Skip to main content

செல்லம்..ப்ரியம்....இம்சை...!


உங்களுக்கு எல்லாம் ஒன்று தெரியுமா? அவளை நான் இதுவரையில் சந்தித்ததே இல்லை. பேசி இருக்கிறோம் நிறைய நிறைய...! கவிதைகள் பரிமாறிக் கொண்டிருக்கிறோம். அவை யாவும் ஒன்று யாரோ யாருக்கோ எழுதியனவாய் இருக்கும்  அல்லது நான் யாருக்கோ எழுதியதாய் இருக்கும் அதுவும் இல்லையென்றால் அவள் யாருக்கோ எழுதியதாய் இருக்கும். நிறைய காதல் கவிதைகள், ருஷ்ய புரட்சி பற்றிய பார்வைகள், ஹிரோஷிமா நாகசாகி இன்றளவும் ஏற்படுத்தி சென்றிருக்கும் அதிர்வலைகள், சோழர்கள் காலத்தில் தழைத்தோங்கி இருந்த தமிழர் பெரும் நாகரீகம், ராஜராஜ சோழனின் மனைவிகள், நிசும்ப சூதனி எப்படி சோழர்களின் காவல் தெய்வமானாள், கற்றளிகள் எழுப்ப வேண்டுமென்ற எண்ணம் எந்தச் சோழனின் மனதில் முதலில் உதித்தது, சிறு குழுவினராய் இன்று இருக்கும் யூதர்கள் ஏன் உலகம் முழுதும் பேசப்படுகிறார்கள்...? என்பதில் ஆரம்பித்து, காரல்மார்க்ஸ், சே, பிரபாகரன், சாலமன் ருஷ்டி, தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்கள், திமுக, அதிமுக, காங்கிரஸ், இந்தியா... என்று நமீதாவின் குத்தாட்டம் வரை எல்லாம் பேசுவோம்.....

எங்களுக்குள் என்ன உறவு இருந்தது, அவள் என்னவாக என்னை நினைத்திருப்பாள் என்று கூட நான் இதுவரையில் யோசித்துப் பார்த்திருக்கவில்லை. ஏதோ ஒரு உறவோடு நிறைய நிறைய பரிமாறல்கள் அங்கே இருந்தன. ஆங்கிலத்தில் கம்பெனியன் என்று ஒரு வார்த்தை உண்டு. கம்பெனியன் என்பதை தமிழில் எப்படி வகைப்படுத்திச் சொல்ல என்று எனக்குத் தெரியவில்லை. ஆங்கிலத்தில் விளங்கிக் கொண்டு ஆங்கிலத்திலேயே ஊறி நான் உணர்ந்த படிமம் அது. துணை என்று சொல்லும் போது யாரோ ஒருவருடன் பயணிக்கும் என்ற ஒரு சாதாரண அர்த்தத்தை அது கொடுத்து விடுகிறது. நட்பு என்ற வார்த்தை மிகவும் தடிமனானது, அழுத்தமான ஒரு உறவும் கூட... இப்படியாக காதலி, மனைவி என்று எந்த வார்த்தையாலும் நிரப்ப முடியாத ஆங்கில வார்த்தைதான் கம்பெனியன்.

கம்பெனியன் என்பது தொடர்பில் இருத்தல், தொடர்பில் லயித்தல், எதிர்பார்க்காமலிருத்தல், எதிர்ப்பார்த்து ஏமாந்து அந்த வலியைச் சுமத்தல், நல்ல கம்பெனியன்கள் அழுத்தமான உணர்வுகளை, நினைவுகளை இடைவிடாது நமக்குள் விதைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அவளும் அப்படித்தான் எனக்கு ஒரு நல்ல கம்பெனியனாக இருந்தாள். ஒரு நாளின் எல்லா நிமிடங்களிலும் சுவராஸ்யமானவளாய் இருந்ததாலோ என்னவோ அந்த சுவாரஸ்யத்துக்குள் மூழ்கிக் கிடந்ததாலோ என்னவோ... எங்களின் உரையாடல்கள் கொடுத்த போதையில் திளைத்துக் கிடந்ததாலோ என்னவோ... என்னைப் பற்றி அவளும்... அவளைப் பற்றி நானும்... உடல் சார்ந்து முன்னிலைப் படுத்திக் கொள்ளும் வாய்ப்பு அற்றுப் போயிருந்தது.

ஒரு நாள் கலீல் ஜீப்ரானைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். 

"ஒரு கவிஞன் தனது கவிதையை நேசிப்பது போல நேசிக்கத் தொடங்கு,  அமைதியான குளத்தில் தாகத்துக்காய் நீர் பருக இறங்கிய ஒரு நெடுந்தூரப் பயணி அந்தக் குளத்தில் கண்ட தன் உருவத்தை எப்படி நினைவில் வைத்திருப்பானோ அப்படி என்னை நினைவில் வைத்துக் கொள்...., பிறந்து கண் திறந்து இவ்வுலகின் ஒளியைக் காணும் முன் இறந்து போன தன் குழந்தையை நினைவில் வைத்திருக்கும் ஒரு தாயைப் போல என்னை நினைவில் வை...

