Skip to main content

வேங்கைகளின் மண்...4 !







இனி.....


கெளரீ...விடியற்காலை பிரயாணம் உனக்கு ஒன்றும் உபாதை தரவில்லையே... காதலோடு தன்னுடன் குதிரையில் வந்த கெளரி நாச்சியாரைப் பார்த்து கேட்டார் மன்னர் முத்து வடுகநாதார். ராணியாரையும், மன்னரையும் பின் தொடர்ந்து மூன்று குதிரைகளும், அவர்களுக்கு முன்னால் இரண்டு குதிரைகளும் காற்றில் பறந்து கொண்டிருந்தன. சிவகங்கைச் சீமை வானம் பார்த்த பூமிதான் என்றாலும் முத்துவடுகநாதர் ஒவ்வொரு கிராமத்திலும் ஆறேழு ஊருணிகளையும் கிராமத்து எல்லையில் மிகப்பெரிய கண்மாய்களையும் வெட்டுமாறு ஆட்களைப் பணித்திருந்தார்.

செம்மண் பூமியில் ஆற்றுப்பாசனம் இல்லாவிட்டாலும் பெருங்கேணிகளும், தேக்கி வைத்த மழைநீரை அடைத்து நின்ற பெருங்கண்மாய்களும் விவசாயத்தை செழிப்பாய்த்தான் வைத்திருந்தன. கார்காலம் தொடங்குவதற்கு முன்பு நெல்லும், கார்காலத்திற்கு பின்பு அறுவடை முடிந்த பின்பு மீண்டும் நிலத்தை உழுது பண்படுத்தி மிளகாய், கம்பு, கேழ்வரகு, திணை, நிலக்கடலை, எள் போன்ற தானியங்களும் தொடர்ந்து அந்த மண்ணிலே பயிரிடப்பட்டன. சீமை ஓடுகளாலும் நெருக்கமான முறையில் பனை ஓலைகளாலும் வேயப்பட்ட வீடுகளின் கூரைகள் இருந்தன. சாணம் மொழுகிய வீடுகளின் உள்ளும் புறமும் மாக்கோலங்கள் இடப்பட்டிருந்தன. வீடுகளும் வீட்டை ஒட்டிய மிக நீண்ட மாட்டுத் தொழுவங்களும், ஆடுகள், மாடுகள் கோழிகளோடு வாழும் மனிதருமாய் ஒரு இயல்பான இயற்கை சார் வாழ்க்கை நடந்து கொண்டிருந்தது சீமை முழுதும். 

விவசாயக் கலப்பைகள் செய்யும் கொல்லர் பட்டறையை கடந்த போது, நிறைய கலப்பைகளை செய்யும் படி சீமை முழுதும் அறிவுறுத்தி இருக்கிறேன் கெளரீ... விவசாயம் செய்பவர்கள் அதிகரித்து விவசாயக் கலப்பைகளின் தேவை எந்த ஒரு தேசத்தில் அதிகரிக்கிறதோ அங்கே மக்கள் குறைவில்லாத வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்று அர்த்தம்.  சோழ தேசத்தில் ஆற்றுப்பாசனம் இருப்பதால் அவர்களால் எளிதாய் விவசாயம் செய்து விட முடிகிறது....

ஆனால்...

நம்மைப் போன்ற வானம் பார்த்த பூமியில் வாழும் மக்களின் உணவுத்தேவையை, உற்பத்தியை அதிகரிக்க துல்லியமான செயற்திட்டங்களை நாம் செயற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. சீமை முழுதும் இருக்கும் கண்மாய்களை கோடைக் காலங்களில் தூர் வாரி மழைக்காலங்களில்  அவற்றை நீரினைத் தேக்கி வைக்கும் பெருங்கலன்களாக நாம் மாற்றி வருகிறோம். தமிழர் பூமியில் நம் சீமையில் மட்டும்தான் வேறெங்கும் காண முடியாத பெருங்கரைகளைக் கொண்டக் கண்மாய்களை வெட்டி உயர்த்தியிருக்கிறோம். எந்த ஒரு அரசு அல்லது அரசன் மக்களின் உணவுத் தேவையை, பூர்த்தி செய்ய திட்டங்கள் தீட்டுகிறானோ அவனை மக்கள் எப்போதும் போற்றிக் கொண்டேயிருப்பார்கள்....! 

