அதிர்ந்து கொண்டிருந்தது காடு. அணியணியாய் அங்கே நின்று கொண்டிருந்த மக்களின் கண்களில் பரவிக் கிடந்த அக்னியில் வீரமும், வேட்கையும் நிரம்பியிருந்தன. சிவந்து போயிருந்த அவர்களின் கண்களும் வெயிலில் கருத்துப் போயிருந்த தேகமும் காற்றில் பறந்து கொண்டிருந்த எண்ணையைப் பார்க்காத கேசமும் அடிபட்ட தங்களின் வலிக்கு வஞ்சம் தீர்க்க துடி, துடித்துக் கொண்டிருந்தன.
போராளிகள் எல்லோரும் அப்படித்தான்!!!! சொந்த மண்ணை துரோகிகள் கபடமாய் கூட்டு சேர்ந்து களவாடிக் கொண்டு வென்று விடுவது வெறும் மண்ணை மட்டுமல்ல, அந்த மண்ணில் காலங்காலமாய் வாழ்ந்த மனிதர்களின் உரிமைகளை, கனவுகளை, பெருமைகளை எல்லாம் சேர்த்துதான் எடுத்துக் கொள்கிறார்கள். ஒவ்வொரு விதையும் ஒவ்வொரு மண்ணில் ஆழமாய் வேரூன்றி செழித்து வளரும். தட்ப, வெட்ப பூகோள ரீதியாய் ஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு இயல்புண்டு.
ஒவ்வொரு மண்ணிலும் அந்த அந்த மண்ணிலிருந்து கிடைத்த தாதுப் பொருட்களை காய்களாகவும், கனிகளாகவும், மாமிசமாகவும், நீராகவும் உட்கொண்டு அந்த மண்ணில் படுத்து, புரண்டு பேசி சிரித்து, கூடிக் களித்து, நுரையீரல்கள் ததும்ப ததும்ப பிராணனை சுவாசித்து வளரும் மக்களுக்கும் அந்த அந்த மண்ணுக்கும் நிறையவே தொடர்புண்டு.
செம்மண் காடுகளில் வளரும் செடிகள் கரடு முரடானவை. அவை கடுமையான கோடையை எதிர்த்து வாழ வேண்டிய சூழலை இயற்கை கையளித்து விடுகிறது. மரம், செடி, கொடிகள் விலங்குகளுக்கே அப்படி என்றால் மனிதர்களுக்கு.... ? எந்த மண்ணில் தந்தையின் ஜீவ சத்து உற்பத்தியாகிறதோ, தாயின் அண்டம் உருக்கொள்கிறதோ அந்த, அந்த இயல்பினை மனிதர்கள் தவறாமல் கொண்டிருக்கிறார்கள். உணர்வாய் தன் சொந்த மண்ணை நேசிக்கும் இயல்பினை மனிதர்கள் தமக்குள் கொண்டிருக்கிறார்கள்.
பிழைப்புக்காய் அங்கும் இங்கும் ஓடும் சுயநல மனிதர்கள் தங்களின் உயிரையும் வாழ்வாதாரத்தையும் பற்றி மட்டுமே கவலைகள் கொண்டு எல்லா சூழலுக்கும் ஒத்துப் போய் வாழவும் பிடிக்காத மனிதர்களின் கால்களைத் தடவி தமக்கான ஆதாயத்தை பெறவும் செய்கிறார்கள். இங்கே சுயநலத்தேவைகளுக்காக இவர்களின் சுயம் பட்டுப் போய் வயிறு வளர்க்கும் உபாயம் மட்டுமே மேலோங்கி நிற்கிறது.
போராளிகள் எப்போதும் மண்ணின் விடுதலைக்காய் போராடுகிறார்கள். ஒரு பிடி மண்ணை கூட மாற்றான் கவர அவர்களின் மனம் விட்டுக் கொடுப்பதே இல்லை. வீர மறவர்களை என்று கயவர்கள் நேருக்கு நேர் நின்று போர் புரிந்து வென்றிருக்கிறார்கள்....? குறுக்கு வழியில் பெறும் வெற்றிகளையும் உலகம் வெற்றி என்று பார்க்கும் தவறான போக்குகள் பல நேரங்களில் மனித மனங்களை மயக்கி தோற்றவன் நீதிக்கு எதிரானவன் என்று எண்ண வைக்கின்றன.
