
சொல்வதற்கு ஒன்றுமில்லை
உன்னிடமும் என்னிடமும்
கொட்டி இறைத்தாயிற்று
நம் காதலை...
உலக விருப்பங்களாய்!
எனக்கு பிடித்ததெல்லாம்
நீ சொன்னாய்...
உனக்கு பிடித்ததெல்லாம்
நான் சொன்னேன்...
பரிமாற முடியாமல் நீ சுற்றிப்
பரவவிட்ட காதலை
பற்றிக் கொள்ள முடியாமல்
பரவிக் கிடகிறேன்
நிலவின் வெளிச்சம் போல....
தொடுவது போலத்தான் வருகிறாய்..
நானும் தொட்டு விடுவாய் ....
என்றுதான் நினைக்கிறேன்...
படாமல் தொடும் காற்றைப் போல
ஸ்பரிசமாய் பரவிவிட்டு....
அருவமாய் மறைந்து போகிறாய்...!
அடிக்கடி பேசிக் கொள்கிறோம்...
ஏதோ கேட்கிறாய்...
நானும் ஏதோ சொல்கிறேன்...
ஒவ்வொரு முறையும்...
காத்திருப்பதை காட்டிக் கொடுக்காமல்
மெளனித்து நிற்கிற ஒன்றைத்தானே
உலகம் காதல் என்கிறது....!
இடமாய் நீ தலை அசைக்கும் போது
வலமாய் நான் நகர்கிறேன்....
நீ வலமாய் தலையசைக்கும் போது
நான் இடமாய் நகர்கிறேன்...
ஆமாம் பல கருத்துக்களின்
இசைவுகளில் நீ இடம் என்றால்
நான் வலம்...
நீ வலம் என்றால்...
நான் இடம்...
ஈர்ப்பின் விதிகள் புரியாததா என்ன?
அது எப்போதும் எதிர்தானே.....?
என் கூட்டம் உனக்கு பிடிக்காது...
எனக்கோ உன் தனிமை பிடிக்காது....
கூட்டத்தை விட்டு நானும்
தனிமையை விட்டு நீயும்...
வரும் பொழுதுகளில்
நம்மை சேர்க்கும் பொருள்...
எதுவாயிருக்கும்....?
நீ சொல்லி நான் கேட்கப் போகும்
கவிதையா? இல்லை
சலனமின்றி உன்னோடு நான் சீரான
இடைவெளியில் நிசப்தத்தை
பரவவிட்டு நடக்கும் ஒரு....
நீண்ட நடையா? இல்லை
மெளனம் உடைத்து...
நம்மை ஆட்கொள்ளப் போகும்
காதலா?
அது கடற்கரையா...?
இல்லை அதிகாலை ஆளில்லா
சாலைகளின் ஓரமா?
நெரிசல் நிறைந்த கடைத் தெருவா?
எதோ ஒரு மொட்டை மாடியா?
மழை பெய்து முடித்த மாலையா?
இல்லை ...
உணவருந்தி முடித்த ஒரு முன்னிரவா?
கற்பனைகளை கரைத்து
ஒரு ஓவியமாய் வரைந்து பார்க்கிறேன்...
வர்ணங்களின் கூட்டு கொடுத்த
தொகுப்பு அழகா? அழகற்றதா...
விவாதத்திற்கு அப்பாற்பட்டு...
அசாத்தியமாய் மறைந்து கிடக்கும்
உன் அழகைப் போல.....
கடைசியில் என்னைத்தான்..
கலைத்துப் போடுகிறது...
சாயங்களில் ஊடுருவியிருக்கும்
ஒரு ஊமை ஓவியம்..!
ஒரு புத்தகத்தின் வரிகளூடே
ஊடுருவிப் படர்ந்து....
நாம் தொலையும் ஒரு அற்புத கணத்தின்
அனுபவங்கள் கொடுக்கும்
சிலிர்ப்பைப் போல...
புரியாமலேயே கிடக்கட்டும் காதல்....!
சொல்லாமல் கொள்ளாமல்..
பிம்பமாய் பிரதிபலிக்கும்..
உணர்வுகளை காதல் என்ற
வார்த்தைக்குள் போட்டு
பூட்டாமல்.. பிம்பங்களாய்
உன்னை நானும் என்னை
நீயும் பிரதிபலித்தேதான்...
போனால் தவறா என்ன?
தேவா. S
Comments
சாலைகளின் ஓரமா?
நெரிசல் நிறைந்த கடைத் தெருவா?
எதோ ஒரு மொட்டை மாடியா?
மழை பெய்து முடித்த மாலையா?
இல்லை ...
உணவருந்தி முடித்த ஒரு முன்னிரவா?//
நான் விரும்பும் வித்தியாசமான ரசனைகள் :)
நடுநிசி நாய்கள் - வீராவின் பக்கங்கள்
ஒரு புத்தகத்தின் வரிகளூடே
ஊடுருவிப் படர்ந்து....
நாம் தொலையும் ஒரு அற்புத கணத்தின்
அனுபவங்கள் கொடுக்கும்
சிலிர்ப்பைப் போல...
புரியாமலேயே கிடக்கட்டும் காதல்....!
.... Simply Superb! ரொம்ப நாட்கள் கழித்து, கவிதை பக்கம் வந்து இருக்கீங்க.... அருமையாக வந்து இருக்கிறது.
ஊடுருவிப் படர்ந்து....
நாம் தொலையும் ஒரு அற்புத கணத்தின்
அனுபவங்கள் கொடுக்கும்
சிலிர்ப்பைப் போல...
புரியாமலேயே கிடக்கட்டும் காதல்....!//
ரொம்ப ரசிச்ச வரிகள்..
உங்கள் கவிதையும் காதல் உணர்வை தூண்டச் செய்கிறது!!
பிம்பமாய் பிரதிபலிக்கும்..
உணர்வுகளை காதல் என்ற
வார்த்தைக்குள் போட்டு
பூட்டாமல்.. பிம்பங்களாய்
உன்னை நானும் என்னை
நீயும் பிரதிபலித்தேதான்...
போனால் தவறா என்ன?
//
அற்புதமான வரிகள்
உணர்வுகளை வார்த்தைகளுக்குள் அடக்குவதால் நிறைய பிரச்சனைகள்
very nice
நானும் தொட்டு விடுவாய் ....
என்றுதான் நினைக்கிறேன்...//
அணைப்பாய் என நான் தவியாய் தவித்தேன் ,
இருந்தும் வெளியில் பொய்யாய் முறைத்தேன் !!
( இந்த வரிகள் நியாபகம் வருது அண்ணா )
கவிதை புரிந்ததுடன் காதலுடன் இருக்கிறது ..