காலைப் பேருந்து என்பதால் இருக்கை பிடித்து அமர்வதில் சிக்கல் ஒன்றும் பெரிதாய் இருக்கவில்லை. வண்டிய எடுங்கண்ணே... நேரம் ஆச்சு அடுத்த காரு வந்துருச்சுல்ல....
அதிகாரமாய் சப்தம் போட்டு அதட்டிக் கொண்டிருந்த அந்த குரலுக்கும் கெச்சலான லொட லொட சட்டை போட்ட நபருக்கும் சம்பந்தமில்லை. கையிலொரு நோட்டும் பேனாவுமாய் பரபரப்பாய் இருந்த அவர்தான் டைம் கீப்பர் என்று புரிந்து கொள்ள முடிந்தது. வண்டி பேருந்து நிலையத்திலிருந்து மெல்ல நகர, நகர வெளியே காத்திருந்த காலை நேர காற்றும் சடாரென்று ஜன்னல்கள் வழியே பேருந்துக்குள் ஏறிக் கொள்ள...நான் ஜன்னலை வெறித்துக் கொண்டிருந்தேன்.
எல்லாவிதத்திலும் முன்னேறி விட்டோம் என்று புஜம் தட்டிக் கொண்டு, வல்லரசுதானே நாம் என்று நம்மை நாமே கேட்டு, கேட்டு நம்பிக் கொண்டிருக்கும் நமது தேசத்தின் குடிமகன்கள், பேருந்து நிலையத்திற்கு எதிராகவே மூக்கைத் துளைக்கும் சாக்கடையில் பிரஞை இன்றி மூத்திரம் கழித்துக் கொண்டிருந்தனர்.... இருந்தாலும் ஒவ்வொருவரிடமும் இருக்கும் அலை பேசியில் ஏதோ ஒரு அலைக்கற்றை உலகத்தை கொண்டு வந்து அவர்கள் முன் இணையம் என்ற பெயரில் கடை பரப்பிக் கொண்டுதான் இருக்கிறது. முன்னேறிய சமூகம்தான் ஆனால் தெருவில் மூத்திரம் கழிக்கும் பாரம்பரியக் கோளாறை மாற்றிக் கொள்ள இதுவரையில் நமக்கு ஒரு யோக்கியதையும் இல்லாமல் போய் விட்டது.
சமூகம் என்பது எல்லாம் தானே....? நானும் தானே...? டீ குடித்த கோப்பையை காற்றில் வீசி எறிந்து விட்டு சுதந்திர பூமியில் சத்திய புருசனாய் என் ஐக்கியத்தை நான் உறுதி செய்து கொண்டேன். பட்டுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி முக்கம் வரை முனகிக் கொண்டே சென்ற பேருந்தினை கியர் மாற்றி உறுமச் செய்து முன்னேறிக் கொண்டிருந்த டிரைவர் அண்ணன் முதலில் ஒற்றைக் கையில் ஸ்டேரிங்கை பிடித்துக் கொண்டு பாக்கெட்டில் எதையோ அவசரமாய் துலாவிக் கொண்டிருந்தார்....கதறிக் கொண்டே கையோடு வந்த அலைபேசியில் யாரோ டிரைவர் அண்ணனை சொடுக்கு போட்டு அழைத்துக் கொண்டிருந்தார்கள்.
"நைட்டுக்கு வண்டிய விட்டு இறங்குவேண்ணே... ச்ச்சே....ச்சே.. நான் ஒரு 10 மணிக்கா உங்க கடைக்கி வர்றேன்... .....அட என்ன பொசுக்குன்னு இப்டி சொல்லிட்டீக காரு ஓட்டுறப்ப போன எடுக்க முடியாதுண்ணே அதான் எடுக்கல.. இப்ப கூட ஓட்டிக்கிட்டேதான் பேசுறேன்....தப்பா எடுத்துக்குறதிய அண்ணே...