சிவகங்கைச் சீமையின் வீர மறவர்களை ஆங்கிலேயப் படையினர் கபடமாய் வெற்றி கொண்டு ஏழு ஆண்டுகள் ஆகியும் இன்னமும் சுதந்திர வேட்கை அந்த மண்ணின் மைந்தர்களிடம் சற்றும் குறைந்து விடவில்லை. வெள்ளையர்களிடம் இருந்து தலைமறைவாகி விருப்பாட்சிப் பாளையத்தில் தஞ்சம் அடைந்திருந்த அவர்களின் போர்ப் பயிற்சி காடுகளுக்கு நடுவே பெரும் வயல்வெளிகளுக்கு நடுவே கரடுமுரடாய் நடந்து கொண்டிருந்தது.
' வெல்வோம்....வெல்வோம்..சீமையை வெல்வோம்.....
செங்குருதி கொடுத்தேனும் தாய் மண்ணை வெல்வோம்....
குள்ள நரிக் கூட்டத்திடம் வேங்கைகள் பணிந்து போகுமோ....? '
உரக்க சப்தம் விண்ணை பிளந்து கொண்டிருக்க உச்சி வானில் சூரியன் நடுக்கத்துடன் அதை கவனித்துக் கொண்டிருந்தான்.
ஒரு படைப் பிரிவுக்கு வளரி வீச கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த ஆஜானுபாகுவான அந்த மனிதரின் கண்களில் வெளிப்பட்ட ரெளத்ரம் அவர் பயிற்சி கொடுத்த மறவர் கூட்டத்தின் கண்களிலும் வெளிப்பட்டது. வளரியை எடுத்து, வலது கையில் பிடித்து அதை காற்றின் திசையைக் கணித்து கையை பின் இழுத்து அளவு பார்த்து இலக்கை குறிபார்த்து.... காளீஸ்வரா...... என்று கண்களை மூடி ஜெபித்து.... ஓங்கி காற்றில் அவர் வீச.....
இலக்கில் இருந்த ஒரு பதுமையின் தலை கொய்து, பின் காற்றில் மிதந்து அந்த களறி மீண்டும் அவரின் கைகளுக்கே வந்தது......
கூட்டம் கரகோஷித்து.... பெரிய மருது வாழ்க வாழ்க....!!!! என்று முழங்க...தினவெடுத்திருந்த தோள்களுக்குச் சொந்தமான அந்த வேங்கை முறுக்கேறிய தனது புஜங்களில் படிந்திருந்த வேர்வையை துடைத்த படியே தனது கம்பீரமான மீசையை முறுக்கிக் கொண்டு கர்ஜிக்கத்த் தொடங்கியது....
என் அன்பான சீமையின் மக்களே.....! களறியைக் கையாலும் போது உங்கள் கவனம் கிஞ்சித்தேனும் வேறெங்கும் சிதறி விடக்கூடாது, இலக்கினை கூர்மையாய் குறிபார்க்கும் அந்த தருணத்தில் கண நேரத்தில் உங்களின் மூச்சு சீராய் இருக்கிறதா என்று கவனித்து, நேர்கோட்டில் புத்தி, மனம், உடல் மூன்றையும் நிறுத்தி சலனமில்லாமல் நமது சீமையின் விடுதலையை மட்டுமே நினைவில் நிறுத்தி....இந்த களறி இலக்கின் தலை கொய்து மீண்டும் வரவவேண்டும் என்ற ஒற்றை புள்ளியில் நின்று.....அண்ட சராசரத்தின் மூல நாயகனின் பெயர் சொல்லி....காளீஸ்வரா...என்று முழு பலம் கொண்டு வீசுங்கள்....
அப்படியாய் வீசுவதற்கு முன் காற்றின் திசை எங்கிருந்து எங்கு நகர்கிறது என்று ஓரளவிற்கு கணித்து உங்களின் இருப்பிடத்தை முன்னமே தெளிவாய் முடிவு செய்து கொள்ளுங்கள்....காற்றின் திசையைக் கணிக்கும் யுத்தியை உங்களுக்கு எல்லாம் நான் ஏற்கெனவே கற்றுக் கொடுத்திருக்கிறேன். உடலுக்குள் மனமாய் நீங்கள் நகர்ந்து கொண்டிருக்கும் வரையில் உங்களை பற்றிய நினைவுகளையும், உங்களுக்குத் தேவையான விசயங்களையும் மட்டுமே மனம் நினைவு கொள்ளும்....
காது மூடி, மூச்சடக்கி மனம் நகர்த்தி மனமாய் நிற்காமல், புத்தியாய் நிற்காமல், உணர்வாய் நீங்கள் நிற்கும் போது.. பிரபஞ்சத்தின் எல்லா இயல்புகளும் உங்களுக்குள் தஞ்சமாகும்....அப்போது பெரும் சக்தியாய் நீங்கள் மாறி விடுவீர்கள்.... பிறகென்ன....எதிரிகளின் தலைகள் நமது காலடியில்தானே......?
