உயிர் திறக்கும் இசை ஒன்றை கேட்டுத் தொலைத்து விட்டு தேன் குடித்த வண்டாய் கிறங்கிக் கிடக்கிறேன். ப்ரியமான காதலியாய் உள்ளுக்குள் உட்கார்ந்து கொண்டு இம்சிக்கும் இந்த பாடலின் வசீகரம் என்னவென்று தெரியாமல் அது சொல்ல முயலும் அவஸ்தைக்குள் சிற்றெறும்பாய் ஊர்ந்து செல்கையில், அடாவடியான ஒரு காதலின் கன பரிமாணங்கள் புலப்படுகின்றன. காதலை முதலில் பார்வையால் அவள் சொல்லிவிட அதற்கு மேல் அதை முன்னெடுத்துச் சென்று அவளிடம் வார்த்தையாக்க வேண்டிய பெரும் அவஸ்தை காலம் காலமாக ஆண்களுக்கே உரித்தானது.
மிக மெலிதாய் காதலைச் சொல்லும் ரகம் இல்லை இந்தப் பாடல். நளினமாய் காதலைச் சொல்லத் தெரியாத ஒரு முரட்டு கிராமத்து இளைஞனின் எண்ண வெளிப்பாடு இந்தப் பாடல் போன்றுதானிருக்கும். அது அவஸ்தைதான் அது இம்சைதான், அது வலிதான் ஆனாலும் அதில் ஆனந்தித்துக் கிடக்க முடிகிறது. உள்ளுக்குள் ஏதேதோ உணர்வுகளைக் கிளறிவிட்டு தொட்டுப் பிடித்து விடும் வண்ணத்துப் பூச்சியாய் நகர்ந்து கொண்டே இருக்கும் காதலைத் துரத்திக் கொண்டிருக்கும் ஒரு விளையாட்டாய் இது இருக்கிறது.
காதல் என்பது புரிந்து கொள்ளுதல், காதல் என்பது அறிவை பகிர்ந்து கொள்ளுதல், காதல் என்பது உலக அறிவு, காதல் என்பது இலக்கியம் என்பதெல்லாம் நவீனம் சொல்லிக் கொடுத்திருக்கும் காதலுக்கான அலங்காரங்கள். காதல் என்பது காமத்தினை திருமணமென்னும் பந்தம் மூலம் கடந்து செல்லும் ஒரு உணர்வு என்றுதான் தலைமுறையாய் புரிந்து வைத்துக் கொள்ளப்பட்டிருந்திருக்கிறது. காதல் என்பது காமம் அல்ல...காதல் என்பது இணைந்து வாழ்தல் அல்ல ஆனால் இவற்றை எல்லாம் கடத்தல். உலக அறிவுகள் இல்லாத வெகுளித்தனமான கிராமத்துக் காதல் வெகு எளிதாய் இந்த உணர்வுகளை முன்னெடுத்துச் செல்கிறது. காதலிப்போம் காதலித்து உன் கழுத்தில் தாலியைக் கட்டி நான் மனைவியாக்கிக் கொள்கிறேன். இங்கே விதிக்கப்பட்டதை இயற்கையின் நகர்வோடு கடப்போம்....
காலங்கள் கடந்து செல்கையில் காமச்சுமையை இறக்கி வைப்போம், நான் நீ என்று ஒருவரை ஒருவர் ஆளுமை செய்து கொள்ளும் அதிகாரநிலைகளை இறக்கி வைப்போம்...ஆனால் காதலென்னும் உள்ளுக்குள் சுரந்த அந்த ப்ரியத்தின் அதிர்வுகளை காலம் முழுதும் சுமந்து செல்வோம். காதல் உன் வலிக்கு என்னை அழ வைக்கும், என் வலிக்கு உன்னை அழ வைக்கும்...
அது எப்போதும் உடலில் வாழ்வது அல்ல உணர்வில் வாழ்வது என்று நிறைவாய் முடியும் இல்லறத்தில் முரண்களின்றி வாழ்ந்து முடித்தது நம் சமூகம்.
