கர்ணன், குந்திதேவி, பஞ்ச பாண்டவர்கள், கெளரவர்கள் என்று கதைக்கான கரு என்னவோ மகாபாரதத்தில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டதுதான். அங்கே சூரியனை வணங்கியதால் சூட்சுமமாய் கருத்துத் தரித்துக் கொண்ட புராண குந்திதேவியை இந்த நவீன காலத்தில் கொண்டு வந்து காட்ட முடியாது அல்லவா? அதனால் சிறுவயதில் விபத்தைப் போல ஏற்பட்ட ஒரு கர்ப்பம், அந்த குழந்தை கூட்ஸ் வண்டியில் ஏற்றப்பட்டு ஆற்றில் மிதந்து வந்து சலவை செய்யும் ஒரு பாட்டியின் கையில் கிடைத்து விடுகிறது.
மிக பிரம்மாண்டமான கதைக்களம். சூப்பர் ஸ்டார், மெகா ஸ்டார், மாஸ்ட்ரோ, மணிரத்னம், சந்தோஷ்சிவன், தோட்டா தரணி என்று அனல் பறக்கும் கூட்டணி வேறு. கிட்டத் தட்ட தமிழ் சினிமாவின் பொற்காலமாய் அது இருந்தது. 1990களின் வாக்கில் என்னைப் போன்ற ரஜினி ரசிகர்களும் கமல் ரசிகர்களும் தெருவுக்குத் தெரு நின்று கொண்டும், பள்ளிக் கூடங்களின் வகுப்பு இடைவேளைகளினூடேயும், ஆற்றில் குளிக்கும் போதும், கிரிக்கெட் விளையாடி விட்டுத் திரும்பி வரும் போதும் ஆக்ரோசமாய் மோதிக் கொள்வோம். கமல் ரசிகர்கள் பிரதானமாய் பேச போதும் போதுமெனும் அளவிற்கு கமலிடம் நடிப்பும், நிறைய விருதுகளும்ம் ரஜினி ரசிகர்கள் பேச ரஜினியிடம் நிறைய வெள்ளி விழாப் படங்களும், கூட்டமும், வசூலும், ஸ்டைலும்,அதிரடியும் இருந்தன. தொண்டைத் தண்ணி வற்றிப் போகுமளவிற்கு பேசிச் சூடேறிப் போய்க் கிடந்த காலங்கள் அவை.
1991 தீபாவளி என்று நினைக்கிறேன். அந்த தீபாவளியை மையமாய் வைத்து வளர்ந்து கொண்டிருந்தது தளபதி படம். ஜி.வி பிலிம்ஸ் அந்த நேரத்தில் தளபதியை வியாபாரப் பொருளாக்கி நன்றாக காசு பார்த்துக் கொண்டிருந்தது. நானெல்லாம் பள்ளி நோட்டுப் புத்தகத்தில் தளபதி.... தளபதி என்று விளம்பரங்களில் இருக்கும் அதே ஸ்கிரிப்ட்டை எழுதி எழுதி கிறுக்கிக் கொண்டிருப்பேன். ஸ்கூல் பேக்கில் ஆரம்பித்து, டி சர்ட் தொடங்கி, காலண்டர் வரை தளபதி என்ற பெயரோடு ரஜினி திரும்பிப் பார்த்துக் கொண்டிருப்பது போல ஒரு புகைப்படமும் இருக்கும். தளபதி பேக் வைத்துக் கொள்வதும், ரஜினியின் புகைப்படத்தோடு கூடிய தளபதி டி சர்ட் போட்டுக் கொள்வதும் இளைஞர்கள், பள்ளிச் சிறுவர்களிடம் வெகு பிரபலம். பாடல் வெளியீடு என்றால் இப்போது போல எல்லாம் இல்லை அப்போது.... இணையம் என்றால் என்னவென்றே தெரியாது, கணிணியோ கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரிடமும் இருக்காது.
பாடலை கேசட்டாகத்தான் வெளியிடுவார்கள். லஹரி என்று நினைக்கிறேன் தளபதி பாடலை வாங்கி வெளியிட்ட கேசட் நிறுவனம். கேசட்டை வாங்கி அதில் இருக்கும் ஸ்டில்லையே வைத்த கண் வாங்காது பார்த்து லயித்து அதை ஒரு பொக்கிஷமாய் பாவித்து வீட்டுக்கு கொண்டு வந்து நேசனல் பானாசோனிக் டேப்ரிகார்டரில் கொஞ்சம் கமல் ரசிகர்களுக்கு நடுவே நாங்கள் இரண்டு மூன்று ரஜினி ரசிகர்கள் கேட்ட அந்த நாள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்தான்...
