Skip to main content

காமம் கொள்(ல்)...!


கடும் குளிரில் கூசிப்போய் உடலை ஒடுக்கிக் கொள்வதை போல இருக்கிறது இந்த கூடலின் உச்சம். தியானத்தில் அமரும் போதும் இப்படித்தான். திடமான ஒரு கருங்கல்லாய் முதலில் அமர்ந்திருப்பேன். மெல்ல மெல்ல ஒவ்வொரு அடுக்காய் உடைய ஆரம்பிக்கும். ஒவ்வொரு அடுக்கும் உடைந்து விழ கொஞ்ச நேரமாவது ஆகும். அது எப்போது என்று தெரியாது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இருக்கும் தடிமன் எல்லாம் படிப்படியாக உடையாமல் ஒரு கட்டிடத்தை வெடிவைத்து தகர்த்தால் எப்படி சடாரென சாயும் அப்படி சாயும். அதாவது சீட்டுகட்டு சாய்வதைப் போல ஆனால் அதன் மென்மையோடு அல்ல....

உடைந்து எல்லாம் விழுந்த பின்பு கூட இப்படித்தான் கூடலின் உச்சத்தில் ஏங்கிப் போய் உடல் துடிக்க குளிரில் கூசி ஒடுங்கும் உடம்பாய் நடு நடுங்கி தொண்டை அடைபட்டு கேவிக் கேவி அழத்தோன்றும். காமம் அழகானது என்று நான் சொல்லும் போதே வக்கிர பாம்புகள் பலரின் புத்தியில் நெளியத்தொடங்கி இருக்கும். இப்படித்தான் அது. அதன் இயல்பு இதுதான் என்று எழுத்துக்கள் மூச்சு வாங்கிக் கொண்டே ஒரு அனுபவத்தை இறக்கி வைக்கும் போது நான் இறக்கி வைத்த சுமையில் என்ன இருக்கிறது என்று பார்க்காமல் ஒவ்வொரு மூளையும் தத்தமது சுமையை இறக்கி வைத்து என்னவென்று பிரித்துப் பார்த்து.....

இங்கே  எழுதிக் கொண்டிருக்கும் என் வரிகளுக்கு வெவ்வேறு வர்ணங்களில் கற்பித ஓவியங்களை அது வரையத் தொடங்கும். அது அல்ல நான் சொல்வது என்று சொல்லக் கூட விருப்பமில்லாமல் ஸ்பரிசித்தது கொடுத்த போதையிலிருந்து வெளிவர விரும்பாமல் கருப்பை நோக்கி விரைந்து பின்பு கருமுட்டையோடு சேர்ந்த விந்தணுவின் மோன நிலைக்குள் கிடந்தபடி எங்கிருந்தோ கேட்கும் அழுகுரலை செவிமடுத்துக்  கொண்டிருப்பேன் நான். அது யாரோ ஒருவரின் மரண அவஸ்தையை சொல்லும் அப்போது பிறந்த குழந்தையின் குரலாய் இருக்கக் கூடும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது பிணமெரிந்து நிண நாற்றம் பொசுக்கென்று வீசத்தொடங்கும்.

உஷ்ணமான உணர்வொன்று இருப்பதும் இல்லாததும், சரியும் தவறும், தூய்மையும் அசுத்தமுமாய் கிடந்து, கிடந்து பின் நகர்ந்து பிறப்பின் ரகசியம் சொல்லும் கலவிக் கலையை சிம்மத்தின் பிடறி பிடித்து உலுக்கி  எழுப்புவது போல எழுப்ப.... பிரபஞ்சத்தின் வாசல் இதுதானென்று அறிந்து வெறித்தனமாய் ஓடி விரிந்து, பரந்து செல்லும் ஒளிக்காட்டிற்குள் தொலைந்தே போயிருப்பேன் நான். மிச்சம் என்ன இருக்கும்? என்ற கேள்வியை உடைத்து உடைத்து மெலிதாய் பூக்கும் ஒரு பூவின் இதழுக்குள் படுத்துறங்கும் சுகத்தோடு இளஞ்சூடான அவளின் மார்பில் முகம் புதைத்து ஜென்மங்கள் மறந்து, இச்சைகள் கலைந்து, திறக்க விரும்பாத விழிகளால் விரிந்து கிடக்கும் போதியின் கிளைகளுக்குள் ஒரு கருநாகமாய் ஊர்ந்து சென்று....