அறிவு, புரட்சி, ஞானம் என்பதெல்லாம் எதற்கு உதவுமென்று நாம் நம்பி அதைப் பொக்கிஷமாய் நினைத்துப் பேசிக் கொண்டிருக்கிறோமோ அதை எல்லாம் காலில் போட்டு மிதித்து அறியாமையான முழுக்காதல் சொல்லிக் கொடுத்து விடுகிறது. பகுத்தறிதல் உயர்வு என்று கூறும் இந்த சமூகத்தின் பேரறிவுப்பக்கங்களை கிழித்துப் போட்டுவிட்டால்....இயல்பாய் கோபப்பட்டு,இயல்பாய் காதல்வயப்பட்டு, காமவயப்பட்டு, எங்கே பிணைத்துக் கொள்கிறோமோ அந்த பிணைப்போடு நாம் தரைவிழுந்த ஒரு மழைத் துளியாய் மண்ணில் கரைந்து போக முடிகிறது.
பகுத்தறிவு இல்லாத நிலை மிருகநிலையாயிற்றே..? அது எப்படி சிறப்பானது என்று கேள்வி கேட்பவர்கள், எது சிறந்தது..? எது உன்னதமானது என்பதற்கு என்ன வரையறையை இங்கே நாம் விதித்து வைத்திருக்கிறோமோ அது எல்லாமே மனித மனதின் வசதிகள்தான் என்பதை உணரவேண்டும்.
சிக்கலில்லாத நிலையே உயர்வு என்று நீங்கள் சொல்வீர்களேயானால் மிருகநிலையே உயர்ந்தது என்று நான் சொல்வேன்...! அது கடவுள் நிலைக்கு மிக சமீபம் மனித நிலைக்கு வெகுதூரம். இந்தப்பாடலைக் கூட அது வெளியான படத்தின் கதையை மையமாக வைத்தோ அல்லது பாடல் காட்சியின் பின்புலம் சொல்லும் செய்தியை வைத்தோ நான் இதை எழுதவில்லை. இதன் பாடல் வடிவத்தை ஒலியாக கேட்ட பொழுதில் எந்த திசையில் என் மனப்புரவி ஓடியிருக்கிறதோ அந்த திசை நோக்கியே நகர்ந்து அந்த உணர்வுகளையே பதிந்திருக்கிறேன்.
இளையராஜா சாருக்கும், ரஃகுமான் சாருக்கும் இடையில் முன்பெல்லாம் தேவா சார் இருந்தார். நிறைய அழகான பாடல்களுக்கு அவர் இசை அமைத்திருந்தாலும் அவரது இசை நிறைய இளையராஜா ரஃகுமான் இசையின் கலப்பாய்த்தானிருக்கும். தேவா சாரின் தனித்துவம் அவரது கானா பாடல்கள்தான்.. இன்றைக்கும் அவர் இசையமைத்த பல கானா பாடல்கள் கேட்ட மாத்திரத்திலேயே எழுந்து ஆட்டம் போட வைக்கும். ராஜா சாருக்கும் ரஃகுமானுக்கும் மாற்றாய் இருந்த தேவா சார் நிறைய புதியவர்களின் வருகையால் காற்றில் கரைந்த கற்பூரமாய் மறைந்தே போய்விட்டார்....
வெகு நாட்களுக்குப் பிறக்கு டி. இமான் இப்போது ஒரு மாற்று இசையை அதுவும் தமிழ் மண்ணோடு ஒட்டுதலான ஒரு இசையமைப்பாளராய் பரிணமித்திருக்கிறார். கும்கி படத்தில் அவர் மெட்டமைத்த பாடல்கள் பட்டி தொட்டி எல்லாம் பரவி, கிராமாத்து குடிசைகளுக்குள் இருந்து மிகப்பெரிய ஸ்பீக்கர் செட்களில் அலறின. உலக இசை ரசிகர்ளை திருப்தி படுத்த வேண்டி ரஃகுமான் வேறு தளத்திற்கு பயணித்து சென்று விட்டார், பல நாட்டு இசைகளையும் இணைத்து ஒரு ப்யூசனாக உயர் மட்ட ரசனைக்காரர்களை திருப்திப்படுத்த வேண்டி இசைமைக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டுப் போய் விட்டது. இதனாலேயே தமிழ் மண்ணோடு பந்தப்படாத இசையாய் அது இப்போது மாறிப் போய் விட்டது.
