Skip to main content

கனவிலாவது...?
















நேற்றைய கனவும்
உன்னால்தான் நிரம்பி வழிந்தது,
வழக்கம் போல நெருக்கமாய்
தூரத்தில்தான் அமர்ந்திருந்தாய்,
வழக்கம் போல காதலை
மெளனத்திற்கு இரையாக
இருவருமே போட்டுக் கொண்டிருந்தோம்!

ஏதேனும் செய்திகளை
உன் விழிகள் எனக்குப் பகிருமா?
என்று உற்று நோக்கினேன்
அது காதலைத் தவிர
வேறொன்றும் பகிரேன் என்று
பிடிவாதம் பிடித்தது...!

என் மெளனத்துக்கு காரணத்தை
நீயும் மெளனத்தால் தேடியது
போலவே நானும் தேடியதில்
குடி கொண்டிருந்த நிசப்தத்தில்
பரவிக் கிடந்த அதிர்வுகளோடு
சப்தங்களை அதிகமாக்கிக்
கொண்டிருந்த நமது இதய துடிப்பும்
அன்னிய தேசத்து எல்லையை
கடந்து செல்லும் அவஸ்தையோடு
தொண்டையை கடக்கும்
அவ்வப்போது நாம் விழுங்கும் உமிழ்நீரும்
சேர்ந்தேதான் காதலை கனப்படுத்தின...!

நான் உன்னை காதலிக்கிறேன்
என்று சொல்லப்போவதில்லை
என்பதைப் போல...
நீயும் சொல்லப்போவது இல்லை
என்பதை உரக்க கட்டியம்
கூறிக் கொண்டிருந்த
மெளனத்தை உடைக்கும் முயற்சியில்
முதலில் எட்டிப் பார்த்த
உனது உதட்டோரப் புன்னகையில்
நான் உடைந்தேதான் போனேன்..!

ஏதாவது சொல் என்றேன்...
போகவா என்றாய்....!
சொல் என்றுதானே சொன்னேன்...
கொல் என்றா சொன்னேன்?
வார்த்தைகளை வாங்கிக் கொண்டு
நீ கணீரென்று சிரித்தாய்
நான் சிதறிக்கிடந்தேன்..!

கலைந்து போன கனவில்
நிஜத்தை தொலைத்த வெறுமையோடு
விடியப்போகும் பொய்மையில்
உன்னை சந்திக்கையில்....
இப்போதாவது உன் காதலைச் சொல்லேன்
என்று என் மெளனத்தால்
உன் மெளனம் மோதி
ஒரு கேள்வி கேட்கிறேன்...
நிஜத்தில் நீ மெளனித்தாலும்
பரவாயில்லை,
அடுத்த கனவிலாவது சொல்
நான் உன்னை காதலிக்கிறேன் என்று!


தேவா. S




Comments

//ஏதாவது சொல் என்றேன்...
போகவா என்றாய்....!
சொல் என்றுதானே சொன்னேன்...
கொல் என்றா சொன்னேன்? //

உணர்வுபூர்வமாக எழுதியிருக்கீங்க நண்பா. அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும் இந்த வார்த்தையின் வலி. கலக்கலான காதல் கவிதை. வாழ்த்துக்கள்.
உணர்வுபூர்வமாக ரசித்து எழுதியுள்ளீர்கள் சொல் என்றாள் போகவா என்பது தவிப்பின் உச்சம் வாழ்த்துக்கள்!
Kousalya Raj said…
கவிதை அதன் பின் ஒலிக்கும் பாடல் இரண்டும் மனதை இழுத்து பிடித்து வைத்து கொள்கிறது !

கவிதை படித்ததும் அந்த உணர்வு படிப்பவர்களுக்கும் ஏற்பட வேண்டும்...அதை கச்சிதமாக செய்துவிடுகிறது இந்த கவிதை.

வாழ்த்துக்கள்.
//ஏதாவது சொல் என்றேன்...
போகவா என்றாய்....!
சொல் என்றுதானே சொன்னேன்...
கொல் என்றா சொன்னேன்? //

...அடடா.. செம செம.. வார்த்தை கோர்ப்பு பின்றீங்க போங்க.

...கனவிலாவது சொல் என்னை காதலிக்கிறாய் என்று! :)

Beautiful Kavithai.. with perfect song on the Background!
அழகான கவிதை. இந்த மௌனத்தால் தோற்று போன காதல் ஏராளம்.
//சொல் என்றுதானே சொன்னேன்...
கொல் என்றா சொன்னேன்? //
பொருத்தமான வார்த்தை பயன்பாடு !
நீ கணீரென்று சிரித்தாய்
நான் சிதறிக்கிடந்தேன்..!

அழகு கவிதை-அழகு வரிகள்.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html
அருமையான கவிதை...
பல காதல்கள் மௌனத்தை உடைக்காமல் மரணித்துப் போகின்றன. இங்கு கனவிலாவது துளிர்க்கட்டும்.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...