பெருஞ் சப்தத்தோடு பெரிய மருது பேசிக் கொண்டிருந்தை தூரத்தில் வாள் பயிற்சிக் கொடுத்துக் கொண்டிருந்த மந்திரி தாண்டவராயன் பிள்ளையும், சிலம்பு வாத்தியார் இடத்தில் நின்று பயிற்சிக் கொடுத்துக் கொண்டிருந்த சின்ன மருதுவும்...., திருப்பாசேத்தி அரிவாள் படைக்கு பயிற்சிக் கொடுத்துக் கொண்டிருந்த மருதமுத்துவும், மல்யுத்த படைக்கு பயிற்சிக் கொடுத்துக் கொண்டிருந்த வெற்றி வீரனும்.....மெளனமாய் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.... செம்மண் புழுதி பறக்க உடையாள் பெண்கள் படை வாள் வீசிக் கொண்டே அவர்களுக்கு பயிற்சிக் கொடுக்கப்போகும் தலைமைக்காய் காத்திருந்தது....
விருப்பாட்சி பாளையத்தை ஆண்டு கொண்டிருந்த கோபால நாயக்கர் தன்னாலான உதவியைச் சீமை மக்களுக்குச் செய்து கொண்டிருக்கிறோம் என்ற பெரும் சந்தோசத்தில் உதய மர நிழலில் கம்பீரமாய் நின்றிருக்க.....
வெள்ளை புரவியொன்று... பெரும் கனைப்போடு அந்த பயிற்ச்சிக் களம் அருகே வந்து கொண்டிருந்தது....! புரவி நெருங்க நெருங்க..களத்தில் நின்று கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான வீர மறவர்களும், பெண் வேங்கைகளும், பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தவர்களும் சப்தமின்றி அமைதியானார்கள்....
ஆயிரம் சூரியனை விழுங்கிய கொடும் புலி ஒன்று, பசித்துப் பசித்து இரைக்காய் காத்துக் கிடந்து ஏதேனும் ஒரு இரை அதனிடம் எதிர்ப்பட்டால் எப்படி தீரமுடம் பாய்ந்து ஒற்றை அடியில் தன் இலக்கை வீழ்த்துமோ அதே தீரத்துடன்.....ஒட்டு மொத்த உலக ஆண்களையும் நிற்கவைத்து வீரமென்றால் என்னவென்று கற்றுக் கொடுக்கும் குணத்தினை இயல்பாய்க் கொண்டு...., எதிராளியின் நாவுகள் என்ன மொழி பேசினாலும் பதில் கொடுக்கும் பேரறிவும், பரந்து விரிந்த கனவுகளும், மானுட நேசமும், மண்ணின் மீதான பற்றும் தனது பேரழாகாய்க் கொண்ட.....
பெண் வேங்கையொன்று புரவியிலிருந்து குதித்து திம் என்று மண்ணில் கால் பதிக்க.....
' வீர மங்கை வேலு நாச்சியார் வாழ்க.....வாழ்க.....
குலம் காக்க வந்த பராசக்தி வாழ்க..வாழ்க....
வீரமறவர்களின் குல தெய்வமே வாழ்க வாழ்க.....'
கோஷம் விண்ணைப் பிளக்க....இடைவாளில் ஒரு கை வைத்து சிம்மமென நடந்து வந்து மருது சகோதரர்களுக்கும், மந்திரி தாண்டவராயன் பிள்ளைகும், கோபால நாயக்கருக்கும் இன்ன பிற.... பயிற்சித் தலைவருக்கும் வணக்கம் தெரிவித்து.....
திரண்டு நின்ற போராளிகளை பார்த்து.....கையசைக்க....அங்கே உற்சாக வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது....!
மருது சகோதரர்களை பார்த்து..... குயிலி எங்கே...? என்று கேட்டு புருவத்தை உயர்த்தியது இந்திய தேசத்தில் வெள்ளையருக்கு முதல் எதிராய் முதல் குரலை உயர்த்திய முதல் பெண் வேங்கை......
(புரட்சி இன்னும் வெடிக்கும்...)
தேவா. S
Comments
இன்று என் தளத்தில்
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி6
http://thalirssb.blogspot.in/2012/08/6.html
மதுரை ஆதினம் அப்பல்லோவில் சேர்ப்பு!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_28.html
தொடர வாழ்த்துக்கள்...