Skip to main content

தக்க்ஷின் குட் ஈவினிங் - 2



இனி...

சேட்டு ரொம்ப நொடிச்சுப் போய்ட்டாப்ல தேவ் தம்பி. ஒங்க கூட இருந்த டீம் எல்லோரும் வேலைய வுட்டுப் போய்ட்டங்க மிச்ச இருந்த யூனியன் ஆட்களால பிரச்சினை வேற எப்ப பாத்தலும் ஸ்ட்ரைக்கு அது இதுன்னு சொல்லிட்டு ஒரே களேபரமா கிடந்துச்சுபா ஓட்டலே...! என்னமோ கோர்ட்ல வேற ஓட்டல் இடத்து மேல பிரச்சினை இருக்கும்ன்னு பேசிக்கிட்டாங்க...அத்தனால மூடிட்டாங்களா இல்ல சேட்டுக்கும் சேட்டு தம்பிக்கும் பெரச்சினையா ஒண்ணியும் தெர்லபா... ஓட்டல் மூடினதுக்கோசரம் நான் லீ மெர்டியன் இஸ்டாண்டுக்குப் போய்ட்டன் பா....

எப்பவாச்சும் ஹரி வருவாப்ள ஓட்டலுக்கு, ச்ச்சுமாங்காட்டியும் ஓட்டல தொறந்து வச்சு கொஞ்ச நேர ஒக்காந்திருந்துட்டு போவாப்ள...ஒனக்கு லக்கு இருந்தா இப்போ கூட அவரு வரலாம்.....

எந்த ஹரி? செஞ்சி ஹரிண்ணாவா? சடாரென்று கேட்டேன்...

அவருதாம்பா சேட்டுக்கு ரைட் ஹேண்ட் கனக்கா இருப்பாப்லயே......

டீ குடித்து விட்டு ஹோட்டல் பக்கம் நாங்கள் இருவரும் வருவதற்கும் அவர் புல்லட்டில் தக்க்ஷின் உள்ளே சென்று இறங்கி நிறுத்தவும் சரியாய் இருந்தது. இந்த வந்துட்டப்ளபா ஹரி.....என்று மதி அண்ணன் சுட்டிக்காட்டிய அந்த புல்லட்டில் வந்தவரை பார்த்தேன்......மதி அண்ணனுக்கு கை கொடுத்து விட்டு மெல்ல அடி எடுத்து வைத்து தக்க்ஷின் காம்பவுண்டிற்குள் நுழைந்தேன்....என்னால் நடக்க முடியவில்லை கால்கள் பின்னி இழுத்தன....

ஹரி அண்ணா என்னைப் பார்க்கவில்லை பைக்க நிறுத்தி விட்டு ஏதோ எடுத்துக் கொண்டிருந்தார்....

அவர் அருகே சென்று....ஹரிண்ண்ண்ண்ண்...ணா.....வார்த்தைகள் தழு தழுத்தன....

ஹரிண்ணா திரும்பினார்..... ! என்னை கண்கள் சுருக்கிப் பார்த்தார்.12 வருடங்கள் என்னும் கால இடைவெளி மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றும் என்று எனக்குப் புரிந்தது. என்னுடைய 37 வயது எந்த குறையுமின்றி இங்கொன்றும் அங்கொன்றுமாய் தலையிலும் தாடியிலும் எப்படி நரைக்கத் தொடங்கி இருக்கிறதோ, மெலிசாய் இருந்த நான் எப்படி பூசினாற்போல ஆகிப்போய் பல்வேறு அனுபவங்களினால் வாழ்க்கையின் நிலையாமை எப்படி என் முகத்தில் இறுக்கமாய் பரவிக்கிடக்கிறதோ...

அப்படித்தான்....ஹரிண்ணாவும்....காலமும் சூழலும் அவரை வெகுவாய் மாற்றி மத்திம வயதிற்குள் கவனமாய் கொண்டு வந்து நிறுத்தி இருந்தன. உற்றுப் பார்த்தவர்....யோவ்....எப்டிய்யா... இருக்க....என்று கட்டிக் கொண்டார். இருவரும் பரஸ்பரம் விசாரித்துக் கொண்டோம். தேவ்....என்னாய்யா.... அப்டியே இருக்க என்று அவர் சொன்னது பொய் என்று எனக்குத் தெரியும். 2001ல் இருந்த நானில்லை இப்போது. அப்போது இருந்த சந்தோசமும் வாழ்க்கை பற்றிய எதிர்பார்ப்பும் இப்போது என்னிடம் இல்லை. இடம் வலமாகி இருக்கிறது. வலம் இடமாகி இருக்கிறது. கீழ் மேலாகவும், மேல் கீழாகவும் என் வாழ்க்கை மொத்தமாய் மாறிப் போய்விட்டிருக்கிறது. அப்போது எல்லாம் என்னோடு நிறைய பேர்கள் இருந்தார்கள்.