உணவுதான் வாழ்க்கையின் பிரதானம் கெளரீ. பசியோடு இருக்கும் ஒருவனால் எந்தச் செயலும் செய்ய முடிவதில்லை. பசி தீர்ந்தால்தான் உயிர் அடுத்தடுத்த விசயங்களைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பிக்கும். உணவுக்குப் பிறகு உறக்கம். உண்டு, உறங்கி செழிப்பாய் இருக்கும் ஒருவனால்தான் அடுத்தடுத்த சுகபோகங்களை நோக்கி நகர முடிகிறது. தேவையான அளவு உணவும் அதை அடுத்த தேவைகளும் பூர்த்தியானால் மனிதன் தன் சக மனிதர்களுக்கு தொல்லைகள் கொடுக்காமல் இருக்க முடியும். அடிப்படையில் திருப்தியின்மையிலிருந்துதான் கெளரி எல்லா பிரச்சினைகளுமே தொடங்குகிறது. கீழை நாட்டைச் சேர்ந்த நமக்கு நமது மூதாதையர்களால் அகம் சார்ந்த வாழ்க்கை போதிக்கப்பட்டிருக்கிறது. எல்லா அசாதாரண சூழல்களிலும் திருப்தியை நோக்கி நகர்வது எப்படி என்பதுதான் நமக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கும் பாலபாடம். 

வெள்ளையர்களைப் பார், அவர்களின் தேசத்தில் திருப்தியுற்று அவர்களால் இருக்க முடியவில்லை. அவர்களுக்கு திருப்தி என்றால் என்னவென்றே தெரியாது. ஆசையும், ஆதிக்க மனப்பான்மையும் அவர்களின் ரத்தத்தில் கலந்த ஒன்று. நன்றியுணர்ச்சியும், உறவுகள் மீது நம்பிக்கையும் அவர்களுக்கு அதிகம் கிடையாது. புறம் சார்ந்த வாழ்க்கை அவர்களுடையது. அதனால்தான் வியாபாரம் செய்ய வந்த இடத்தில் இப்படி ஆதிக்க மனப்பாங்கு கொண்டு அலைகிறார்கள். பயம் மிகுந்தவனே பாதுகாப்பிற்காக என்ன என்ன செய்து கொள்ளலாம் என்று திட்டமிடுகிறான். பயமே பாதுகாப்பு என்ற பெயரில் புதிய புதிய போர்க்கருவிகளை தயாரிக்க வைக்கிறது. நமது போர் என்பது வீரம் சார்ந்தது இதில் தந்திரம் என்பது மிக மிகக் குறைவு. நமது போர்கள் திட்டமிடலின் பெயரிலும், வியூகங்கள் வகுப்பதன் பெயரிலுமே பெரும்பாலும் முன்னெடுக்கப்படுகிறது. வாள் வீசி எதிரியை நேருக்கு நேர் சந்திப்பதற்குப் பெயர்தான் வீரம். 

போர் என்பதை முன்பே அறிவித்து போர் செய்யப்போகும் களம் இதுவென்று முடிவு செய்து, பெண்கள், குழந்தைகள், முதியவர்களை பாதுகாப்பாய் அனுப்பி விட்டு போர்புரிந்து வெல்வதுதான் நமது போர்முறை. அதோடு மட்டுமில்லாமல் நாடு பிடிக்க வேண்டி பாண்டியர்கள் அதுவும் சீமைக்காரர்கள் ஒரு போதும் இன்னொரு நாட்டை தாக்கி அழிப்பது கிடையாது. பொருள் வேண்டி புகழ் வேண்டி ஒரு போதும் சீமைக்காரர்கள் இன்னொரு நாட்டை பிடித்தழிப்பது கிடையாது. நமது போர் என்பது துரோகத்தை அழிப்பதும், பாதுகாப்பை நிலைநிறுத்தவும் வேண்டிதான் எப்போதும் நிகழ்கிறது கெளரி.....