அதே நேரத்தில் வெளிவந்த குணாவிற்கு இளையராஜா வேறு ரேஞ்சில் மெட்டமைத்து இசையமைத்திருப்பார். குணா பாடல்களும் சூப்பர்தான் என்றாலும் தளபதி வாஸ் ரூலிங் த ஹோல் இன்டஸ்ட்ரீ டக்ட் டைம். ஆயிரக்கணக்கான வயலின்கள் இசைக்க அதிரடியாய் எஸ்.பி.பி... அட ராக்கம்மா கையத்தட்டு என்று ஆரம்பித்து ஜாக்கு சக்கு கஜாங்கு சக்கு ஜாக்கு சக்கு சா.....என்று பாட.....கேட்டிக் கொண்டிருந்த இடம் அதிர்ந்தது. கமல் ரசிகர்கள் தவிடு பொடியானார்கள் எங்களால்.....
தளபதி இல்லையேல் தீபாவளி இல்லை....தீபாவளி இல்லையேல் தளபதி இல்லை என்று வேறு படத்தின் தயாரிப்பாளர் ஜி.வி பேட்டிக் கொடுக்க... நிஜமாகவே ரஜினி கமல் என்ற ஜாம்பவான்கள் மோதிக் கொண்ட ஒரு வெறியேற்றும் உற்சாக காலமாயிருந்தது அது. பட்டுக்கோட்டை முருகையாவில் குணா, அண்ணபூர்ணாவில் தளபதி வெளியானது.
கமர்சியலான மசால வெற்றிப் படங்களை தொடர்ந்து கொடுத்து வந்த ரஜினியின் சினிமா வாழ்க்கையில் தளபதி ஒரு மைல்கள் ஆனது. ஆறிலிருந்து அறுபது வரை, அபூர்வ ராகங்கள், எங்கேயோ கேட்ட குரல், உன் கண்ணில் நீர் வழிந்தால் என்று நடிப்பில் சக்கைப் போடு போட்ட ரஜினியின் படங்களை எல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு ஒரு மாஸ் கமர்ஷியல் ஹீரோவாக ரஜினி ஒரு வட்டத்துக்குள் மாட்டிக் கொண்டிருந்த நேரம் அது. தளபதியில் பஞ்ச் டயலாக் கிடையாது. ரஜினியின் வழக்கமான ஸ்டைல் கிடையாது. முழுக்க முழுக்க ரஜினி என்ற சிங்கத்தை லாவகமாய் மசாலா ட்ரண்டிலிருந்து நைஸாய் வெளியில் கொண்டு வந்திருந்தார் இயக்குனர் மணிரத்னம். ஆமாம்.... அது ரஜினியின், இளையராஜாவின், கமலின் காலம் மட்டுமல்ல ....மணிரத்னத்தின் காலமும் கூட...
தமிழ் சினிமா ஏதோ ஒரு திசையில் பயணித்துக் கொண்டிருந்த காலத்தில் காட்சியமைப்பில், வசனங்களில், கதையில், இசையில் என்று எல்லாவிதத்திலும் புதுமையைக் கொண்டு வந்து தமிழ் சினிமாவுக்கென்று காலங்காலமாய் இருந்த மரபுகளை மணிரத்னம் ஒரு பக்கம் நொறுக்கி அள்ளிக் கொண்டிருந்தார் அப்போது. தளபதி வெளியாகி ஒரு வாரத்திற்கு தினசரி தியேட்டருக்குப் போய் படம் பார்த்து வந்த பக்தர்களை எல்லாம் எனக்குத் தெரியும். நான் ஒரு நான்கு தடவை பார்த்திருப்பேன். முதல் தடவை பார்த்த போது ரஜினி எது பேசினாலும் எழுந்து கத்தி, பக்கத்திலிருந்த கமல் ரசிகர்களை பார்த்து ஏளனம் செய்து.....பேப்பர்களை கிழித்து திரையில் கொட்டி, பாடலுக்கு எழுந்து கூட்டமாய் ஆடி.....