10 மணிக்கு வட்டிக் காசோட கடைக்கி வர்றேண்ணே....." சொல்லி கொண்டே எதிரில் வந்த லாரியை லாவகமாக கடந்த படி செல் போனை சட்டை பைக்குள் தூக்கி எறிந்து விட்டு கர்ச்சீப்பால் நெற்றி வியர்வையை துடைத்தபடி.. ஆக்ஸிலேட்டரை அழுத்த வண்டி உறுமிக் கொண்டு முன்னேறிய அந்த நொடியில்...எனக்கு முன் சீட்டில் இருந்த பெரியம்மா கைப்பைக்குள்ளிருந்து அவருடைய செல்போனை எடுத்தார்
"எலேய் ராசு.... நாந்தாண்டா சேவாத்தா பேசுறேன்...! காலையில வெரசா கெளம்பி வந்துட்டேன்...கீழா நிலைக் கோட்டை முருகாயி இருக்கால்ல... அவ பெரிய மயன் சுப்பு வண்டியில அடிபட்டு செத்துப் போனானாமுடா...!!!! நேத்து நைட்டு மயிலு போன் போட்டு சொன்னா.. அதான் பொசுக்குன்னு கிளம்பி ஒடியாந்திட்டேன்....
.........இல்லையிடா மூத்தவன்...மலேசியா போயிட்டு வந்தான்ல அவந்தேன்...அடுத்த வருசம் கல்யாணம் பண்னனும்னு பேசிக்கிட்டாக....சண்டாளப் பய...போய்ச்சேந்துட்டான் போ....
.....போன் பேசிக்கிட்டு வண்டி ஓட்டிக்கிட்டு போனானாம்... எதித்தாப்ல வந்த கார்காரனுக்கு வெலகுறப்ப ரோடு வழுக்கி விட்டு காருக்குள்ள தானா விழுந்து செத்துப் போனானாம்...., டேய்.. ராசு.. சாயங்காலத்துக்கு எடுத்துருவாய்ங்க நான் வர ராத்திரி ஆயிறும்...ஒங்க மாமாவுக்கு கூப்புட்டேன் போன எடுக்கல....நீ செத்த நம்ம வீட்டுக்கு போயி சிலிண்டர ஆப் பண்ணிட்டனா இல்லையான்னு பாத்து ஆஃப் பண்ணிடுப்பு....
ம்ம்.. நான் வைக்கட்டா..."
சேவத்தா பெரியம்மா போனை சாதரணமாய் வைத்து விட்டு சாலையை வெறிக்க, எனக்குள் செத்துப் போன சுப்பு வந்து உட்கார்ந்து கொண்டான். யார் என்னவென்றே தெரியாது இருந்தாலும் யாரோ ஒரு இளைஞன் பைக் ஓட்டிக் கொண்டு செல்லும் போது கவனமில்லாமல் செல் போன் பேசிக் கொண்டே செத்துப் போயிருக்கிறான். அவன் ஒரு சமூக சேவகனாய் இருக்கலாம், கடுமையான தொழிலாளியாய் இருந்திருக்கலாம், பெரிய முதலாளியாய் இருக்கலாம், எதிர்காலத்தைப் பற்றி ஏதேதோ கனவுகளோடு வண்டியின் ஆக்ஸிலேட்டரை முறுக்கி இருந்திருக்கலாம், கெட்டவனாக இருந்திருக்கலாம், பணக்காரனாக இருந்திருக்கலாம், ஏழையாக இருந்திருக்கலாம், அவனுக்காக யாரேனும் காதலி காத்திருந்து இருக்கலாம், வீட்டில் அம்மா சோறு வடித்து குழம்பு வைத்து பரிமாற காத்திருந்து இருக்கலாம்....
அவன் இறந்த தினத்தின் இரவில் நண்பர்களோடு அவன் மூக்கு முட்டக் குடித்து, இரண்டாம் ஆட்டம் சினிமா பார்க்க நினைத்திருக்கலாம், இல்லை அடுத்த நாள் காலையில் ஏதேனும் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டு இருக்கலாம், அவன் படித்த ஏதோ ஒரு புத்தகத்தின் மடித்து வைத்த பக்கம் அவன் வந்து வாசிப்பான் என்று காத்திருந்து இருக்கலாம்....
