Skip to main content

வேங்கைகளின் மண்...3 !






இனி.....


இருள் சூழத் தொடங்கி இருந்தது. கருவேலம் காடுகளுக்கு நடுவே முட்களை விலக்கியபடி அந்த உருவம் வெற்றியூர் கிராமத்தை நோக்கி மெளனமாய் நடந்து கொண்டிருந்தது. முன்னால் இருவர் கையிலிருந்த நீண்ட கோலினால் செடி கொடிகளை விலக்கியபடி சென்று கொண்டிருக்க அவருக்குப் பின்னால் இருவர் சுற்றும் முற்றும் பார்த்தபடி நடந்து சென்று  கொண்டிருந்தனர்.

ஐயா தீபம் கொளுத்தனுங்களா? முன்னால் சென்று கொண்டிருந்தவர்களில் ஒருவன் அவரைப் பார்த்து திரும்பி கேட்ட போது வேண்டாம் என்று சைகையால் சொல்லி விட்டு தலைக்கு மேலே ஒளி வீசிக் கொண்டிருந்த நிலவைக் காட்டி அது போதுமென்று சைகையால் சொன்னார். வருடத்தில் மூன்று மாதங்களும் கோடையில் அவ்வப்போது பெய்யும் மழையையும் மட்டும் பார்த்திருந்ததால் அந்த கோடை மாதத்தில் செம்மண் நன்றாகவே இறுகிப் போய்கிடந்தது. சர சரவென்று சப்தம் கேட்கும் போது மெல்ல நின்று நிதானித்து நிலவு வெளிச்சத்தில்  மின்னும் உடலோடு நகர்ந்து செல்லும் சர்ப்பங்களை மெளனமாய் அவர்கள் கடந்து சென்று கொண்டிருந்தார்கள்.
                                       
                                                                        ***

ஏப்பு நம்மூரு கதை சொல்லி வெளக்கு பொருதுன ஒடனே வந்து கதையச் சொல்வாப்ளேல்ல... இன்னிக்கு என்ன வெளக்கு வச்சு இம்புட்டு நேரமாச்சு ஆளக் காணோம், கள்ள கிள்ள குடிச்சுப்புட்டு போதையில படுத்துட்டாப்லயா....

கூட்டத்தில் ஒருவர் சப்தமாய் கேட்க கூட்டம் கேலியாய் சிரித்தது.

கோடாங்கிய அப்டி எல்லாம் சொல்லாதீகப்பா வேற யாரோ ஒரு பெருசு மங்கலத்துப் பக்கம் கதை சொல்றவராம் அவரு நம்மூரு வழியா சங்கராதிபதி காட்டுப்பக்கம் ஏதோ சோலியா போறாராம்பா அவருதேன் இன்னிக்கு நமக்கு கதை சொல்லப் போறாரு....

அடியெளவே நம்ம கோடாங்கி கதையக் கேட்டு கேட்டு பொசக்கெட்டுப் போயி கிடக்குற நம்மளுக்கு புதுசா ஒருத்தரு வந்து கதை சொன்னா நல்லாத்தேன் இருக்கும்.... புகையிலையை மென்றபடி ஒரு அப்பத்தா கனைத்தபடியே சொன்னது....

இந்த வந்துடாப்ளப்ப கோடாங்கி, கூட நாலஞ்சு பேரு வாராகளே... அந்தப் பெரியவருதேன் கதை சொல்லப் போராறா....சட்டுப் புட்டுன்னு சொல்லுங்கப்பு காலையில வெள்ளன வயலுக்குப் போகணும் சோலி கிடக்கு.... இருமியபடியே சொன்ன அந்த பெரியவரை பார்த்து கையமர்த்தினார் கோடங்கி.

இப்ப நம்மூருக்கு வந்திருக்க பெரியவரு கதை சொல்லுவாரு... சத்தம் கித்தம் போடாம பேயாம கதைய கேளுங்க சனங்களே............... சப்தமாய் பெருங்குரலெடுத்து சொல்லி விட்டுக் கோடங்கி பெரியவருக்கு வழி விட்டார். பெரியவரோடு வந்த மற்ற நான்கு பேரும் ஓரமாய் போய் கூட்டத்தோடு கூட்டமாய் நின்று கொண்டனர்.