மன்னர் முத்துவடுகநாதர் பேசிக் கொண்டே வந்ததை ராணி கெளரி நாச்சியார் வைத்த கண் வாங்காமல் கேட்டுக் கொண்டே வந்தார். முத்துவடுகநாதர் அற்புதமான பேச்சுத் திறமை கொண்டதால்தானே... காளையார்கோயிலில் அவரைக் கண்டவுடன் காதலில் விழுந்தார் கெளரி நாச்சியார். கெளரீ ....என்ன அமைதியாய் வருகிறாய் என்று கெளரி நாச்சியாரின் மெளனத்தை உடைத்தார் மன்னர் முத்துவடுகநாதர். இல்லை மன்னா... உங்களின் சத்தியமான வார்த்தைகளுக்குள் தேன் குடித்த வண்டாய் நான் மயங்கிக் கிடந்ததால் ஒன்றும் பேசத் தோன்றவில்லை.  அன்றொரு பொழுதில் உங்களை முதன் முதலில் கண்டு நான் காதல் வயப்பட்டதும், நம் காதலை அறிந்து அக்கா வேலுவே நம்மை சேர்த்து வைத்ததும் எனக்கு சட்டென்று நினைவுக்கு வருகிறது. கொல்லன்குடிக்குதானே திருமணம் முடிந்து என்னை முதன் முதலில் அழைத்து வந்தீர்கள்....? வெட்கத்தோடு கேட்ட கெளரிநாச்சியாரை பார்த்து புன்னகைத்தபடியே குதிரையை செலுத்திக் கொண்டிருந்தார் மன்னர் முத்துவடுக நாதர்.

கொல்லன்குடி அரண்மனைக்கு மன்னரின் வருகை முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்ததால் அரண்மனை முழுதும் நிறைய தீபங்கள் ஏற்றி வெளிச்சமாக்கப்பட்டது. மன்னரும்,ராணியும் தங்கப்போகும் அறைக்குள் நறுமணப்புகை இடப்பட்டது. படுக்கைகள், மெத்தை விரிப்புகள் ரத்தின கம்பளங்கள் விரித்து அலங்கரிக்கப்படது. கொல்லன்குடி நகரத்தின் எல்லையிலிருந்து சாலை முழுதும் தண்ணீர் தெளிக்கப்பட்டு அழகிய கோலங்கள் இடப்பட்டிருந்தன. சாலையின் இரு பக்கத்திலும் வரிசையாய் முதலில்  தாரை தப்பட்டைகளும், கொம்பு ஊதுபவர்களும், மிருதங்கம் வாசிப்பவர்களும், நாதஸ்வரம் ஊதுபவர்களும், அதன் பிறகு தமுக்கடிப்பவர்களும், செண்டை மேளம் வாசிப்பவர்களும், பறை அடிப்பவர்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். மன்னரும் ராணியும் கொல்லன்குடிக்குள் நுழையும் போது ஆரம்பித்து தொடர்ச்சியாய் அவர்கள் அரண்மனையை அடையும் வரையில் குலவை இட பெண்கள் வரிசையில் நிறுத்தப்பட்டிருந்தனர். 