ஆமாம்... எல்லாவற்றுக்குமான வாய்ப்பினை வாழ்க்கை கண நேரத்தில் விழுங்கித் தொலைத்து விடுகிறது. ஒரு நொடியில் எல்லாம் புரண்டு போக பிணமாய் கிடக்கும் சுப்புவுக்காக மனது கனத்துப் போனது. செத்துப் போன சுப்புவுக்காக வருத்தப்பட்டாலும், அவன் இடத்தில் என்னை வைத்துப் பார்த்து மனம் பயந்து போகவும் செய்தது....
" அண்ணே... இந்த நோட்டை கொஞ்சம் வச்சுக்கங்களேன்...."
சட்டென்று ஒரு குரல் என்னைக் கலைத்துப் போட பேருந்து ஏதோ ஒரு நிறுத்தத்தில் நின்று கிளம்பிய போது ஏறிய ஒரு கல்லூரி செல்லும் பெண் என் கையில் நோட்டை திணித்திருந்தாள்...! ராதிகா, தேர்ட் இயர் பி.காம், என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த நோட்டுப் புத்தகங்கள் என் கல்லூரிக்காலத்திற்கு என்னை இழுத்துச் செல்ல முயன்று கொண்டிருந்த நேரத்தில்.... ஏ.. காதல் ஒன்று ... என்று அழைப்பு ஓசையாய் ஏதோ ஒரு செல் போன் இசைக்க...ராதிகா செல்போனை காதில் வைத்துக் கொண்டிருந்தது....
" ச்சீ...ச்சி.. .அப்டி இல்லப்பா... ஹேய்....நீ சும்மா இருக்க மாட்ட...! நான் அப்படி சொன்னேன்னா...அது அப்டி சொல்லுச்சு என்கிட்ட...அதை உன்கிட்ட நான் சொன்னேன்....ச்சும்மா கிண்டல் பண்ணிட்டே இருடி.. அதை விடு....
டெஸ்ட்டுக்கு எப்டி பிரிப்பரேசன் எல்லாம் பண்ணி இருக்க, ராத்திரி புல்லா படிக்கவே இல்லடி... வீட்ல ஒரு பக்கம் டிவிய போட்டு கொல்றாய்ங்கண்ணா.. இன்னொரு பக்கம் ஆடி மாசத்துல திருவிழா கொண்டாடுறம்னு ரேடியாவ போட்டு முச்சந்திக்கு முச்சந்தி கொல்றாய்ங்க....நேத்து நைட்டு எங்கூரு மாரியம்மன் கோவில்ல திரை கட்டி படம் வேற போட்டாய்ங்க....
இந்த கூத்துக்கு நடுவுல அது வேற இடை இடையில் எஸ். எம். எஸ் ஆ அனுப்பிக்கிட்டு இருக்கு... எனக்கு ஒரு மாதிரியா இருக்குடி....ஒரு வார்த்தையல எப்டிடி பதில் சொல்றது.......சீச்ச்ச்சி எனக்கு பிடிக்குதுன்னு நான் சொல்லவே இல்லேயேப்பா...இன்னிக்கு சாயந்திரம் வந்து அது பேசுறேன்னு சொல்லி இருக்கு......"
தொடர்ந்து ராதிகா பேசிக் கொண்டிருந்தது. நான் கவனத்தை ஜன்னல் பக்கம் திருப்பினேன்.... சாலையைக் கடக்கும் 10 மனிதரில் ஏழு பேர் அலை பேசியோடு பந்தத்தில்தான் இருந்தார்கள். வாழ்க்கையின் மறுக்க முடியாத சக்தியாய்ப் போய் விட்ட அலை பேசி மனிதர்களின் மூன்றாவது கையாய் ஆகிப் போய் விட்டது.