ஏப்பு பந்தத்த பெரிசா எரியவுடுங்க அம்மூருக்கு வந்திருக்க பெரியவருக்கு தண்ணிங்கிண்ணி ஏதாச்சும் கொடுங்க... கூட்டத்திலிருந்து யாரோ குரல் கொடுக்க....

சீமையின் பெருமக்களே வணக்கம்!!!!!  ஒங்கூரு கோடாங்கி என்னோட தூரத்து சொந்தம், வேற சோலியா இங்கிட்டுப் போறப்ப இன்னிக்கு ராவைக்கு கதை சொல்லிட்டு போங்களேன்னு கேட்டாரு அதனால நான் இங்க வந்திருக்கேன்....

முத்துக்கருப்பா, பேச்சித்தாயி, குன்னக்குடி முருகா.... காளையார்கோயிலு காளீஸ்வரா.... எஞ்சாமி எல்லாம் என் முன்ன வந்து நில்லுங்க...இப்ப நான் ஒரு கதை சொல்லப் போறேன்.. கதை சொல்லப் போறேன்.. கதை சொல்லப் போறேன்....

பெருங்குரலெடுத்து அந்தப் பெரியவர் கதை சொல்ல ஆரம்பித்திருந்தார்.....

மன்னர் முத்துவடுகநாதத் தேவர்.. தன்னுடைய முதல் மனைவி வேலு நாச்சியாரையே பார்த்துக் கொண்டிருந்தார். ஏன் வேலு எதற்காக காளையார் கோயிலுக்குச் செல்ல வேண்டாம் என்று கூறுகிறாய்...? எனக்கு இந்த வாழ்க்கையின் அவசர அலுவல்களுக்கு நடுவே கிடைக்கும் மிகப்பெரிய ஒரு நிம்மதி ஈசன் சன்னதிதான். அவ்வப்போது அங்கே சென்று வருவதால் மிகப்பெரிய புத்துணர்ச்சியை நான் பெறுகிறேன். நீயும் என் கூட வா, கெளரியையும் உடன் அழைத்துக் கொள்வோம். காளீஸ்வரனை மனதார கும்பிட்டு வருவோம்.

இல்லை தேவரே..... இது சரியான காலச் சூழல் கிடையாது. இப்போதுதான் நம்மை ஆக்கிரமிக்க முற்பட்ட கும்பனியர்களின் படையை நாம் தோற்கடித்து வெற்றி வாகை சூடியிருக்கின்றோம். ஆதிக்க மனப்பான்மையும் குறுக்குப் புத்தியும் கொண்ட கும்பினியர்கள் படைகள் சமாதானமாய்ப் போவதாய் நம்மிடம் கூறி இருப்பதை நாம் நம்பலாகாது. சிறிது காலம் நாம் அமைதியாயிருந்து குள்ள நரிகளின் செயல்பாட்டினைக் கண்காணித்து அதன்படி நம் நகர்வினைத் தீர்மானித்தலே சரியான விடயம்.

சமாதானம் பேசியிருப்பதை எப்படி வேலு நாம் நம்பாமலிருப்பது? எதிரியாய் இருந்தாலும் சமாதானம் என்று வந்த பின்பு தொடர்ச்சியாய் விரோதப் போக்கினை நாம் மேற்கொள்வது நமது மரபல்லவே.... எப்படியாயினும் மருது சகோதரர்களின் கீழ் நமது பெரும்படை எப்போதும் தயார் நிலையிலேயேதானே இருக்கிறது....

இராமநாதபுரம் சீமை மீட்பில் நமக்காய் போர்க்களத்தில் உயிர் நீத்த வீரமறவர்களின் சமாதியில் மரியாதை செலுத்தி விட்டு அவர்களின் மனக்கேதம் தீர ஈசனை வழிபட்டு வருவோம் வா... கும்பினியர்கள் நமது வலிமையை இப்போது அறிந்தவர்களாயிருக்கிறர்கள். இனி நாம் வரி கொடோம் என்பதையும் தெளிவாய் உணர்ந்தவர்களாயிருக்கிறார்கள் ஆபத்து ஒன்றுமில்லை.... வா வேலு போய் வரலாம்.....