ஆங்காங்கே... குடம் குடமாக, பாலும், மோரும், பானகமும், பழங்களும், தட்டில் நிரப்பப்பட்டு எங்கு நின்று மன்னர் எது கேட்டாலும் கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கொல்லன்குடி நகர நிர்வாகி சொக்கப்பன் மன்னரையும் ராணியையும் வரவேற்க கையில் பூமாலைகளுடன் பரிவாரங்களுடன் நின்றிருந்தார். ஊர் முழுதும் ஆவாரம்பூ, மல்லிகை, கனகாம்பரம், செவ்வந்தி, கதம்பப் பூக்களாலும் தென்னங்குருத்துக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. நொங்கும், பனங்கிழங்கும், தேனும், பாலும், பழங்களும், பணியாரம், தேன்குழல், முறுக்கு, அதிரசம், தேனப்பம் போன்ற உணவுப் பொருட்கள் குடம் குடமாய் அரண்மனைக்குள் மன்னருக்காகவும் ராணிக்காகவும் சென்று கொண்டிருந்தன. 

யாருக்கும் சொல்லப்படவேண்டாம் என்று சொன்னேனே.. ஏன் இவ்வளவு வரவேற்பு ஏற்பாடுகள் என்று நகர நிர்வாகி சொக்கப்பனை அன்பாகக் கடிந்து கொண்டபடியே அரண்மனைக்குள் சென்ற மன்னர்.... நான் காளையார்கோயிலுக்கு மாலை செல்லப்போவது பற்றி யாருக்கும் தெரியக்கூடாது, இவ்வளவு வரவேற்பு ஏற்பாடுகளும் கூடாது, நானும் என் உடன் வந்த ஐவரும் மட்டும் சென்று அங்கே செய்ய வேண்டிய காரியங்களைச் செய்து கொள்கிறோம்...சரிதானே....?

என்று அதட்டலாய் நகரத்து நிர்வாக அதிகாரி சொக்கப்பனிடம் ஆணையிட்டார்.

அதில்லை மன்னா....வேலு நாச்சியார் தாய்தான்...என்று ஏதோ சொல்லவந்த சொக்கப்பனை...நான் சொல்வதைச் செய் என்று கட்டளையிட்டு மன்னர் அனுப்பி வைத்த அதே நேரத்தில்...

கொல்லன்குடி காட்டுப் பகுதிக்குள் மாமரத்தடியில் கோமணத்தோடு படுத்திருந்த வீர முத்தானந்தம் என்னும் சித்தர் படக்கென்று எழுந்து உட்கார்ந்து......

ஓ....கோ....இதுவும் நடத்துவாயோ சிவனே நீ.............????!!!!! என்று கொல்லன்குடி காடதிர கர்ஜிக்க.... சுற்றி இருந்த மரத்திலிருந்த பட்சிகள் எல்லாம் சப்தம் கேட்டு பயந்து கீச்சிட்டு கத்த, காட்டு நரிகள் உடன் ஊளையிடத் தொடங்க.... வீர முத்தானந்தம் எழுந்து காடதிர கையிலிருந்த உடுக்கையை அடித்தபடி ஆட ஆரம்பித்திருந்தார்....

இதுவும் நடக்குமோ ஈசனே....????
எதுவும் நடத்துவாயோ மோசனே....?!!!!
உயிரெங்கே போகுமோ...?
அப்போதுணர்வெங்கே போகுமோ...????!!!
இதுவெல்லாம் வெறுங்கனவென்றே ஆகுமோ.....
இதுவும் நடக்குமோ...ஈசனே....!!!!????


சித்தரின் ஆட்டத்தில் கிடுகிடுத்துக் கொண்டிருந்தது கொல்லன்குடிக் காடு....!



(புரட்சி இன்னும் வெடிக்கும்....)




தேவா சுப்பையா...














Comments

உங்கள் தேடல் வியப்பளிக்கிறது அண்ணா... ஒரு வரலாற்றை எல்லோரும் அறியும் வண்ணம் மிகச் சிறப்பான தங்கள் நடையில் கொடுக்கிறீர்கள்... அருமை... அருமை...

உடுக்கடித்து ஆடுவது மனதுக்குள் திடுக் என்றிருக்கிறது.

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...