வேறு எந்த ஒரு நடிகனின் படமும், வாழ்க்கையும் இந்திய சினிமாவுலகில் ரஜினி அளவுக்கு அரசியலாக்கப்பட்டிருக்க முடியாது. எந்திரனுக்கு பிறகு சுமார் நான்காண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இப்போது லிங்கா வெளியாகி இருக்கிறது. இடையில் ரஜினிக்கு உடல் நலமில்லாமல் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு ஓய்வில் இருக்க வேண்டிய கட்டாயம் வேறு இருந்தது. இதற்கு இடையில் 64 வயதைக் கடந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தில் ரஜினி எப்படி ஈடு கொடுத்து நடித்திருப்பார்? அவரது சூப்பர் ஸ்பீடும், மாஸ் ஸ்டைலும் இன்னமும் அப்படியேதான் இருக்கிறதா? மொத்தத்தில் ரஜினி ரசிக தரிசனம் எனப்படும் அந்தப் பரவச நிகழ்வை லிங்காவும் கொடுக்குமா...? இன்னொரு ரஜினியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தில் அவரது ரசிகர்கள் யாரும் கிடையாதே..? ரஜினியில் தொடங்கி, ரஜினியில் ஆர்ப்பரித்து ரஜினியோடு அடங்கப் போகும் பெருங்கூட்டமல்லவா இது...?
வெள்ளிக்கிழமை அதிகாலை மூன்றரைக்கு தலைவர் தரிசனத்துக்காக நான் பார்க்கிங்கில் இருந்து காரை உருவிய போது மணி 2:40. சார்ஜா நேஷனல் பெயிண்ட்ஸில் இருந்து உறங்காத அந்த நகரத்தின் பரபரப்பில்லாத சாலையில் வழுக்கிக் கொண்டே சென்று துபாய் ஹயாத் கலேரியாவின் கார் பார்க்கிங்கில் காரைச் சொருகிய போது மணி 3:20. கடுமையான குளிரில் ஸ்வெட்டரோடும் தலையில் குல்லாவோடும் நிறைய பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என்று அந்த விடியற்காலையில் எல்லோரும் ஒரு பரபரப்போடு தியேட்டர் முன்பு நின்று கொண்டிருந்தனர். ஒரு சிலர் என்ட்ரன்ஸில் வைக்கப்பட்டிருந்த ரஜினியின் மினி கட்அவுட்டிற்கு அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். ரஜினி படம் பார்த்து கதையை ரசிக்க எத்தனை பேர் வந்திருந்தார்கள் என்று எனக்குத் தெரியாது ஆனால் பெரும்பாலானவர்களிடம் ரஜினியை மீண்டும் திரையில் பார்க்க வேண்டும் என்ற ஆவலே என்னைப் போல இருந்ததைப் பேச்சுக் கொடுத்து தெரிந்து கொண்டேன்.
அந்த அதிகாலையிலும் தியேட்டரில் விசில் பறந்தது. ரசிகர்கள் திரைக்கு முன் ஓடிப் போய் சூப்பர் ஸ்டாரின் பெயர் போட்டவுடன் ஆட்டம் ஆடினார்கள். ரஜினியை திரையில் காட்டப்போகும் அந்த பரவச நிமிடத்திற்காக நானும் உணர்ச்சிகள் பொங்க திரையை வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன்....எப்படி இருக்கிறாய் ரஜினி...? மீண்டும் திரையில் உன்னுடைய அட்ராசிட்டியைப் பார்க்க வேண்டும்... உனது நடையை, வசனத்தை உச்சரிக்கும் வேகத்தினை, அட்டகாசமான ஸ்டைலினை, அலட்சியமான சிரிப்பினை, குட்டிக் கண்களுக்குள் பரவிக் கிடக்கும் நெருப்பினை பார்க்க வேண்டும் என்ற யோசனையோடு திரையை மேய்ந்து கொண்டிருந்த போது....
ஓப்பனிங் பாடலுக்காக ரஜினி திரையை ஆக்கிரமித்த அந்த நொடியில் தன்னிலை மறந்து கத்தத் தொடங்கி விட்டேன்....தலைவா வா....வா...வா.....ஆஆஆ சூப்பர் ஸ்டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று நான் போட்ட சப்தத்தையும் வாங்கிக் கொண்டு அதிர்ந்து கொண்டிருந்தது அந்தத் திரையரங்கு. வயதெல்லாம் ஒரு விசயமில்லை என்பதை தலைவர் திரையில் அடித்து சொல்லிக் கொண்டிருக்க, மெல்ல மெல்ல லிங்காவின் மேஜிக்கிற்குள் நான் சிக்கிக் கொண்டேன். ரஜினி படத்தை வெற்றிப்படமா தோல்விப்படமா என்று கேட்பவர்கள் எல்லாம் சரியான புரிதல் இல்லாதவர்கள் என்றே நான் சொல்வேன். ரஜினி படத்தைப் பார்க்காமல் கடந்து செல்பவர்களை நாம் விரல் விட்டு எண்ணி விடலாம். இன்றைய தேதியில் ரஜினியை விட வேறு ஒரு மாஸ் என்டர்டெயினர் தமிழ் சினிமாவில் கிடையவே கிடையாது. திரைப்படம் ஆரம்பிக்கும் அந்த நொடியில் இருந்து படம் முடியும் வரை சலிப்பில்லாமல் பார்த்து விட்டு எழுந்து வரவைக்க ரஜினி என்னும் கலைஞனால் மட்டுமே முடியும்.