எவ்வளவு வலியோடு கூறியிருப்பாள் செல்மா..." என்று தன் கண்ணில் நீர் ததும்ப அவள் என்னிடம் சொன்ன போது அவளுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. வாழ்க்கை சில நேரங்களில் வேறு ஒருவரின் வாழ்க்கையைப் போலவே இன்னொருவரின் வாழ்க்கையை பிரதி எடுத்து விடுகிறது. ஜீப்ரானிற்குள் விதையாய் செல்மா விழுந்தது போல அவளும் எனக்குள் விழுந்திருந்தாள். பேசுவதற்கு எதுவும் இல்லாமல் இருந்த அந்த சில மணித்துளிகளில் கடவுள் எங்கள் முன் தியானித்து கொண்டிருந்தார்.

நம் காதற்பெரும்பொழுதின் கதவுகள் இதோ கூப்பிடு தூரத்தில் நமக்காய் திறந்திருக்கின்றன. யுகங்களாய் பிரயாணப்பட்டு நாம் அதை நெருங்கும் தருணத்தில் நீ என்னிடம் விடைபெற்றுக் கொள்ள வந்திருக்கிறாய். என் காதலை உன் விழிகளுக்குள் ஊற்றி விட்டேன்...., உன் இதய துடிப்பின் இடைவெளிகளுக்குள் என்னை நிறைத்துக் கொண்டு விட்டேன். நான் என்ற ஒன்றும் நீ என்ற ஒன்றும் இப்போது உடைந்து நொறுங்கி எல்லையற்றதின் கனவுகளைச்  சுமந்து செல்லும் ஒற்றை பறவையாகி விட்டது. நாம் ஒன்று செய்யலாம் மெளனத்தின் மொழியை மனதிற்குள் அசை போட்டபடி சிறகு வலிக்க இந்த வானப் பெருவெளி முழுதும் பறந்து செல்வோம். என்றோ ஒரு நாள் நம் சிறகுகள் வலித்து, வலித்து அதற்கு மேல் நகர முடியாதென்ற நிலை ஒன்று வரும் போது எவ்வித முயற்சிகளுமின்றி....

ஒரு வனத்தின் மீதோ, மலையின் மீதோ, புற்களின் மீதோ, மணலின் மீதோ அல்லது கடலின் மீதோ.....அசையாமல் இருக்கிறதே அனாதியான காலம் அது போல வீழ்ந்து போவோம். இப்படியே நம்மை இருக்க யார்தான் விடுவார்..? இந்த பூமி கணவன் மனைவிகளுக்கானது...., காதலர்களுக்கானது அல்ல....!!!! காமத்தை வைத்தே உறவுகளைத் தீர்மானிக்கும் இந்த ஒழுங்கிற்குள் நின்று நியாயங்கள் பேசும் நம்மைப் போன்ற சிறுபான்மையினர்களுக்கு காலம் காலமாய் மெளனம் மட்டுமே மொழியாய் இருந்திருக்கிறது, தியாகம் மட்டுமே பரிசளிக்கப்பட்டிருக்கிறது. கனவுகளை காலம் பிரித்துப் போடுகையில் அதை எதிர்த்து நிற்பதென்பது வீரம் அதை ஏற்று வாழ்வதே வீரம். காதலிக்கவே தெரியாதவர்களுக்கு எப்படி புரியும் காதலின் மொழி...? எப்படித் தெரியும் காதலின் வலி...? உருவங்களைப் பிரிக்கத் தெரிந்தவர்கள் உணர்வுகளை என்ன செய்து விட முடியும்....?

அவளின் இயலாமயை, அந்த சோகத்தை சிரிப்பாய் உதிர்த்தாள் அவள்...

இன்னமும் அவளின் கிசுகிசுப்பான பேச்சுக் குரலோடு உருண்டோடிக் கொண்டே இருக்கிறது காலம்.

சாப்டீங்களா? எப்போதும் கேட்பாள். சாப்பிடும் பொழுதெல்லாம் அது நினைவுக்கு வருகிறது. கவிதைகளை எழுதும் போது கற்பனையில் ஒரு பெண்ணும் வந்து இம்சிக்கக் கூடாது..... கவிதை எப்போதும் இதுவரையில் காணாத ஒரு பெண்ணுக்காய் எழுதப்பட வேண்டும் என்பாள் ஆனால் என் கவிதை வரிகளுக்குள் வியாபித்துக் கிடக்கும் அவளை எப்படி என்னால் விரட்டி விட முடியும்?