ஒரு இசை நன்றாக இருக்கிறது என்பது வேறு அது எனக்கு, என் மண்ணின் மைந்தர்களுக்குப் பிடிப்பது என்பது வேறு. மேல்நாட்டு இசையை நாங்கள் எப்போதாவது கேட்டு ரசிப்போம். அதாவது மாதத்தில் ஒரு நாளோ இரண்டு நாளோ பிஸ்ஸாவோ, கேஎஃப்சியோ சாப்பிட்டு உலகமயமாக்களின் மந்தை ஆடாய் ஆவது போல அது.... ஆனால் தினம் அது எங்களுக்கு ஒத்து வராது. தட்டு நிறைய சோறு போட்டு எண்ணெய் மிதக்கும் கோழிக் குழம்பை ஊற்றி அழுந்தப் பிசைந்து ஒரு கோழிக் காலை எடுத்து கடித்து, ஊறுகாயை தொட்டுக் கொண்டு வாய் நிறைய சாப்பிட்டு விட்டு, மோரை ஊற்றி சோறு சாப்பிட்டு விட்டு தட்டைத் தூக்கி மோர்த் தண்ணீரைக் குடித்து விட்டு, சொம்புத் தண்ணியை குடித்து, வெளியே வந்து லுங்கியை தூக்கிக் கட்டிக் கொண்டு ஏப்பம் விடும் சுகத்தை.... ஒரு நாளும் மேல் நாட்டு உணவுகளும், பழக்க வழக்கங்களும் எங்களுக்கு கொடுத்து விட முடியாது.
இசையும் அப்படித்தான். நாங்கள் எல்லாம் வாய்க்கால் வரப்பு வெட்டும் போது சந்தோசமாய் பாடியவர்கள், வரப்பில் தூங்கும் குழந்தைக்கு தாலாட்டுப் பாடிக் கொண்டே வயலில் நாற்று நட்டவர்கள், கதிர் அறுத்தாலும் பாட்டு, வயசுக்கு வந்தாலும் பாட்டு, கல்யாணத்துக்குப் பாட்டு, சாவுக்கு பாட்டு என்று எங்களுக்கென்று ஒரு இசை இருக்கிறது. அந்த இசையை இளையராஜாவின் வாத்தியம் எல்லா படங்களிலும் பெரும்பான்மையாக இசைத்திருக்கிறது. அந்த ராகதேவனிடம் பால் குடித்து வளர்ந்த குழந்தைகள் நாங்கள்....
உலகத்தரமான டெக்னிகாலிட்டிகள் நிறைந்த இசையைப் பற்றிய அறிவெல்லாம் எங்களுக்குத் தேவையில்லை. எது எங்களை குஷிப்படுத்துகிறதோ எது நேர்மையாய் உறுத்தல் இல்லாத சந்தோசத்தைக் கொடுக்கிறதோ அது போதும்....என்று நினைப்பவர்கள் நாங்கள்.
இப்போது டி. இமான் இடையிடையே தமிழர்களுக்கான பாடல்களாய் மெட்டமைத்து எங்களின் தாகத்தை அவ்வப்போது தீர்த்து வைக்கிறார். மேற்கத்திய இசையாய் இருந்தாலும் அதை மண்ணின் மணத்தோடு குழைத்துக் கொடுக்கிறார். இவர் ராஜா சார், மற்றும் ரஃகுமானின் மாற்று என்று சொல்வதற்கில்லை என்றாலும்....
தாளத்தோடு, இயல்பாய் இவர் அமைக்கும் மெட்டுக்கள்....ஏதோ ஒருவகையில் உள்ளத்தை வருடத்தான் செய்கின்றன....!
யுகபாரதியின் வரிகளும் இமானின் இசையும்....மீண்டும் மீண்டும் இந்தப்பாடலைக் கேட்கத் தூண்டப்போவது என்னவோ நிஜம்..!
தேவா சுப்பையா...
Photo Courtesy: Ashokarsh Photos - Source: Web
Comments
இமானின் இசை கிராமத்து இசைத் துள்ளலாய் வருவது சந்தோஷமான விஷயம்தான்...
கானா என்றால் அது தேவாதான்... இப்போ கிராமிய இசைக் கலப்புக்கு ஒரு புதிய ஊற்றாய் இமான்....
பாடலை மட்டும் போடாமல் வீடியோவுடன் போட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-