அண்ண பூர்ணா தியேட்டர் அப்போது அல்லோலகல்லோலப் பட்டது. தமிழகம் முழுதும் அப்படித்தான் இருந்திருக்கும். ரஜினி டயலாக் பேச வாயைத் திறந்தாலே கைத்தட்டுதான்...சூப்பர் ஸ்டார் என்றால் யார்...? தியேட்டர் ரெஸ்பான்ஸ் அவரது படங்களுக்கு எப்படி இருக்கும்..? எப்படியான படங்கள் முன்பெல்லாம் வந்தன.. .அவருடைய ரசிகர்கள் யார்? என்ன என்ன அட்டகாசம் செய்வார்கள் என்று இப்போது 25 வயதுக்கும் குறைவாய் இருக்கும் இளைஞர்களுக்குத் தெரியாது. அப்படித் தெரியாததாலேயே இளைய தளபதி, தலை என்றெல்லாம் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள்...
தமிழகம் ரஜினி ரசிகர்களைத் தான் கடைசியாக ஆவேசம் கொண்டவர்களாக, ஆத்மார்தமனவர்களாக கொண்டிருந்தது. அதிகபட்ச முட்டாள்தனங்களைச் செய்து கொண்டவர்களும் ரஜினி ரசிகர்கள்தான். ரஜினி ருத்ராட்சம் அணிந்தார் என்று ருத்ரட்சம் அணிவது, ரஜினி ராகவேந்திரரை வணங்கினால் ரஜினி ரசிகனும் ராகவேந்திரரை வணங்குவது, கையில் செப்புக் காப்பு ரஜினியைப் போலவே அணிந்து கொள்வது, ரஜினி போடும் வெள்ளை நிற செருப்பைப் போலவே அணிந்து கொள்வது ஏன் இன்னும் சொல்லப் போனால் நன்றாக தலையில் முடியிருந்த எத்தனையோ பேர் ரஜினிக்கு தலையின் இரண்டு பக்கமும் இருந்த வழுக்கையைப் போல சிரைத்துக் கொண்டு ரஜினி போலவே காட்சியும் தந்திருக்கிறார்கள்...
உச்சபட்ச ரசிப்பில் தன் வசம் இழந்த கூட்டமும் அதுதான்....ஆக்ரோசமாய் தனக்குப் பிடித்த நடிகனை அரசியலுக்கு வரச்சொல்லி இன்னமும் அன்பாய் வம்பு செய்து கொண்டிருக்கும் கூட்டமும் அதுதான்...
தளபதியைப் பொறுத்தவரை அதை நட்பு பற்றிய படமாகத்தான் எல்லோரும் அறிந்திருப்பார்கள். நண்பனுக்காக என்னவேண்டுமானலும் செய்யும் கர்ணனின் கதாபாத்திரம்தான் ரஜினியின் சூர்யா பாத்திரம். துரியோதனின் பாத்திரம் மமூட்டியுடையது. இறுதியில் ரஜினி இறந்து விடுவது போல மணிரத்னம் காட்சியமைத்து பிறகு அப்படி இருந்தால் தமிழ்நாட்டில் ஒரு தியேட்டர் மிஞ்சாமல் அடித்து நொறுக்கி விடுவார்கள் என்பதால் கடைசியில் மம்முட்டி சாவது போல காட்சி மாற்றியமைக்கப்பட்டது என்றெல்லாம் அப்போதைய நாளேடுகள் செய்தி வெளிட்டன.
நட்பு பற்றிய படம் என்று எல்லோரு மனதில் அது ப்ளாஷ் ஆக காரணமாய் இரண்டு முரட்டு ஹீரோக்கள் அந்த படம் முழுதும் ஆக்கிரமித்து இருந்தார்கள். பற்றாக்குறைக்கு இளையராஜா வேறு....காட்சிக்கு காட்சி திரைப்பின்னணி இசையில் பின்னி எடுத்து இருப்பார். ஆனால் இதை எல்லாம் கடந்து கதையில் ஒரு காதல் தோல்வி ஒன்று மென்மையாய் சொல்லப்பட்டிருக்கும். ஒரு விதவை மறுமணம் கவிதையாய்க் கோர்க்கப்பட்டிருக்கும். நான் அந்தக் காட்சிகளைப் பார்த்து ரசித்து உருகிப் போயிருக்கிறேன். மீண்டுமொருமுறை இன்று மதியம் தளபதியை ராஜ் டிவியில் பார்த்த போது அதே சோகத்துக்குள் மீண்டும் போய் விழுந்தேன்.