"சூரியனைக் காதலி...
நிலவை மணந்து கொள்...
பூமியை புணர்....
காற்றை கட்டியணைத்துக் கொள்....
கனவுகளோடு துயில்
கவிதைகளை துணைக்கு அழை...
மேகம் பார்த்து புன்னகை செய்...
சமவெளிகளுக்குள் தனியாய் நடந்து சென்று
முயலாய் பதுங்கிக் கொள்...
முடிந்த வரை மனிதர்களை தூரமாய் வை....
புலன்களை அறுத்தெறி....
புத்தகங்களோடு வாழ்க்கை நடத்து...."

என்றுஅவள் சொல்லி முடிக்கும் முன்பே சொல்வேன்... நீ என்னோடு இரு....
இது எல்லாம் நடக்கும் என்று...!

டேபிளின் மீதிருந்த டீயை எடுத்து உதடுகளுக்குக் கொடுத்தேன். அவளின் நினைவுகள் மலைப்பிரதேசத்துக் குளிராய் என்னை நடுங்கவைத்துக் கொண்டிருந்தது. நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கொண்டேன்.  வாழ்க்கை உணர்வுகளால்  நிரம்பியது. எது எதுவோ பிடிக்கிறது. எது எதுவோ பிடிக்காமல் போகிறது. ஆசைகளுக்கு நடுவே வாழும் வாழ்க்கையில் ஆன்மாவின் தேவையை யார்தான் அறிவார்? எப்போதோ கேட்ட பாடல் ஒன்று புத்திக்குள் நின்று கொண்டு படுத்தி எடுக்குமே அந்த சுகத்தை நான்குவரியில் ஒரு கவிதையாக்கத் தெரிந்தவன் பாக்கியவான். குழந்தை எடுத்து வைக்கும் முதல் அடியைப் போல இன்னமும் ஒரு குறு குறுப்பாய்த்தான் இருக்கிறது ஒவ்வொரு நிமிடத்தை கடக்கும் பொழுதும்....

உலகம் முழுதும் கோடிக் கணக்கில் செல்மாக்களை ஜீப்ரான்கள் தொலைத்துக் கொண்டே  இருக்கிறார்கள். வருடம் முழுதுதும் பூக்கள் பூத்துக் கொண்டே இருக்கிறதே அதைப் போல....பூக்களைச் சுமந்து கிடப்பதை விட வேறென்ன சுகம் வேண்டியிருக்கிறது இந்த பூமிக்கு.....

அழகாய் பூக்களை போர்த்திக் கொண்டு படுத்திருந்ததும், படுப்பதும் போதாதா என்ன...? போதும் என்றே தோன்றியது எனக்கு.....

எங்கோ இருந்து அவளும் இதோ போல எனக்கான காதலைத் தேம்பிக் கொண்டிருக்கலாம், என்னைப் போலவே பட்சிகளோடு பேசிப் பேசி மிச்சமிருக்கும் எனக்கான வார்த்தைகளை உதிர்த்துக் கொண்டிருக்கலாம் காமத்தில் அவள் உடம்பு எரிந்து கொண்டிருக்கையில் அதிலிருந்து ஒரு சிறி பொறியாய் என் ஞாபகங்கள் தெறித்து விழுந்து அவள் புத்திக்குள் ஏதேதோ நினைவுகளை மீட்டெடுக்கலாம், தினமும் என்னைப் போலவே அவளும் யாருக்கோ எழுதுவதாய் நினைத்துக் கவிதைகள் எழுதி கொண்டிருக்கலாம்.....

உடல்களைப் பிரித்து விட்டாலும் உன்னால் பிரிக்க முடியாத எங்கள் ப்ரியங்களை என்ன செய்வாய் காலமே...? 

அவளை ஒருமுறை கூட நேரில் சந்திக்காமல் போனது மனதை ஏதோ செய்தது. 

வானத்தை வெறித்துக்கொண்டே....

அவள் எழுதி அனுப்பிய கடிதங்களைப் புத்திக்குள் புரட்டிக் கொண்டிருந்தேன்....!




தேவா சுப்பையா...



Photo Courtesy: Ashok Arsh









Comments

sulthanonline said…
வாழ்க்கை உணர்வுகளால் நிரம்பியது. எது எதுவோ பிடிக்கிறது. எது எதுவோ பிடிக்காமல் போகிறது. ஆசைகளுக்கு நடுவே வாழும் வாழ்க்கையில் ஆன்மாவின் தேவையை யார்தான் அறிவார்?// உண்மை தான் அண்ணா இதே மாதிரி உணர்வுகள் எனக்கும் நிறைய இருந்ததுண்டு கால ஓட்டத்தில் காணாமல் போய்விட்டது. மறுபடியும் நினைவுகளை மீட்டெடுக்கின்றது உங்கள் பதிவு

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...