கூட்டம் கூட்டமாய் சுற்றுவதும் பேசுவதும், சிரிப்பதும் மிகுந்திருந்த அந்தக்காலங்களில் அறியாமைப் போர்வையைப் போர்த்திக் கொண்டுதான் நான் சுற்றிக் கொண்டிருந்தேன் என்றாலும் அறியாதவரை இருந்த சந்தோஷம் அறிந்த பின்பு கிடையாது என்பதுதான் உண்மை. எதை அறிந்தேன் என்று இப்போது எனக்குள்ளேயே ஒரு கேள்வி எழுகிறது. எது இல்லையோ அதை அறிந்தேன். எது இருக்கிறதோ அதை அறிந்தேன். இப்போது நிதானப்பட்டிருக்கிறேன். பரபரப்பு எதுவும் கிடையாது மனதிற்குள்....இது மெல்ல மெல்ல பரபரபரப்பு விட்டு நகர்ந்து ஆரவாரம் இல்லாத இடம் நோக்கி நடக்கும் ஒரு நகர்வினைப் போல எனக்குப் படுகிறது. ஒரு திரைப்படத்தின் இடைவேளையைப் போல் இருக்கிறது  என்னுடைய சமகால வாழ்வு.

படம் ஆரம்பிக்கும் போது இருக்கும் உற்சாகம் இடைவேளையில் இருப்பதில்லை. ஆமாம்...முடிவினை நோக்கிய நகர்வுதானே அதற்குப் பிறகு எல்லாமே....

தக்க்ஷினுக்குள் என்னை ஹரிண்ணா அழைத்தார்.  ஆட்டோ டிரைவர் மதி அண்ணன் சொன்னது போலவேதான் ஹரி அண்ணா ஹோட்டல் மூடியதற்கு காரணங்களைச் சொல்லிக் கொண்டே வந்தார். அவருடைய பேச்சிலிருந்து ஏதோ சட்ட ரீதியான பிரச்சினை இருப்பது பிடிபட்டது. ஒவ்வொரு படியாய் ஏறி தக்க்ஷினுக்குள் நுழைந்தேன்...

ரிஷப்சன் கவுண்டருக்குப் பின்னால் ஸ்வாகத் என்ற ஆங்கில பித்தளை எழுத்துக்கள் மங்கலாய் எனக்குத் தெரிந்தன.....10 வருடத்துக்கு முந்திய அதே லாபி....அதே ஷோபாக்கள் மங்கிப் போய் கிழிசலாய்....


மின்சாரம் கிடையாது ஆதலால் வெளியே இருந்த சூரிய வெளிச்சம்தான் எல்லா பொருட்களையும் எனக்கு காட்டியது.  வெள்ளைக்கலர் மார்பில் தரையை பார்த்தேன்.... சோபாவில் ஹரி அண்ணாவிற்கு எதிரில் அமர்ந்தேன். துபாயைப் பற்றியும் வேலையைப் பற்றியும் அவர் என்னிடம் நிறைய கேட்டுக் கொண்டிருந்தார். இருப்பவர்களுக்கு எப்போதும் இருக்குமிடத்தின் மீது ஒரு பிடிப்பும் ஏற்படுவதில்லை. ரதியையே திருமணம் செய்து வீட்டிற்குள் வைத்துக் கொண்டாலும் எதிர்வீட்டு ஜன்னல் மீது ஈர்ப்பு கொள்வதுதானே மனதின் இயல்பு. அரை இருட்டான அந்த ஹோட்டலில் லாபியில் இருந்த அதே ஷோபாவில் நான் 12 வருடங்கள் கழித்து இப்படி ஒரு சூழலில் அமர்வேன் என்று நினைத்துக் கூட பார்த்திருக்க வில்லை.