சூழல் காரணமாக ஒரு முரடனுக்குத் மணமுடித்து வைக்க முடியாது என்று அப்பா சொல்லிவிட தன்னை பெற்ற தகப்பனை மறுக்க முடியாத ஷோபனா ரஜினியை விட்டு விலகிப் போகும் இடமும் அந்தத இடத்தில் இளையராஜாவின் சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடலின் பிஜிஎம் மும்....நெஞ்சை பிசைய ஆரம்பித்து விட்டது எனக்கு. ரஜினிக்கு காதலை இழக்க விருப்பமில்லாவிட்டாலும் தனக்கு அவளை மணமுடிக்க தகுதி இல்லையென்ற ஒரு தாழ்வு மனப்பான்மையை கோபமாக்கிக் கொண்டு ஷோபனாவை போ..போ.. என்று துரத்துவார்....
ஏதாவது செய்து தன்னை மணமுடித்துக் கொள்ளமாட்டாரா என்ற எதிர்பார்ப்பில் வரும் ஷோபனாவை பேசக் கூட விடாமல் திட்டி ரஜினி விரட்ட....காதல் தோல்வியை ஷோபனா தன் நடையில் கொண்டு வந்து நடந்து செல்லும் அந்த இடம்......காதலைக் கண்ணெதிரிலேயே இழந்தால் என்ன மாதிரியான வலியை அது கொடுக்கும் என்பதை செவுட்டில் அறைந்து நமக்குச் சொல்லும்..
கலெக்டரரை மணமுடித்த பின்பும்....கூட ரஜினையை பார்க்கும் பொழுதில் ஷோபனாவுக்குள் இருக்கும் காதலும் ரஜினிக்குள் இருக்கும் காதலும் சமகாலச் சூழலை மறந்து விட்டு சூட்சும உணர்வாய் எட்டிப்பார்த்து கண்ணீரோடு கட்டியணைத்துக் கொள்ளும் இடமும் அட்டகாசம்....!
அதே மாதிரி தான் கொன்ற ஒருவனின் மனைவி பிரசவித்திருக்கிறாள் என்றறியாமல் அங்கே அழைத்து வரப்படும் ரஜினியின் கையில் பிறந்த குழந்தையை மம்முட்டி கொடுக்கும் போது குற்ற உணர்ச்சி என்றால் எப்படி இருக்கும் என்ற ஒரு காட்சிப்பாடத்தை ரஜினியின் நடிப்பில் இருந்து நாம் படித்துக் கொள்ளலாம். அப்படி ஒரு லாவகாமான உணர்ச்சியை முகத்தில், உடல் அசைவில் சூப்பர்ஸ்டார் வெளிபடுத்தி இருப்பார். அதானால்தானே அவர் சூப்பர் ஸ்டார்.
எந்த உறுத்தலும் இல்லாமல் ஒரு குழந்தைக்கு தாயாய் இருப்பவளை மணந்து கொண்டு ரஜினி வாழ்க்கையைத் தொடங்குவதும் கவிதை. அந்த சூழலுக்குப் போடப்பட்ட பாட்டு திரையில் வரவில்லை ஆனால் கேசட்டில் இருந்தது. கணவன் இறந்து ஒரு குழந்தையோடு தன் கணவனைக் கொன்றவனையே கைப்பிடித்து வரும் பெண்ணின் மீது படிந்து கிடக்கும் சோகச் சூழல் எப்படி உறுத்தல் இல்லாத ஒரு தென்றல் வீசும் அனுபவமாய் மாறுகிறது என்பதை இளையராஜாவால் மட்டுமே புத்தம் புது பூ பூத்ததோ என்று இசைத்துக் காட்ட முடியும்.
தளபதி படம் எல்லாமாய் இருந்தது. அதில் எல்லாமும் இருந்தது. ஆமாம் அது சினிமாவின், சினிமா பார்க்கும் ரசிகனின் பொற்காலமாய்த்தான் இருந்தது.
மீண்டுமொரு சூழல் அப்படி இனி கனியலாம்....ஆனால்....கண்டிப்பாய் அந்தச் சூழலில்
ரஜினியும், கமலும், இளையராஜாவும், மம்முட்டியும், மணிரத்னமும் இருக்க மாட்டார்கள்.....!
தேவா சுப்பையா...
Comments
தளபதி படம் எல்லோருடைய நெஞசங்களிலும் நினைவு நிக்கும் படம் விமர்சனம் அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
த.ம 4வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-