Skip to main content

மழையாலானவள்...!


மழை பெய்து கொண்டிருக்கிறது. மரங்கள் சூழ்ந்த உன் வீட்டு முற்றத்தின் ஓரத்தில் அமர்ந்திருக்கிறாய் நீ. உன் வீட்டு மண் சுவற்றில் ஆங்காங்கே காரை பெயர்ந்திருக்கிறது. இந்த அடைமழைக் காலத்தில் உன் வீட்டுக் கூரைகள் கருணையோடு மழையை உன் வீட்டினுள்ளும் பெய்ய அனுமதிக்கும் என்று முன்பொரு நாள் நீ கூறியிருந்தாய்...ஊறிப் போன மண் சுவற்றையும் நீ சாய்ந்திருக்கும் முற்றத்து ஈர மரத்தூணையும் பார்த்தபடி உன் வீட்டு வாசலில் இருக்கும் ஒரு மரத்தின் பின் நின்று நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்...

ஆள் அரவமற்று இருக்கும் இந்த முற்பகலில் குடை கூட எடுக்கக் மறந்து போய் நான் இங்கு வந்து நிற்பது மழையையும் உன்னையும் பார்க்க மட்டுமே என்பதை யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்பதை அடித்துப் பெய்து இந்த மழை சொல்லிக் கொண்டிருந்ததை நீ கவனிக்கவே இல்லை..., மழை நனைத்திருந்த அள்ளிச் சொருகிய பாவடையுடன், காற்று கலைத்துக் கொண்டிருந்த உன் கேசத்தை சரிப்படுத்திக் கொள்ளாமல் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாய்... நீ...

யாருமற்ற இந்த தனிமையோடு அடர்த்தியான மழையை, அந்தமழையால் நனையும் சுற்றி இருக்கும் தாவரங்களை, மரங்களை, இந்த இரைச்சலை, இந்தக் குளுமையை, மண்ணை கரைத்தபடி சுழித்து நுரைத்து ஓடும் நீரின் சலசலப்பினை, குளிர் தாங்காமல் சிறகு ஒட்டிப் போய் தத்தித் தத்திச் செல்லும் அந்த காகத்தை, ஏதோ ஒரு மரத்திலமர்ந்து இந்த சூழலை இன்னும் அழகாக்க கூவிக் கொண்டிருக்கும் அந்தக் குயிலை....
என்று எதையும் விட்டுவிடாமல் விழி விரித்து நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

காதலென்பது யாரோ ஒரு பெண்ணை காதலிப்பது மட்டுமல்ல, அவளின் அழகினை, அவளின் அவலட்சணத்தை, அவளின் சூழலை, அவளின் கோபத்தை, அவளிடம் பிடித்ததை, பிடிக்காததை என்று அந்தப் பெண்ணைச் சுற்றியிருக்கும் யாவற்றையும் உள்வாங்கி நேசிப்பது. பேசினாலும், பேசாவிட்டாலும், கூட இருந்தாலும் இல்லாவிட்டாலும் எப்போதும் மனக்கிளர்ச்சியைக் கொடுப்பவளாய் அவள் இருப்பாளாயின் அவளை விட்டு விடாதே...அவளை தொடர்ந்து கொண்டே இரு. தூர நின்றாவது அவளை விழிகளால் விழுங்கிக் கொண்டே இரு. நல்ல கவிதைகள் எல்லாம் வாசித்து கிரகித்து அந்த உணர்வில் ஊறிப்போய் திளைத்து,எப்படி மயங்கிக் கிடக்க வைக்கிறதோ அப்படித்தான் ஒரு பெண்ணோடான காதலும் இருக்க வேண்டும்.

இன்னும் சொல்லப் போனால் காதலென்ற பேருணர்வுப் பெருவெளிக்குச் செல்ல வேண்டுமானல் பெரும்பாலும் பெண் என்னும் பெருங்கதவைத் தட்ட வேண்டிதானிருக்கிறது....என்பது ஆண்களுக்கான விதி. பெண்களின் காதல் எப்படியிருக்கும் என்று ஆராய ஒன்று எனக்கு பிடிக்கவில்லை அல்லது நேரமில்லை. ஆணாய் இருந்து உலகத்தைப் பார்க்கும் போது பெண்ணை ஆணுக்குரியவளாய் மட்டும் பார்க்கும் போது ஏற்படும் அபத்தங்களுக்குள் நான் எப்போதும் போக விரும்பவதேயில்லை...
நான் ஆணாயிருந்து பெண்ணை ஒரு பெண்ணாகவே பார்க்கிறேன்...அதில் உன்னைப் போன்று என் உணர்வுகளை உரசி தீப்பிடிக்க வைப்பவளை காதலியாகப் பார்க்கிறேன்...

மழை நீரில் கை நனைத்து விளையாடிக் கொண்டிருந்தாய். மழை உன்னை நனைத்தது....நீ என்னை நனைத்தாய்....
காற்று வெகு உக்கிரமாய் அடித்து மேகங்களை கலைக்க முயன்று கொண்டிருந்தது... அங்குமிங்கும் தடுமாறிக் கொண்டிருக்கும் என் மனதை போலவே மேகங்களும் கனத்து கருத்து இங்குமங்கும் அலைமோதிக் கொண்டிருந்தன....

தலையை உதறி மீண்டும் ரிப்பனால் தூக்கிக் கட்டியபடி ...
நீ வாசலுக்கு வந்தாய்...
ஒரு கவிதையில்
இன்னொரு கவிதை
நனையத் தொடங்கி இருக்க...
விழிகள் விரித்து....
அந்தக் காவியக் காட்சியினை
பார்க்கத் தொடங்கி இருந்தேன் நான்....
என்னுள்ளும் அடித்துப் பெய்ய
ஆரம்பித்தது மழை...
உன் வாசத்துடன்....




தேவா சுப்பையா...

Comments

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...