச சரச நிமிந்து பாத்தேன்...
மழ என்னத்த செய்ஞ்டுடப் போகுது...? போடி லூசு சிறுக்கி...தலைய தொவட்டிக் கொண்டே....திண்ணயில ஒக்காந்தேன்...
ஏங்க....மாப்புளயோட தாய் மாமான் வந்தாப்ள...
"என்னத்தா இப்புடி சொணங்குறீக...பய நல்ல வேலை பாக்குறேன்....கயல மலேயாவுக்கு கூட்டிக்கிட்டும் போயிருவாம்....75 பவுனுக்கு ஒரு பவுனு கொறைச்சுப் போட்டினாக்கும் அப்புறம் வேற எடத்ததேன் நாங்க பாக்கணும். கையில ஒரு ரெண்டு லெச்ச ரூவா கொடுத்துருங்க...அப்புறம் எங்க அக்காகாரி வேற எங்குட்டாச்சும்...மாறிப்போயிட்டான்னா என்னைய கேக்கப் புடாது, நல்ல சம்பந்தம் அம்புட்டுதேன் சொல்லுவேன்...
ஒன் புருசன் ஒரு கிறுக்குப்பய...இன்னமும் வயலு வெள்ளாமன்னு கெடந்து ஏன் போராடிக்கிட்டு இருக்கான் இந்த பட்டிகாட்லயே கடந்து சாகணும்னு என்ன விதியா என்ன அவனுக்கு.... இருக்குற காடு கரைய வித்துப்புட்டு பேசி முடிங்கத்தா சீக்கிரம்....அடுத்த ஆவணில கல்யாணத்த வச்சுக்கிடலாம்...நீ சரின்னு சொன்னா அடுத்த முகுர்த்தத்துல தட்ட மாத்திகுடுவோம், அம்புட்டுதேன்"னு சொல்லிட்டு போறாப்புலங்க...." சரசு சொல்லியபடியே மூக்கைச் சிந்திக் கொண்டிருந்தாள்...
" ஏய் இந்த வெள்ளாம வெளையட்டுமடி....இருக்குற காசோட சேத்திப் போட்டு செய்யலாம். நான் எங்கடி போவேன் பொசுக்குன்னு 75 பவுனுக்கு..? இருக்குற பொட்டு பொடிசு எல்லாம் சேத்திப் பாத்தாலும்....40 பவுன தாண்டாதடி. மக மகண்டு கயல மட்டும் பாத்தா போதுமா...ராசுகுமாரு இப்பத்தேன் காலேசு படிக்கிறான்...இவள அடிச்சு புடிச்சு ஒரு பட்டதாரி ஆக்கிபுட்டேன். அவனையும் ஆளாக்கணும்ல....சரியா வந்தா பாக்கலாம் இல்லேன்னா வேற சம்பந்தம் பேசிக்கிறலாம்.." சரசை நிமிர்ந்து பார்த்தேன்...
ஒமக்கு நாட்டு நடப்பு ஒண்ணுமே தெரியாதுய்யா...கயலுக்கு இப்ப 23 வயசு....அவளுக்கும் மாப்பிள்ளய புடிச்சுப் போச்சு....அவனத்தேன் கட்டுவேன்னு ஒத்தக்காலுல நிக்க்கிறா...அவன் மலேயாவுக்கு போயிட்டான ராசுகுமாரையும் கூட்டிக்கிட்டு போயிடுவாயா....அதனால.................
சரசு இழுத்தாள்.
அதனால....என்னடி....?
பேசாம வயக்காட்ட வித்துப்புட்டு...புள்ளையக் கட்டிக்கொடுய்யா....மிச்ச இருக்க காசுல திருச்சி நாடி போயி ஒரு கட கண்ணி வச்சிப் பொளச்சுக்கிடலாம்....
அடி சண்டாளி என் கொலைய அறுக்கப்பாத்தியடி....எங்கப்பன், பாட்டன் எல்லாம் அலைஞ்சு திரிஞ்ச மண்ணுடி..அதை வித்துப்புட்டு பொழப்பு பொழக்கிறதுக்கு நாண்டுகிட்டு சாகலாம்...கன்னத்தில் விழுந்த அறைக்கு பதிலாய் சரசு போட்ட கூச்சலில் உள்ளே இருந்து கயல் வெளியே எட்டிப்பாத்தது...
சண்டாளி தெரியும்டி ஒஞ்சோலி மசுரு....வேற மாப்பிள பாத்துக் கட்டிக் கொடுக்கலாம் போ...நெலத்த விக்கிறதுக்கு நான் நாலு மொழக் கயிறுல தொங்குறுவேன்....
கையில் கிடைத்த விளக்குமாத்தை சரசு மீது வீசினேன்.
ஏத்தா...ஒண்ணுமில்லத்தா நீ உள்ள போ...ஒங்காத்தாக்கு கிறுக்குப் புடிச்சுப் போச்சு...நீ போத்தா அப்பாக்கு காப்பித்தண்ணி வச்சுக் கொடுத்தா...நான் கயலைப் பார்த்தேன்.