சோபாவில் சாய்ந்து கண்களை மூடினேன்.... 

எனக்குள் பளீச் சென்று ஹோட்டலில் இருந்த எல்லா விளக்குகளும் எரியக் கண்டேன்.மெலிதான ஊதா நிற புடவையில் இரண்டு பெண்கள் ரிசப்சனில் நின்று கொண்டிருக்க, அதே மெலிதான ஊதா நிறச் சட்டையும் கருப்பு நிற பேண்ட்டும் கருப்பு நிறை டையும் கட்டிக் கொண்டு இன்னொரு பையன் நின்று கொண்டிருக்க....

மெல்லிய இசை ஒன்று அந்த ஹோட்டல் முழுதும் நிரம்பி வழிந்தோடிக் கொண்டிருந்தது. சென்ட்ரலைஸ்டு ஏசியின் மத்திமமான குளிர் என் முகத்தில் சில்லென்று பட்டு என் தலை முடியைக் கோதிக் கொண்டிருந்தது. யார், யாரோ வருகிறார்கள், ரிஷப்சனில் செக்கின் கொடுக்கிறார்கள், சாவியையும் பெட்டியையும் எடுத்துக் கொண்டு பெல் பாய் அவர்களை லிஃப்டில் அழைத்துக் கொண்டு அறைக்குச் செல்கிறான். ஹவுஸ் கீப்பிங்கில் ரூம் ரெடிதானே....விருந்தினர்கள் வருகிறார்கள் என்று சந்தேகம் தீர்த்துக் கொள்கிறாள் ரிஷப்சனில் இருக்கும் பெண்....., காஃபி சாப் நிரம்பி வழிகிறது. புஃபே லஞ்ச்சிற்காக நிறைய பெண்களும் ஆண்களும் வந்து கொண்டே இருக்கிறார்கள், பார்க்கிங் நிரம்பி வழிகிறது....

செக்கியூரிட்டி யாரிடமோ கோபமாய் சண்டையிட்டு அவர்களை ஒழுங்காக வண்டியை நிறுத்துமாறு சொல்கிறார்....

அப்போது தேவ்...சார் ... எம்.டி ஆன் த லைன் என்று டெலி போன் ஆப்பரேட்டர் எனக்கு வந்த காலை ரிஷப்சனில் கொடுக்கிறாள்....

குட் ஆஃப்டர் நூன் சார்.....

யெஸ்.....சார்....காஃபி சாஃப் இஸ் அல் மோஸ்ட் ஃபுல் ஃபார் த புபே லஞ்ச் சார்....

இன் பக்வான் ரெஸ்ட்டரண்ட்.... சம் ஹவ் க்ரவுட் இஸ் தேர்.... பட் தட் ஆல் சோ வில் பி பிசி இன் நூன் டைம் சார்....

....பார்... கிரவுட் இஸ் தேர் சார்.....

....யூ ஆர் ரைட் சார்..... வீ  ஹேவ் பார்ட்டி அட் கங்கோத்ரி  அரொண்ட்  7 பிஎம் ....அண்ட் ஆல் செட்ட்ல்ட் அண்ட் அரேஞ்ட்....

கேஷ் ஃபுளோ....சோ ஃபார் ....1,20,000/- கிரெடிட் கார்ட்....70,000/-  ப்ளாஸ் ரிப்போர்ட் இஸ்......அண்ட்....கன்சாலிடேட் இஸ் சோ ஃபார்....... திஸ்மச் சார்....

எக்ஸ்பெக்டட் கெஸ்ட்ஸ் ஆர் தேர் சார்.. ரூம்ஸ் ஆர் ஃபைன்....

தேங்க் யூ சார்.....யூ  ஆர் வெல்கம்...!!!!!!

தேவ்... தேவ்....என்னாச்சுய்யா... தூங்கிட்டியா....

திடுக்கிட்டு விழித்தேன்....தக்க்ஷின் இருட்டில் கிடந்தது. நெஞ்சு பட படவென்று அடித்தது....எதிரே ஹரி அண்ணா....

இல்லண்னா...கொஞ்சம் உள்ளே சுத்திப் பாக்கலாமண்ணா....ஹோட்டல....? கேட்டேன்...