நிலைமை இப்படி இருக்கையில் படம் மொக்கை என்று எழுதி புளகாங்கிதம் அடைந்து கொள்ளும் கத்துக் குட்டி நடிகர்களின் மொன்னைப் பட்டாளங்களையும், ரஜினி எங்கே அரசியலுக்கு வந்துவிடுவாரோ என்று பயந்து அவரது இமேஜை உடைக்க நினைக்கும் கபட ஓநாய்களையும் நினைத்தால் பாவமாய்த்தானிருக்கிறது. சூப்பர் ஸ்டார் கனவிலில் மிதந்து கொண்டிருக்கும் நடிகர்கள் கொஞ்சமாவது இன்டஸ்ட்ரியில் நிலைத்து நிற்க ஒன்று அவர்கள் ரஜினியின் ஸ்டைலினையும் அவர் உருவாக்கிய மாஸ் ட்ரண்டையும் காப்பியடிக்க வேண்டி இருக்கிறது இல்லையென்றால் அவர் ஏற்கெனவே சப்பிப் போட்ட பழையப் படங்களை எடுத்து ரீமேக் என்று சொல்லி அதில் நடித்துப் பிழைப்பை ஓட்ட வேண்டியிருக்கிறது, நிலைமை இப்படி இருக்கையில் இவர்கள் ரஜினி படம் தோல்வியடைந்து விட்டது என்று கண்ணை மூடிக் கொண்டு சக்கரவர்த்தியாகிவிட்ட கனவினில் முச்சந்தியில் உட்கார்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருப்பது நல்ல காமெடியாக இருக்கிறது.
ரஜினியின் திரைப்படம் ரிலீஸ் என்று சொன்னால் வெறுமனே அவரது ரசிகப்பட்டாளங்கள் மட்டுந்தான் படம் பார்க்க தியேட்டர்களுக்குச் செல்கிறார்கள் என்று அர்த்தமா? ரஜினியின் திரைப்படத்தைக் காண்பதற்காக திரையுலகமே திரண்டு நிற்கிறது, அரசியல்வாதிகள் தங்களது நேரங்களை ஒதுக்கி வைத்து ரஜினியைத் திரையில் காண செல்கிறார்கள். சர்வ நிச்சயமாய் எல்லா குடும்பங்களின் விடுமுறை திட்டமும் லிங்காவை காணவேண்டும் என்பதாய் தானிருக்கும், இதை விட வேறு என்ன வெற்றி வேண்டி கிடக்கிறது என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.
படு சாதாரணமான மொக்கைக் கதைகளில் கூட ரஜினி நடிக்கலாம். அந்தத் திரைப்படங்கள் எப்படி இருந்தாலும் ஓடத்தான் செய்யும். பாபா படமே கூட அதிக விலைக்கு விற்கப்பட்டதால் ஏற்பட்ட நஷ்டத்தை சரிசெய்ய தனது லாபத்திலிருந்து ஒரு பகுதியை ரஜினி திருப்பிக் கொடுத்தார் என்பதுதான் வரலாறு. இன்னும் சொல்லப்போனால் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த்திரைப்படங்களில் பாபாதான் வசூலை அதிகமாய் குவித்த படம் என்பது இன்று ஃபீடிங் பாட்டிலைச் சப்பிக் கொண்டிருக்கும் ஸ்கூல்பாய்ஸ்க்கு எல்லாம் தெரியுமா என்பது எனக்குத் தெரியவில்லை.
தனது உடல்நலக் குறைவுக்குப் பிறகு மீண்டும் திரையில் விஸ்வரூபமெடுத்திருக்கும் சூப்பர் ஸ்டாரின் அட்டகாசமான சூப்பர் பஸ்டர் மூவிதான் லிங்கா....! ஒவ்வொரு முறையும் தலைவரே தனது வெற்றியின் உயரத்தை நிறுவுவார் அதை உடைத்தெறிய வேறு ஒரு கொம்பனாலும் முடியாது, பின்பு தலைவரே அந்த உயரத்தைத் தகர்த்து மீண்டும் ஒரு டார்கெட்டை செட் செய்து வைப்பார். லிங்காவும் அப்படியே....தலைவரின் திரைப் பயணத்தில் இன்னுமொரு மைல் கல்...!
பரக்காஸ்.................டூட்ஸ்............ச்ச்ச்ச்சீர் அப்ப்......!!!!
லிங்கா விமர்சனம்..... எனது பார்வை விரைவில்....
தேவா சுப்பையா....
Comments
ரஜினி ரசிக மனோபாவத்தைச் சொன்னேன் நண்பா!!!!