Skip to main content

வருத்தப்படாத வாலிபர் சங்கம்...!


சிவகார்த்திகேயன் மாதிரி நடிகர்கள் வேற ஒரு தளத்துக்கு தமிழ் சினிமாவ கொண்டு சேர்க்கப் போறது என்னமோ கண்டிப்பா நிஜம். காம்பியரிங் செய்யும் போது சின்னத்திரையவே கலக்கு கலக்குன்னு கலக்கிட்டு இருந்த புயல் பெரிய திரைய சும்மா விடுமா என்ன..?! அதே வேகம் அதே எனர்ஜியோட அவர் அடிச்சிருக்க அடுத்த சிக்ஸர்தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். எந்த சத்தமும் இல்லாம எது தனக்கு வருமோ அதை வச்சு ஆரம்ப காட்சியில இருந்து படம் முடியுறவரைக்கும் பட்டைய கிளப்பி இருக்கார். தமிழ் சினிமாவுல இது வரை மையப்படுத்தி வச்சிருந்த அந்த மாஸ் ஹிரோ பில்டப் இனிமே ஒண்ணும் வொர்க் ஆகாது  போல.

எம்.ஜி.ஆரோட காலத்துல உச்ச கட்டத்துக்கு போன இந்த நடிகன கடவுளா பாக்குற மரபு, அந்த மாயபிம்பம் ரஜினி கமலுக்கு அப்புறமா உடைஞ்சு சரிஞ்சு விழ ஆரம்பிச்சு ரொம்ப காலமாச்சு. கைய சுண்டிக்கிட்டு பஞ்ச் டயலாக் பேசுற பில்டப்ஸ் எல்லாம் இனிமே வியாபாரம் ஆகாது. திரையப் பாத்து தலைவா அப்டீன்னு தமிழ் ரசிகன் தொண்ட வலிக்க கத்திக் கத்தி கொழு மோர் காச்சி குடிச்சதுதான் மிச்சம். இன்னும் சொல்லப் போனா தமிழ்நாட்ல அரசியல்வாதிகள்ன்ற பேர்ல மகாராஜாக்களும் மகாராணிகளும் அரியணை ஏற தமிழ் ரசிகர்களோட வரைமுறை இல்லாத சினிமா மோகம்தான் காரணம்னு அடிச்சு கூட சொல்லலாம். திரையில ஏழைங்கள இழுத்து வச்சு கொஞ்சுன எம்.ஜி.ஆர் நிஜத்துலயும் அப்டியே இருந்து பாட்டாளி வர்க்கத்தை காப்பாத்திடுவாருன்னு ஒவ்வொரு ரசிகனும் நம்பி தொண்டனா மாறின இடம் தமிழகத்துக்கு ப்ளஸ்ஸா இல்லை மைனஸ்ஸான்னு எனக்குச் சொல்லத் தெரியல....

ஓப்பனா சொல்லப்போனா அறிஞர் அண்ணாவிற்குப் பிறகு மிகப்பெரிய புரட்சி ஒன்றும் தமிழகத்தில் நடந்துடல!  மூணு ரூபாய்க்கு திட்டத்தை அறிவிச்சுட்டு 2 ரூபாயை பாக்கெட்ல போட்டுக்கிட்ட ஆளுங்கதான் இங்க அதிகம். எம்.ஜி.ஆரின் திரையும் நிஜமும் ஓரளவிற்கு ஒன்றாய் இருந்துச்சு. எம்.ஜி.ஆரை பாத்து அதே மாதிரி அரசியலுக்கு வந்து மக்கள் ஆதரவைப் பெறலாம்னு நினைச்ச சிவாஜிய தமிழக மக்கள் ஏத்துக்கல...ஆனா எம்.ஜி.ஆர் ஃபார்முலாவ  நேத்திக்கு வந்த விஜய் வரைக்கும் பின்பற்ற நினைச்சு அப்போ அப்போ கை கால்ல கட்டு போட்டுக்கிட்டு இப்போ மூக்கு முகறை எல்லாம் பேந்து போய் தலைவாக்கள் கொடுத்த அனுபவத்துல சுருண்டு கிடக்குறாங்க.