அதன் உச்சம் தொட்டு சகஸ்ரகம் உடைந்து பேரருவியாய் வழிந்தோட இதுவன்றோ நான் என்ற ஞானத்தை கிசுகிசுப்பாய் அவளின் காதுகளில் சொல்லிவிட்டு அப்படியே மூர்ச்சையாகத்தான் ஆசை....!

ஆனால்....

ஆசை என்ற வார்த்தை ஒரு சகுனியைப் போல வெகுண்டெழுந்து மீண்டும் ஒரு தாயமாடிப் பார்க்கும். அது பாண்டவர்களின் கண்ணடைத்து திரெளபதியின் துயிலுரிந்த துச்சாதனத்தை உயிர்த்தெழச் செய்யும். பரமாத்மாக்கள் ஆடை கொடுத்து மீட்டு விட்டால் பாரதம் முடிந்தன்றோ போகும். இது முடியக் கூடாத ஆட்டமன்றோ?! சத்தியத்தை தோற்கவைத்து அசத்தியத்தை வெல்ல வைத்து, மீண்டும் சத்தியத்தை வெல்லவைத்து முடிந்தே போய்விடக்கூடாது என்று மீண்டும் மீண்டும் நிகழும் ஆட்டம்.


அவள் உதடுகள் நெற்றியை அழுத்தமாய் முத்தமிட்ட பொழுதினில் மூர்ச்சை தெளிந்து விழித்து மீண்டும் கேவிக் கொண்டிருக்கையில் எழுந்த கேள்வி ஒன்றைத்தான் யுகங்கள் தோறும் கேட்டுக் கொண்டிருக்கிறது இக்காலம்....

நான் யார்..? இவள் யார்...? காமம் கொள்வதென்பது பல்கிப் பெருகவென்றால் சுருங்கி முடிந்து போக விரும்புவது யார்? முக்தி என்ற சொல்லுக்குள் முடங்கிப் போய் இச்சை செதுக்கி, காமம் ஒதுக்கி எல்லாம் கடந்து போய் எங்கோ சேரும் ஆவலும் இதற்கு ஏன்? தொடங்கவும் அது விரும்புகிறது..... முடியவும் அது விரும்புகிறது....! நிகழவும் அது விரும்புகிறது அழியவும் அது விரும்புகிறது! கோட்பாடுகளைச் சொல்லி இதுவென்று நிறுவிக் கொள்ள எந்த ஒரு சாத்தியமுமில்லா அறுதியே..... எதன் இறுதி நீ...?

கேவிக் கேவி அழத் தொடங்கினேன்...! அவள் மீண்டும் என்னை மார்போடு இறுக்கிக் கொண்டாள்....

நின்று போயின நிமிடங்கள்!

இப்படியே சென்று விடேன் காலமே... என்று கெஞ்சவேண்டும் போலிருந்தது எனக்கு.........! அவளின் மார்புக்குள் முகம் புதைத்துக் கொண்டே மீண்டுமொரு புணர்தல் பற்றிய கற்பனையோடு கடவுளோடு விளையாடிக் கொண்டிருந்தேன்  நான்....!




தேவா சுப்பையா...






Comments

சத்திய வானதி said…
Nice post:) காமத்தை ரசித்து உணர்ந்தவர்களால் மட்டுமே இந்த பதிவினை முழுமையாக ரசிக்க இயலும்..
மிகவும் அருமையான பகிர்வு அண்ணா...

வரிகளை மிகவும் ரசித்துப் படித்தால் காமமும் அழகாய்த் தெரியும்.., அற்புதமாய் விரியும்...

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...