
ஏதோ இரையைக்
கவ்விச் செல்கின்றன
எறும்புகள் சாரை சாரையாக
ஏதேதோ கனவுகளுடன்;
கனவுகளோ,கற்பனைகளோ
நிதர்சனமென்பது
யாராலும் மிதிபடாதவரை...
***
முடிவுகளில்
பெரும்பாலும் ஒன்றுமில்லை
என்பதே விதியாகிறது...,
இருந்தாலும்
எல்லாவற்றிலும்
முடிவையே தேடியே...
இடைப்பட்டதின்
லயிப்பு சுகக்தை
தொலைப்பதே
வாடிக்கையாகிவிட்டது
இவர்களுக்கு!
***
பெருங்கனவொன்றில்
நான் அந்த
நதியாய் நடித்துக்
கொண்டிருந்தேன்
நதி நானாய்
இயல்பிலிருந்தது!
***
வண்ணத்துப் பூச்சிகள்
எவ்வளவு உற்சாகமாய்
சிறகடிக்கின்றன...,
கடந்த காலங்கள்
எல்லாம் அவற்றை
ஒன்றும் செய்வதே இல்லை!
***
சட சடவென்று
வீசிய காற்றில்
மட மட வென்று
முறிந்தது
நெடு நெடுவென்றிருந்த
கனத்த மரம்.
***
தூண்டில் போட்டு
காத்திருக்கிறான்
வெகுநேரமாய்....
ஏதாவது கிடைக்கலாம்
இல்லாமலும் போகலாம்!
காத்திருந்த
நினைவுகள் மட்டுமே...
மிச்சம்!
தேவா. S
Comments
சிலிர்த்துத்தான் போனேன்
உங்கள் கவி கண்டு.....
//சட சடவென்று
வீசிய காற்றில்
மட மட வென்று
முறிந்தது
நெடு நெடுவென்றிருந்த
கனத்த மரம்.//
இரட்டைக்கிளவி கொண்டு நீங்கள்
கவியமைத்த விதம் இனிமை.
இனிமை...
கவி இனிமை.
நிதர்சனமென்பது
யாராலும் மிதிபடாதவரை..//
சத்தியமான ஒன்றை மிக அழகாக கவி வரியாகி விட்டீர்கள்.
//காத்திருந்த
நினைவுகள் மட்டுமே...
மிச்சம்!//
யதார்த்தத்தில் அனைத்திற்கும் இந்த வரி மிக கச்சிதமாக பொருந்தி போகிறது !!
மீண்டும் மீண்டும் படித்து மனதில் தக்க வைத்து கொள்ள சொல்கிறது கவிதைகள் !
வாழ்த்துக்கள்