மன்னர் முத்துவடுகநாத சேதுபதி வேலு நாச்சியாரிடம் சமாதானம் பேசினார். 

நீங்கள் ஒரு முடிவெடுத்து விட்டால் அதிலிருந்து பின் வாங்க மாட்டீர்கள் என்பதை நானறிவேன் தேவரே...! நீங்கள் வேண்டுமானால் கெளரியை அழைத்துக் கொண்டு காளையார் கோயில் சென்று வாருங்கள். உங்களுடன் ஒரு சிறுபடையையும் துணைக்கு அழைத்துச் செல்லுங்கள். எனக்கு மனதுக்கு ஏதோ சரி இல்லை என்று படுகிறது. நான் சிவகங்கையிலேயே இருக்கிறேன்.....

கெளரீ...நீ மன்னரோடு காளையார்கோயில் சென்று பத்திரமாய் திரும்பி வா....வேலு நாச்சியார், கெளரி நாச்சியாரைப் பார்த்து சொன்னார்.

நான் மன்னரோடு சென்று பத்திரமாய் திரும்பி வருவேன் அக்கா.... புன்னகையோடு பதில் சொன்னார் கெளரி நாச்சியார்.

வேலு.... சிறு படை ஒன்றும் வேண்டாமே கண்மணி. காரணமின்றி நான் படைகளோடு சென்றால் கும்பினியர்கள் தேவையில்லாத குழப்பம் அடைவார்கள், ஆதலால் ஒரு ஐந்து பேரை மட்டும் எங்களோடு அழைத்துச் செல்கிறேன். எல்லாம் சரியாய் நடக்கும், நீ ஒன்றும்  கவலையுறாதே...... என்று மன்னர் முத்துவடுகநாதர் சொன்னதற்கு அரைமனதோடு சம்மதம் சொன்னார் சிவகங்கை மண்ணின் வீரத் தாய் வேலு நாச்சியார்.

கெளரீ.... நாளை அதிகாலையில் நாம் சிவகங்கையிலிருந்து காளையார்கோயில் நோக்கிச் செல்வோம். உடையணன், திருப்பன், செல்லமுத்து, மாணிக்கம், சேர்வை உடன் எனது இரு மெய்க்காப்பாளர்களோடு செல்வோம், வழியில் கொல்லங்குடி அரண்மணையில் தங்கி இளைப்பாறி விட்டு மாலையில் போரில் இறந்த வீரர்களின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி விட்டு காளீஸ்வரனை வணங்க செல்வோம்....

என்று கூறி விட்டு வேலு நாச்சியாரைப் பார்த்து வேலு இரண்டு குதிரைகளில் நாங்கள் பயணிக்கிறோம் அதுவே போதுமானது. தேரோ அல்லது பல்லக்கோ வேண்டாம்...பிரயாண ஏற்பாடுகளை மந்திர தாண்டவராயன் பிள்ளையிடம் கூறி செய்யச் சொல்....மருதுபாண்டிய சகோதரர்களுக்குச் செய்தியனுப்பி படைகளை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கச் சொல்.....

விடியலில் எழவேண்டும் அதனால் நான் உறங்கச் செல்கிறேன் என்று விடுவிடுவென்று கூறி விட்டு அந்தப்புரத்திற்குள் சென்றார் மன்னர்.

சிவகங்கை அரண்மனை.. நகரத்தின் மையத்தில் கடுமையான காவலோடு அன்றிரவு உறங்கச் சென்றது....


(புரட்சி இன்னும் வெடிக்கும்...)




தேவா சுப்பையா...











Comments

சிவகங்கைச் சீமையின் கதை...
வேலு நாச்சியார், மருது பாண்டியர்கள் வரலாற்றை திரும்பிப் பார்க்க வைக்கும் பகிர்வு... அருமை அண்ணா....
சிவகங்கை அரண்மனை தூங்குவது அடிவயிற்றில் பயத்தை அப்புகிறது...
அருமை...
தொடருங்கள் அண்ணா.... தொடர்கிறோம்...

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...