ரஜினிதான் இதுல உஷாரா எஸ்கேப் ஆன ஆளு. அவர் இந்த தலைவர் மாயையில இருந்து வெளியில வர அவருக்கு அவரோட ஆன்மீகம் கடுமையாக உதவியது. பற்று இருந்திருந்தால் இந்நேரம் தேரை இழுத்து தெருவுல விட்டு இருந்திருப்பாய்ங்க.. நிம்மதியா அவர் இருந்திருக்க முடியாது. ரஜினிக்கு இருந்த சினிமா மாஸ் சினிமாவுக்குன்னு அவர் உணர்ந்து விலகினார். ரஜினிக்குப் பிறகு பஞ்ச் டயலாக்ஸ், அப்புறம் திரையில தலைவன தேடுற ஒரு மனோபாவம் உடைஞ்சு விழத்தான் ஆரம்பிச்சுது. மக்கள் மனம் மாறிக் கொண்டிருந்த போது தப்பித்த ஒரு நடிகர் ரஜினி, வகையாய் மாட்டிக் கொண்டவர் விஜயகாந்த். விஜய்காந்த் இன்னிக்கு எதிர்கட்சி வரிசையில் உட்கார்ந்து இருப்பதற்கு காரணம் அம்மாதான் அப்டீன்றது நேத்து பொறந்த கொழந்தைக்கு கூட தெளிவா தெரியும். ஆட்சிய பிடிக்கிற அளவுக்கு அவரோட சினிமா இமேஜ் கண்டிப்பா அவருக்கு உதவாது. ஏதாவது அதிசயம் நடந்தாதான் உண்டு. தொழில் நுட்ப வளர்ச்சி இப்போ அசுரத்தனமா இருக்கு...

பட்டிகாட்ல குடிசையில இருக்க ஏழை ஜனங்களுக்கு மத்தியில நாட்டு நடப்பு எப்டியோ போய் சேந்துடுது. நியூஸ் பேப்பர் பாத்து, ரேடியோல நியூஸ் கேட்டு, டிவில நியூஸ் பாத்து அரசியல் கட்சியோட மீட்டிங் போய் உட்கார்ந்து, அரசியல் நிலவரம் தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமே இப்போ இல்லாமப் போச்சு. எல்லா மொபைல்லயும் கேமரா இருக்கு. செய்தி பரிமாற்றம் ரொம்ப வேகமா நடந்துகிட்டு இருக்கறதாலதான்....இணையத்தை இன்னிக்கு எல்லா அரசியல் கட்சிகளும் சூழ்ந்துகிட்டு இங்கே அதிகாரப்பூர்வமா நியமிக்கப்பட்டிருக்க தங்களின் பரப்புரையாளர்கள வச்சுக்கிட்டு....ரொம்ப வேகமா தொடர்ச்சியா தங்களோட கட்சிகளுக்கு பரப்புரைகள் செஞ்சுட்டு இருக்காங்க..!

என்னதான் கூவி கூவி விளம்பரம் செஞ்சாலும் தலைவா புட்டுக்கிட்ட மாதிரி நிறைய அரசியல் கட்சிகள மக்கள் தூக்கி எறியப் போறாங்க. பழைய பருப்பு இனி வேகவே வேகாது. வீட்டுக்கு ஒரு பய 17 வயசு தாண்டின இளைஞனா இருக்கான், அவன் கையில கணிணி இருக்கு. அவனை யாராலும் வசியம் செய்ய முடியாது. க்வாட்டருக்கும் பிரியாணிக்கும் கட்சியில சேந்தவைங்களுக்கும், கூட்டங்களுக்குப் போயி வாழ்க  ஒழிக கோஷம் போட்டவனுக்கும் இப்போ வயசாயிப் போயிடுச்சு ... இது இளைஞர்களின் காலம்.

அதனலாதான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மாதிரி படங்கள் அட்டகாசமா ஓடுது. சிவகார்த்திகேயன் மாதிரி நம்ம பக்கத்து வீட்டுப் பையன் மாதிரி பசங்க ஹீரோவா நடிக்க முடியுது.  ஆபத்பாண்டவன், அனாதை ரட்சகன் மாதிரியான ஹீரோவை மையமா வச்சு வந்த படங்கள பாத்து, பாத்து ரொம்பவே போரடிச்சுப் போன தமிழ் சமூகத்துக்கு இந்த மாதிரி படங்கள் ரொம்ப சிம்பிளா ரெண்டு ரோஸ்ட், சாம்பார், ஒரு காரச் சட்னி, கொத்தமல்லி சட்னி, தேங்காய் சட்னி வச்சு சாப்டுட்டு ரொம்ப ஹெவியா இல்லாத நிதானமான வயித்தோட எழுந்து வரமுடியுது.  

ஹீரோக்கள் காமெடின்ற பேர்ல பண்ற அட்ராசிட்டிய எல்லாம் ஏப்பம் விட்டு முழுங்கிட்டு  இயல்பான தன்னோட நகைச்சுவை உணர்வுகள் ததும்பிய ஹீரோ தமிழ் சினிமாவுக்கு ரொம்பவே புதுசு. சீன் பை சீன்  சூரியோட சேர்ந்துகிட்டு சிவகார்த்திகேயன் அடிக்கிற லூட்டி ரொம்பவே சூப்பர். இந்த மாதிரியான படங்கள்ல நடிச்சு கொண்டு போற தில்லு சமகாலத்துல சிவகார்திகேயன விட்டா ரேடியோ மிர்ச்சி சிவாவுக்கும் வாகை சூடவா சற்குணத்துக்கும் இருக்கும்னு நான் நினைக்கிறேன்.

