Skip to main content

சுவடுகள்...!


திசைக்கொன்றாய்
என் கனவுகளைப் பிய்த்தெறிந்து விட்டேன்
எழுதிக் கொண்டிருந்த கவிதையொன்றின்
குரல்வளையைப் பிடித்து துடிக்க துடிக்க
அதனை கொன்று முடிப்பதற்கு முன்பாக
நெருப்பில் என் ஆசைகளை எரித்து விட்டேன்,
இனி எப்போதும் நான் முன்பு போல்
இருக்கப் போவதில்லை..என்று
என் கடைசி சொட்டு இரத்தம் மண்ணில் விழும் போது
எனக்கு தோன்றியதுதான் எனது கடைசி ஞாபகம்,

முன்பொரு நாள் நான் நானாயிருந்த போது
யார் யாரோ வந்தார்கள்,
ஏதேதோ கேட்டார்கள்,
பேசிச் சிரித்தார்கள்,
பூக்களை சிலர் பரிசளித்தார்கள்,
புன்னகையை சிலர் என்னிடமிருந்து பறித்துச் சென்றார்கள்,
கோபித்துக் கொண்டார்கள், ஏமாற்றினார்கள்,
ஏமாந்தேன் என்றார்கள்....
சில பிணந்தின்னி கழுகுகள் என் மீது வந்தமர்ந்தன
என் கண்ணில் ஒளி இருப்பதாய் சொல்லி
ஒரு கழுகு என் கண்ணைக் கொத்திய போது
என் உதடுகளிலிருக்கும் புன்னகை பிடித்திருப்பதாகக்கூறி
இன்னொரு கழுகு என் உதடுகளைக் கொத்தியது...
அப்போதும் துடித்துக் கொண்டிருந்த
என் இதயத்தில் நிரம்பிக் கிடந்த காதல்
யாருக்கானதாய் இருக்கும் என்று
இருவர் வாதிட்டுக் கொண்டே சராலென்று
என் இதயத்தைப் பிடுங்கி நெருப்பிலிட்டார்கள்...

பூக்களால் தன்னை நிரப்பிக் கொள்ளும்
அதே பூமியின் இன்னொரு பக்கத்தில்
வெடித்துப் பிளந்து கிடக்கும் நிலத்திற்குள்
வேர் நாக்குகளை செலுத்தி தாகம் தீர்த்துக் கொள்ள
முயன்று முயன்று தோற்றுப் போய் கோபமாய்
நிற்கின்றன முள் மரங்களுக்கு எப்படித் தெரியும்
துரோகத்தையும், நியாயத்தையும்
ஒரே பாத்திரத்திலிருந்துதான் இந்த வாழ்க்கை
எடுத்து பரிமாறிக் கொண்டிருக்கிறது என்று....

யாருக்கோ என்னைப் பிடித்தது,
யாரையோ எனக்குப் பிடித்தது,
இரண்டுமே இப்போது ஒன்றுமில்லை
அறுபடாத இந்த மனதின்  கன்னத்தில்
தீக்குளம்பாய் வழிந்து கொண்டிருக்கும்
தகிக்கும் கண்ணீரை துடைக்க முடியாமல்...
அமீபாவாய் ஊர்ந்து கொண்டிருக்கிறேன்...நான்...
எங்கு போவது...?
யாருக்காய் போவது..?என்றெழும் கேள்வியை மட்டும்
அறுத்தெறிந்து விட்டால் போதும்....



தேவா சுப்பையா...









Comments

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...