அப்பா...இந்த மாப்ளயவே எனக்கு கட்டி வைங்கப்பா..பத்துப் பேரு என்ன மறுக்கா மறுக்கா பாக்க வரவேணம்ப்பா...நல்ல இடம்னுதேன் என் ப்ரண்ஸ் எல்லாம் சொன்னாக....அம்மா பாவம்பா..எப்டியாச்சும் என்ன கரைத்தம்னுதான் ஒங்க கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கு....கயல் என் காலில் விழுந்து அழுதது.
ஆத்தா எந்திரித்தா....கயலை தூக்கி கட்டியழுதேன். சரித்தா பாத்துக்கிறுவோம்...உள்ள போ...அவள் கண்ணைத் துடைத்து உள்ளே அனுப்பினேன்...!
ஒத்த புள்ளைய இப்புடி கலங்க விடக்கூடாதுதேன்...படிச்ச புள்ள வயசும்...23 க்கு மேல ஆச்சு.......
" அய்யா...வெவசாயம்தாய்யா நமக்கு உசுரு...நீ ஊருக்கே சோறு போடப் பொறந்த பய....சோத்த காசு கொடுத்து வாங்கித் திங்கிற கேவலம் உனக்கு வரவேக் கூடாதுப்பு, அது ஒரு வெவசாயிக்கி அவமானம். இது மண்ணு இல்லய்யா...நம்ம உசுரு....நான் உழுதுருக்கேன்....ஒங்கய்யா உழுதுருக்காக...உன் பாட்டன் பூட்டன் அம்புட்டுப் பேரும்....ஏர் பூட்டி உழுத மண்ணுய்யா....
என்னைய, உன் பெரியப்பன, சித்தப்பன.. ஒங்கத்தை மாரன்னு சொல்லி அம்ம வம்முசத்தையே... காப்பத்துன பூர்வீக சொத்துயா... விவசாயத்தை விட்டுறாதப்பு..."
செத்துப் போன அப்பனும், ஆத்தாளும், தாத்தனும், பாட்டியும், கையெடுத்து உள்ளுக்குள் அழுது கொண்டிருந்தார்கள். வாழ வாழ வாழ்க்கைய கொடுத்த விவசாயம் இப்போ செவலை புள்ள மாதிரி செழிப்பழிஞ்சு போச்சு....அதே பொழப்பா இருந்த எங்க வாழ்க்க செத்துப் போச்சு...
" நெலத்த வித்தா இருக்குற கடன அடைக்கலாம்..புள்ளைய கட்டிக் கொடுக்கலாம்... டவுனுக்குப் போயி ஏதோ ஒரு கடகண்ணி வைக்கலாம்... எம்புட்டு நாளைக்கியா இந்த கஷ்டம்...ஊருச்சனமே பொழக்கிற வழியப்பாத்து ஓடிப்போயிருச்சு...நீ மட்டும் ஏய்யா..இப்புடி...உன்னோட சேத்து இன்னும் மூணு உயிரு இருக்குன்னு நெனச்சுப் பாருயா..." சரசு புலம்பி கொண்டிருந்தாள்...
மழை விட்டிருந்தது.....நான் டவுனுக்குப் போயி உரக்கடைகாரன் பேரன் பிளாட்டுப் போட்டு விக்கிறான் அவனைப் பாத்துட்டு வாரேன்....
பொசுக்கென்று எழுந்து துண்டை உதறிப்போட்டு நடந்தேன்..
அடுத்த வண்டி வர இன்னும் அரமணி நேரம் இருக்கப்பே...டீ குடிக்கிறியா...டீய எடுத்துக்கிட்டு கிட்ட வந்த குப்புத்தேவர்....
ஏண்ணே அழுகுற.....தோளில் கையப் போட்டான்.....
தேவரே...............கத்திக் கொண்டு குப்புவின் தோளில் சாய்ந்து தேம்பினேன்...
"சாடை மாடையா மழை பேஞ்சுருக்கப்பு....வெதச்சவன் எல்லோருக்கும் கொண்டாட்டந்தேன்... " யாரோ ரோட்டில் பேசிக் கொண்டு சென்று கொண்டிருந்தனர்....
.......
.......
......
........
ஏப்பு காரு வந்துடுச்சு போகலையா....குப்புத் தேவர் என்னை உசுப்பி விட...
எழுந்து வயக்காட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்...
தேவா சுப்பையா...
Comments
நம்ம ஊர்க்குள்ள மழை நேரத்துல வரப்புல நடந்து போன மாதிரி இருந்துச்சுன்னா...
எழுத்து... அப்படியே வெளஞ்சு நிக்கிற பயிருல விழுந்த சாரலாட்டாம்.... அருமை.
முடிவு கலக்கல்.
இன்று வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூ அறிமுகம்மாகியுள்ளது சென்று பார்க்கவும் http://blogintamil.blogspot.com/2013/09/blog-post_3.html?showComment=1378165049455#c4515847910923155297வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-