இல்ல  தேவ் உள்ள கரண்ட் இல்லை... அதோட இல்லாம உள்ள எல்லாம் அப்டி அப்டியே திங்க்ஸ் எல்லாம் இருக்கு சோ... வேண்டாம்... என்றார். அவர் சொல்வதின் அர்த்தம் புரிந்தது. 

வெளில பாக்கலாமாண்ணா....

வா... என்று அழைத்துக் கொண்டு வெளியே வந்தார்.  ஹோட்டல் காம்பவுண்ட்டை அவரோடு சுற்றி வந்தேன். 

எத்தனை இரவுகள், எத்தனை பகல்கள் உன்னை சுற்றி வந்திருப்பேன்...இன்று எல்லாம் தோற்றுப் போன பட்டத்து அரசனாய் நீ படையிழந்து, களமிழந்து, களையிழந்து நிற்க...இப்போதும் உன்னை சுற்றி வருகிறேன்....! எத்தனை கதைகள்தான் எனக்குச் சொல்வாய் காலமே? காட்சிகளும், காட்சி மாற்றங்களும், பிழைகளும், சரிகளும் என்று என்னை திளைக்க திளைக்க என்னைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு சுற்றி வருவதேன் காலமே? என்ன விடை வைத்திருக்கிறாய் எனக்கு? எது நோக்கி நகர்கிறது எனது வாழ்க்கை...?

வேலைக்கு ஆரம்பத்தில் ஒரு ரெளடியாய் என்னை மிரட்டினாயே தக்க்ஷினே....; நாளாக நாளாக ஒரு குழந்தையாய் என் தோளில் ஏறி  படுத்துக் கொண்டதும் நீதானே.....யோசித்தபடியே நடந்து கொண்டிருந்தேன்.

அண்ணாஆஆஆஆ.... நான் போட்ட சப்தத்தில் ஹரிண்ணா திடுக்கிட்டுத் திரும்பினார்....

எம்.டி சாரின் மாருதி ஜிப்ஸி ஜீப் அவர் எப்போதும் நிறுத்துமிடத்திலேயே துருப்பிடித்து, டயர்கள் பிய்ந்து போய் எலும்புக்கூடாய் நின்று கொண்டிருந்தது...!

அண்ணா.. எம்டி சாரோட வண்டிதானே...இது..? என்னாச்சுன்னா? கேட்டேன்....

அவர் ஓட்றது இல்லப்பா அப்டியே விட்டுட்டாரு....வண்டியும் ரிப்பேராச்சு....சரி போகட்டும்னு அப்டீயே விட்டுட்டோம்....

வண்டியினை தடவி பார்த்தேன். சிங்கம் மாதிரி எம்.டி சாரை சுமந்து கொண்டு அந்த காம்பவுண்ட்டிற்குள் வந்த அந்த காலங்கள் நினைவுக்குள் எட்டிப்பார்த்து தேம்பத் தொடங்கின...

எனக்கு மனசு கொள்ளவில்லை.....

அண்ணா ....நாம எம்.டி சார பாக்காலாமா? பிசியா அவர் இருந்தாக் கூட பரவாயில்லண்ணா.. ஜஸ்ட் 5 மினிட்ஸ் பாத்துட்டு அவர் கை பிடிச்சு நன்றி சொல்லி கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிட்டு  போயிடுறேன்... தொடர்பில்லாம போச்சுன்னா இவ்ளோ நாள்... அட்லீஸ்ட் ஒரு ரேப்போர்ட் ஆவது மெயிண்டெயின் ஆகும்...

என்னாபா சீரியசாதான் பேசுறியா...? ஒனக்கு ஒண்ணும் தெரியாதா...? தெரிஞ்சு இருக்கும்னுல நான் பேசாம இருந்தேன் இவ்ளோ நேரம்.....

என்னாச்சுன்னா... எனக்கு ஒண்ணும் தெரியாதுண்னா...ஹரிண்ணா முகத்தைப் பார்த்தேன்.


என்னாப்பா இப்டி சொல்றா.... ஆனந்த்குமார் சார் இறந்து போய்ட்டாருப்பா....உனக்கு தெரியாதா?

காலம் என் முகத்தில் பேயாய் அறைய... 

வார்த்தைகளின்றி ஸ்தம்பித்து நின்று கொண்டிருந்தேன்....!


(மீதி அடுத்த பதிவில்....)



தேவா சுப்பையா...






Comments

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...