இந்தப்படத்துல ஒரு பஞ்சாயத்து சீன் வரும். ஊர்ல திருவிழாவுக்கு திண்டுக்கல் ரீட்டாவா வச்சு ஆடல், பாடல் நடத்த ஊர்பெருசுகளான சத்யராஜ் & கூட்டணி கூட சிவகார்திகேயன் & டீம் மோதுற இடம்.....நிஜ சீரியசான பஞ்சாயத்து மாதிரியே ட்ராவல் ஆகி பட்டைய கிளப்புற காமெடி சீனா மாறியிருக்கும். சத்யராஜ் ரொம்ப சீரியசான வில்லனா இருப்பாரோன்னு நாம நினைச்சுக்கிட்டு இருக்கும் போது கதையோட போக்குல அந்த கேரக்டரையும் இயல்பா காமிச்சு இருக்க இயக்குனரை கண்டிப்பா பாராட்டியே ஆகணும். 

ரகுமானோட இசை உலகதரத்தை நோக்கி பயணிச்சு ரொம்ப காலமாயிடுச்சு, இளையராஜா சார் இசையமைக்க சரியான கதையம்சம் கொண்ட படங்கள் கிடைக்கிறது இல்லை. இந்த கேப்ல இமான் கும்கி மாதிரி படங்களுக்கு மண்ணின் மணத்தோட இசையமைச்சு பட்டி தொட்டி எல்லாம் பாடல்களைக் கொண்டு போய் சேர்த்தார். இந்த படத்துலயும்...செம குத்துப் பாட்டுக்கு சிவகார்த்திகேயனையும் பாடவச்சு இருக்கார். படம் பாக்குறவங்கள எழுந்து குத்தாட்டம் போட வைக்கிறதுக்கு இந்தப்பாட்டுனா... ஊதாக் கலரு ரிப்பன்னு இன்னொரு பாட்டு மனசுக்குள்ள தாளம் போட வைக்குது. இந்த மாதிரி மினி பட்ஜெட் படங்களோட சக்கரவர்த்தியா இமான் வளர்ந்துட்டு இருக்கார் என்பது உண்மை. படம் முழுசுமே சிவகார்த்திகேயனும் சூரியும் பூந்து விளையாண்டு இருப்பாங்க.. " சர்க்கஸ்னு சொன்னா சிங்கம் இருக்கணும்......சபைன்னு சொன்னா சங்கம் இருக்கணும் " போன்ற வசனங்கள்.. பஞ்ச் டயலாக் கதாநாயகர்களை நன்றாகே பஞ்சர் பார்த்திருக்கின்றன.

ஒரு நடிகனுக்காக படம் போய் பாத்து அந்த படம் நல்லா இருந்த காலங்கள் எல்லாம் மலையேறிப் போச்சு. மூணு மணி நேரம் அந்த திரைப்படம் நமக்கு ஏதோ கட்சிக் கூட்டதுக்கு போனது மாதிரியான பீலைக் கொடுக்காம, ஏதோ தேவன் எழுந்தருளி இருக்கிறார் பாவிகளே அவரைச் சந்தித்து உங்கள் பாவங்களை தீர்த்துக் கொள்ளுங்கள் அப்டீன்ற ரேஞ்சுக்கு விளம்பரம் செஞ்சுக்காத இயல்பான திரைப்படங்கள்தான் இனிமேல் தமிழ்நாட்டில் சக்கைப் போடு போடப் போகிறது....! நடிகனை நடிகனாய் பார்த்து சினிமாவை தியேட்டரோடு விட்டு விட்டு வரும் ரசிகர்ளுக்கு மத்தியில் சிவகார்த்திகேயன்கள் வருங்காலத்தில் சூப்பர் ஸ்டார்களாய் ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை...!

சினிமா தியேட்டரும் தேர்தலில் வாக்களிக்கும் வாக்குச்சாவடியும் வெவ்வேறு என்று என் தமிழ் மக்கள் விளங்கி ரொம்ப நாளாச்சு....பாஸ்...!!!!

வாழ்த்துகள் சிவகார்த்திகேயன்....!!!!!



தேவா சுப்பையா....





Comments

இது போல் வித்தியாசமான பாத்திரங்களில் பத்திரமாக ஜொலிக்க வேண்டும்... சிவாவிற்கு வாழ்த்துக்கள்...
அருமையாக எழுதியிருக்கிறீர்கள் அண்ணா...
வாழ்த்துக்கள்.
பக்கவாத்தியமாக வரும் நகைச்சுவை நடிகர்களின் பக்காவான நடிப்புதான் சி.கா வை காப்பாற்றிக்கொண்டிருக்கின்றது . இதே போல தொடர்ந்து நடித்தால் சந்தானம் தர ஆரம்பித்திருக்கின்ற சலிப்பை இவரும் கொடுக்க ஆரம்பித்துவிடுவார் .

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...