மாடு வாங்க சென்று கொண்டிருந்த பெரியப்பாவும், மருந்து வாங்க மதுரை சென்று கொண்டிருக்கிறேன் என்று சோகத்தை பகிர்ந்து கொண்டிருந்த அண்ணனும், ஒங்க ஊர்ல மழையா.. எங்கூர்ல நேத்து சரியான மழை என்று சொல்லி விட்டு... அடுத்த தெரு ஜோதிக்கு யாரையோ சேத்து வைத்திருக்கிறாள் என்று ஊர்வம்பினை பேசிக் கொண்டிருந்த ஒரு அக்காவும், நேத்து அவரு போன் பண்ணினாருப்பா.. வெள்ளிக்கிழமை லீவுதானே என்று தன் வெளிநாட்டுக் கணவனின் அழைப்பினை தந்தையிடம் பகிர்ந்த மகள் என்று அலை பேசிக்குள் மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
ஒரு பதினைந்து வருடத்துக்கு முன்பான என் பெரும்பாலான பேருந்துப் பயணங்கள், சக பயணிகளுடன் பேச்சுக் கொடுத்து ஏதோ ஒரு சமூகப் பிரச்சினையைப் பற்றி பேசிக் கொள்வதிலும், பரஸ்பரம் எந்த ஊர் என்ன என்று விசாரித்துக் கொண்டு நகர்வதுமாக இருந்தது. இப்போது அலை பேசிக்குள் உலகமே வந்து விட்டதால் சுற்றி இருக்கும் மனிதர்களை யாருமே கவனிப்பது கூட இல்லை. இது வரமா..? சாபமா என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை.....யோசித்துக் கொண்டே இருக்கையில்.....என் செல் போன் சிணுங்க....
" அறந்தாங்கி தாண்டியாச்சுப்பா....ஹம்ம்.... ஒரு பதினோரு மணிக்கு காளையார் கோயில் போயிடுவேன்.....சரிப்பா....பெரியப்பாட்ட பேசுறேன்....எங்க.. எங்க... பழனியாண்டி புஞ்சையில இருந்து கருக்குவா செய் வரைக்குமா... சரி, சரி சரி சர்வையர கூப்டு அளக்கச் சொல்லலாம்.. ஹ்ம்ம் சரிப்பா....
சின்னம்மாவ பாத்துட்டு வர்றேன்.. சரி சரி.. நீங்க சொல்லீட்டீங்கதானே....ஹம்ம்ம் அப்டியே போன போட்டு கோயிலுக்கு வர்ரம்னு மாமாகிட்டயும் சொல்லிடுங்க....இல்லப்பா.. இன்னும் சாப்டல... காரைக்குடில போய் பாத்துக்குறேன்.....ஆங்...சாரி...."
நான் பேசிக் கொண்டிருந்தேன்.....வண்டி நகர்ந்து கொண்டிருந்தது....கூடவே வாழ்க்கையும்.....
தேவா. S
Comments
தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...
இன்று என் தளத்தில்
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 5
http://thalirssb.blogspot.in/2012/08/5.html
What a coincidence!
அப்புறம்.. மீதி கமெண்ட்டை போன் போட்டுச் சொல்லுதேன். இப்பம் எனக்கு ஒரு போன் வருது.. :)
http://kovaisaraladevi.blogspot.in/
கல்யாணி
பஸ் டிரைவருக்கு கடன் பாக்கி வியர்வை,
பாட்டிக்கு பலியான பையனும், கேஷ் மூடியாச்சா என்ற துக்கங்கள்
மாணவிக்கு படிப்பதும், அவனுக்கு பதிலளிப்பதும் பிரச்னை.
உங்களுக்கு, விடுமுறையில் வந்தாலும், அளக்க சில நிலமும் கதையளக்க சில உறவும்.எதுவந்தாலும் மாறாத தமிழனாய், திறந்த வெளியில் சிறுநீர், 11மணிவரை திறந்திருக்கும் கடையில் சரக்கு வழுக்கிக் கொண்டிருக்கிறது வாழ்க்கை.
வழிந்தோடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையே எந்த வித இலக்குகளுமின்றி பயணித்துக் கொண்டிருக்கிறது.
ரசித்தேன்.